சீக்கிரமாகவே எழுந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கியதால் தாமதமாக உறங்கியிருந்தாலும் சரியாக நான்கே முக்காலுக்கெல்லாம் எழுந்து விட்டாள் மிது.
ஆழ்ந்து உறங்கும் ஜீவாவை ரசித்துப் பார்த்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டே குளிக்க சென்றாள். அவனை தொந்தரவு செய்யாமல் தயாராகி கீழே வந்தாள்.
வழக்கமாகவே பெரியவர்கள் அந்த வீட்டில் விடியலுக்கு முன்னரே எழும் பழக்கமுடையவர்கள் என்பதால் அனைவருமே எழுந்திருந்தனர். ஜீவா வீட்டிலிருந்ததால் பசுபதியும் வெளியில் கிளம்பாமல் வீட்டில்தான் இருந்தார்.
தாத்தாவும் பாட்டியும் பேத்தியை கண்டு விட்டு எப்போது வந்தாள் இவள் என அதிசயித்தனர்.
“எப்படி வந்த நீயி?” என மங்கம்மா பாட்டி விசாரிக்க, தாத்தாவோ அவளை முறைத்துக் கொண்டிருந்தார். பாட்டிக்கு பதில் சொன்னவள், தாத்தாவை எதிர்கொள்ள பயந்து சமையலறைக்கு சென்று விட்டாள்.
மகளின் கையை இறுகப் பற்றிய வினோதினி, “உன் தாத்தா வெளி கிளம்புற வரை அவரை கீழ வர சொல்லிடாத, இன்னிக்கு பொழுது நல்லா போகட்டும்” என்றார்.
சரியென்றவள் கணவனுக்கு மாற்று ஆடை வேண்டும் என்றாள். ஜீவாவின் ஆடை மழையில் நனைந்து போனது அப்போதுதான் நினைவு வந்தவராக இரவில் எப்படி சமாளித்தார் எனக் கேட்டார். அவள் பதில் தராமல் காபி கலக்க ஆரம்பித்தாள்.
“உன்னைதான் டி கேட்கிறேன்!” என அதட்டினார் வினோதினி.
“இப்ப தெரிஞ்சு என்னம்மா செய்ய போற? உனக்குத்தான் நாங்க ஆகாதவங்க ஆகிட்டோமே, ஊர் பெருமைக்காக போனா போகுதுன்னு கல்யாணம் செஞ்சு வைக்க நினைக்கிற, இல்லைனா பொண்ணே வேணாம்னு அடிச்சு தொரத்தியிருப்பீல்ல? ஏதோ என் அப்பா இருக்க போய் பொழச்சேன்” என்றாள்.
“வர்ற கோவத்துக்கு கன்னம் கன்னமா அறையனும் போல இருக்கு, உனக்கு பசங்க பொறந்து, வளர்த்து எடுத்து நீ செஞ்ச மாதிரி அதுங்களும் செஞ்சாதான் என் நிலைமை உனக்கு புரியும்”
“சாபம் விடுறியாம்மா?”
“நீ மட்டும் என்னை குறை சொல்லுவியா? இப்ப வரை நீ பண்ணி வச்சத எப்படி சரி செய்யன்னுதான் நானும் அப்பாவும் பார்க்கிறோம்” என அவர் சொல்லி செல்ல, அவள் உர் என முகத்தை வைத்துக்கொண்டாள்.
அறைக்கு வந்த வினோதினி, ஜீவாவுக்குஆடைகொடுப்பதற்காக கப்போர்ட் திறந்தார். நேற்றே மழை கோட் கிழிந்து விட்டதால் குறை சொல்லாத வகையில் நல்லதாக கொடுக்க நினைத்தவரின் பார்வையில் ஏதோ விஷேஷத்திற்கு யாரோ வைத்துக்கொடுத்த பள பளப்பாக இருந்த வேஷ்டி, சட்டை பட்டது.
வினோதினி பை ஒன்றில் புதிய ஆடை வைத்து எடுத்துக்கொண்டுவந்து மகளிடம் தர, ஃபிளாஸ்க்கில் காபி ஊற்றி எடுத்துக் கொண்டாள் மிது.
பிஸ்கட் பாக்கெட் எடுத்து நீட்டிய வினோதினி, “ஊர் உலகத்துக்கு அவர்தான் மாப்ளன்னு காட்டிட்டோம்னா எல்லாம் முறையா நடக்கும், அதுக்குள்ள எனக்கு எரிச்சல் வர்ற மாதிரி ஏதாவது பேசிகிட்டு இருந்த… என்னமோ பண்ணுன்னு நான் என் அம்மா வீட்டுக்கு போயிடுவேன்” என்றார்.
“எதுக்கு, அப்பா எனக்கு சப்போர்ட் பண்றாருன்னு அவரை பழிவாங்க திட்டமா? என்னை எவ்ளோ வேணா திட்டு, எங்கப்பா பாவம்!” என அவள் சொல்ல, வந்த முறுவலை அடக்கிக் கொண்டு அவளை கோவமாக பார்க்க முயன்று தோற்றார் அவர்.
“எப்படிம்மா அந்த மழைல அவரை அனுப்புறது, நீ போக சொல்லவும் கோவம் வந்திடுச்சு, பாவம்ல ம்மா அவர்?” மகள் கேட்ட தொனியில் கனிந்தவர், நல்ல விதமாகவே அவளை மாடிக்கு அனுப்பி வைத்தார்.
மிது படி ஏறுகையில், “என்னடி அது பை, கைல பிளாஸ்க், எந்த விருந்தாளிய மேல ஒளிச்சு வச்சிருக்க?” என எதார்த்தமாக கேட்டார் மங்கம்மா.
