“என்ன தரலாம்? ஹ்ம்ம்…” என யோசனை செய்தான். “வானத்துல நிலாவும் நட்சத்திரமும் இருக்கு, அதையெல்லாம் என்னால தர முடியாது. இரத்தமும் சதையுமா இங்க ஒருத்தன் உன் மேல பித்து பிடிச்சு பினாத்திக்கிட்டு இருக்கான்” என்றவன் ரகசிய குரலில், “அவனை அப்படியே எடுத்துக்க மிது, என்ன வேணா செஞ்சுக்க” என்றான்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்க, காருக்குள்ளே கணவனின் அரவணைப்பில் இருந்தாள் லாவண்யா. நேரில் அவளை பார்க்கவும் எதுவும் அவனால் திட்ட முடியவில்லை. அவள் சாப்பிட சொல்லவும் வேகமாக சாப்பிட்டு முடித்தவன், “அவனோடயே வீட்டுக்கு போ, இங்க நான் இருந்தாகனும், காலைல வந்திடுறேன்” என்றான்.
“இவ்ளோ பேர் இருக்காங்க, அவங்க பார்த்துக்க மாட்டாங்களா?” என்றாள் லாவண்யா.
“என்னத்த பார்ப்பாங்க, ஏதாவது பிரச்சனை வருதான்னு கவனிங்கன்னா ஆ ன்னு வாய பொளந்துகிட்டு ஆட்டத்தைதான் பார்க்கிறாங்க. காவலுக்கு வந்த போலீஸ் நல்லா தூங்கிட்டு இருக்காங்க, இவங்கள நம்பி நான் நகர்ந்தா காலைல நிறைய புகார் வரும். திருவிழா நல்ல விதமா முடியணும் பாப்பா”
“எல்லா நாளுமா கேட்கிறேன்? கெட்ட கனவு கண்டேன், என் பக்கத்துல நீங்க இருக்கணும்னு தோணுது, ப்ளீஸ் என்னோடயே வாங்க”
“சாயந்தரம் வீம்பு பண்ணிட்டு நைட் வேற மாதிரி அடம் பண்ற, கனவெல்லாம் ஒன்னுமில்ல, பயப்படாத” என்றவன் காரிலிருந்து இறங்கிக் கொண்டான்.
அன்புவை கண்டதும் மிதுவிடம் அப்புறம் பேசுகிறேன் என்ற ஜீவா காருக்கு அருகில் வந்தான்.
“அவ சொன்னா உனக்கு அறிவில்லை? எவ்ளோ ஜாக்கிரதையா அவளை பார்த்துட்டு இருக்கேன்னு உனக்கென்ன தெரியும்?” என ஜீவாவின் முகத்தை பாராமல் கேட்டான் அன்பு.
“அவங்க ரொம்ப ரெஸ்ட்லெஸா இருந்தாங்க. அப்படி இருக்கிறது கூட நல்லதில்லை, பத்திரமாதான் அழைச்சிட்டு வந்தேன்” என்றான் ஜீவா.
மனைவியை பார்த்த அன்பு, “அவனை காரை மெதுவா ஓட்ட சொல்லு. வீட்டுக்கு போனதும் கால் பண்ணு” என்றான்.
“என்ன தெரியும் அவனுக்கு? இங்க சில பசங்க வம்பு செய்யன்னே சுத்திட்டு இருக்காங்க, நான் இங்கதான் இருக்கணும்” என மனைவியிடம்தான் பேசினான் அன்பு.
“உங்களுக்கு பதிலா நான் இருந்து பார்த்துக்கிறேன்” என பட்டென சொன்னான் ஜீவா.
“உனக்கென்ன சமாளிக்க தெரியும் அவங்கள?” என நேரடியாக ஜீவாவிடமே கேட்டான் அன்பு.
“நீங்க தட்டுற மாதிரி எனக்கும் தட்ட தெரியும், ட்ரஸ்ட் மீ அண்ணா” என்றான் ஜீவா.
“டேய்!” அவனது அண்ணன் என்ற அழைப்பில் கோவப்பட்டான்.
“என்னங்க…” என அழைத்து கணவனை அமைதிப் படுத்தினாள் லாவண்யா.
இருவரையும் மாறி மாறி முறைத்த அன்பு, தன் கார் சாவியை எடுத்து ஜீவாவிடம் நீட்டி கார் நிற்குமிடத்தையும் சொன்னான்.
“வேணாண்ணா நான் அப்டியே பொடி நடையா வந்திடுவேன்” என்றான் ஜீவா.
“நீ ஊர்வலம் வர கொடுக்கிறேன்னு நினைச்சியா? இங்க ஏதாவது அவசரம்னா தேவை படாதா?” என கடு கடு எனதான் பேசினான் அன்பு.
ஜீவா சாவியை பெற்றுக் கொண்டதும், கோயில் நிர்வாகி ஒருவரின் பெயரை சொன்ன அன்பு, “எதுவும் பிரச்சனைனா அவர்கிட்ட சொல்லு, அவர் எனக்கு சொல்லுவார். யார் மேலேயும் கை வச்சு பஞ்சாயத்தை கூட்டி விட்ராத” என்றான்.
“உங்க நம்பர் எனக்கே தரலாமே” என்றான் ஜீவா.
“நீ யாரு எனக்கு? உனக்கெதுக்குடா என் நம்பரை தரணும்?” என கோவப்பட்டான் அன்பு.
