அவன் விடை பெற்றுக் கொண்டு மழை கோட்டை அணிய ஆரம்பித்தான். அவன் உடம்புக்கு சிறியதாக இருந்த அது டர்ரென கிழியவும், “ஸாரி கிழிஞ்சு போச்சு!” என சொல்லி விழித்தான்.
பசுபதி மனைவியை முறைக்க, “நான் என்னங்க பண்றது, வேற எடுத்திட்டு வர்றேன்” என சொல்லி உள்ளே ஓடினார்.
கிழிந்த கோட்டை மிதுவிடம் கொடுத்தவன், “நீ ட்ரெஸ் மாத்திட்டு படுக்கிறதுக்குள்ள நான் ரீச் ஆகிடுவேன், இதெல்லாம் வேணாம்” என்றான்.
மிதுவுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருந்தது. ஜீவாவுக்கும் அப்படித்தானே இருக்கும் என நினைத்துக்கொண்டாள். அவனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுமென செய்து கொண்ட திருமணம், அவனுக்கு கிடைப்பதென்னவோ அவமானம்தான் என எண்ணியவளுக்கு மனம் பாரமாகிப் போனது.
“அங்க போனதும் ஈர ட்ரெஸ் மாத்திட்டு படுங்க, தலையை நல்லா துவட்டிக்கோங்க” என்றாள் மிது. புன்னகையுடன் அவன் தலையாட்டிக் கொள்ளவும் என்னவோ அவனை நிராதரவாக விட்டு விட்ட எண்ணம் அவளுக்கு.
“ஸாரி… ஸாரி ஜீவா” என சொல்லி முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
பதறிய ஜீவா “இப்படி அழுதா நான் எப்படி கிளம்புவேன் மிது? எதுக்கு அழற நீ? மிது…” அவளை சமாதானம் செய்ய பார்த்தான். பசுபதிக்கு மகளின் மனம் புரிய, பரிதவிப்பாக பார்த்தார்.
“நான்தான் உங்களை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நான் சண்டை போட்ருந்தாலும் உங்க கூடவே இருந்திருக்கணும், இங்க வந்ததாலதான் நீங்களும் வந்தீங்க, மாமா உங்களை கீழ புடிச்சு தள்ளுறார், அடிக்கிறார், என் வீட்டுக்குள்ள கூட விடாம மழைல உங்களை துரத்தி விடுறாங்க, என்னால எதுவுமே செய்ய முடியலை ஜீவா, ஆம் ஹெல்ப்லெஸ்” என அழுது கொண்டே சொன்னாள் மிது.
அதற்கு மேல் மகளின் அழுகையையும் புலம்பலையும் சகித்துக் கொள்ள முடியாத பசுபதி, “தம்பி தயவுபண்ணி உள்ள வாங்க தம்பி” என சொல்லி, ஜீவாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
சமாதானம் ஆன மிதுவும் மூக்கை உறித்துக் கொண்டே உள்ளே சென்றாள். மனைவி இன்னும் அறையில்தான் இருக்கிறாள் என்பதை கண்டவர் அவசரமாக அவர்களை மாடிக்கு அனுப்பி வைத்து விட்டார்.
“இது புதுசு, பெருசாவும் இருக்கு” என ஹாலில் நின்று கொண்டிருந்த கணவரிடம் சொல்லிக் கொண்டே வேறொரு மழை கோட்டுடன் வந்தார் வினோதினி.
“ம்ம்… பத்திரமா உள்ளேயே வை” என்ற பசுபதி அவர்களின் அறைக்கு சென்றார்.
கணவரை பின் தொடர்ந்து கொண்டே சென்ற வினோதினி, “ஏன் மழையிலேயே கிளம்பிட்டாரா? உங்க பொண்ணு மூஞ்சிய தூக்கி வச்சிப்பாளே, கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்றதுக்கென்ன? உங்கப்பா கோவத்தை பத்தி தெரியாம என்ன பேச்சு பேசுறா? அவர் நம்பர் இருக்கா உங்ககிட்ட, கா மணி நேரம் கழிச்சு ஒரு போன் போட்டு நல்லபடியா போயிட்டாரான்னு கேளுங்க” பேசிக் கொண்டே போனார்.
பதிலே சொல்லாமல் ஈர உடையை மாற்றிக் கொண்ட பசுபதி படுத்து விட்டார். மகளை போய் பார்த்து விட்டு வருவதாக சொல்லி வெளியேற போனார் வினோதினி.
“ஏய் வந்து படு!” என மனைவியை அதட்டினார் பசுபதி.
“அழுதிட்டு இருக்க போறா, ஏன் இங்க தங்க வைக்கலைனு புரிய வச்சிட்டு வர்றேன்”
“அதுக்கு அவசியம் இல்லை, ஜீவா தம்பி இங்கதான் தங்கியிருக்கார்”
“இங்கேயா!” என மனைவி அதிர்ந்து கேட்கவும் ஆமாம் என்றவர் திரும்பி படுத்துக் கொண்டார்.
