அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “எஸ், நானும் அப்படித்தான் ஃபீல் பண்றேன். பொழச்சு போ, ஸ்ட்ராங்காவே இரு” என கண்கள் சிமிட்டி சொல்லி விட்டு கிளம்பினான்.

ஹாலில் பாட்டிக்கு பதில் லாவண்யாதான் இருந்தாள். உறக்கத்தில் விழித்துக் கொண்டவள் ஹால் வரவும் ஜீவாவின் வரவை சொல்லியிருக்கிறார் பாட்டி.

 கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த பாட்டியிடம், ஜீவா கிளம்பியதும் கதவெல்லாம் நான்  பூட்டி விடுகிறேன் என சொல்லி அவரை அறைக்கு அனுப்பி விட்டாள் லாவண்யா.

“தூங்காம என்ன பண்றீங்க, பங்காளிகிட்ட பேசிட்டு இருக்கீங்களா?” என கையில் கைப்பேசியோடு இருந்தவளிடம் கேட்டான் ஜீவா.

“நீ அடி வாங்க போற, பங்காளியாம், பேச்சை பாரு! நைட்ல அவ ரூமுக்கு எதுக்கு போன? அப்பா வரட்டும் சொல்லி கொடுக்கிறேன்” என்றாள் லாவண்யா.

“மாமா இருந்திருந்தா நைட்ல எப்படிப்பா தனியா போவ, இங்கேயே இருந்துக்கன்னு சொல்லியிருப்பார். உங்க தங்கச்சி அடிச்சி விரட்டி விட்டுட்டா என்னை. மாமாவை வர சொல்லுங்க, அவருக்குத்தான் என் கஷ்டம் புரியும்”

“சாப்பிட்டியா?” என புன்னகையுடன் கேட்டாள்.

“பதினோரு மணியாகுது, இன்னுமா சாப்பிடாம இருப்போம்? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், சாப்பிடலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க, இனிமே போய் சமைப்பீங்களா அண்ணி?”

“எல்லாம் இருக்கு, சாப்பிடுறியா?”

“நன்றிகள் பல, பட் என் வயிறு காலியாக இல்லாத காரணத்தால் உங்களது கோரிக்கை நாளை பரிசீலிக்க படும்”

“அப்ப நாளைக்கும் வருவேன்னு சொல்ற?”

“கண்டிப்பா வருவேன், இப்ப போய் தூங்குங்க, நான் வர்றேன்” என சொல்லி புறப்பட்டான் ஜீவா. வெளியில் வந்த லாவண்யா தயக்கமாக அவனை பார்த்தாள்.

“என்ன அண்ணி எதுவும் சொல்லணுமா?” எனக் கேட்டான் அவன்.

அன்பு இரவில் சாப்பிடவில்லையாம். ‘என்னால் அவனை கையாள முடியவில்லை, காலையில் வீடு வந்து சேரு’ என லாவண்யாவின் மாமியார் அவளிடம் சொல்லியிருக்கிறார். உறக்கத்தில் அவளுக்கு ஏதோ கெட்ட சொப்பனம் வேறு. கணவனிடம் பேச முயற்சித்திருக்கிறாள். அவன் அழைப்பை ஏற்கவே இல்லையாம். இது போலவெல்லாம் அவன் இருந்ததும் இல்லையாம்.

“படுத்தாலும் எனக்கு தூக்கம் வராது ஜீவா, மனசு சரியில்லை. இப்படிலாம் நாங்க சண்டை போட்டதே இல்லை” என்றாள்.

“ஸாரி அண்ணி, எங்களாலதான் எல்லாம். என்னால எதுவும் பண்ணி அவரை சரி கட்ட முடியும்னா கண்டிப்பா செஞ்சிடுவேன், ஆனா என்ன செய்றதுன்னுதான் தெரியலை” என்றான் ஜீவா.

“பரவாயில்லை ஜீவா. இப்ப அவரை ஏதாவது சாப்பிட வைக்கணும். ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்கிற இடத்துலதான் இருக்காராம். என்னை அழைச்சிட்டு போறியா இப்போ?” எனக் கேட்டாள் லாவண்யா.

“விளையாடுறீங்களா அண்ணி! நீங்க ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்லிருக்காங்கதானே? இப்ப டைம் என்னாகுது? உங்க வீட்டுக்காரர் என்னை அக்செப்ட் பண்ணிக்க வழி சொல்வீங்கன்னு பார்த்தா… அவரை வச்சு என் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட வைக்க பிளான் பண்றீங்களே”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், கார்ல மெதுவா கூட்டிட்டு போ, நான் அவர் கூடயே வீட்டுக்கு போயிடுறேன். ப்ளீஸ் ஜீவா” என்றாள்.

அவன் சாமான்யமாக ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கண்கள் கலங்கி விட்டாள். வேறு வழியின்றி சரியென்றான்.

இரவில் லாவண்யா எழுந்து கொண்டாலோ அல்லது மில்லுக்கு சென்றவர்கள் திரும்ப வந்து பசி என்றாலோ தேவைப்படும் என ஹாட் கேசில் சப்பாத்தி, தக்காளி தொக்கு என வைத்திருந்தார் வினோதினி. அதை லாவண்யா டப்பாவில் எடுத்துக் கொள்ள, பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டான் ஜீவா.

மிதுவிடம் மட்டும் சொல்கிறேன் என அவன் சொன்னதற்கு, “தூங்கிருப்பா, அவளை டிஸ்டர்ப் பண்ண வேணாம், நாம போலாம்” என சொல்லி, அவனை தடுத்து விட்டாள்.

