“எங்கப்பாக்கு சொன்னதுதான் அத்தான், சில முடிவுகள் நம்ம எடுக்க முடியாது, அதை விட்ருவோமே. உங்க பேத்தி காது குத்து எந்த கோயில்ல நடக்க போகுது?” என பேச்சை மாற்றி விட்டார் பசுபதி.

இப்படியாக பசுபதி நன்றாகவே சமாளித்தார். திருமணத்தன்று குடும்பத்துடன் வந்து விடுகிறேன் என சொல்லி இளங்கோ புறப்பட்டார்.

ஜீவாவை தன்னுடன் வரும் படி அழைத்தார் சங்கரன்.

“நீங்க கிளம்புங்க பெரியப்பா, கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்றான் ஜீவா. அவனை முறைத்துக் கொண்டே அவரும் கிளம்பி விட்டார்.

ஜீவாவும் பசுபதியும் சேர்ந்து காலை உணவை சாப்பிட்டனர். “தேங்க்ஸ் மாமா!” என உள்ளத்திலிருந்து அவருக்கு நன்றி சொன்னான் ஜீவா.

“அப்பா வேற மாதிரி பேசிடுவாருன்னுதான் அவரை பேச விடாம செஞ்சேன், ஆனா அவர் கவலை எனக்கும் இருக்கு, மிதுவோட அம்மாவுக்கும் இருக்கு தம்பி” என மனதில் உள்ளதை சொன்னார் பசுபதி.

“மிது சொல்லித்தான் இந்த வேலை பார்க்கிறேன், எங்களால் சமாளிக்க முடியலைனா கண்டிப்பா வேற வேலைக்கு மாறிடுவேன் மாமா” என அவன் சொல்ல, பரிமாறிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் கேட்டு கொண்டாயா என்பது போல பார்த்தார் பசுபதி.

அதை கவனித்த ஜீவா, “பயப்படாதீங்க அத்தை, மிதுவை விட முக்கியம் எனக்கு எதுவுமே இல்லை” என்றான். வினோதினியும் சரி என்பதாக தலையாட்டிக் கொண்டார்.

லாவண்யா சாப்பிட்டு விட்டு அம்மாவின் அறையில் படுக்க செல்ல, அங்கே ஏற்கனவே மிது சுவர் ஓரமாக படுத்திருந்தாள்.

தங்கையை விட்டு தள்ளி அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு அமர்ந்தாள் லாவண்யா. இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

மிதுவை பார்க்க வந்த ஜீவா, லாவண்யாவை கண்டு விட்டு, “ஓ ஸாரி ஸாரி மிதுவை அழைச்சிட்டு போயிடுறேன், நீங்க படுங்க” என்றான்.

திரும்பிய மிது வலியில் முனக, “இரு இரு நான் வர்றேன்” என சொல்லிக் கொண்டே அவளருகில் வந்தான் ஜீவா.

“ரொம்ப முடியலைனா ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போ ஜீவா” என்றாள் லாவண்யா.

“சுளுக்குத்தான் அண்ணி, அதெல்லாம் நானே சரி பண்ணிடுவேன்” என்ற ஜீவாவை கிண்டலாக பார்த்த லாவண்யா, “கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன வேணா பண்ணு, அதுவரை பார்த்து நடந்துக்கப்பா” என்றாள்.

“இவ்ளோ ஓட்ட வேணாம் அண்ணி, ஏன்னா எங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகுது அண்ணி” என சொல்லி, மிதுவை தூக்கிக் கொண்டு நடந்தான்.

மகளை தூக்கிக் கொண்டு படிகளில் ஏறும்  ஜீவாவை பார்த்த வினோதினி, “இன்னும் இவர் இங்க இருக்கிறது சரியில்லை, நீங்கதான் சொல்லணும்” என கணவரிடம் கூறினார்.

“ப்ச், இத செய் அதை செய்யாதன்னு எத்தனையதான் அவர்கிட்ட சொல்றது? மிதுகிட்ட நீயே சொல்லு” என்றவர் அறைக்கு சென்று விட்டார்.

