மனைவியின் கூற்றில் நெற்றி சுருக்கி யோசித்தானே தவிர வேறு பெரிதாக வினையாற்றவில்லை அன்பு.
தன் கணவனுக்கு பிடிக்காத சங்கரன் வீட்டு விருந்தினன் ஜீவாதான் என்பதை கணித்து விட்ட லாவண்யாவுக்கு நடப்பதெல்லாம் விந்தையாக தெரிந்தது.
மிது ஏதோ சொல்லவும்தான் இவர்கள் பக்கம் பார்த்தான் ஜீவா. பின் அவள் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
மிது இவர்களிடம் வரவும் விஜயா ஏதோ கேட்க முனைய, அன்பு அதற்கு இடமளிக்காமல் அனைவரையும் கோயிலின் உள்ளே அழைத்து சென்று விட்டான்.
தரிசனம் முடித்து விட்டு வீடு வந்த பிறகு அன்பு ஆலைக்கு சென்று விட்டான்.
“இந்தாடி… அந்த ஆகாத பயகிட்ட என்னடி பேச்சு உனக்கு? ஒழுங்கா இரு” என மிதுவை அதட்டினார் விஜயா.
“உங்க அதிகாரத்தை எல்லாம் என்கிட்ட காட்ட வேணாம் ஆத்தா!” என வெடுக் என பேசினாள் மிது.
இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.
அருந்ததி தன் அம்மாவை இழுத்து செல்ல, லாவண்யா தன் தங்கையை தனது அறைக்கு அழைத்து சென்றாள்.
கதவை அடைத்து விட்டு ஜீவாவை பற்றி மிதுவிடம் விசாரித்தாள் லாவண்யா. உன் அக்காவிடம் சொல்லலாம் என முதல் நாளிரவுதான் அப்பா அனுமதி தந்திருந்ததால் அனைத்தையும் சொல்லி விட்டாள் மிது.
முதலில் லாவண்யாவுக்கும் கோவம்தான். எப்படி காதலிக்க ஆரம்பித்தனர், பிரிய நேர்ந்தது, பின் மீண்டும் சேர்ந்தது என அனைத்தையும் தங்கள் பக்க உணர்வுகளை மறைக்காமல் சொன்னாள் மிது.
கல்யாணம் வரை சென்றிருக்க வேண்டாம் என லாவண்யாவுக்கு தோன்றுகிறது, கணவனுக்கு பிடிக்காதவன் தங்கையின் கணவனா என அதிருப்தியாக நினைக்கிறாள், தன்னிடம் கூட மறைத்து விட்டாளே என ஆதங்கமாக இருக்கிறது, என் கணவனுக்கு எத்தனை மன வேதனை என அன்புவுக்காக கவலை கொள்கிறாள், அப்பா சம்மதித்து விட்டாரே என நிம்மதியாக இருக்கிறது, இப்படியாக கலவையான மன நிலையில் இருந்தாள் லாவண்யா.
தன்னையே ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கும் தன் ஒரே தங்கையை நன்றாக கடிந்து கொண்டாள்.
“உனக்கும் அவருக்கும் இடையில ஏதோ சரியில்லைனு எனக்கு தோணிச்சு, ஆனா அப்படியென்ன இருக்க போகுது எல்லாம் என் பிரம்மைனு நினைச்சேன், இப்போதானே உண்மை தெரியுது, போடி!” என்ற லாவண்யாவுக்கு கண்களில் நீர் தளும்பியது.
மிதுவும் நீர் நிறைந்த விழிகளுடன் தன் பக்க நியாயத்தை எடுத்து சொன்னாள்.
அன்பு மாமா தன்னை அடித்ததையும் எண்ணெய் ஆலையில் நடந்த தகராறையும் கூட சொல்லிவிட்டாள். லாவண்யாவுக்கு கொஞ்சம் பட படப்பாக இருந்தது, படுத்துக் கொண்டாள்.
சகோதரிகள் இருவரையும் வெகு நேரமாக வெளியில் காணவில்லை எனவும் அறைக் கதவை தட்டினார் அருந்ததி. மிது கதவு திறக்கவும் அவளது முகத்தை வைத்தே என்ன பேசியிருப்பார்கள் என புரிந்து கொண்டார்.
லாவண்யா படுத்திருக்கவும் மிதுவை அவளது அறைக்கு அனுப்பி வைத்து விட்டார். உங்களுக்கு தெரியுமா என தன் மாமியாரிடம் கேட்டாள் லாவண்யா.
ஆம் என தலையாட்டி, “கவலை பட்டு என்னாக போகுது, மிது ரொம்ப தீவிரமா இருக்கா, திருவிழா முடிஞ்சதும் நாமளே கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டியதுதான்” என்றார் அருந்ததி.
“இன்னோரு முறை வேற கல்யாணம் செய்யணுமா?” எனக் கேட்டாள் லாவண்யா.
மருமகளிடம் விசாரித்த பிறகுதான் மிதுவுக்கு திருமணம் முடிந்த விஷயம் அருந்ததிக்கும் தெரிய வந்தது. அவளின் கையை பிடித்துக்கொண்டவர், “இவ செஞ்சு வச்சிருக்க வேலைல எனக்கு தலை சுத்துது, என் தம்பி ரொம்ப பாவம்” என்றார்.
“உங்க மகனும் பாவம் அத்தை” என ஆற்றாமையாக சொன்னாள் அவள்.
