அத்தியாயம்-1(2)

“என்ன நடந்தது மிதுன்யா, இவன் உங்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணினானா?” எனக் கேட்டார் அவளின் பேராசிரியை.

“அந்த பொண்ணு பேசட்டுமே மேடம், எதுக்கு அவசர படுறீங்க?” என்றார் இன்னொருவர்.

“நேர்ல பார்த்தோமே நானும் வாசுகியும், அது என்ன பொய்யா? நாங்க மட்டும் சரியான நேரத்துக்கு போகலைனா இந்நேரம்… மை காட்! இந்த பொண்ணு வீட்டுக்கு என்ன பதில் சொல்லியிருப்போம்? எங்க காலேஜ் ரெப்யூடேஷன் என்னாகிறது?” என பட படத்தார் ஆசிரியை.

மதுரை கல்லூரியின் ஒரு ஆசிரியர் அவரை சமாதானம் செய்ய, இன்னொரு ஆசிரியர் கற்பனையாக பேச வேண்டாம் என கூறி கோபித்துக் கொண்டார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஆனது.

அனைவரையும் அமைதியாக இருக்கும் படி அதட்டிய மருத்துவர், மிதுன்யாவை இன்னோரு முறை பரிசோதனை செய்தார். அவள் நன்றாக இருப்பதாக சொல்லி, “என்ன ஆச்சுன்னு நீ சொல்லும்மா” என்றார்.

அவள் மயங்கியது வரை அப்படியே சொன்னாள்.

“ஓ அப்போ மயக்கமான பொண்ணுகிட்ட தப்பா நடக்க பார்த்திருக்க, அப்படித்தானே?” அந்த பையனை பார்த்து கோவமாக கேட்டார் சென்னை கல்லூரி ஆசிரியை.

“ஜீவா அப்படிப்பட்ட பையன் இல்லை, என்ன நடந்திருக்கும்னு நீங்களே யோசிச்சு நீங்களாவே பேசிப்பீங்களா? கொஞ்சம் இவனையும் பேச விடுங்க. ஒழுங்கா விசாரிக்காம இவன் மேல வீண் பழி போட வேணாம்” என்றார் அந்தப் பையனின் கல்லூரி ஆசிரியர்.

இப்படியாக அந்த ஜீவா என்கிற பையனுக்கும் பேச சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

மதுரையில் இரண்டு கல்லூரிகள் இணைந்துதான் இந்த கலைவிழாவை நடத்துகின்றன. இரண்டும் தூரம் என்பதால் மற்றொரு கல்லூரியின் மாணவர்கள் கூட இரவில் இங்கேயே தங்க வைக்க பட்டிருந்தனர். ஜீவா என்கிற ஜீவநந்தனும் அப்படித்தான் இங்கே தங்கியிருந்தான்.

இரவில் அவனது அம்மாவுடன் தவறாமல் காணொளி அழைப்பில் பேசி விடுவான். இன்று அவனது அம்மா வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அம்மாவுடன் பேச நினைத்தான்.

உணவு உண்ணும் இடத்தில் அம்மாவுடன் இலகுவாக பேச இயலாது என்பதால் மற்ற நண்பர்களுக்காக காத்திராமல் விரைவாகவே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவனுக்கும் முன்னால் போதையிலிருந்த இன்னொரு மாணவர் கூட்டம் சென்று கொண்டிருந்தது. அவர்கள் எல்லாம் அவனது ஜுனியர்கள்தான். அந்த இடத்தில் யாரோ ஒளிந்து நிற்பதை கவனித்தான். அவள் அணிந்திருந்த நீண்ட ஸ்கர்ட் நிறத்தையும் காலணிகளையும் வைத்து சற்று முன் உணவகத்தில் பார்த்த பெண்தான் என்பதை உறுதி செய்து கொண்டான்.

அவனை தவிர மற்றவர்கள் போதையின் பிடியில் இருந்ததால் அந்த பெண்ணை நோக்கி சென்றவனை தடுத்து விட்டு அவனே முன் சென்றான். அங்கே கண்களை மூடிக் கொண்டு அழுத வண்ணம் பயந்து போய் நின்றிருந்தாள் மிதுன்யா.

அவளின் கோலத்தை கண்டு உடனே பின் வாங்கியவன் மற்றவர்களை அங்கிருந்து போக செய்து விட்டான். அவளுக்கு உதவுவதற்காக அவன் மட்டும் அவளிடம் சென்றான். அதற்குள் மின் விளக்கு அணைய, கைப்பேசியில் டார்ச்சை உயிர்ப்பித்தான்.

