கொஞ்சும் காதல் சாரல் -34

அத்தியாயம் -34

திருமணத்துக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி விட்டு ஊருக்கு வந்த ஜீவா, பெரியப்பாவின் டி வி எஸ் எடுத்துக் கொண்டு  மிதுவை பார்க்க கிளம்பினான். தான் போவதை  பெரியம்மாவிடம் மட்டும் கூறி பெரியப்பாவுக்கு தெரியாமல் சமாளித்துக் கொள்ள சொல்லியிருந்தான்.

மதியத்திற்கு மேலே ஆலைக்கு சென்ற பசுபதி இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. மில்லில் ஏதோ இயந்திரத்தில் கோளாறு. ஆகவே தாத்தாவும் மாலையிலேயே அங்கே சென்று விட்டார்.

ஜீவா வரும் வேளையில் சாப்பிட்டு உறங்கியிருந்தாள் லாவண்யா. இந்த நேரத்தில் அவனை எதிர் பார்த்திருக்காத வினோதினி தயக்கத்தோடே வரவேற்றார்.

“நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது அத்தை. அவளுக்கு அலர்ஜிக்கு மருந்து போடும் போது பயங்கரமா எரிச்சல் ஆகுது, அதுக்கு பயந்து போட மாட்டா அவ. அப்படி போடாம இருக்க கூடாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா டாக்டர் சொன்னார். முதுகு பிடிப்புக்கு கூட இப்ப ஒரு தடவ எண்ணெய் போட்டாதான் நல்லாருக்கும். அதனாலதான் வந்தேன்” என்றான் ஜீவா.

“அடேயப்பா! உன் பொண்டாட்டி பொறந்து வளர்ந்தப்பல்லாம் எங்கடாப்பா போயிட்ட? அவளுக்கு குளிக்க ஊத்துறது, பகடர் போட்டு மை பொட்டு வைக்கிறது, உர மருந்து கொடுக்கிறது, மூக்கால ஊத்தும் போது முந்தானைல துடைக்கிறதுன்னு எல்லாத்தையும் நாங்கல்ல  பார்த்துகிட்டோம்” என பகடி பேசினார் பாட்டி.

“பாருங்க பாட்டி, நான் ரொம்ப நல்ல பையன், நீங்க மிதுவை பார்த்துகிட்டப்போ ஏன் பார்க்குறீங்கன்னு கேட்டுக்கவே இல்லை. இப்ப  நீங்க மட்டும் என்கிட்ட கேட்கலாமா? அப்படி கேட்டா அநியாயம் இல்லை?” எனக் கேட்டான் ஜீவா.

“ஆஹ்! தப்புதான்டா ப்பா தப்புதான்” என்றார் பாட்டி.

 “ஒத்துக்கிட்டா சரி, என்னை யாரோ மாதிரி அத்தை இப்படி பார்க்கிறதே எனக்கு ஒரு மாதிரி ஃபீல் ஆகுது பாட்டி, அவங்கள்ட்டேயும் சொல்லுங்க… அஞ்சு மாசம் கண்ணும் கருத்துமா அவளை நான்தான் பார்த்துகிட்டேன்னு” என்றான் ஜீவா.

“அஞ்சு மாசம் மட்டுமா? காலம் மூச்சூடும் நீதான்டாப்பா  பார்த்துக்கணும்” என்றார் பாட்டி.

“அதுக்குத்தான் இங்க ஆஜர் ஆகியிருக்கேன் பாட்டி” என்றான்.

“அப்ப உன் சம்சாரத்துகிட்ட போ, உன் மாமியா ஒரு பத்தாம்பசலி, அவளுக்கெல்லாம் பயப்படாத” என சொல்லி அவனை மிதுவிடம் அனுப்பி வைத்தார் பாட்டி.

வினோதினி மாமியாரை முறைக்க, “இப்ப மட்டும் இவனை உள்ள விடாட்டா அடிச்சு சொல்றேன்…  பின்னாடி போயி குழாயில ஏறி ஜன்னல் வழி குதிச்சாவது அவ ரூமுக்கு போவான். மூனு நாளுல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இவன் பாட்டுக்கும் கையை கால உடைச்சுக்கிட்டா பரவாயில்லையாடி உனக்கு?” எனக் கேட்டார் பாட்டி.

அப்படியும் நடக்குமா என  பார்த்தார் வினோதினி.

“என்னென்ன பண்ணி வச்சிருக்குதுங்க ரெண்டும், உண்மை மட்டும் இன்னும் லேட்டா தெரிஞ்சிருந்தா வயித்து புள்ளையோடதான் உன் பொண்ணு தாலி வாங்கியிருப்பா” என சொல்லி மருமகளை அதிர விட்ட பாட்டி, “உனக்கு தெரியாம அவ ரூம்க்கு போவ தெரியாதவன்னு நினைச்சியா இவனை பத்தி? போ போ” என கிண்டலாக சொன்னார்.

இது எங்கு போய் முடியுமோ என அலுத்துக் கொண்டே சென்றார் வினோதினி.

அறைக்கு கணவன் வரவும் விழிகளை விரித்தாள் மிது. உச்சி கொண்டையில், பொட்டு இல்லாத நெற்றியில் முடிகள் விழ, தொள தொளப்பான டி ஷர்ட், பேண்ட் என சோம்பேறியான தோற்றத்தோடு இருந்தவளை ரசித்து பார்த்துக் கொண்டே கதவில் சாய்ந்து கொண்டான்.

“ஜீவா நீங்க எப்படி வந்தீங்க?” என வியப்பாக கேட்டாள்.