காலையில் பிரச்சனை ஆக போகிறது, வயதாகிறதே தவிர நல்லது கெட்டதே தெரியவில்லை உங்களுக்கு என திட்ட ஆரம்பித்து விட்டார் வினோதினி. அவரோ அலட்டிக் கொள்ளவே இல்லை.
தன் சக்திதான் போகிறது என புரிந்து ஓய்ந்த வினோதினி, “எந்த ரூம்ல இருக்காரு?” எனக் கேட்டார். அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.
“அவ ரூம்லதான்னு மட்டும் சொல்லிடாதீங்க” என வினோதினி சொல்ல, “நீ பேசுறதுல அர்த்தமே இல்லை, ரெண்டு பேரும் சென்னைல ஒரே வீட்ல ஒன்னா வாழ்ந்திட்டு இருக்காங்க. என்னை தூங்க விடு” என்றவர் மனைவியின் திட்டுக்கள் காதில் விழாதது போல கண்களை மூடிக் கொண்டார். ஓரிரு நிமிடங்களில் தூங்கி விட்டது போல பாவனை செய்யவும் ஆரம்பித்து விட்டார்.
அந்த நேரம் பார்த்து அவருக்கு அன்பு அழைத்தான். ஜீவா நன்றாக இருக்கிறானா என விசாரித்தான்.
“நீதானடா அடிச்ச, அப்புறம் என்ன அக்கறை உனக்கு?” என கடிந்தார் பசுபதி.
“என்ன நடந்திருந்தாலும் நான் அப்டி செஞ்சிருக்க கூடாதுதான் மாமா, அசலூரு பசங்க கூட சின்ன தலைவலி, ப்ச்… அவங்களாலேயோ இல்லை அவங்கள மாதிரி வேற யாராலயோ மிதுவுக்கு ஏதும் ஆபத்தோன்னு பயந்திட்டேன், அப்பன்னு பார்த்து இவன் கூட தனிமைல மிதுவை… ப்ச், விசாரிக்கல்லாம் தோணல மாமா. என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியலை” என்றான் அன்பு.
இரவில் தர்க்கம் செய்யவோ விளக்கம் சொல்லவோ அவருக்கு விருப்பமில்லை, அவனும் பாவம் இப்போது வரை விழித்திருக்கிறான் என்பதில் கனிந்தவர் ஜீவாவின் நலத்தை சொல்லி, அவனும் பத்திரமாக வீடு வந்தடைந்து விட்டானா என கேட்டறிந்து கொண்டார்.
மிது சுடு நீரில் குளித்தே விட்டாள். ஈர உடையை கலைந்திருந்த ஜீவாவுக்கு மாற்றுடை இல்லை என்பதால் ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இன்னொரு துண்டை தோள்களை சுற்றி போர்த்தியது போல போட்டிருந்தான்.
அப்பாவிடம் புதிய வேஷ்டி சட்டை இருக்கும் வாங்கி வருகிறேன் என மிது சொன்னதற்கு ‘இந்நேரம் தூங்கியிருப்பார், அவரை தொந்தரவு செய்யாதே’ என சொல்லி விட்டான்.
“நைட்டெல்லாம் வெறும் டவல் கட்டிட்டு இருக்க போறீங்களா?” எனக் கேட்டாள்.
“வேறென்ன பண்றது, உன் ட்ரெஸ் ஏதாவது எனக்கு பத்துற மாதிரி இருந்தா கொடு போட்டுக்கிறேன்” என்றான்.
“எதுக்கு அதையும் கிழிக்கவா?”
“தெரியுதுல்ல, அப்ப விடு. இந்த காஸ்ட்யூம் ஓகேதான் எனக்கு”
“ம்ம்… இதே மாதிரி அரை குறையா என் முன்னாலதான் நிக்கணும் நீங்க, ஊரு உலகத்துக்கெல்லாம்…” என்றவளின் வாயை மூடியவன், “ஒரு விஷயம் வச்சு சண்டை வந்து திரும்ப சமாதானமும் ஆன பிறகு அதை அப்படியே மறந்து போயிடணும்” என்றான்.
அவனது கையை விலக்கி விட்டவள், “அந்த வீடியோ இன்னும் சோசியல் மீடியால உலா வந்திட்டுத்தான் இருக்கு, போகுதுன்னு விடுறேன். இப்ப நல்ல குளிரா இருக்கு, ட்ரெஸ்க்கு அரேஞ் பண்றேன் நான்” என்றாள்.
“இத்தோட உன் ஸாரிய நிறுத்திக்க மிது. உன் லவ்வை இங்க யாரும் எதிர்க்கல, நானா இருக்க போயிதான் பிரச்சனை. அதென்ன இப்படி கோவம் வருது உனக்கு? என்னை இங்க தங்க அலோவ் பண்ணலைனா காரணம் இருக்கு, அதை அவமானமா ஏன் நினைக்கற, இதுல அழுகை வேற” என்றான்.