நெற்றியை தடவிக் கொண்டே ஜீவா நிற்க, அவனை முறைத்த அன்பு, “மிதுவோட வாழத்தான் ஓகே சொன்னேன், மத்தபடி என்கிட்ட ஒட்டணும்னு எப்பவும் நினைக்காத” என கறாராக சொல்லி விட்டே ஆடையை கொடுத்தான்.
“நான் எது பண்ணினாலும் உங்களை இன்சல்ட் செய்யத்தான்னு நீங்களும் நினைக்காதீங்க” என ஜீவா சொல்ல, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு கீழே சென்று விட்டான் அன்பு.
ஆடை மாற்றிக் கொண்ட ஜீவா ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தஞ்சை புறப்பட, வேறொரு வழியாக பசுபதியின் வீட்டை வந்தடைந்தார் சங்கரன். அதே நேரத்தில் இளங்கோவும் அங்கு வந்தார்.
பெரியப்பாவையும் அடையாளம் தெரியாத அசலூர் ஆளையும் பார்த்து விட்டு வெளியில் அமர்ந்திருந்த அன்பு எழுந்து நின்றான்.
இது மிதுன்யாவின் வீடுதானே என சங்கரனிடம் கேட்டார் இளங்கோ. அவருக்கு மிதுவின் பெயர் சரியாக தெரியாத காரணத்தால், “யாரு நீங்க?” என விசாரித்தார்.
அதற்குள், “ஆமாம்ங்க, மிது இந்த வீட்டு பொண்ணுதான், உங்களுக்கு அவளை எப்படி தெரியும்?” எனக் கேட்டுக் கொண்டே வந்தான் அன்பு.
“என் அக்கா பையனுக்கு ஆள் இல்லைனு நினைச்சிடுச்சா அந்த பொண்ணு? ஜீவாவுக்கு என் பொண்ண கட்டி கொடுக்கலாம்னு இருந்தேன், அதை கெடுத்து அவனை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப சண்டை போட்டுக்கிட்டு அவனை விட்டுட்டு இங்க வந்திட்டா என்ன அர்த்தம்? என் அக்கா வாழ்க்கைய நாசமாக்கின மாதிரி அக்கா பையன் வாழ்க்கையையும் நாசமாக்க பார்க்குறீங்களா?” எனக் கோவமாக கேட்டார் இளங்கோ.
இவர் யாரென சங்கரன், அன்பு இருவருக்குமே புரிந்து போனது.
“அப்புறம் என்ன ஆயா வடை சுட்ட கதையா சொல்லிட்டு இருக்கேன் நான்? அஞ்சு மாசம் ஆகுது கல்யாணம் ஆகி, ரெண்டு பேரும் ஒன்னாதான் வாழ்ந்திட்டு இருக்காங்க. ஏதோ சண்டைனு அந்த பொண்ணு பாட்டுக்கும் இங்க வந்திடுச்சு, என் மருமவன் அவளை தேடி இங்க வந்தவன் இன்னும் திரும்ப வரலை? இதான் அந்த பொண்ணு அவன் கூட வாழற லட்சணமா?” என்றார் இளங்கோ.
“பார்த்து பேசுய்யா, என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா தெரியாம வாய்க்கு வந்ததை பேசாத” என இளங்கோவை ஒருமையில் பேசினான் அன்பு.
“நீ யாருடா? உன்கூட எனக்கென்ன பேச்சு? வர சொல்லு அந்த பொண்ணை? அவகிட்டயே பேசிக்கிறேன்” என சத்தமாக இரைந்தார் இளங்கோ.
அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ஆட்கள் எட்டிப் பார்க்கவும் நிதானித்த அன்பு, “அவங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லை, உங்க அக்கா மகன் இங்கதான் இருக்கான்” என்றான்.
“அவனுக்கு தலைல அடின்னு கேள்வி பட்டேனே, உண்மையை சொல்லு நீதான் அடிச்சியா?” என சமய சந்தர்ப்பம் இல்லாமல் விசாரணை செய்தார் சங்கரன்.
அன்பு தன் பெரியப்பாவை கடினமாக பார்க்க, “ஹ்ம்ம்… அப்ப நீதான், நீ என்ன செஞ்சாலும் ஊரு வாயை பொத்தி நிக்கும்னு நினைச்சியா? எதுக்குடா அவனை அடிச்ச?” எனக் கோவப்பட்டார் சங்கரன்.
அன்பு தன்னை ஒருமையில் அழைத்ததில் ஏற்கனவே கோவத்திலிருந்த இளங்கோ, இப்போது ஆத்திர மிகுதியில், “ஜீவா மேல கை வச்சியாடா? எவன்டா நீ, என்ன தைரியம்டா உனக்கு? எங்கடா ஜீவா?” என சத்தம் போட்டார்.
அன்புவுக்கும் கோவமானது. உள்ளேயும் சத்தம் கேட்டது. மிதுவால் நடக்க முடியாத காரணத்தால் மற்ற அனைவரும் வெளியில் வந்து விட்டனர். தன் பேரனுடன் சங்கரனும் அவரது ஆள் ஒருவனும் சண்டை போடுகிறார்கள் என நினைத்துக்கொண்டார் தாத்தா.