மிதுவை அறையில் விட்டு கீழே வந்தவன் எண்ணெய் சூடு செய்து தரும் படி பாட்டியிடம் கேட்க, அவர் மருமகளை பார்த்தார்.

“இங்கவே சுளுக்கு எடுக்கவெல்லாம் ஆளுங்க இருக்காங்க தம்பி, உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என நாசூக்காக அவனை கிளம்ப சொன்னார் வினோதினி.

 அவனுக்கு புரிந்தால்தானே? எண்ணெய் வாங்கிக் கொண்டுதான் மேலே சென்றான்.

மனைவிக்கு சுளுக்கு வழித்து, அலர்ஜிக்கு மருந்திட்டு என அவன் கீழே வர ஒரு மணி நேரமானது. மேல் வேலைக்கு வருபவர்களின் பார்வையில் ஜீவா படாமல் பார்த்துக் கொள்வதற்குள் வினோதினி படாதபாடு பட்டார்.

ஒரு வழியாக ஜீவா விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வெளியில் வந்தான். மிது அழைத்து அவனுக்கு வாங்கிய களிம்பை அறையிலேயே மறந்து வைத்து விட்டதாக சொல்ல, மீண்டும் வீட்டுக்குள் வந்தான்.

“உங்க மகனுக்குதான் கவலையில்லைன்னா  நீங்களும் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க அத்தை, குட்டி போட்ட பூனை மாதிரி அவ பின்னாலேயே  சுத்தி சுத்தி வர்றார், உங்க பேத்திக்கும் அறிவில்லாம போச்சு” என மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தார் வினோதினி.

“ஸாரி தப்பான நேரத்துல வந்திட்டேன்னு நினைக்கிறேன்” என சொல்லிக் கொண்டு நின்றான் ஜீவா.

எழுந்து நின்ற வினோதினி திகைப்பும் சங்கடமுமாக விழித்தார்.

“அவ சொன்னதை கேட்டுகிட்டியா? நீயும்தான் இப்படி பேசுற மாதிரி நடந்துக்கிறடாப்பா” என்றார் மங்கம்மா.

“மேல என் ஆயிண்ட்மெண்ட் இருக்கு, எடுத்திட்டு போயிடுறேன் பாட்டி” என்றான் ஜீவா.

“உனக்கென்ன வந்துச்சு?” என குறுக்கு விசாரணை செய்தார் பாட்டி.

“அது…” குரலை செருமிக் கொண்டு திணறியவன், “மிது கூப்பிடுற மாதிரி இருக்கு” என சொல்லி மேலே செல்ல பார்த்தான். அவனை தடுத்த வினோதினி அவரே மகளின் அறைக்கு சென்றார்.

சில நிமிடங்களில் களிம்போடு கீழே வந்தவர் ஒரு வித சங்கடத்தோடே அதை அவனிடம் கொடுத்தார். மகளின் மூலமாக அவனுக்கும் அலர்ஜி ஆன விஷயத்தை அறிந்திருந்தாரே. அவனும் சங்கடத்தோடே வாங்கிக் கொண்டு வெளியில் விரைந்து விட்டான்.

தலையில் கை வைத்து அமர்ந்து கொண்ட வினோதினி, “கல்யாணம் முடியற வரைக்கும் திக்கு திக்குன்னு இருக்கத்தை, நல்ல படியா நடந்திட்டா வர்ற வருஷம் திருவிழாவுல பால் குடம் எடுக்கணும்” என்றார்.

“எல்லாம் நல்லா நடக்கும்” என்றார் பாட்டி.

மகளின் திருமணத்தை பற்றி தனக்கும் தன் கணவருக்கும் இருந்த ஆசைகளை கூறி இப்போது எளிமையாக நடத்தும் படி ஆகி விட்டதே எனவும் புலம்பினார் வினோதினி.

“ஆடம்பரமா கல்யாணம் பண்ணி வைக்கிறதுல என்ன இருக்கு? அந்த காலத்துல அருந்ததிக்கு செஞ்சு வச்ச கல்யாணத்தை பார்த்து ஊரே மூக்கு மேல விரலை வச்சது, என்னத்த வாழ்ந்தா அவ? நம்ம பொண்ணு நல்லா இருப்பா” என்றார் பாட்டி.

