தன்னிடம் சிறு குழந்தையாக அழும் மகளை கண்டு முதலில் பதறித்தான் விட்டார் பசுபதி.
பின் அவள் காரணம் சொல்லவும்தான், “அட போம்மா, என்னவோன்னு நினைச்சு பயந்தில்ல போயிட்டேன். சாயந்தரம் போன் பண்ண சொன்னானா? பண்ணாத, அவன் கூப்பிட்டாலும் பேசாத, என்ன தைரியம் அவனுக்கு, என் பொண்ண நல்லா வச்சுப்பேன்னு கதை கதையா அளந்து விட்டு கல்யாணமும் பண்ணிக்கிட்டு அழ விடுறான்” என்றார்.
அழுகையை நிறுத்திய லாவண்யா, “ப்பா! அவர் என்னை நல்லாதான் பார்த்துக்கிறார், உங்க சின்ன மகளாலதான் இங்க இருக்க பிடிக்காம கிளம்பிட்டார்” என்றாள்.
அவர்களின் வரவை மனைவி சொல்லப் போய்தான் பசுபதியும் தன் வேலையை விட்டு விட்டு இங்கு விரைந்திருந்தார்.
“அவங்கள போக சொல்லிடுவோமா பாப்பா?” எனக் கேட்டார் பசுபதி.
“அதெப்படிப்பா அப்படி சொல்ல முடியும்? நான்தான் தாத்தாவை விட்டு ஜீவாவோட மாமாவை உள்ள கூப்பிடவே சொன்னேன்”
“அப்ப உன்னாலதான் அன்பு கிளம்பிட்டான்”
“என்னால இல்லை, மிதுவாலதான் அவரை உள்ள கூப்பிட வேண்டியதா போச்சு, அவதான் காரணம். என் வீட்டுக்காரர் முகமே சரியில்லை தெரியுமா?”
மகளை செல்லமாக முறைத்தவர், “ம்ம்… அவன் மூஞ்சு சரியில்லைனு இந்த நேரத்துல அழுவியா? மூஞ்ச நல்லா வச்சுக்க சொல்லி அவன்கிட்ட நான் பேசுறேன்” என வேடிக்கையாகவே மகளை சமாதானம் செய்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
சங்கரனும் இளங்கோவும் மரியாதையாக உபசரிக்க பட்டிருந்தனர். பசுபதியும் “வாங்க” என அழைத்தார். இவர்களின் வரவை மனைவி மூலமாக அறிந்த ஜீவா, தன் மாமாவிடம் கைப்பேசியில் பேசியிருந்தான்.
நடக்க சிரமமிருந்தாலும் வெளியில் வந்து அவர்களை வரவேற்றாள் மிது.
“என்ன சண்டையா இருந்தாலும் அவனை விட்ரக் கூடாதுமா நீ, என் அக்கா வாழாம போன வாழ்க்கையையும் சேர்த்து அவன் வாழனும்” என்றார் இளங்கோ.
தலையாட்டிக் கொண்ட மிதுவை ‘என்ன சண்டை?’ என்பது போல உற்றுப் பார்த்தார் தாத்தா.
“ஆக மொத்தம் அந்த பய என்னை பார்க்க வரலை, உன்னை சமாதானம் செய்ய வந்திருக்கான் என்ன?” எனக் கேட்டு வைத்தார் சங்கரன்.
“இல்லை மாமா, உங்களை பார்க்கணும்னு சொல்லிட்டேதான் இருப்பார். நிஜமா உங்க மேல அவருக்கு ரொம்ப மரியாதை. அவர் அம்மா இறந்தப்போ நீங்க நேர்ல வந்து விசாரிச்சதையெல்லாம் அடிக்கடி சொல்வார்” என சங்கரனை சமாதானம் செய்தாள் மிது.
“அவன் எங்க சென்னைல இருந்தான் அப்ப, பித்து பிடிச்சவன் மாதிரி எங்கெங்கேயோ அலைஞ்சுகிட்டல்ல திரிஞ்சான். இப்பவும் இங்க வந்து கெடக்கிறான்” என்ற இளங்கோ, மிதுவை பார்த்து, “அவனை விட்டு வர்ற அளவுக்கு அப்படி என்னதான் மா சண்டை?” எனக் கேட்டார்.
ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டவனை விட்டு வரும் அளவுக்கு சண்டையா? என கவலை கொண்ட தாத்தா இப்போது தன் மகனை பார்த்தார்.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் நாம விசாரிக்கணுமா என்ன? இப்ப ஒத்துமையாதானே இருக்காங்க. மிதுவுக்கு முடியலைன்னு அவ அம்மா சொன்னா, அவ உள்ள போகட்டும்” என சொல்லி மிதுவை அங்கிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்து விட்டார் பசுபதி.
பின் சுற்றி வளைக்காமல் திருமண பேச்சை எடுத்தார் பசுபதி. செல்வநாயகம் தடையாக ஏதும் சொல்லாமல் மகனை ஒத்தே பேசினார்.
ஜீவாவின் சார்பில் இளங்கோவும் சங்கரனும் அவர்கள் குடும்பத்துடன் வந்து நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் தாத்தா. அவர்களும் மனமார சம்மதம் சொன்னார்கள்.
தன் அக்கா வாழ்க்கையை எண்ணி இவர்கள் மீதெல்லாம் இளங்கோவுக்கு அதிருப்தி உண்டு. அக்கா யாரின் வாழ்க்கையையும் பறிக்கவில்லை, அக்காவுக்கு ஒரு குழந்தை இருந்த போது அந்த குழந்தையை யாரும் பார்க்கவே இல்லை, ஜீவாவுக்கு உண்டான உரிமைகளை தரவில்லை என்றெல்லாம் ஆதங்கம் உண்டு.
இவர்களும் துரோகம் இழைக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்தினர், கோபிகாவை பற்றி எப்படி அக்கறை கொள்வார்கள் என அவர் யோசிக்காமல், பெரியவர்களாக இருப்பவர்கள் அக்காவுக்கும் நியாயம் செய்திருக்க வேண்டும் என்றே நினைத்தார்.
மிதுவின் அக்காவின் கணவனான அன்பு யாரென தெரிந்த பிறகு அதிலும் ஏமாற்றத்தை உணர்ந்தார்தான், ஆனால் இவர்களாக முன் வந்து ஜீவாவை ஏற்றுக் கொள்ளும் போது வேறு எதையும் பேசக்கூடாது என கட்டுப்பாட்டோடு இருந்தார்.
அதைப் போலதான் சங்கரனுக்கும், என்னை மதிக்காத அன்புவுக்கு எடுத்து சொல்லும் கடமை உள்ளவர்கள் அப்போதெல்லாம் விட்டு விட்டார்கள். இப்போது ஜீவாவுக்கு தான் நெருங்கியவன் ஆன உடன்தான் வீட்டுக்குள் அழைத்து வைத்து பேசுகிறார்கள் என குறையாக நினைத்தார்தான்.
இப்போது முறுக்கிக் கொள்ள வேண்டுமென்றாலும் அவர் செய்யலாம். ஆனால் ஜீவாவின் மனைவி இந்த வீட்டு பெண் என்பதிலும் தான் செய்ய போகும் காரியம் அவனுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என நினைத்ததாலும் அவரும் கல்யாண பேச்சு தவிர்த்து வேறு எதையும் பேச முனையவில்லை.
வெள்ளிக்கிழமை அன்று பேத்திக்கு காதணி விழா என்பதால் அதை தவிர்த்து மற்ற நாளில் திருமணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என மட்டும் கோரிக்கை வைத்தார்.
வருகிற புதன் அன்றே முகூர்த்த நாள் என பார்த்து சொன்னார் தாத்தா. இவ்வளவு சீக்கிரமாகவா என சங்கரன் கேட்க, இளங்கோவும் அதையே எண்ணி தாத்தாவை பார்த்தார்.
“சீக்கிரம் செய்றதுதான் நல்லது, நாளை கடத்தினா ஊருக்கெல்லாம் தெரிஞ்சு போயிடும்” என்ற பசுபதி, அந்த நாளில் ஊர் கோயிலில் திருமணம் வைத்துக்கொள்ள தோது படுமா என உடனடியாக கேட்டறிந்தும் கொண்டார்.