தன் கைத்தடியை எடுத்துக் கொண்டு சென்றவர் அதைக் காட்டி சங்கரனையும் இளங்கோவையும் பார்த்து, “என் வீட்ல வந்து பிரச்சனை செய்ற அளவுக்கு பெரியாளுங்களாடா நீங்க?” என்றார்.
தான் பத்திரிக்கை வைத்தும் தன் மகளின் திருமணத்துக்கு வரவில்லை என சங்கரனுக்கு மன வருத்தம் இருந்தாலும் பெரியவரின் மீது எப்போதுமே மரியாதை உண்டு.
ஆகவே மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை கீழிறக்கி விட்டு, “இவரு ஜீவாவோட தாய்மாமாங்க மாமா. அவனை எங்கன்னு கேட்கிறாரு, நைட் அவன் என் வீட்ல தங்கலைங்க மாமா, எங்கன்னு கேட்டாலும் சரியா பதில் சொல்லலை, அவன் இங்கதான் இருந்தான்னா வெளில வர சொல்லுங்க மாமா” என்றார்.
சங்கரன் கொடுத்த மரியாதையில் இளங்கோவும் அமைதியாகி, “ஆமாம்ங்க, ஜீவாவை இவன் அடிச்சிட்டானாம், அவனுக்கு என்னாச்சோன்னோ டென்ஷன் ஆகுது, எங்க அவனை?” எனக் கேட்டார்.
ஜீவாவை அன்பு அடித்த கதையெல்லாம் தாத்தாவுக்கு தெரியாதே, ஆகவே என்னடா என்பது போல பேரனை பார்த்தார்.
“அது வேற கதை தாத்தா, அப்புறம் சொல்றேன்” என்றான் அன்பு.
பதட்டமான இளங்கோ, “அவனுக்கு ஒன்னுமில்லையே, என்னங்க பண்ணுனீங்க அவனை?” என தாத்தாவிடமே கேட்டார்.
“தஞ்சாவூர் வரை போயிருக்கான், வந்திடுவான்” என்றான் அன்பு.
“உண்மையா மாமா?” என செல்வநாயகத்திடம் கேட்டார் சங்கரன்.
“என் பேரன் பொய் சொல்லுவானா சங்கரா?” என உறுமினார் தாத்தா.
“அடிச்சவனே இவன்தானே?” என்றார் சங்கரன்.
“உன் கூட பொறந்தவனோட பையன்டா இவன், அப்பன் இல்லாதவனுக்கு அந்த ஸ்தானத்துல நிக்க வேண்டியவனுக்கு எதுக்கு இம்புட்டு துவேஷம்? உள்ள வா முதல்ல” என்றார் தாத்தா.
சங்கரன் தயங்க, தன் மனைவி மற்றும் மருமகளை பார்த்தார் பெரியவர். வீட்டு பெண்களும் அவரை உள்ளே அழைக்க, கணவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே, “வாங்க மாமா” என்றாள் லாவண்யா.
தன் மனைவியை அன்பு முறைக்க, கணவனின் கையை சலுகையாக பிடித்துக் கொண்டவள், “ஜீவாவோட மாமாவையும் உள்ள கூப்பிடுங்க தாத்தா” என்றாள்.
அன்புவை சங்கடமாக பார்த்தாலும் இளங்கோவையும் உள்ளே அழைத்து விட்டார் தாத்தா. அன்பு வெளியிலேயே நிற்க, “இவரை நான் அழைச்சிட்டு வர்றேன், நீங்க உள்ள போங்க” என்றாள் லாவண்யா.
அனைவரும் உள்ளே செல்ல, “என்ன பாப்பா… என்னை கோவ படுத்தி பார்க்கிறியா?” என சற்றே கோவமாக கேட்டான் அன்பு.
“உங்களுக்கும் உங்க பெரியப்பாக்கும் என்ன சண்டை? சின்ன பிரச்சனைய ஊதி ஊதி பெருசாக்கி அவங்க உறவை ஒன்னுமில்லாம பண்ணிட்டீங்க, சரி செய்ய நினைச்சா தப்பா? எம்மேல கூட கோவம் வருமா உங்களுக்கு?” என கண்கள் கலங்க கேட்டாள் லாவண்யா.
“என்ன சொன்னேன்னு கண்ணுல தண்ணி வைக்கிற நீ? நான் வரலை. வீட்டுக்கு கிளம்புறேன், நீ இங்க இருந்து என்ன ஏதுன்னு பாரு, சாயந்தரம் ஃபோன் போடு, வந்து கூப்பிட்டிக்கிறேன்” என்றான்.
“என்னங்க!”
“ப்ச், சும்மா உன் இஷ்டத்துக்கு வளைக்க கூடாது. எனக்கு மனசு சரியில்லை” என்றவன், வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள கூட செய்யாமல் காரெடுக்க நடந்தான். அவன் பின்னாலேயே வந்தாள் லாவண்யா.
“சொல் பேச்சு கேட்கணும் பாப்பா, நீ இங்க இரு” என அழுத்தி சொன்ன அன்பு புறப்பட்டு விட்டான்.
லாவண்யா உள்ளே செல்லாமல் அங்கேயே நிற்க, பசுபதி வந்தார். அப்பாவை கண்டதும் அவரின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் மகள்.