“ஹேய் மேக்ஸிமம் என்ன ஆகிட போகுது, தாத்தா திட்டுவார், அவ்ளோதானே?  இதுக்கு மேலயும் கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க கூடாதுன்னு ஓகே சொன்னாலும் சொல்லிடுவார், கூல் மிது. காலைல இன்னும் நீ மருந்து போட்டுக்கலதானே?” எனக் கேட்டுக் கொண்டே களிம்பை கையில் எடுத்தான். 

“டென்ஷனா இருக்கேன் ஜீவா, அதெல்லாம் நானே பார்த்துகிறேன், நீங்க அமைதியா இருங்க” என சிடு சிடுப்பாக சொன்னாள் அவள். அவன் கேட்கவில்லை, அவளுக்கு மருந்திட்டு அவனும் போட்டுக் கொண்டான். 

இரவில் நடந்ததை மனைவியிடம் சொல்லியிருப்பான் போலும் அன்பு. பழைய பிரச்சனை வேறு, ஆனால் அப்படி ஜீவாவை அடித்தது முற்றிலும் தவறு, இந்த விஷயத்தில் மிதுவை சாமான்யமாக சமாதானம் செய்ய முடியாது என சொல்லியிருந்தாள் லாவண்யா. 

அன்புவுக்கு மனதே சரியில்லை, என்னவோ போலிருந்தான், அருந்ததியும் என்னவென மகனிடம் விசாரிக்க, அவரிடமும் பகிர்ந்தான். 

இதற்கு மேலும் அவர்களின் திருமண விஷயத்தை மறைப்பது சரியல்ல என அவருக்கு பட, மகனிடம் உண்மையை சொல்லி விட்டார். 

அன்பு பேச்சிழந்து போய் நிற்க, இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த விஜயா ஆங்காரத்தோடு பேச ஆரம்பித்து விட்டார். 

அருந்ததி தன் அம்மாவை அதட்டினால் கூட எப்போதும் சின்ன குரலில்தான் பேசுவார். இப்போது அவரின் பொறுமை காற்றோடு பறந்து விட்டது. அம்மாவுக்கு இணையாக அவரும் ஆவேசமாக, “பேசாதம்மா!” என கத்தினார். 

“அம்மா என்னம்மா, அமைதியா இரும்மா” எனக் கேட்டு அம்மாவை பிடித்துக்கொண்ட அன்பு பதற்றம் கொள்ள, லாவண்யாவும் மாமியாரை பிடித்துக்கொண்டாள். 

“எனக்கொன்னும்  இல்லை விடுங்க என்னை” என்றவர் விலகி நின்றார்.

சில நொடிகள் மௌனம் அங்கே.  

“கல்யாணம்ங்கிறது வாழ்நாள் முழுக்க சேர்ந்து வாழ போற ரெண்டு பேரோட சம்மதத்தை மட்டும்தான் அடிப்படையா வச்சு நடக்கணும், இல்லைனா எனக்கு நடந்ததுதான் நடக்கும். என்னை வேணாம்னா வேணாம்னு அடிச்சு சொல்ற தைரியம் இல்லாதவர் உன் அப்பா, என்னத்த நெனச்சி என் கூட குடும்பம் பண்ணினாரோ? 

இதோ உன் அம்மாச்சி புலம்பிட்டே இருக்கே, என் வாழ்க்கை போச்சு போச்சுன்னு… நான் நினைச்சிருந்தா ஜீவாவோட அம்மா மாதிரியே அவரை தூக்கி எறிஞ்சிட்டு சுயமா வாழ்ந்திருக்கலாம். அதுக்கான தைரியமோ படிப்போ என்கிட்ட இல்லை. 

பாதுகாப்புக்குன்னு இங்க இருந்து உன் மனசையும் ரண படுத்தினது நான்தான். ஜீவா அம்மாவோடயே அவரை இருக்க விட்ருந்தா உயிரோட இருந்திருப்பாரோ என்னவோ. அதெல்லாம் முடிஞ்சு போச்சுப்பா, மிதுவும் ஜீவாவும் சேர்ந்து வாழ ஆசை படுறாங்கன்னா அவங்கள மட்டும் பார்ப்போம். அதுக்கு தடையா என் புள்ள நிக்கிறத நான் விரும்பல. 

உனக்கு பிடிக்கலைனா ஒதுங்கி இரு, உன் பொண்டாட்டி அவ தங்கச்சிய விட்டு இருக்க மாட்டா, அப்படி இருக்கணும்னும் நீ சொல்லவும் கூடாது. மேல மேல பிரச்சனை செய்யாதீங்க யாரும்” என்றார் அருந்ததி. 

