கொஞ்சும் காதல் சாரல் -32

அத்தியாயம் -32

தாத்தாவை கண்டு விட்டு ஜீவாவிடமிருந்து விலகி எழப் போனாள் மிது. முதுகில் விண் என்ற வலியை உணர்ந்தவள் துடித்துப் போனாள். மீண்டும் அவன் மீதே படுத்தாள்.

வீட்டுக்குள் நுழைந்த அன்பும் லாவண்யாவும் இந்தக் காட்சியை கண்டு விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் திகைப்பாக பார்த்துக் கொண்டனர்.

தாத்தா தன் மனைவியை பார்த்து முறைத்தார்.

“இதுதான் ஜீவா தம்பிங்க, அதான் நம்ம மிதுவோட ஆம்படையான்ங்க” என கணவருக்கு அறிமுகம் செய்து வைத்த மங்கம்மா, “ஏட்டி என்னடி பண்ணுற? எந்திரிடி முத, வெளியாளுவோ பார்த்தா என்னாகிறது?” என பேத்தியிடம் சத்தம் போட்டார்.

“ரிலாக்ஸ் பாட்டி, இவளுக்கு என்னவோ முடியலை” என்ற ஜீவா, தன்னிடமிருந்து மெதுவாக அவளை நகர்த்தி தரையில் கிடத்தினான். அதற்கே முகம் சுளித்தாள்.

“அடியெல்லாம் படலைன்னு சொன்னியே மிது?” எனக் கேட்டான் ஜீவா.

“முதுகு பிடிச்சிடுச்சு போல ஜீவா” என்றாள் மிது. பாட்டியும் லாவண்யாவும் கூட மிதுவின் அருகில் வந்து என்னவென பார்த்தார்கள்.

பின் கட்டிலிருந்து வினோதினி உள்ளே வர, எப்படி இவன் வீட்டில் இருக்கிறான், யார் அனுமதி தந்தது,  எனக்கு தெரியாமல் என்ன நடக்கிறது இங்கே என சத்தம் போட்டார் தாத்தா.

“நைட்டே வந்திட்டார் மாமா, கோவ படாதீங்க, நல்ல மழைல எப்படி அனுப்ப முடியும், என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணோட…” என சொல்லிக் கொண்டே போனவர் அன்புவை பார்த்து விட்டு, “வாங்க தம்பி…” என அழைத்து,  மேலே பேச தயங்கினார்.

“என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணோட புருஷன்னு சொல்லி முடிங்க அத்தை” என்றான் அன்பு.

“தம்பி… அது வந்து…” என மருகினார் வினோதினி.

“எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருக்கேன் அத்தை, ஆனா இவன் இங்க தங்கியிருப்பான்னு எதிர்பார்க்கல” என்றான் அன்பு.

“என்னென்னமோ  நடக்குதுடா இங்க, நான் நடை உடையா இருக்கும் போதே என்னை செல்லாக்காசு  ஆக்கிட்டாங்க. நம்ம வீட்டு பொண்ணாம் நம்ம வீட்டு பொண்ணு, கழுதைய வீட்டுலேயே சேர்க்க கூடாதுங்கிறேன்” என தாத்தா ஆத்திரமாக பேச, மகளை பார்ப்பதா மாமனாரை சமாதானம் செய்வதா என கையை பிசைந்தார் வினோதினி.

தாத்தாவை அமர வைத்து சமாதானமாக ஏதோ சொல்ல ஆரம்பித்தான் அன்பு. தப்பித்தோம் என நினைத்தவராக மகளிடம் சென்றார் வினோதினி.

எழ முடியவில்லை என்றாள் மிது. வினோதினி சின்ன மகளின் கையை பிடித்து வேகமாக எழுப்பி நிறுத்த முயற்சிக்க, வலியில் ஆ என அலறினாள்.

“என்ன செய்றீங்க நீங்க?” என பதற்றமாக கேட்ட ஜீவா, மிதுவை அப்படியே தூக்கிக் கொண்டான்.

பார்த்திருந்த தாத்தாவின் முகத்தில் கடுமை கூடியது.

“எங்க அழைச்சிட்டு போறது? ரூம் காட்டுங்க” என வினோதினியிடம் கேட்டான் ஜீவா. அவர் அவரது அறையை காட்டவும் அங்கே சென்று படுக்கையில் விட்டான்.

மற்ற பெண்கள் மூவரும் அவனைத்தான்  தொடர்ந்து சென்றனர். அறைக்குள் நுழையவுமே, “என்ன சொன்னா என்னடி பண்ணி வச்சிருக்க நீ? எதையும் சரியாவே செய்ய தெரியாதா உனக்கு?” எனக் கோவப்பட்டார் வினோதினி.

“என்ன அத்தை நீங்க இவ்ளோ ஹார்ஷா பேசுறீங்க? இவளுக்கு முடியலை” என்றான் ஜீவா.

“அட சும்மா இருங்க தம்பி, இதுக்குத்தான் நைட் இங்க தங்க வேணாம்னு நான் சொன்னேன், இப்ப அவரும் வீட்ல இல்லை, இவளை வீட்ட விட்டு அனுப்புறேன்னு எல்லாம்  மாமா சொல்றார், யார் சமாளிக்கிறது அவரை?” என ஆதங்கமாக கேட்டார் வினோதினி.

