“பேசி சுளுக்கு வந்திடுச்சா எனக்கு? நீங்க எம்மேல உருண்டதாலதான் ஜீவா…  உங்க வெயிட் தாங்கித்தான் சுளுக்கு வந்திடுச்சு, என்னை குறை சொல்ல வேணாம்!” என கணவனிடம் கோவப்பட்டாள் மிது.

“அநியாயமா பேசுற நீ, அப்படி பார்த்தா நைட்டே  உனக்கு சுளுக்கு பிடிச்சிருக்கணும்” என வேகத்தில் சொல்லி விட்டவன் பின்னால் திரும்பி பார்க்க முடியாமல் மிதுவை பாவமாக பார்த்தான். நிஜமாகவே சுற்றி இருந்தவர்களை மறந்தே விட்டான்.

சட்டென ஒரு அமைதி அங்கே.

கண்களாலேயே ஜீவாவை சுட்டு பொசுக்கிய மிதுவும் யாரையும் ஏறெடுத்து பார்க்க முடியாமல் திணறினாள்.

மங்கம்மா பாட்டி மோவாயில் கை வைத்து அதிசயிக்க, முதலில் திகைத்தாலும் பின் வாய்க்குள் சிரித்தாள் லாவண்யா. வினோதினிதான்  கவலையாக பார்த்தார்.

மிதுவிடமிருந்து விலகிய ஜீவா மற்றவர்களை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான். அங்கில்லாமல் சிறிது நேரம் வெளியில் சென்றால் நன்றாக இருக்கும் என அவனுக்கு தோன்றியது.

“இவளுக்கு பூச்சி கடிக்கு மருந்து வாங்கணும், தஞ்சாவூர் வரை போய்ட்டு வந்திடுறேன்” என்றான்.

“போயிட்டு வாடாப்பா” என்றார் பாட்டி.

“ப்ளீஸ் வேற காஸ்ட்யூம் கிடைக்குமா? இதோட முடியலை பாட்டி” என தன் ஆடையை காட்டி ஜீவா சொல்ல, லாவண்யா சிரித்து விட, பாட்டியும் சிரித்தார். மிது அவர்களை பார்த்து முறைத்தாள்.

“ம்மா அவளுக்கும் எனக்கும் பேச்சு இல்லை” என லாவண்யா சொல்ல, பெரிய மகளை அதட்டிய வினோதினி,  “நீங்களும் இவ கூட சேர்ந்திட்டீங்களா அத்தை?” என மாமியாரை சாடினார்.

“மச்சினிச்சியோட நையாண்டிக்கு பயந்தவன் கிராமத்து பொண்ண கட்டியிருக்க கூடாது, நீ உன் வேலைய பாரு” என தன் மருமகளைத்தான் அடக்கினார் பாட்டி.

“ஒ அப்படி வர்றீங்களா நீங்க? பதிலுக்கு நானும் கலாய்ப்பேன் பாட்டி, மதனி கோச்சுக்க மாட்டாங்களே?” எனக் கேட்டான் ஜீவா.

“மதனியா?” என்றார் பாட்டி.

“மதுரைல அண்ணிய இப்படித்தான் கூப்பிடுவாங்க அப்பயி” என்றாள் லாவண்யா.

“நீ மதுரைகாரனாடா? மெட்ராஸ்காரனுல்ல நினைச்சிருந்தேன். ஹ்ம்ம்… என்னைய கூட மதுரை சமீன்ல பொண்ணு கேட்டு வந்தாங்க, எங்கப்பாருதான் தூரமா பொண்ண கொடுத்தா  பார்க்க முடியாதுன்னு இந்த சில்லாவுக்குள்ளேயே மாப்ள பார்த்திட்டாரு” என தன் கதையை சொன்னார் பாட்டி.

“இப்ப கூட என்ன குறைஞ்சு போச்சு, சொல்லுங்க ஜம்முன்னு ஒரு மாப்ள மதுரை பக்கமா பார்க்கிறேன்” என்றான் ஜீவா.

“அடப்பாவி மச்சினிச்சிய வுட்டுட்ட… இந்த கெழவிதான் கெடச்சாளா உன் வம்புக்கு?”

“யார் சொன்னா நீங்க கெழவின்னு? அத்தைக்கு அக்கா மாதிரி இருக்கீங்க” என்றான் ஜீவா. வினோதினி என்னடி இது என சின்ன மகளை பார்க்க, பாட்டியோ வெட்கப்பட்டு சிரித்தார்.

“நல்ல வேளை மிதுவுக்கு அக்கான்னு சொல்லலை, வெக்கத்தை பாரு, இரு தாத்தாவை கூப்பிட்டு காமிக்கிறேன்” என்றாள் லாவண்யா.

எங்கே உண்மையாகவே தன் கணவரை அழைத்து விடப் போகிறாளோ என பயந்த பாட்டி, பெரிய பேத்தியின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, “சொல்லிப்புடாத டி” என்றார்.

