யாரும் மோட்டார் அறைக்கு வருவதற்குள் மயக்கம் தெளிந்து கண் விழித்துக் கொண்டான் ஜீவா. மிது தேம்பிக் கொண்டிருக்க தனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என சொல்லி அவளை ஆறுதல் படுத்தினான்.
வந்து கொண்டிருந்த கூட்டத்தை பாதி வழியிலேயே எதிர் கொண்ட அன்பு, மிது பத்திரமாக இருப்பதாகவும் அவளுக்கு உடம்பு முடியாததால் வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறினான்.
வேறு எதுவும் அவர்கள் விசாரிக்கும் முன், “நிகழ்ச்சில எந்த பிரச்சனையும் ஆவாம பார்க்கணும், அத விட்டுட்டு எல்லாரும் இங்க வந்து நின்னா என்ன அர்த்தம்?” என கடிந்து அவர்களை அனுப்பி வைத்து விட்டான்.
மீண்டும் அன்பு மோட்டார் அறை பக்கம் வந்த போது ஜீவாவும் மிதுவும் தரையில் அமர்ந்திருந்தனர்.
அன்புவிடம் ஏதோ சொல்ல வாய் திறந்த ஜீவா, மிதுவின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.
“கிளம்பு வீட்டுக்கு” என மிதுவை அதட்டினான் அன்பு. அவனையும் முறைத்து பார்த்த மிது அசையாமல் அங்கேயே இருந்தாள்.
“ஹாஸ்பிடல் போலாமா மிது? இந்த நேரம் இங்க பக்கத்துல எந்த ஊர்ல டாக்டர் இருப்பாங்க?” எனக் கேட்டான் ஜீவா.
“எனக்கு பெருசா ஒன்னுமில்ல ஜீவா, உங்களுக்குதான் தலைல அடி பட்ருக்கு, ஒரு முறை செக் பண்ணி பயப்படற மாதிரி இல்லைனு தெரிஞ்சாதான் எனக்கு நிம்மதியாகும். அப்பா கார் எடுத்திட்டு வர்றாங்க, நாம தஞ்சாவூர் போய்டலாம்” என்றாள் மிது.
இருவர் பேசிக் கொள்வதையும் குழப்பமாக பார்த்திருந்த அன்புவுக்கு தான் தவறாக புரிந்து கொண்டேனோ என சந்தேகம் வந்தது. ஆனாலும் என்னவென விசாரிக்க முடியாமல் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான்.
ஜீவாவாக அவனிடம் வந்தான். தன்னிடம் முகம் கொடுக்காதவனிடம் எதற்காக மோட்டார் அறைக்கு வந்தோம் என்பதை சொல்லி விட்டு மீண்டும் மிதுவிடம் சென்று விட்டான்.
அன்பு தன்னையே நொந்து கொண்டான். ஜீவாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மனம் சொல்கிறது, ஆனால் வீம்பு தடுக்க பேசாமலே இருந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் பசுபதி வந்து விட்டார். அவர் வரவும் மழை வரவும் சரியாக இருந்தது. பட படவென மழை பெய்ததில் நிகழ்ச்சியை காண வந்திருந்த மக்கள் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.
இந்த நேரம் கூட்டத்திற்குள் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், “மிதுவை அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு போங்க மாமா, காலைல பேசிக்கலாம்” என சொல்லி நடந்தான் அன்பு.
“அவர் வீட்டுக்கெல்லாம் நான் வர மாட்டேன் ப்பா” என சத்தமாகவே மிது சொல்வது அன்புவின் காதில் விழுந்தது. ஒரு நொடி நின்றவன் திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.
மழை நன்றாக வலுத்து விட, தஞ்சை செல்வதெல்லாம் உசிதம் இல்லை என மகளுக்கு எடுத்து சொல்லி இருவரையும் தன் ஊருக்கு அழைத்து சென்றார் பசுபதி. அந்த ஊர் கிளினிக்கை நடு இரவில் விழிப்படைய செய்து, ஜீவாவுக்கு பயப்படும் படி இல்லை என அங்கிருந்த மருத்துவரிடம் உறுதி பெற்ற பின்னர்தான் ஓய்ந்தாள் மிது.
அவளுக்கும் பூச்சியால் அலர்ஜி என மருத்துவரிடம் சொன்னான் ஜீவா.
எந்த மாதிரி இருந்தது பூச்சி என மிதுவிடம் கேட்டறிந்து கொண்டார் மருத்துவர். அதற்கான சரியான களிம்பு கைவசம் இல்லை, நாளை தஞ்சை சென்று வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் கண்டிப்பாக மருந்து போட வேண்டும், இல்லையென்றால் மிகுந்த தொந்தரவு கொடுக்கும், அலர்ஜி பரவாமல் இருக்க தற்காலிகமாக வேறொரு களிம்பு தருகிறேன் என்றவர் அந்த களிம்பையும் தந்து அவர்களை அனுப்பி வைத்தார்.