இன்றைய நாளில் வினோதினிக்கு அதிகப் படியான வேலை, ஆகவே அவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

வீட்டுக் கதவை இரண்டு பக்கத்திலிருந்தும் பூட்டலாம் திறக்கலாம். ஒரு சாவியை வீட்டின் உள்ளே பார்வையில் படும் படி வைத்து விட்டு இன்னோரு சாவியால் கதவை அடைத்தாள். கேட் சாவியும் வீட்டிற்குள் ஒன்று இருக்கும் என்பதால் இன்னோரு சாவி கொண்டு கேட்டையும் பூட்டினாள்.

அன்புவுக்கு மனமே சரியில்லை. மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. சற்று முன்னர் அவள் அழைத்த போது எடுக்காதவனுக்கு  இப்போது அதை நினைத்து அவன் மீதே அவனுக்கு கோவம் வந்தது.

முன் தினம் வந்து ரகளை செய்த அசலூர் இளைஞர்கள் இன்றும் வந்திருந்தனர். இருந்த கோவத்தை அவர்களிடம் காட்டி விட்டான். அதிகமாக சலம்பிய இருவரை அடித்து அவர்களை மொத்தமாக அங்கிருந்து வெளியேற்றியும் விட்டான்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்லாமல் சற்று தூரமாகவே காரை நிறுத்திய ஜீவா, “ஒரு தடவ கால் பண்ணி பாருங்க அண்ணி, அங்க வச்சு அவரால சாப்பிட முடியாது. இங்க வந்தாதான் சரியா இருக்கும்” என்றான்.

“அவர்தான் என் கால்ஸ் எடுக்க மாட்டேங்குறாரே, நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்றாள்.

“அவ்ளோ கூட்டத்துல எப்படி கண்டு பிடிப்பீங்க, அப்படியே அவரை பார்த்தாலும் உங்களை பார்த்திட்டு இந்த நேரத்துல ஏன் வந்தீங்கன்னு ஒரு கூட்டம்  உங்களை சுத்திடாதா?” எனக் கேட்டான்.

சரியென்றவள் கணவனுக்கு அழைக்க, இந்த முறை எடுத்து விட்டான் அன்பு.

“என்ன பாப்பா  தூங்கலையா நீ? ஏதும் தொந்தரவு இல்லையே?” என அன்பு கேட்க, தொண்டை அடைக்க பேச முடியாமல் திணறினாள் லாவண்யா.

‘பேசுங்க’ என ஜீவா சைகை செய்தும் அவள் பேசாமல் இருக்க, சிறு சிரிப்புடன் காரிலிருந்து இறங்கி தள்ளிப் போய் நின்று கொண்டான்.

அதே நேரத்தில் ஜீவா வீட்டுக்கு சென்று விட்டானா என அறிய அவனுக்கு அழைத்தாள் மிது. அவளிடம் அவன் உண்மையை சொல்ல, திட்ட ஆரம்பித்து விட்டாள்.

அன்புவும் மனைவியை கடிந்து கொண்டே கார் நிற்கும் இடத்திற்கு விரைந்தான்.

“நீதான உன் அக்காவை நினைச்சு புலம்பின, அதான் அவங்க லவ்க்கு ஹெல்ப் பண்ணினேன், உன் மாமா கூட இம்ப்ரெஸ் ஆனாலும் ஆகிடுவார், இவ்ளோ திட்டி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதடி மிதுக்குட்டி!” என சொல்லிக் கொண்டிருந்தான் ஜீவா.

“உனக்கு தைரியம் கூடிப் போச்சு பாப்பா, ஒரு வேளை சாப்பிடாம என்னாக போகுது எனக்கு? எவ்ளோ நாள் கோவமா இருக்க போறேன், நானே நாளைக்குஉன்னை தேடி வந்திருக்க மாட்டேனா?” என அலைபேசியில் கேட்டுக் கொண்டே வந்தான் அன்பு.

அன்புவும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, கைப்பேசியில் பேசிக் கொண்டதை நிறுத்தி விட்டனர். சகோதரனை பார்த்து சிரித்து வைப்பதா, பேசுவதா, அல்லது தள்ளி செல்வதா என குழப்பத்தோடு நின்றான் ஜீவா.

தம்பியை முறைத்து விட்டு காருக்கு சென்று விட்டான் அன்பு.

“ஜீவா… இருக்கீங்களா?” என மிது கேட்டுக் கொண்டிருக்க, “எஸ் எஸ் உன் மாமா கிராஸிங், அதான் சைலன்ட் ஆகிட்டேன்” என்றான் ஜீவா.

“மாமாவா? உங்களை ஏதும் சொன்னாரா?”

“இல்லை, அவரோட பாப்ஸை பார்க்க போயிட்டார். உன் மாமாங்கிற எரிமலை உன் அக்காவை பார்த்ததும் செகண்ட்ஸ்ல ஆல்ப்ஸ் மலை ஆகிடுவார். ஏசி இல்லாத அந்த கார் அவங்க காதல்ல உறையாம இருக்கணும்” என கிண்டலாக சொன்னான்.

“கண்ணு வைக்காதீங்க ஜீவா”

“எனக்கென்ன குறைச்சல்னு  அவங்கள பார்த்து நான் கண்ணு வைக்கணும்? சிலு சிலுன்னு நான் இங்க பேசுறதுக்கே இந்நேரம் நீ ஸ்வெட்டர் போட்ருக்கணுமே? ஆமாவா இல்லையா?”

“ஆமாமாம், நீங்க அங்க வழியிறது வெள்ளமா மாறி என்கிட்ட வந்தாச்சு,  என் கால் ரெண்டும் மிதக்குது ஜீவா” என்றாள்.