மிதுவின் திருமண விஷயம் தெரிந்து திகைத்துப் போயிருந்த அன்பு, இனி தான் செய்ய எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டான். 

விஜயாதான் விடாது ஏதேதோ பேசினார். 

“அம்மாவை எல்லாம் இனிமே திருத்த முடியாது” என்றார் அருந்ததி. 

“கல்யாண விஷயத்தை முன்னாடியே சொல்லியிருந்தா நேத்து அவனை அடிச்சிருக்க மாட்டேன்ல?” என மனைவியிடம் குறையாக கேட்டான் அன்பு.  

மிதுவை பார்க்க செல்லலாம், நான் பேசி உங்கள் மீதான கோவத்தை போக்குகிறேன் என லாவண்யா சொல்லவும், அருந்ததியும் அதுவே சரி என்றார். உடனே மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு புறப்பட்டு விட்டான் அன்பு. 

ஜீவா இரவில் தங்கியிருந்ததாக சொன்ன கோயில் நிர்வாகியை எதேச்சையாக சந்தித்தார் சங்கரன். அவர் மூலமாக ஜீவா சொன்ன பொய் அவருக்கு தெரிந்து விட்டது. 

பசுபதியின் ஊரில் உள்ள கிளினிக்கில் வேலை செய்பவன் இவர்களின் ஊரை சேர்ந்தவன்தான். நேற்றைக்கு அவனுக்கு இரவுப் பணி. சைக்கிளில் வந்து கொண்டிருந்தவன் இவர்களை பார்த்து விட்டு வணக்கம் சொன்னான். 

“இன்னிக்கு நைட்டு ஆடலும் பாடலும் பார்க்கவாவது வா. நேத்து மழை பெஞ்சதால நாளைக்கு நைட் வரைக்கும் ஆட்டம் இருக்கு, திருவிழா சமயத்துல கூட என்னடா வேலை பார்க்கிற, தெரியாமதான் கேட்கிறேன் நைட்டுல  யாருடா வர்றா அங்க?” என்றார் கோயில் நிர்வாகி. 

“அதென்ன அப்படி சொல்லிட்டீங்க, நேத்து ராத்திரி கூட பூச்சி கடி மண்டையில அடின்னு  ரெண்டு பேர் டாக்டரை பார்க்க வந்தாங்களே” என்றான் அவன். 

யாரென சங்கரன் விசாரிக்கவும் ஜீவாதான் என தெரிந்தது. உடன் மிதுவும் பசுபதியும் இருந்த விவரமும், அந்த பெண் அவனுக்காக மிகவும் கவலை பட்டாள் எனவும் மருத்துவரை பார்த்த பின் பசுபதியுடனே அவர்கள் கிளம்பி விட்டார்கள் எனவும் கூடுதல் தகவல் சொல்லி சென்றான் அவன். 

கையோடு ஜீவாவுக்கு அழைத்துக் கேட்டார் சங்கரன். விஷயம் தெரியாமல் கோயில் நிர்வாகி வீட்டில் சாப்பிட கட்டாயப் படுத்துவதாகவும், சாப்பிடாமல் உடனே வந்தால் அவருக்கு மரியாதை தராதது போல் ஆகி விடுமென்றும் பெரியப்பாவிடம் சொன்னான் ஜீவா.

“யார் வீட்லடா?” தெளிவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கேட்டார் சங்கரன். 

அவர் முன்னால் நிற்பவரின் அங்க அடையாளம் வரை சொன்னான் ஜீவா. அவரும் வீட்டில் இருக்கிறாரா என பெரியப்பா கேட்டதற்கு தன் கண் முன்னால்தான் நிற்கிறார் என்றான்.

பசுபதியின் வீட்டில்தான் ஜீவா இருக்க வேண்டும் என சந்தேக பட்டவர் தன் டி வி எஸ் பைக்கில் ஏறி அமர்ந்தார். 

“என்னவோய்? பேசிட்டே இருக்கும் போது கிளம்புறீங்களே? யார பாக்க இந்த அவசரம்?” என்றார் அந்த நிர்வாகி. 

“ம்ம்ம்… என் தம்பி மவன் முன்னாடி நிக்கிற உங்களை பார்க்கத்தான்” என்ற சங்கரன் வண்டியை நேராக பசுபதியின் வீட்டிற்கு விட்டார். 