அவள் மயங்கி கிடந்த காட்சியை கண்டு அவனும் பயந்துதான் விட்டான். ஆனாலும் விரைந்து அவளிடம் சென்று, அவள் மூச்சு விடுவதை உறுதி செய்து கொண்டான்.

வேறு யாரையாவது உதவிக்கு அழைக்க நினைத்தான். அதற்கு முன் அவளது அலங்கோலத்தை சரி செய்ய நினைத்தவன், அவளுக்கு அணிவிப்பதற்காக தான் அணிந்திருந்த சட்டையை அவிழ்த்து ஆடை கிழிந்த பக்கத்தில் போட்டும் விட்டான்.

அதற்கு முன்னரே, வழியில் விளக்கு எரியாமல் இருட்டாக இருக்கவும் தனது ஆசிரியைக்கு அழைத்து சொல்லியிருந்தாள் வாசுகி. அப்படியே மிதுன்யா முன்னரே அறைக்கு புறப்பட்டு வந்த விவரத்தையும் சொன்னாள். ஆனால் மிதுன்யா இன்னும் அறைக்கு வராமலிருக்க அவருக்கு பதற்றமாகி விட்டது.

அந்தக் கட்டிடத்தை விட்டு வாசுகியிடம் செல்வதற்காக வெளியில் வந்தார் அந்த ஆசிரியை.

வழியில் கண்ட மாணவர்கள் குழுவிடம் நீங்கள் வந்த வழியில் வெளிச்சம் இல்லையா என விசாரித்தார்.

போதையில் இருந்த மாணவர்களும், ஆமாம் அங்கே விளக்கு விட்டு விட்டு எரிகிறது எனவும் அந்த இடத்தில் தாங்கள் ஒரு பெண்ணை பார்த்ததாகவும் உடன் ஜீவா இருந்ததாகவும் தங்களை அங்கிருந்து போக சொல்லி அவன் மிரட்டியதாகவும் சொன்னார்கள்.

“யாருப்பா அந்த பையன்?” என விசாரித்தார் ஆசிரியை.

“அவன் எங்க காலேஜ் ரோமியோ, இந்நேரம் என்னென்ன நடந்திருக்குமோ?” என ஒருவன் உளற, இன்னொருவனும் அந்த ஆசிரியரை பயமுறுத்துவது போலவே சொன்னான்.

“எல்லாரும் குடிச்சிருக்கீங்களா?” என கோவமாக கேட்டவர், அந்த ஜீவா என்பவனும் இவர்களில் ஒருவனாகத்தான் இருக்க கூடும் என பயந்து விட்டார்.

இவர்கள் பார்த்த அந்தப் பெண் நம் மிதுன்யாதான், இவர்கள் சொல்லும் பையன் அவளிடம் முறைகேடாக நடக்க முயல்கிறான் என அவராகவே நினைத்துக் கொண்டார்.

 குழுவாக அல்லாமல் ஏன் இருவர் மட்டும் சென்றீர்கள் என வாசுகியை கடிந்து கொண்ட ஆசிரியை இன்னும் இரண்டு ஆசிரியர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அங்கே வந்தார்.

ஜீவா தன் சட்டையை மிதுன்யாவுக்கு முழுவதும் போட்டு விடுவதற்குள் அங்கே வந்து விட்ட ஆசிரியர்கள் அந்த சூழலை தவறாக புரிந்து கொண்டு ஜீவாவை குற்றவாளியாக்கி விட்டனர்.

மிதுன்யாவின் பாதுகாப்பிற்காகவே போதையிலிருந்த தன் ஜூனியர் பசங்களை அங்கிருந்து போக சொன்னதாகவும் அவளுக்கு உதவி செய்வது மட்டுமே தன் எண்ணம் என்பதையும் விளக்கினான் ஜீவநந்தன்.

“இவன் சொல்றது உண்மைன்னு எப்படி நம்புறது?” எனக் கேட்டார் சென்னை ஆசிரியை.