தாத்தாவும் இப்போது விழிகளை இடுக்கிக் கொண்டு பேத்தியை பார்த்தார். சட்டென சமாளிக்க தெரியாமல் விழித்தாள் மிது.
மில் சம்பந்தமாக ஏதோ யோசனை கேட்பது போல அப்பாவின் கவனத்தை ஈர்த்தார் பசுபதி, பாட்டிக்கு பதிலே சொல்லாமல் மேலே ஓடிச் சென்று விட்டாள் மிது.
விழித்திருந்தாலும் படுத்தே இருந்த ஜீவா, மிது உள்ளே வரவும் அவளை தன்னிடம் இழுத்தான்.
“கீழ போய்ட்டு வர்றதுக்குள்ள எதிரி நாட்டு பார்டர் போயிட்டு வந்த ஃபீல் எனக்கு, விடுங்க என்னை” என்றாள் மிது.
“ஹ்ம்ம்… உனக்கு அலர்ஜி எப்படி இருக்கு? எரிச்சலோட சேர்ந்து நம நமன்னு ஒரு மாதிரி இருக்குமே”
“ஆமாம் கரெக்ட்டா சொல்றீங்க, எப்படி?”
“இப்படித்தான்” என்றவன் அவளிடம் தன் மார்பையும் வயிறையும் சுட்டிக் காட்டினான். அவனுக்கும் அலர்ஜி ஒட்டிக் கொண்டிருந்தது.
“என்னங்க இது!”
“ம்… நேத்து நைட் நமக்குள்ள என்ன நடந்ததோ அதுக்கான சாட்சி” என்றான்.
அவள் கவலையாக பார்க்க, “டாக்டர் சொன்ன மருந்து போட்டா சரி ஆகிடும், தஞ்சாவூர் கிளம்பறேன் நான்” என எழுந்து கொண்டான்.
ஜீவாவுக்கு அழைத்த பெரியப்பா எங்கே இருக்கிறாய் என அவனை விசாரித்தார். இரவில் மழை வந்ததால் அந்த திடலுக்கு பக்கத்தில் இருந்த கோயில் நிர்வாகி ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் வீட்டில் தங்கி விட்டதாகவும் சீக்கிரம் வந்து விடுகிறேன் எனவும் சொல்லி அவரை சமாளித்தான்.
“நாம நிறைய பொய் பேசுறோம் ஜீவா” என்றாள் மிது.
“கள்ளம் இல்லாத காதல் ஏதுமில்லையடி கண்ணம்மா…” என வாய்க்கு வந்ததை பாடினான்.
“கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லாம…” என அவள் சலித்தாள்.
“மழை விட்ட பிறகும் குளு குளுன்னு இருக்கிற மார்னிங், பக்கத்துல ஆசை பொண்டாட்டி, ப்ச்… ஒன்னும் செய்ய முடியாம வெளில கிளம்ப வேண்டிய அவசியம், இந்த கொடுமை எவனுக்கும் வரக்கூடாது மிது”
“ஹ்ஹ்ஹ ஜீவா! ஒழுங்கா குளிக்க போங்க” என அதட்டித்தான் அவனது விளையாட்டு பேச்சை கைவிட வைத்தாள்.
அவன்குளித்துவரவும்வேஷ்டிகட்டிக் கொள்ள அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள் மிது.
“ஃபைவ் மினிட்ஸ்மா” என மிது சொல்ல, “சீக்கிரம்” என இன்னொரு முறை அழுத்தி சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.
அந்த வேஷ்டி ஜீவாவின் இடுப்பில் நிற்பேனா என்றது. நனைந்து போயிருந்த அவனது ஆடை இன்னும் ஈரமாகவே இருக்க, அதை அவன் போட்டுக் கொள்ள சம்மதிக்காமல் எப்படியாவது அந்த வேஷ்டியை அவனுக்கு அணிவிக்க போராடிக் கொண்டிருந்தாள் மிது.
ஒரு வழியாக அவனுக்கு வேஷ்டி கட்டி விட்டவள் வெளியே சென்று எட்டிப் பார்த்து விட்டு வர, மீண்டும் அவிழ்ந்த வேஷ்டியை கையில் பிடித்துக்கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.
அவள் ஜீன்ஸ் அணியும் போது உபயோக படுத்தும் பெல்ட்டை எடுத்துக் கொடுத்தாள்.
“மிது… டூ மச் டி இது!” ஊதா நிறத்தில் ஃபேன்ஸியாக இருந்த அந்த பெல்ட்டை பார்த்து விட்டு சொன்னான்.
“என் பெல்ட்தானே? ஏன் போட மாட்டீங்களா? சட்டையை போட்டா யார் கண்ணுக்கும் தெரியாது” என சொல்லி அவனை அணிய வைத்தாள்.
ஒரு வழியாக ஜீவா தயாராகி விட, அவனை விட வேகமாக தயாராகி விட்ட தாத்தா ஹால் வந்து தினசரி எடுத்துக் கொண்டு சட்டமாக அமர்ந்து விட்டார். மில்லில் தவிர்க்க முடியாத அவசர வேலை வந்ததால் மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார் பசுபதி.
வினோதினி மகளுக்கு அழைத்து விவரம் சொல்லி திட்டினார். ஜீவாவை பின் பக்க வழியாக அனுப்பி விடுகிறேன் என்றாள் மிது.
தாத்தா திரும்பி பார்த்தால் அவ்வளவுதான் என பயந்த வினோதினி, நான் சொல்லும் வரை அங்கேயே இருங்கள் என சொல்லி விட்டார்.