“ஏன் தாத்தா திட்டுவாரா? என்ன பாட்டி நீங்க? உங்க ரெண்டு பேத்தியையும் பார்த்தீங்களா இல்லையா நீங்க? ஹஸ்பண்டஸை வச்சு… அது அந்த நூல் கட்டி விளையாடுவாங்களே பப்பட் ஷோ… மிது தமிழ்ல என்ன பேரு?” என முதலில் பாட்டியிடம் பேசி பின் மனைவியிடம் கேள்வி கேட்டான்.

மிதுவுக்கும் லேசான முறுவல் அரும்பியிருக்க, “பொம்மலாட்டம் ஜீவா. ஹஸ்பண்ட்டை எப்படி டீல் பண்றதுன்னு நாங்களே எங்க அப்பயிகிட்டருந்துதான்  கத்துக்கிட்டோம் ஜீவா, வெளில பயப்படற மாதிரி அப்பயி ஆக்ட் கொடுக்குது” என்றாள்.

“ஸீ, டியூஷன் மாஸ்டரே நீங்கதானா? அப்படியே ஹஸ்பண்ட்க்கு பயந்த மாதிரி வெளில எப்படி நடிக்கிறதுன்னும் இவளுக்கு சொல்லி கொடுங்க, ரொம்ப டேமேஜ் பண்றா என்னை” என்றான் ஜீவா.

“நீயும் வெளில விலகி நிக்கணும், இப்படி அவ கூட உரசிகிட்டே நின்னா அவளுக்கு எங்கேருந்து பயம் வரும்? கூடுதலா ராவுல உங்களுக்குள்ள நடந்த கதையை வேற சபைல ஒப்பிச்சு வைக்கிற” என ஜீவாவை வாரினார் பாட்டி. அவனை நெளிய வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

“அத்தை போதும், என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கு, எப்படி இப்படி பேச முடியுது உங்களால?” என்றார் வினோதினி.

“சரிதான்டி, எல்லாரும் சீரியசு ஆகிட்டோம்” என்றார் பாட்டி.

“வா ஜீவா, அவரோட ட்ரெஸ் என் ரூம்ல இருக்கு, அதை மாத்திக்க” என்றாள் லாவண்யா. அவன் மிதுவின் முகத்தை பார்க்க, அவள் உம் என இருந்தாள்.

“இப்படிலாம் பண்ணினா நானும் முறுக்கிப்பேன் ஜீவா, சண்டை எனக்கும் அவளுக்கும்தான், வர போறியா இல்லையா இப்போ?” என ஜீவாவை மிரட்டினாள் லாவண்யா.

மிதுவை கெஞ்சலாக பார்த்து, அவள் கண் அசைவை பெற்றுக் கொண்டுதான் நகர்ந்தான் ஜீவா.

லாவண்யா மாடி ஏறப் போக, “அலட்டிக்காம இருக்கணும்னு டாக்டர் சொன்னதை மறந்திட்டியா? எதுக்கு படி ஏறுற?” என தடுத்தான் அன்பு.

லாவண்யா விஷயத்தை சொல்ல, தாத்தா ஜீவாவின் ஆடையை பார்த்து விட்டு, “அப்ப நீ போய் எடுத்து கொடு, செத்த முன்னாடி அவன் அடிச்ச கூத்துல பயந்திட்டேன், ஊர் பய எவனாவது பார்த்திருந்தான்னு வச்சுக்க… நீ போடா” என அன்புவிடம் சொன்னார்.

அன்பு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.

“நீ இப்படி பண்ணினா சரியா வராதுடா அன்பு. அந்த பய உனக்கு தவிர்க்க முடியாத சொந்தம் ஆக போறத உன்னால ஏத்துக்க முடியலைன்னு எனக்கு தெரியும். உன் மனசும் எனக்கு புரியுது. ஆனா அப்படியே சுத்தமா விலகி நின்னுடாத அன்பு” என்றார் தாத்தா.

தாத்தாவா இப்படி பேசுகிறார் என மூவரும் பார்த்திருந்தனர். பசுபதி உண்மையை சொல்லி விட்ட நாளிலிருந்தே இதைப் பற்றிதானே யோசித்து வருகிறார். அவரது வாழ்நாளில் அவர்  ஒரு விஷயத்தை மறுக்க மறுக்க, நடத்தியே தீருவேன் என மகன் தீவிரமாக இருப்பது மிதுவின் கல்யாணம்தான்.

தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விட, இத்தனை வருடங்களாக தன்னை மீறாத மகனுக்காகவும் பேத்தியின் மீதுள்ள பாசத்தினாலும் விருப்பம் இல்லா விட்டாலும் ஜீவாவை பேத்தியின் கணவனாக அங்கீகரிக்க முடிவு செய்து விட்டார். இப்போது பெரியவராக அன்புவுக்கும் அறிவுரை சொல்கிறார்.

“என்னங்க…” என கெஞ்சலாக அழைத்தாள் லாவண்யா.

பெரிய மூச்சிழுத்து விட்ட அன்பு மாடிக்கு சென்றான். நீயும் போ என்பதாக தாத்தா கையால் சைகை செய்ய ஜீவாவும் சென்றான்.

ஒரு பேண்ட் சட்டை எடுத்துக் கொண்டு அன்பு அறையிலிருந்து வெளிப்பட, அங்கு நின்றிருந்த ஜீவாவுடன் லேசாக மோதிக் கொண்டான்.