“எதுக்கு இப்போ ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற மிது?” என ஜீவா கேட்டதை பொருள் செய்யாமல், “நாம கிளம்பலாம் ஜீவா, எனக்கு இங்க இருக்க வேணாம். அழைச்சிட்டு போங்க என்னை” என சொல்லி அழுதாள்.
“சும்மா இரேன் டி!” என அதட்டினார் மங்கம்மா.
“கடைசில என்னை வில்லியாக்க பார்க்கிறியா நீ!” என தங்கையிடம் சீறிய லாவண்யா, அறையின் வாயிலுக்கருகில் நின்றிருந்த தன் கணவனிடம் சென்று, “இனிமே நான் இங்க இருக்க மாட்டேன், நம்ம வீட்டுக்கு போலாம் வாங்க” என்றாள்.
“என்னாச்சு பாப்பா உனக்கு? ஏன் இப்படிலாம் பேசுற? என்ன சொல்லி அழைச்சிட்டு வந்து என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என பொறுமையாக கேட்டான் அன்பு.
“நீங்க பார்க்கல அவ பேசினத, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா, தப்புதானே, அதை தப்புன்னு சொல்லாம வேறெப்படி சொல்றது?” என கணவனிடம் நியாயம் கேட்டாள் லாவண்யா.
“எதுக்கு தேவையில்லாம பேசின மிது?” என ஜீவாவும் மெல்லிய குரலில் தன் மனைவியை கடிந்தான்.
“நீங்களும் தப்பு சொல்றீங்களா என்னை?” என ஜீவாவை கேட்டாள் மிது.
ஜீவா உச்சு கொட்டி சலித்தான்.
“அன்பு மாமா, இங்க பொண்ணு கேட்டு வந்தப்போ தாத்தா ஓகே சொல்லலைதானே? அப்புறம் இவளுக்கு பிடிச்சது, அப்பவும் தாத்தா முடியவே முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணியிருப்பாளாம்? எல்லா பிரச்சனையும் அவங்களுக்குன்னு வந்தாதான் தப்பு சரியெல்லாம் புரியும்” என்றாள் மிது.
மற்ற பெரியவர்கள் அவளை குறை சொல்லியிருந்தால் பொறுத்துப் போயிருப்பாள், தன்னை புரிந்து கொள்வாள் என நம்பிய தன் அக்கா பேசவும் தாள முடியாமல் தன்னை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினாள் மிது.
“அப்படியிருந்தா வீட்ல ஓகே சொல்ற வரை வெயிட் பண்ணியிருப்பேன், ஹையோ நம்ம பொண்ணு இப்படியே இருந்திடும்னு பயந்து போய் வீட்ல உள்ளவங்களே முறையா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. அவசர அவசரமா நானே கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன்” என கோவமாக சொன்னாள் லாவண்யா.
இப்போது அன்பிலிருந்து மற்ற பெரியவர்கள் அனைவருமே மிதுவை குற்றம் சுமந்தும் பார்வை பார்த்தனர்.
மிது தேம்ப ஆரம்பித்தாள். அவளை தன் இடையோடு கட்டிக் கொண்ட ஜீவா, “மிது ப்ளீஸ் அழாத, இப்பதான் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்” என்றான்.
“அழுதா மட்டும் சரின்னு ஆகிடாதுடி” என்ற லாவண்யாவை பார்த்த ஜீவா, “நீங்க இல்லாம அவர் நிம்மதியா சந்தோஷமா வாழ மாட்டார், வீட்ல சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள எது வேணா நடந்திடும்ங்கிற நிலைமை வந்தா கூட வெயிட் பண்ணியிருப்பீங்களா?” எனக் கேட்டான்.
ஜீவா பேச்சுக்கு சொன்னாலும் அதை ரசிக்க முடியாமல் சகிக்க முடியாமல் கணவனின் கையை பற்றி அவன் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு நின்றாள் லாவண்யா.
“இவளை பயமுறுத்துற மாதிரி பேச வேணாம்னு சொல்லுங்க அத்தை அவன்கிட்ட” என்ற அன்பு, மனைவியின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்து, “உன் கண்ணு முன்னாடி நல்லாத்தானே நிக்கிறேன், சாதாரணமா இரு” என்றான்.
“அவங்கள பயமுறுத்துறது இல்லைங்க என் எண்ணம். மிதுவோட நிலைமையை விளக்க நினைச்சுதான் சொன்னேன். எங்க கல்யாணம் நடக்கலைனா இந்நேரம் எங்க எப்படி திரிஞ்சிருப்பேன்னு சொல்ல முடியாது, என்னையவே எனக்கு நெனப்பு இருந்திருக்குமான்னும் நானே இருந்திருப்பேனான்னும் கூட…” என்ற ஜீவா உதடுகளை பிதுக்கினான்.