“நீங்க சொன்னது பலிக்கட்டும் அத்தை”

“பலிக்காம என்னடி? உன் பொண்ணை கண்டாலே பய  உருகுறான், இந்த மயக்கம் ஒன்னும் தீர்ந்து போற மாதிரி தெரியலை. மிதுவை நல்லா பார்த்துக்க இவனை மிஞ்சுற ஒருத்தனை நீயும் உன் ஆம்படையானும் பார்த்திருக்க முடியுமா?” என பாட்டி கேட்க, அதை அவரது மருமகளால் மறுக்க முடியவில்லை.

ஜீவா பெரியப்பாவின் வீட்டிற்கு சென்றதுமே அவர் நன்றாக திட்டினார்தான்.  பொறுமையாக வாங்கிக் கொண்டான். இதென்ன இப்படி பேசுறீங்க என செல்விதான் கணவரை கடிந்து கொண்டார்.

“ஹையோ விடுங்க பெரியம்மா, அக்கறையா திட்டுறதுக்கு ஆள் இருக்காங்கன்னா அதுவும் கொடுப்பினைதான்” என ஜீவா சொல்ல, அதில் அவனிடம் விழுந்து விட்டார் சங்கரன்.

மீசையை கெத்தாக முறுக்கி விட்டுக் கொண்டவர், “கல்யாணம்னா பொண்ணுக்கு செய்ய வேண்டிய முறையெல்லாம் இருக்கும், இவனுக்கு என்னத்த தெரியும். எந்த குறை வைக்காம செய்யணும், நாமதான் டி முன்ன நிக்கணும்” என மனைவியிடம் சொன்னார்.

செல்வியும் முகூர்த்த புடவை, திருமாங்கல்யம் என வாங்க வேண்டியவற்றை பட்டியலிட மாலையே தஞ்சைக்கு செல்ல முடிவு செய்தார்கள்.

அப்பா சொல்லியிருந்த படி கணவனுக்கு அழைக்காமல் இருந்தாள் லாவண்யா. பொறுத்து பார்த்த அன்பு அவனாகவே மனைவிக்கு அழைக்க, ஏற்கவில்லை அவள். மாமியாருக்கு அழைத்து விவரம் கேட்டான். அவர் தன் கைப்பேசியை மகளிடம் கொடுத்து பேச சொன்னார்.

அன்பு லைனில் இருக்க, கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் லாவண்யா.

“என்னடி பேசாம இருக்க?” என வினோதினி கேட்பது அன்புவுக்கு நன்றாக கேட்டது.

“கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல நான் சொன்ன எதையும் கேட்காம இருந்ததே இல்லைம்மா உன் மாப்ள. அதெப்படி மிதுவோட கல்யாணத்துக்கு வர மாட்டேன்னு சொல்வார், வர ஒத்துக்கிட்டாதான் நான் பேசுவேன், இந்தா நீயே சொல்லிடு” என சொல்லி அம்மாவிடமே கைப்பேசியை கொடுத்து விட்டாள் லாவண்யா.

மகளை முறைத்துக் கொண்டே, “ஹலோ தம்பி… அவ அப்புறம் பேசுறாளாம்” என்றார் வினோதினி.

“கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல உங்க பொண்ணு கூட என்னால முடியாத எதையும் கேட்டது இல்லை அத்தை. நல்லா பார்த்துக்கோங்க அவளை” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் அன்பு.

அவன் சொன்னதை மகளிடம் சொன்னவர், “ஆளாளுக்கு பிரச்சனைய இழுத்து விடாதீங்க, அப்பா பேசிக்குவார் உன் புருஷன்கிட்ட, இப்ப ஒழுங்கா அவர் கூட சமாதானம் ஆகு, கோவமா இருக்கார் அவர்” என அறிவுரை சொல்லி சென்றார்.

இப்போது கணவன் தன்னை இங்கேயே இருக்க சொல்லி விட்டதில் லாவண்யாவுக்கு நல்ல கோவம். ஆகவே மீண்டும் அவனிடம் பேச முயலவே இல்லை.