சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். வேறு ஊரை சேர்ந்த ஒருவன் வெளியூர் நண்பர்களோடு வந்திருந்தான். மது போதையில் வேறு இருந்தனர். அவர்களின் சலம்பல் அதிகமாக இருக்கவே முதலில் வெறும் எச்சரிக்கையோடு விட்டான் அன்பு.
ஆனால் அவர்கள் அடங்குவதாக இல்லை. ஒரு கட்டத்தில் மேடையில் ஆடியவர்களோடு சேர்ந்து ஆடினார்கள், பின் மேடையை விட்டு இறங்க மறுத்தார்கள். அன்புதான் அவர்களை அடக்கி இறக்கி விட்டான். உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புற படுத்தவும் சொல்லி விட்டான்.
“இப்படி எத்தன பேரை வெளிய அனுப்புறது தம்பி? இத போல இன்னும் நிறைய கும்பல் சுத்திகிட்டு இருக்கு. நம்ம புள்ளைகள சீண்டாத வரை சரிதான்” என்றார் ஒருவர்.
மிது பாதுகாப்பாக இருக்கிறாளா என பார்க்க அவளிருந்த இடத்திற்கு சென்றான் அன்பு. மிதுவை காணவில்லை, அவளுடன் வந்த பெண்களிடம் கேட்டான்.
“இதோ வந்திடுறேன்னு போனா அண்ணா, இன்னும் காணோம்” என்றாள் ஒருத்தி.
“அதெப்படி தனியா விடுவீங்க அவளை?” என அன்பு கடிந்து கொள்ளவும், அந்த பெண்கள் மிதுவை தேடிக் கொண்டு சென்றனர்.
அன்பு அவளது கைப்பேசிக்கு அழைத்து பார்த்தான், ரிங் செல்லவே இல்லை. அவனும் அவளை தேடிக் கொண்டு வேறொரு பக்கமாக சென்றான்.
மிதுவின் ஆடைக்குள் ஏதோ பூச்சி புகுந்து விட்டது. அவளால் சமாளிக்க முடியவில்லை, அத்தனை நெருக்கமானவர்கள் இல்லை அவளை அழைத்து வந்த பெண்கள். அவர்களிடம் சொல்ல கூச்ச பட்டவள் என்னவென பார்க்க தனிமையான இடம் தேடி, ஜீவா தனக்கு பின்னால் தன்னை தொடர்ந்து வருவது கூட தெரியாமல் கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு வேகமாக சென்றாள்.
அடுத்தவர் முன்னிலையில் அவளது பெயரை சத்தமாக சொல்லி அழைக்க முடியாமல், இவளுக்கு என்னானது என குழப்பத்தோடே ஜீவாவும் சென்றான்.
மனித ஆரவாரம் இல்லாத இடத்துக்கு வந்து விட்டாள் மிது, ஒரே இருளாக இருக்க, வயிறு மற்றும் மார்புப் பகுதியில் எரிச்சலை உணர்ந்தவளுக்கு என்ன செய்வதென தெரியாமல் அழுகை வந்தது.
“மிதுக்குட்டி இங்க என்ன பண்ற?” என கேட்டுக் கொண்டே வந்தான் ஜீவா. அவனை கண்டதும் தேம்பினாள்.
ஆதரவாக அணைத்துக் கொண்டவன், “என்னடா?” என விசாரித்தான். அவள் சொல்லவும் ஏதாவது மறைவு இருக்கிறதா என சுற்றிலும் பார்த்தான்.
நிகழ்ச்சியில் ஆட வந்த குழுவினர் ஆடை மாற்றிக் கொள்ளவென ஒரு மறைவிடம் இருந்ததுதான், ஆனால் அது மேடைக்கு பின்பக்கமாக இருந்தது. இவர்களோ மேடைக்கு தூரமாக நின்றிருந்தனர். மிதுவின் வேதனையை உடனே களைய நினைத்தவன் அவ்வளவு தூரம் அழைத்து செல்லும் உத்தேசத்தை மாற்றிக் கொண்டான்.
கைப்பேசியின் டார்ச்சை உயிர்ப்பித்து நான்கு பக்கமும் பார்த்தான், அருகில் மோட்டார் அறை ஒன்று இருந்தது. பக்கத்து தோப்புக்கு சொந்தமானது போல.
மிதுவை அங்கே அழைத்து சென்றான் ஜீவா.
மிதுவின் கைப்பேசிக்கு விடாமல் அழைத்துக் கொண்டே வந்தான் அன்பு. இப்போது ரிங் சென்றது.
மிதுவின் கைப்பேசி ஜீவாவின் கையில் இருந்தது, மிதுவை தேடுகிறார் என புரிந்தவன், “என்னன்னு நீ சீக்கிரம் பாரு” என அவளை அவசரப் படுத்தினான்.
இங்கு வந்திருந்த யாரின் மூலமாகவும் மிதுவுக்கு ஏதும் தொல்லையோ என அன்புவுக்கு நல்ல பதற்றம். மோட்டார் அறையில் வெளிச்சம் தெரியவும் மிதுவின் பெயரை உரக்க சொல்லி அழைத்துக் கொண்டே அங்கு ஓடினான்.
தான் உடுத்தியிருந்த சுடிதாரை களைந்து உதறிப் பார்த்துக் கொண்டிருந்த மிது, அன்புவின் குரலை கேட்டு திகைத்தாள்.