“இந்தாளு தெளிவா இருந்தாலே கலவரத்துக்கு கைநாட்டு வைப்பாரு, இம்புட்டு தெளிவா இருக்கிறவர் கண்டிப்பா எங்குட்டோ சாமியாடதான் போயிட்டு இருக்காரு” என சொல்லிக் கொண்டே சென்றார் அவர். 

முதல் நாள் சென்னைக்கு தன் சொந்த வேலையாக வந்திருந்தார் இளங்கோ. வேலை முடிய மாலையாகி விட்டது. ஜீவாவின் வீட்டுக்கு சென்று விட்டு காலையில் புறப்படலாம் என அவர் நினைக்க, எதிர்பாராமல் பங்கஜை சந்திக்க நேர்ந்தது. அவர் மூலமாக இருவரும் ஊரில் இல்லாதது அவருக்கு தெரிய வந்தது. 

“புருஷன் பொண்டாட்டி சண்டை, அந்த பொண்ணு கோச்சுக்கிட்டு அதோட ஊருக்கு போயிருக்கு, இவனும் பின்னாலேயே போயிட்டான். ஸ்டேட் ஸ்டேட்டா சுத்தின உன் மருமகன் இப்ப பொண்டாட்டியே கதின்னு சுத்துறான் பார்” என வேடிக்கையாக சொன்னார் பங்கஜ்.  

அவரிடம் அமைதியாக இருந்த இளங்கோ, மதுரைக்கு புறப்படாமல் பசுபதியின் ஊருக்கு செல்ல பேருந்து ஏறி விட்டார். 

“ஜீவா… தாத்தா பேப்பர் படிச்சிட்டு இருக்கார், வயசானாலும் தாத்தா காது ஷார்ப், ஸோ சத்தமே வராம வேகமா நடந்து பின்னாடி போயிடுங்க” என்றாள் மிது. 

“பயப்படாத மிது, கரெக்ட்டா போயிடுவேன்” என கட்டை விரல் உயர்த்திக் காட்டினான் ஜீவா. 

மாடிப்படிகளில் சத்தம் செய்யாமல் இறங்கி வந்தனர் இருவரும். அரசியல் செய்தி ஒன்றை ஈடுபாட்டோடு படித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம். 

ஜீவாவும் மிதுவும் தரை தளத்தை அடைய நான்கு படிகள் இருந்தன, மங்கம்மா பாட்டியின் வரவை இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மோவாயில் கை வைத்து வாய் பிளந்து அவர்களை பார்த்தார் பாட்டி. 

திடுக்கிட்ட மிதுவுக்கு கால் இடறியது, அவள் விழாமலிருக்க அவளது இடையை பற்றினான் ஜீவா. 

கீழே விழப் போனவள் பிடிப்புக்காக அவனது இடுப்பிலிருந்த பெல்ட்டை பற்றிக் கொள்ளவும், செய்வதறியாமல் திகைத்த ஜீவா சமநிலை இழந்து விட்டான். 

மிதுவை கீழே விழாமல் தடுக்கும் பொருட்டு இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டான். அப்படியே இருவரும் மாடிப் படிகளில் உருண்டனர். ஐயையோ என அலறினார் பாட்டி. 

ஒருவரையொருவர் கட்டியிருந்த படியே தரையை அடைந்திருந்தனர் இருவரும்.

ஜீவாவின் சட்டை மேலே ஏறியிருக்க,  அந்த ஜிகு ஜிகு பெல்ட் வெளியில் தெரிந்தது. வேஷ்டி அவனது முட்டி தெரியுமாறு விலகிப் போயிருக்க, மிதுவின் இடையை சுற்றியிருந்தது அவனது கை. 

தன் மீது கிடந்த மிதுவிடம், “அடி படலையே?” என ஜீவா விசாரிக்க, இல்லை என தலையாட்டியவள், “உங்களுக்கு?” எனக் கேட்டாள். 

“இதுவரை அடிபடல, உன் தாத்தா அடிக்காம இருந்தா இனியும் அடி படாது” என்றான். 

பயந்து போனவள் என்னவென கண்களால் கேட்க, அங்கே பார் என அவனும் கண்களால் சொன்னான். 

கண்களை இறுகி மூடிய படி தலையை மட்டும் திருப்பியவள் இமைகள் திறந்து பார்க்க, தக தகவென்ற அனல் பறக்கும் கோவத்தோடு நின்றிருந்தார் தாத்தா.