“உண்மையாதான் இருக்கணும் மேடம், நாம அங்க போனப்போ மிதுன்யா ஒரு பக்கம் ஷர்ட் போடப் பட்டுத்தான் இருந்தா, நாம கூட அந்த ஷர்ட்ட நல்லா போட்டு விட்டுத்தான் அங்கேருந்து அவளை தூக்கிட்டு வந்தோம்” என நினைவு படுத்தினார் இன்னொரு சென்னை ஆசிரியர்.

ஆரம்பதிலிருந்தே ஜீவா மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்த ஆசிரியை கூட யோசித்துப் பார்த்து விட்டு ஆமோதிப்பாக தலையாட்டினார்.

“நீ உடனே எங்க யாருக்காவது ஃபோன் பண்ணாம எதுக்காக சினிமா ஹீரோ ஆக பார்த்த, நீ செஞ்சது உனக்கே வினையா போயிடுச்சு பார்த்தியா?” ஜீவாவை கடிந்து கொண்டார் அவனது ஆசிரியர்.

தன் ஆடை மிகவும் மோசமாக கிழிபட்டு அந்தப் பக்கம் முழுதும் வெளிப்படுமாறு இருந்த நிலை மிதுன்யாவுக்கு தெரியும். தன்னை அப்படி இவன் பார்த்து விட்டானே என்ற சங்கடம் இருந்த போதிலும் மற்றவர்கள் யாரும் அப்படி பார்த்து விடாமல் காத்திருக்கிறான் என்பதில் நிம்மதி அடைந்தாள்.

ஆசிரியரின் கேள்விக்கு பதில் தராமல் அமைதியாக நின்றிருந்த ஜீவாவை பாவமாக பார்த்தாள்.

மிதுன்யாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவளுக்கு எங்கே அடி பட்டிருக்கிறது என சரி வர தெரியாத காரணத்தால் அந்த சட்டையை கத்திரிக்கோல் வைத்து கிழித்துதான் அகற்றியிருந்தனர். அது ஒரு மூலையில் கிடந்தது.

“ஏதாவது பேசுடா” என்றார் ஜீவாவின் ஆசிரியர்.

தன் சட்டையை பார்த்து உச்சு கொட்டிய ஜீவா, “நான் சொல்றத அப்பவே ஒழுங்கா கேட்ருந்தா என் சட்டை கிழிஞ்சிருக்காது ஸார், அநியாயமா என் சட்டை கிழிஞ்சு போச்சு ஸார். எங்கம்மாக்கு பதில் சொல்ல முடியாது, நீங்கதான் வாங்கித் தரணும்” என்றான்.

“ஆர்ம்ஸ் காட்டிட்டு போஸ் கொடுக்காம வாடா, கிழிஞ்ச சட்டையை தச்சு தர சொல்றேன்” என சொல்லிக் கொண்டே அவனை அங்கிருந்து அழைத்து சென்றார் அந்த ஆசிரியர்.

“புதுசு வாங்கி கொடுங்க ஸார்”

“ பணமே இல்லடா எங்கிட்ட”

“மாசக்கடைசி கூட இல்ல ஸார், அப்பவும் பர்ஸ் காலின்னு கதை விடுறீங்களே. உங்களை நம்புறதுக்கு இல்லை. நேரா ஷாப்க்கு கூட்டிட்டு போங்க, இல்லைனா காசாவது கொடுங்க, நான் வாங்கிக்கிறேன்” என்றவன், தொடர்ந்து, “காசு கொடுங்க ஆத்தா வையும்” என்றான்.

 அங்கிருந்தவர்களுக்கும் இந்த உரையாடல் கேட்க அனைவரின் முகங்களிலும் சிறு முறுவல்.

“ஸ்டூடன்ட்டும் ப்ரொஃபசரும் பேசிக்கிற மாதிரியா இருக்கு” கண்டனமாக சொன்னார் சென்னை ஆசிரியை.

“அவன் எங்க காலேஜ்க்கு செல்ல பிள்ளை மேடம், சேட்டை செய்வான் ஆனா லிமிட் தாண்ட மாட்டான். ரொம்ப நல்ல பையன். அந்த ஸார் கூட அவன் ரொம்ப க்ளோஸ், அதான் அப்படி பேசிக்கிறாங்க. மிதுன்யாவை அழைச்சிட்டு நீங்களும் கிளம்புங்க” என்றார் இன்னொரு ஆசிரியர்.

பார்த்தவுடன் கண்டிப்பாக அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு இருந்ததுதான். இப்போது இன்னுமே ஈர்த்தான் அந்த ஆட்ட நாயகன்.