“அவரை நான் பார்த்துக்கிறேன், நீ செக் பண்ணு” என்ற ஜீவா வெளியே வந்து கதவை அடைத்தான். தோளில் மிது அணிந்திருந்த துப்பட்டாவை போட்டுக் கொண்டு அங்கு நின்ற ஜீவாவை கண்டு அதிர்ந்து போனான் அன்பு.
“மிது இங்கதான் இருக்கா…” என ஜீவா சொல்லும் போதே, அன்புவுக்கு ஏதோ பயம், கதவை திறக்க போனான். அதற்கு அனுமதிக்காத ஜீவா, “அவளே வருவா” என்றான்.
“என்னடா பண்ணின அவளை?” என கோவமாக கேட்ட அன்பு, ஜீவாவை தள்ளி விட்டு கதவின் தாழ்ப்பாளை திறந்தான்.
அன்புவை பிடித்து தள்ளி விட்ட ஜீவா மீண்டும் தாழ்ப்பாளை போட்டு, “அவ ட்ரெஸ் சரி பண்ணிட்டு இருக்கா, வருவான்னு சொல்றேன்ல புரியல உங்களுக்கு?” என கோவமாக கேட்டான்.
ஏதோ சிறிய பூச்சிதான் மிதுவை இம்சை செய்து கொண்டிருந்தது, அவளது உடலின் சில இடங்கள் நன்றாக சிவந்து தடித்துப் போயிருந்தன. தீ பட்டது போல எரிய வேறு செய்தது.
பூச்சியை காலால் நசுக்கியவள் வேகமாக ஆடையை போட்டுக் கொண்டு கதவை தட்டினாள். ஜீவா கதவை திறந்து விடவும் எரிச்சல் தாள முடியாமல் அழுதாள்.
பயந்து போன ஜீவா, “என்ன மிது?” என கேட்டுக் கொண்டிருக்க, அன்புவால் பலமாக தாக்கப் பட்டான். தலையை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தான் ஜீவா.
கைக்கு கிடைத்த தென்னை மட்டையை வைத்துதான் அவனை தாக்கியிருந்தான் அன்பு. கோவம் தீராமல் மீண்டும் அவனை அடிக்க போனான் அன்பு, அவனது மார்பில் கை வைத்து பலம் கொண்ட மட்டும் அவனை தள்ளி விட்ட மிது, ஜீவாவை எழுப்ப முயன்றாள்.
ஆத்திரம் அன்புவின் கண்களை மறைத்து விட்டது. மிதுவிடம் ஜீவா தவறாக நடந்து கொண்டதாக முன்னர் நினைத்திருந்தவன் இப்போது இவளது ஒப்புதலோடுதான் தவறு நடந்ததாக எண்ணிக் கொண்டான்.
“அசிங்கமா இல்லை உங்களுக்கு ச்சீ!” என சத்தமிட்டவன் மீண்டும் ஜீவாவை தாக்க பார்த்தான். கணவன் மீது அடி விழாதவாறு அவனை முழுதும் மறைத்துக் கொண்டாள் மிது.
தென்னை மட்டையுடன் ஓங்கியிருந்த அன்புவின் கை தாழ்ந்தது. மட்டையை தூக்கி வீசியவன், “என் பொண்டாட்டியோட கூட பொறந்தவங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடுறேன். குடும்ப மானம் ஊர் சிரிக்கிறத்துக்குள்ள கிளம்பு, உன்னை இப்போவே உன் வீட்ல வுட்டு தலை முழுகிட்டு வர்றேன்” என கோவமாக இரைந்தான்.
அழுகையும் சீற்றமுமாக அன்புவை பார்த்தாள் மிது. “நீ என் அக்கா புருஷன்னாலும் உன்னை சும்மா விட மாட்டேன்” என அவனிடம் பொங்கியவள் ஜீவாவின் பெயரை சொல்லி அவனது கன்னம் தட்டி எழுப்ப பார்த்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் எப்படி கெட்டழிஞ்சு போனாலும் எனக்கு கவலையில்ல, உங்க நடத்தை தெரிஞ்சா என் மானமும் சேர்ந்துதான் போகும், ஒழுங்கா அவனை விட்டுட்டு எந்திரி!” என அதட்டினான் அன்பு.
“உங்க வேலைய பார்த்திட்டு போய்கிட்டே இருங்க, இனிமே நீங்க எனக்கு யாரும் இல்லை, போங்க போங்க இங்கேருந்து!” என அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் மிது.
ஜீவாவுக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என மிதுவுக்கு புரிந்தது, ஆனால் அன்பு இங்கிருக்க ஜீவாவை விட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. ஜீவாவை மடியில் கிடத்தியிருந்த படியே அருகில் கிடந்த தன் கைப்பேசி எடுத்து தன் தந்தைக்கு அழைத்தாள் மிது.
மிதுவை காணவில்லை, அவளை தேடிக் கொண்டு சென்ற அன்புவையும் காணவில்லை என்கிற செய்தி முக்கியப் பட்ட சிலருக்கு தெரிய வந்து விட்டது.
தூரத்திலிருந்து சிறு கூட்டமொன்று மோட்டார் அறையை நோக்கி வருவதை பார்த்தான் அன்பு.
ஊராருக்கு விஷயம் தெரிந்தால்… என கற்பனை செய்து பார்த்த அன்பு வாழ்நாளில் அடைந்திராத உச்ச கட்ட பதட்டத்தோடு நின்றிருந்தான்.