 “பெரியப்பாவோட வாகனம் இருக்கே, ஏழு பிரச்சனை எட்டு தடங்கல்னு… ப்ச்… சொந்த பொண்டாட்டிய பார்க்க எவ்ளோ தடை எனக்கு?” என்றான்.

“எல்லாருக்கும் ஒரு பொண்டாட்டிதான் இருப்பாங்க, சொந்த பொண்டாட்டி வாடகை பொண்டாட்டின்னு எல்லாம் இருக்க மாட்டாங்க. வர்றேன்னு சொல்லியிருந்தா உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா ரெடி ஆகியிருப்பேன், திடீர்னு வந்து எண்ணெய் வழியுற மூஞ்சிய பார்த்து ஏமாந்து போயிட்டீங்க” என்ற மிது, எழுந்து அவனிடம் வந்தாள்.

அவளின் கையை பிடித்துக்கொண்டவன், “எவ்ளோ அழுக்கா இருந்தாலும் நீதான் எனக்கு அழகி மிதுக் குட்டி” என்றான்.

“என்னவோய் ரொம்ப பேசுறீங்க, அழுக்காலாம் இல்லை, காலையிலேயே…” என அவள் பேசிக் கொண்டிருக்கையில், “உன்னை குளிக்க வச்சதே நான்தானே? இப்பவும் குளிக்கிறியா? நைட் நல்லா தூக்கம் வரும், நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.

அவனது இடுப்பில் நறுக் என கிள்ளி வைத்தவள், “உங்க திட்டம் எதுவும் பலிக்காது ஜீவா. மருந்து நானே போட்டுப்பேன், பேக் பெயினும் பரவாயில்லை, உங்களை வர வேண்டாம்னு சொன்னேன்தானே ஜீவா? எதுக்கு வந்தீங்க?” எனக் கேட்டாள்.

அவள் கிள்ளிய இடத்தில் அவளது கையை வைத்தே வருடி விட்டுக் கொண்டவன், எதுவும் சொல்லவில்லை.

“நீங்க கிளம்பினதும் அம்மாகிட்டருந்து நல்லா கிடைக்க போகுது எனக்கு” என்றாள்.

 “அதான் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களே, திட்டுதானே கொஞ்சம் போல வாங்கிக்க, தப்பில்ல” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு ஆசுவாசமாக மூச்சு விட்டான்.

“என்ன ஜீவா?” அவனது மார்பில் சாய்ந்த படியே கேட்டாள்.

“உன் வீட்ல நம்மளை ஒதுக்கி வச்சிட்டா என்னை என்னால மன்னிச்சிருக்கவே முடியாது மிது. ஒரு வழியா டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க, காலைல கிளம்புற அவசரத்துலேயே இருந்திட்டேன். உன்கிட்ட சரியாவே பேச முடியலை, உனக்கு எப்படி தோணுது இப்ப, ஹேப்பியா நீ?” எனக் கேட்டான்.

“ஹேப்பிதான்…” என இழுத்தாள்.

“என்னடி… இன்னும் என்ன?” என அவன் கேட்க, அக்கா மாமாவிடம் செல்லாமல் இங்கேயே இருப்பதை சொன்னாள்.

“மாமாகிட்ட அப்பா பேசுறேன்னு சொல்லிருக்கார். அப்பவும் அவர் வரலைன்னு சொல்லிட்டா ‘பரவாயில்லை, கல்யாணத்தை நாமளே நடத்தி வைப்போம் மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம்’னு அம்மாகிட்ட அப்பா சொல்லியிருக்கார். அக்காவுக்கு கஷ்டமா இருக்கும் போல, என்னவோ போல இருக்காளாம். நம்மளால அவங்களுக்குள்ள…” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து, உச்சு கொட்டினாள்.

“நாம என்ன செய்ய முடியும்னு நினைக்கிற?”

“எதுவும் செய்ய முடியாது, ஆனா எனக்கும் கஷ்டமா இருக்கும்தானே?” என அவள் சொல்ல, அவன் பதிலே சொல்லவில்லை. சில நிமிடங்கள் அப்படியே இருந்தனர்.

நேரமாகிறது என மிது சொல்லவும் அவளுக்கு செய்ய வேண்டிய சேவைகளை எல்லாம் குறையில்லாமல் செய்து முடித்து, “இப்பவே கிளம்பணுமா, காலைல போகவா? தூக்கம் தூக்கமா வருது” என்றான்.

“பிச்சிடுவேன் ஜீவா, இன்னும் மூனு நாள், அப்புறம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றாள்.

“மூ…னு நாள்!” என பெரிதாக சொன்னவன், “உன்னை விட்டுட்டு நாலு வருஷம் இருந்தேன், எப்படி இருந்தேன்னு இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு மிது. இப்ப நாப்பத்தஞ்சு நாளும் நீ கூட இல்லாம… தண்ணிக்கு தவிச்ச மீன் மாதிரி தவிச்சு உன்கிட்ட ஓடி வந்தா திரும்ப என்னை விட்டுட்டு இங்க வந்திட்ட. இப்பவும் போன்னு சொல்றியே எப்படி மனசு வருது உனக்கு?” எனக் கேட்டான்.

அவனையே பார்த்திருந்தவள் மெல்ல அவனிடம் நெருங்க, அவனும் நெருங்கினான். காதலின் தவிப்பை முத்தத்தால் உணர்த்திக் கொண்டனர். விலகியவளின் கைகள் இரண்டும் அவனது தோள்களில் இருந்தன.

“இன்னொரு முறை போங்கன்னு கண்டிப்பா சொல்ல வராது ஜீவா, உங்க பக்கத்துல ரொம்ப வீக் ஆகுறேன் நான். ப்ளீஸ்…” என அவள் கெஞ்சினாள்.