வீடு வந்த பிறகு இப்போதைய சூழலில் சரியாக இருக்காது என்ற போதும் ஜீவாவை வீட்டுக்குள் அழைத்தார் பசுபதி.
திண்ணையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வினோதினி கணவரை மனதிற்குள்ளேயே கடிந்து கொண்டார். மாமனாருக்கு தெரிந்தால் கலவரமாகி விடுமே என்ற பயம் அவருக்கு. அத்தோடு ஊராரிடம் இவர்களின் திருமண விஷயத்தை மறைத்து வைக்க நினைத்தவருக்கு ஜீவாவை இங்கு தங்க வைக்க வேண்டாம் என்றே தோன்றியது.
தங்குவதற்கு ஜீவா மறுத்து விட்டான். பசுபதியும் அதிகம் வற்புறுத்தாமல் ஸ்கூட்டரை கொடுத்தார்.
மழையோ மிக கனமாக பெய்து கொண்டிருந்தது.
ஒன்றுமில்லை என மருத்துவர் சொல்லி விட்டாலும் ஜீவாவை நடு இரவில் தனியாக அனுப்ப மிதுவுக்கு மனமே இல்லை.
ஜீவாவை இங்கேயே தங்க வைக்கலாம் என தயங்கிய குரலில் அப்பாவிடம் சொன்னாள்.
உடனே மனைவியை பார்த்தார் பசுபதி, வினோதினியோ சங்கடமாக மட்டும் பார்த்தார், தவிர ஜீவாவை வீட்டில் தங்க வைக்கும் சம்மதமில்லை அந்த பார்வையில்.
மேற்கொண்டு எதுவும் சொல்ல மிதுவுக்கு பயமாக இருக்கவும் அழுகை தொண்டையை அடைக்க தன் காதல் கணவனை பார்த்தாள்.
வேகமாக உள்ளே சென்ற வினோதினி மழை கோட் எடுத்து வந்து தந்தார்.
அம்மாவை அதிருப்தியாக பார்த்த மிது, “அவர் ஏற்கனவே முழுசா நனைஞ்சிட்டார்மா, இருட்டுல குண்டும் குழியுமா இருக்க ரோட்டுல போறவர் மழைல நனைஞ்சிட்டே கூட போகட்டும், என்ன இப்போ?” என அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள்.
“கார் எடுத்திட்டு போங்க தம்பி, முன்னாடியே சொல்லியிருக்கணும் நான், காரை பார்த்திட்டு சங்கரன் மாமா கேள்வி கேட்பாருன்னு யோசிச்சுதான் ஸ்கூட்டர் கொடுத்தேன். அவர் என்ன சொன்னாலும் பார்த்துக்கலாம், நீங்க பத்திரமா போய் சேருறதுதான் முக்கியம்” என்றார் பசுபதி.
“இல்லையில்லை மாமா, இந்த ஸ்கூட்டரையே பெரியப்பா கண்ல காட்டாம வைக்கணும். நான் போயிப்பேன்” என்றவன் வினோதினியை சங்கடம் செய்ய விரும்பாமல் மழை கோட்டையும் வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ் அத்தை” என்றான்.
“அப்பா… நான் போய் இவரை விட்டுட்டு வர்றேன் ப்பா, எனக்கு இவரை தனியா அனுப்ப பயமா இருக்கு” என்றாள் மிது.
முக்கிய சாலையை பிடித்து விட்டால் விளக்கு வெளிச்சமும் இருக்கும், சாலையும் மோசமாக இருக்காது என்றார் வினோதினி.
நெற்றியை தட்டிக் கொண்ட பசுபதி, “தம்பி நம்ம தோட்டத்து வீட்டுக்கு போலாம் வாங்க” என்றார்.
“நல்லாருக்குங்க, விடிய காலைல ஆளுங்க வந்திடுவாங்க, ஊரறிய கல்யாணம் செய்யும் போது இதெல்லாம் வேற மாதிரி பேச்சா போகும்” என்றார் வினோதினி.
“மத்தவங்க பேசுறதுதான் உனக்கு கவலையா ம்மா? இதே அக்கா வீட்டுக்காரரா இருந்தா இப்படி பண்ணுவியா ம்மா?” எனக் கோவமாக கேட்டாள் மிது.
“பண்றதெல்லாம் பண்ணி வச்சிட்டு என்னடி பேசுற நீ? அறிவு மழுங்கி போச்சுன்னு நினைச்சேன், தப்பு… சுத்தமாவே அறிவு இல்லை உனக்கு!” என மகளை கடிந்து கொண்டார் வினோதினி. அவரின் பேச்சில் ஜீவாவின் முகம் வாடிப் போனது.
தன் மீது கோவம் கொண்ட அம்மா ஜீவாவையும் ஏதும் பேசி விடுவாரோ என பயந்த மிது, “நீங்க கிளம்புங்க ஜீவா, ரீச் ஆனதும் மறக்காம கால் பண்ணுங்க” என்றாள்.