முதல் நிலை சொந்தங்களை அழைத்தால் போதுமானது, அனைவரும் அக்கம் பக்கத்திலேயே இருப்பதால் சிரமம் பாராமல் நேரில் போய் அழைக்க வேண்டும், தோட்டத்தில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம், மறு வீட்டு அழைப்பு, அசைவ விருந்து போன்ற சம்பிரதாயங்கள் தேவையில்லை, லாவண்யாவுக்கு செய்த சீர் போலவே குறை வைக்காமல் மிதுவுக்கும் கொடுத்து விடு, பெரியவளின் திருமணத்துக்கு என்ன செலவு ஆனதோ அந்த பணத்தை மிதுவின் பெயரில் வங்கியில் போடு என நாயகம் அடுக்கிக் கொண்டே போக அவரது மகனும் எதற்கும் மறுக்கவில்லை.
வினோதினியின் அண்ணனிடம் அலைபேசியில் விவரம் சொன்னார் பசுபதி, அன்புவுக்கும் அழைத்தவர், திருமண நாளை சொல்லி, “எடக்கா ஏதும் பேசக்கூடாது, உன்னை அந்த தம்பி கூட கூடி குழைய சொல்லலை. வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளையா லட்சணமா வந்து கல்யாணத்துல நிக்குற” என்றார்.
“இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் மாமா, மத்தபடி வேற எதுக்கும் என்னை வற்புறுத்தாதீங்க, கண்டிப்பா லாவண்யா வருவா மாமா, முக்கியமான வேலை இருக்கு எனக்கு” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான் அன்பு.
தன் கணவனிடம் அப்பா பேச ஆரம்பித்த போதே ஆவலாக அவரையே பார்த்திருந்தாள் லாவண்யா. அன்புவின் பேச்சில் மனம் சோர்ந்திருந்தாலும் மகளிடம் காட்டிக் கொள்ளவில்லை பசுபதி.
எல்லாம் முடிவாகி விட்டாலும் ஜீவாவை பார்ப்பதற்காக காத்திருந்தனர் இளங்கோ சங்கரன் இருவரும். சாப்பிட அழைத்தார் பெரியவர். வேண்டாம் என அவர்கள் மறுத்த போதும் விடவில்லை.
ஆண்கள் ஒன்றாக உணவு மேசையில் அமர்ந்து கொள்ள வினோதினி பரிமாறினார். அப்போதுதான் தாத்தாவுக்கு ஜீவாவின் வேலை பற்றியே தெரிய வந்தது.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் ஜீவா வரவும் சரியாக இருந்தது. சங்கரன் அவனை முறைத்தாலும் தாத்தாவின் முன்னிலையில் கடியாமல் சாதாரணமாகவே பேசினார்.
கல்யாணம் முடியும் வரை தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என உரிமையாக அவர் சொல்ல, “மிது இங்கதானே இருக்கா பெரியப்பா” என்றான் ஜீவா.
தாத்தா தன் மகனை முறைத்தார்.
“கல்யாணம் ஆனதும் தங்கிக்கலாம் தம்பி, இது கிராமம்ல, ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசுவாங்க” என நல்ல விதமாகவே எடுத்து சொன்னார் பசுபதி.
“பெரியவங்க சொல்லும் போது சரின்னு சொல்லி பழகேன் டா, பெத்தவங்களுக்கு பொண்ணை பார்க்க தெரியாதா?” என இளங்கோவும் கடிந்தார். சங்கரனும் அதையே சொல்ல, ஜீவா வாயை மூடிக் கொண்டான்.
“சினிமா சம்பந்தமா வேலை செய்றியா நீ, அதெல்லாம் சரியா வராது, வேற நல்ல வேலை பார்த்துக்கோ” என்றார் தாத்தா.
ஜீவா விளக்கம் சொல்வதற்கு முன் பசுபதியே, “அதெல்லாம் அவங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணிக்குவாங்க ப்பா” என்றார். அதில் கோவமடைந்த பெரியவர் வேகமாக அறைக்கு சென்று விட்டார். சூழல் சற்றே சங்கடமானது.
பெருமூச்சு விட்ட பசுபதி, “எல்லாம் ஈஸியாவே போகுமா என்ன? போக போக சரியாகிடுவார் அவர்” என அனைவருக்கும் பொதுவாக சொன்னார்.
சங்கரனும் பெரியவர் சொல்வதில் நியாயம் உள்ளது என பேசினார்.