அதிகம் குழப்பிக் கொள்ளாதே, உன்னை ஒழுங்காக கவனிப்பதுதான் முக்கியம், அன்புவுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது, குழந்தை வரப் போகிறது, அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
இரவில் கணவனிடம் தங்கையின் காதல் தனக்கு தெரிந்து விட்டதை சொன்னாள் லாவண்யா. அவன் இயல்பாக, “நல்லது, தூங்கு” என்றான்.
“இப்படி சொன்னா எப்படிங்க? இதுக்கு மேல நம்மளால எதுவும் செய்ய முடியாது, அவ ஆசை படி வாழட்டும், எனக்காக…” அவள் சொல்கையில் அவளை கோவமாக பார்த்தான் அன்பு.
அந்தப் பார்வையில் அவள் அதிர, உடனே நிதானித்தவன், “நீயும் என்னை புரிஞ்சுக்க மாட்டியா பாப்பா?” எனக் கேட்டான்.
“அவ விரும்பும் போது நான் என்னங்க செய்ய முடியும்? வருஷக் கணக்கா லவ் பண்ணியிருக்காங்க, கல்யாணம் பண்ணி…” என்றவள் சற்று தயங்கி, “கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என்றாள்.
திருமண விஷயம் தெரிந்தால் அன்பு இன்னும் கோவம் கொள்வான் என்பதாலேயே உண்மையை மறைத்தாள். அருந்ததியும் இப்படித்தான் யோசனை சொல்லியிருந்தார்.
“நாம தடுக்க நினைச்சாலும் முடியாது, குடும்ப மானம் போகாம என்ன செய்றதுன்னுதானே பார்க்கணும்?” எனக் கேட்டாள் அவள்.
மனதில் மூண்ட வெறுப்பு அவனது முகத்தில் தெரிந்தது. அவள் கலங்கினாள்.
“நேரம் ஆகுது பாரு, படு” என சொல்லி மனைவியை உறங்க வைத்தவன் உறக்கத்தை தொலைத்து விட்டான்.
இப்போதெல்லாம் மிதுவிடம் அருந்ததி மட்டும்தான் பேசுகிறார். ஆகவே இனியும் ஏன் இங்கிருக்க வேண்டும், என் வீட்டுக்கு கிளம்புகிறேன் என அத்தையிடம் சொன்னாள் மிது.
அருந்ததி சம்மதிக்கவில்லை. உன் அக்கா மற்றும் மாமாவின் கோவம் நிரந்தரமானது அல்ல, அவர்கள் உனக்கு வேண்டும் என நீ நினைத்தால் அவர்களை சமாதானம் செய்ய முயல வேண்டும், அதை விடுத்து அவர்களை எதிர் கொள்ள பயந்து ஓடக் கூடாது என சொல்லி அவளை அங்கேயே இருக்கச் செய்தார்.
மிதுவும் அக்காவிடம் பேச முயல்கிறாள், ஆனால் அதற்கான இடம் கொடுக்க மறுத்தாள் லாவண்யா. கூடுதலாக நீ தவறு செய்து விட்டு என் கணவனிடம் முறைத்துக் கொண்டிருப்பாயா என கோவப்பட வேறு செய்தாள்.
அனைத்தையும் ஜீவாவிடம் சொல்லி அழுது புலம்பினாள் மிது. அவளை நேரில் பார்க்கும் வழியும் இன்றி தவித்து போனான் அவன்.
திருவிழா முடிவடையும் வரை இரவில் கூத்து நாடகம் நடக்கும். கடைசி இரண்டு நாட்கள் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த இரு நாட்களில் இள வட்டங்கள் போதையில் தகராறும் செய்து கொள்வார்கள். அவ்வாறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படக் கூடாதென அன்பு அங்குதான் இருப்பான்.
அன்றைய நிகழ்ச்சியை காண மிதுவையும் அழைத்தார்கள் அவள் வயதிலிருந்த அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள். அழுது வடிந்த முகத்தோடு திரியும் மிதுவுக்கு மாற்றமாக இருக்கும் என நினைத்த அருந்ததி, அன்புவும் அங்கு செல்வான் என்பதால் அவளை சென்று வருமாறு சொன்னார்.
மிதுவுக்கு விருப்பமே இல்லை. ஜீவாவிடம் சொல்லும் போது ‘நானும் வருகிறேன், நீயும் வா, எனக்கு உன்னை பார்க்க வேண்டும்’ என்றான், அவனை காண்பதற்காகவே அவளும் சென்றாள்.
இரவின் அமைதிக்கு மாறாக சத்தமும் குதூகலமுமாக சென்றது நிகழ்ச்சி. ஆபாசத்திற்கு இடமிருக்க கூடாது என்பதில் கோயில் கமிட்டி உறுதியாக இருந்ததால் யாரும் முகம் சுளிக்கும் படி இல்லாமல் இருந்தது நடனம்.
மிது அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கத்தில்தான் நின்றிருந்தான் ஜீவா. தன் பார்வை வட்டத்துக்குள்ளேயே மிதுவை வைத்திருந்த அன்புவின் கண்களுக்கும் தென்பட்டான் ஜீவா.
எரிச்சலும் கோவமும் கிளர்ந்தெழ, சுற்றம் உணர்ந்து பெரிய மூச்சாக விட்டு தன்னை அமைதியாக வைத்துக் கொண்டான் அன்பு. இனியும் எதை தடுக்க முடியும் தன்னால் என நினைத்துக் கொண்டே, அவ்விடம் விட்டு வேறு பக்கம் போய் விட்டான்.