“எந்த நம்பிக்கைல என்னை இருக்க சொன்னீங்க நீங்க? உங்க மனசுக்கு தெரியும் நான் யாரு உங்களுக்குன்னு? அட நம்ம அப்பாவை விடுங்க, என்னை யாரோன்னு நினைச்சுக்கிட்டா கூட சக மனுஷன் ஆக மாட்டேனா? எப்படி இருந்தாலும் மிதுவோட ஹஸ்பண்ட்ங்கிற முறைல நான் உங்களுக்கு சொந்தம்தான்” என்றான் ஜீவா.
“அதிகமா பேசாத, எப்படியும் நீ எனக்கு யாரும் இல்லை. சாவியை கொடு, நானே பார்த்துக்கிறேன்” என எரிந்து விழுந்தான் அன்பு.
லாவண்யாவை எட்டிப் பார்த்த ஜீவா, “இவருக்கு சப்பாத்திதானே கொடுத்தீங்க, இல்லை கசப்பும் காரமும் கலந்த மருந்து ஏதாவது கொடுத்திட்டீங்களா அண்ணி?” எனக் கேட்டான்.
அன்பு இடுப்பில் கை வைத்து முறைக்க, “ஏய் இவரை கிண்டல் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் ஜீவா உன்கிட்ட” என்றாள் லாவண்யா.
“கிண்டல் பண்றேனா? சீரியஸாதான் சொன்னேன். சரி சரி, இனியாவது இந்த பெரிய மனுஷனுக்கு வேலை வைக்காம ஒத்துமையா இருங்க” என்றான் ஜீவா.
“யாரு நீ பெரிய மனுஷனா? நாளைக்கு வீட்டுக்கு வா, எனக்கு இன்னிக்கு ஹெல்ப் பண்ணினத்துக்கு சாக்லேட் வாங்கி தர்றேன்” என்றாள் லாவண்யா.
“ஹ்ஹ்ஹா அதை என் மாமனாரோட அக்காவோட மருமகளோட ஹஸ்பண்ட்க்கு கொடுங்க, நானெல்லாம் வளர்ந்த பையன்”என்றான் ஜீவா.
யாரை சொல்கிறான் என அன்பு யோசிக்கும் போதே, ஜீவாவை முறைத்த லாவண்யா, “ஒழுங்கா ஓடி போ ஜீவா, போ” என விரட்டினாள்.
ஜீவாவும் சிரித்துக்கொண்டே, “அண்ணாத்தேவுக்கு குச்சி மிட்டாய் வாங்கி கொடுக்க மறந்திடாதீங்க” என சொல்லிக் கொண்டே நிகழ்ச்சி நடக்குமிடம் ஓடிச் சென்றான்.
தன்னைத்தான் சொல்லியிருக்கிறான் என புரிந்த அன்பு மனைவியை பார்த்து, “என்ன பாப்பா இதெல்லாம்? ஓவரா பேசுறான் அவன்” என்றான்.
“ஜாலியா பேசுறான், அது ஒரு குத்தமா?” எனக் கேட்டாள் அவள்.
“அவன் எதுக்கு என்னை நெருங்கி வர நினைக்கிறான்? எரிச்சலா இருக்கு எனக்கு? நீயும் வேடிக்கை பார்க்கிற, இதெல்லாம் எனக்கு பிடிக்கல, சொல்லி வை அவன்கிட்ட” என்றான் அன்பு.
கணவனை தன்னிடம் வர சொல்லி அழைத்தாள் அவள். அவனும் காருக்குள் ஏற, “எதுவும் காரணம் சொல்லக்கூடாது, என் தங்கச்சி கல்யாணத்துல நீங்க வந்து நிக்கணும். வேற எதுவும் உங்ககிட்ட கேட்க மாட்டேன்” என்றாள்.
எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன். வருகிறேன் என அவன் சொல்வதை எதிர்பார்த்து புன்னகையுடன் இருந்த அவளது முகத்தில், அவனது அமைதியின் காரணமாக இருள் பரவியது.
“போதும்…” என அழுகையுடன் சொன்னவள் அவன் மீதே சாய்ந்து கொண்டு விசும்பினாள்.
“அழாதடி தங்கம், நீ சொல்லி எதை கேட்காம இருந்திருக்கேன்? முதல்ல கண்ண துடை” என அவன் சொல்ல, அவனது சட்டையிலேயே முகத்தை புரட்டி கண்களின் ஈரத்தை துடைத்துக் கொண்டாள்.
“சொல்லு, மிதுவோட கல்யாணத்துக்கு என்ன செய்யலாம்? எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை, எம்மேல கோவத்துல இருக்கிற மிது சமாதானம் ஆகணும், அப்படி ஏதாவது வாங்கி கொடுக்கணும், சொல்லு” எனக் கேட்டான்.
கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஜீவாவை உங்க தம்பியா ஏத்துக்க வேணாம், அவனை என் தங்கச்சி புருஷனா பாருங்க, விரோதம் காட்டாதீங்க” என்றாள்.
அவளை தன்னிடமிருந்து விலக்கியவன், “கொஞ்சம் இறங்கி வந்தா போதும் கீழ விழ சொல்லுவாங்க இந்த பொம்பளைங்க!” என சொல்லிக் கொண்டே காரிலிருந்து இறங்கிக் கொண்டான்.
அவள் அவனை முறைக்க, கண்டு கொள்ளாமல் முன் பக்கத்தில் அமர்ந்து காரை எடுத்தான்.
நிகழ்ச்சியில் அன்புவுடன் தகராறு செய்த இளைஞர்கள் மடுவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். காரில் அன்பு செல்வதை கண்டவர்கள் கோவத்துடன் அவனை பார்த்தனர்.