பாட்டிக்கு பாவமாக போய் விட, வினோதினி மனம் கசிந்தார். ஜீவாவை ஏற்றுக்கொள்ள மனம் வரா விட்டாலும் இப்போது அவன் பேத்தியின் கணவன் ஆகி விட்ட நிலையில் தாத்தாவுக்கே இந்த பேச்சு பதற்றத்தை கொடுத்தது.
“நல்லாத்தானே இருக்க இப்போ, இப்படிலாம் பேசாத ஜீவா” என்றாள் லாவண்யா.
“உங்களுக்கே நான் சொன்னதை நினைச்சு பார்க்க முடியாம இப்போ என்னை பார்க்கும் போது மனசு பதறுதுல்ல? என்னை நேசிச்ச பொண்ணுங்க இவ, உங்க பார்வைல எங்க கல்யாணம் தப்பு, இவளுக்கு அதை விட்டா வேற வழி தெரியலை. நான் கூட இல்லாம இவளால மிச்ச வாழ்க்கையை ஓட்டியிருக்க முடியும்னு நினைக்குறீங்களா? அப்படி அவ கஷ்ட படுறதுதான் உங்களுக்கெல்லாம் வேணுமா?” எனக் கேட்டான் ஜீவா.
“நல்லதே பேச மாட்டியாடா ப்பா நீ?” ஜீவாவை கடிந்த மங்கம்மா, “இன்னும் வேடிக்கை பார்த்தா என்ன அர்த்தம்ங்க? வாழ்ந்து முடிச்சவங்க நாம, இளம் குருத்துங்கள பகைச்சுகிட்டு என்னத்த கொண்டு போக போறோம்னு வெரைப்பா நிக்கிறீங்க?” என கணவரிடம் கேட்டார்.
“என்னத்தயோ பண்ணுங்க” என்ற தாத்தா ஹாலில் சென்று அமர்ந்து கொண்டார்.
அதிகம் முரண்டு பிடிக்காமல் இப்படி தாத்தா சொல்லி செல்லவும் அனைவருமே வியப்பாக பார்த்தனர்.
“பாட்டி… தாத்தா ஓகே சொல்லிட்டாரா இல்லை இன்னும் கோவமா? அவர் லாங்குவேஜ் எனக்கு புரியலை” என ஜீவா மட்டும் சந்தேகம் கேட்டான்.
“ம்ம்… ஓகேதான், ஆனா தள்ளியே நில்லுன்னு சொல்லிட்டு போறார்” என இடக்காக சொன்ன அன்புவும் ஹால் சென்றான்.
“எல்லாரும் ஒரு மார்க்கமாவே இருக்காங்க பாட்டி, அதிலேயும் இவர் இருக்காரே… பேருக்கும் ஆட்டிடியூட்க்கும் சம்மந்தமே இல்லை” என்றான் ஜீவா.
“ஜீவா… அவரை பத்தி கிண்டலா எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன்” என்றாள் லாவண்யா.
மிது ஏதோ சொல்லப் போக அவளின் வாயை மூடிய ஜீவா, “கொஞ்சம் சும்மான்னு இரு மிதுக்குட்டி” என்றான்.
அவன் கையை தட்டி விட்டவள், “காரணமே இல்லாம உங்களை மாமா அடிச்சார்தானே? அதுக்கு ஸாரி கேட்க வந்ததா அக்கா சொல்றாளே, கேட்டாரா? ஆனா அவரை ஒரு வார்த்தை சொன்னா இவளுக்கு கோவம் வருமாம்? ஆச்சுவலி எனக்குத்தான் கோவம் வரணும்” என்றாள்.
லாவண்யாவின் முகத்தில் கடுமை கூடி சிவப்பு ஏறியது.
“எல்லாம் ஸ்மூத்தா போற மாதிரி இருக்கப்போ எதுக்கு இப்படி பேசுற?” என கடிந்தான் ஜீவா.
“நான் அழுது கெஞ்சி இவங்கள கரைக்கலாம் நினைச்சேன், அதெல்லாம் தப்பு, பாயிண்ட் பாயிண்டா பேசினாதான் காரியம் ஆகும் ஜீவா. மாமா பக்கம் மட்டுமே பேசக்கூடாதுதானே? ஏன் யாரும் உங்களை நினைக்க மாட்டேங்கிறாங்க? உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர்தான் அப்பா, அவர் தப்புல மாமா பக்க தராசு மட்டும் சாயுது…” என பேசிக் கொண்டே போனாள்.
“ஸ்டாப் மிது, இப்படி பேசி பேசித்தான் உன் முதுகு பிடிச்சுகிச்சு” என்றான் ஜீவா.