“ம்மா ஏன் இவர்கிட்ட இப்படி பேசுற? தாத்தாவே தேவலாம் உனக்கு” என வலியை பொறுத்துக் கொண்டு சொன்னாள் மிது.

“அம்மா நிலைமையையும் புரிஞ்சுக்கோயேன் டி மிது” என்றாள் லாவண்யா.

“மாமாவை இப்படி பேசினா உனக்கு தெரியும்” என மிது சொல்லி விட, “அவரை எதுக்குடி இழுக்குற? எல்லாத்துக்கும் அமைதியா போவேன்னு நினைக்காத” என்றாள் லாவண்யா.

“நேத்து அவர்தான் ஜீவாவை அடிச்சதுன்னு உனக்கு தெரிஞ்சிருக்குமே, அதுக்கு மட்டும் அமைதியா போவ அப்படித்தானே?” என்றவள் ஷ் ஆஹ் என வலியில் முனகினாள்.

“அதுக்கு ஸாரி கேட்கத்தான் அவர் வந்தார், அவர் மனசு புரியாம பேசக்கூடாது” என்றாள் அக்கா.

“அவருக்கு மட்டும்தான் மனசு இருக்கு, மத்தவங்களுக்கு இல்லை” என்றாள் தங்கை.

சகோதரிகளுக்குள் காரசாரமான வாக்குவாதம் ஆனது.

சத்தமான பேச்சு கேட்டு தாத்தாவும் அன்புவும் கூட அறைக்குள் சென்றனர்.

ஜீவா மிதுவை தடுக்க பார்த்தான், அவள் கேட்பதாக இல்லை.

“சின்ன வயசுல எம்புருஷன் பட்ட கஷ்டம் ஜீவாவுக்கு இல்லை” என்றாள் லாவண்யா.

“ஜீவாவும் ஒன்னும் ஜாலியா இல்லை. ஹஸ்பண்ட் கூட இல்லாம ஜீவா அம்மாவே எல்லாத்தையும் பார்க்க வேண்டிய நிலைமை. அதனால அவங்க கூட ஜீவாவை வச்சுக்கல, அப்பா முகத்தையே பார்த்தது இல்லை, அம்மா இருந்தும் அவங்க கூட இல்லாம வளர்ந்தாரு ஜீவா. இதெல்லாம் கஷ்டம் இல்லியா? மாமா கஷ்ட பட்டார்னா அதுக்கு  ஜீவா எப்படி பொறுப்பாவாருன்னு மட்டும் எடுத்து சொல்லு கேட்டுக்கிறேன்” என்றாள் மிது.

“ஆனா ஜீவா என் புருஷன் பட்ட வேதனைக்கெல்லாம் சாட்சி, நீ பார்த்த வேலையால காலம் முழுக்க எம்புருஷன் ஜீவாவை சந்திக்கணும் உறவு கொண்டாடணும், நெருடலோடவே வாழணும். இப்பவும் இங்க வந்திருக்காருன்னா யாருக்காகன்னு நினைச்ச? எனக்காக.  இல்லைனா ஜீவாவை ஏத்துக்கணும்னும் அவருக்கு எந்த அவசியமும் இல்லை”

“ஓ… அப்ப ஜீவாவுக்கு மட்டும் இங்க வந்து  புதுசு புதுசா உறவு பிடிக்க ஆசைன்னு நினைச்சியா? அவமானம் அடின்னு எல்லாம் சகிக்கிறார், எல்லாம் எனக்காக மட்டும்தான். இல்லைனா இங்க தலை வச்சு கூட படுத்திருக்க மாட்டார்”

“மிது! உன் அக்காடி, பார்த்து பேசு” மனைவியை கண்டித்தான் ஜீவா.

“ம்ம்… அவ என்னை தங்கச்சின்னு யோசிக்கிலையே, அவளுக்கு அவ ஹஸ்பண்ட் முக்கியம்னா எனக்கும் என் ஹஸ்பண்ட்தான் முக்கியம்” என்றாள் மிது.

“ம்மா! தப்பு பண்ணினவ எப்படி பேசுறா, நீயும் பேசாம நிக்குற?” என அம்மாவிடம் கேட்டாள் லாவண்யா.

ஏற்கனவே மாப்பிள்ளையை அவமானம் செய்வாயா என சின்ன மகள் கேட்டிருக்க, எது பேசினாலும் தவறாக போகுமோ  என்ற கவலையில் என்ன சொல்ல என தெரியாமல் நின்றார் வினோதினி.

“சும்மா தப்பு தப்புனு சொல்லிட்டே இருந்தீங்க எனக்கு கெட்ட கோவம் வரும், ஆமாம் தப்புதான் பண்ணிட்டேன். உயிரா காதலிச்சும் உங்களை எல்லாம் நினைச்சு நாலு வருஷம் இவரை பிரிஞ்சு நான் பட்ட கஷ்டம் போதும். இனி நான் என்ன பண்ணினாலும் கெட்டவ, தப்பு பண்ணினவ, சுயநலவாதி இப்படித்தான் சொல்லிட்டே இருக்க போறீங்க” என ஆற்றாமையாக கேட்ட மிது, தன்னருகில் நின்றிருந்த ஜீவாவின் கையை பற்றிக் கொண்டு, வலியை பொறுத்து எழுந்தமர்ந்தாள்.