கொஞ்சும் காதல் சாரல் – 1

அத்தியாயம் -1(1)

மதுரையில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் கல்ச்சுரல் மீட் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆடிட்டோரியம் இளசுகளின் ஆட்டத்தால் குலுங்கிக் கொண்டிருந்தது என்றால் மிகையாகாது.

ஏதோ கல்லூரியின் மாணவன் சிவப்பு நிற கவுன் அணிந்து மோனிகா பாடலுக்கு பெண்ணின் நளினங்களோடு ஆட, அதற்கான விசில் ஒரு பக்கம் என்றால் கீழே இருந்த மாணாக்கர்கள் கூட ஆங்காங்ககே குழுக்களாக ஆடிக் கொண்டிருந்தனர்.

“மேல பார்க்காம எங்கடி பார்த்திட்டு இருக்க?” எனக் கேட்ட வாசுகியின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை மிதுன்யா. அவளின் பார்வை முழுதும் அரங்கத்தின் கடைசியில் ஆடிக் கொண்டிருந்தவன் மீதுதான் இருந்தது.

ஈர்க்கும் தன்மையுள்ள முகமும் உடலமைப்புமாக அனுபவித்து ஆடிக் கொண்டிருந்தான். அவனருகில் இரு சேட்டைக்கார மாணவர்கள் மரக் கிளையை கையில் வைத்துக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர்.

“குரங்கு சேட்டைனு சொல்றத இனிக்குத்தான் நேர்ல பார்க்கிறேன்” என்றாள் வாசுகி.

உச்சு கொட்டிய மிதுன்யா, “சென்டர்ல ஆடுறவன பாரு, கலக்குறான், இவந்தான் இங்க ஆட்ட நாயகன்” என்றாள்.

“ஓஹோ உங்கள் பார்வை அங்கேயா?” கிண்டலாக கேட்டாள் வாசுகி.

“நல்லா ஆடுறான், ரசிச்சேன், அவ்ளோதான். இனிமே அவனை எங்க பார்க்க போறோம்?” என சாதாரணமாக சொன்னவளின் பார்வை அவனிடமேதான் இருந்தது.

அடுத்தடுத்தும் கூட ஆடல் பாடல் மேடையில் தொடர்ந்தாலும் அவளின் பார்வையை அவன்தான் கட்டிப் போட்டிருந்தான்.

சுற்றத்தை பற்றி கவலை படாமல் ஆடிக் கொண்டிருந்தவனுக்கு அவளின் துளைக்கும் பார்வை உறுத்தியதோ என்னவோ, அவனும் அவளை பார்த்து விட்டான்.

தன்னைத்தான் பார்க்கிறானா என தனக்கு இட வலம் மற்றும் பின்புறம் பார்த்து சோதித்து தன்னையேதான் பார்க்கிறான் என ஊர்ஜிதம் ஆனதும் அவளுக்கு கூச்சமாகி விட்டது.

சின்ன வெட்க சிரிப்புடன் மேடை பக்கமாக திரும்பி விட்டாள். அவனை பார்க்க சொல்லி மூளை பிராண்டி எடுக்க, அவஸ்தை தாளாமல் மீண்டும் அவன் பக்கம் பார்த்தாள்.

தன்னை ஒருத்தி அப்படி ரசிப்பதை அவனும் ரசித்தான், அவனது ஆட்டத்தில் முந்தைய வேகம் இல்லை, நிதானமாக இவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே ஆடினான். அதுவும் அவளை கவரவே செய்தது.

அடுத்து அவனே ஆட வேண்டிய முறை வந்தது. அவனது பெயரை சொல்லாமல் கல்லூரியின் பெயரை மட்டுமே சொன்னார்கள். அங்கே யாரின் பெயரையுமே சொல்லவில்லை, அனைவருக்கும் கல்லூரியின் பெயர்தான் அடையாளமாக இருந்தது.

ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு பெண் ஒருத்தியுடன் நடனம் ஆடினான். தொட்டுக் கொண்டு ஆடவில்லை என்றாலும் இருவரின் நடன அசைவுகள் காண்பதற்கு ரம்மியமாக இருந்தது. பாதியிலேயே அந்த பாடல் முடியவும் மனசிலாயோ பாடலுக்கு குழுவினரோடு சேர்ந்து ஆடினான். ஆனாலும் காண்பவர்களின் கண்களை காந்தம் போல அவனை நோக்கியே பார்க்க வைத்தான்.

“சும்மா சொல்லக்கூடாது, நிஜமாவே இவன் ஆட்ட நாயகன்தான்! நானும் இவன் ஃபேன் ஆகிட்டேன்” பாராட்டு பத்திரம் வாசித்தாள் வாசுகி.

மேடையை விட்டு இறங்கும் போதே மிதுவை அவனது பார்வையும் தீண்டிச் சென்றது.

மீண்டும் பின் பக்கத்தில் தன் ஆட்டக் கச்சேரியை தொடர்ந்தான். மிதுன்யாவும் அவனும் பார்வையால் விளையாடிக் கொண்டனர்.

நண்பனின் பார்வை செல்லுமிடத்தை அவனை சுற்றி இருந்தவர்கள் கண்டு கொண்டனர். உற்சாகத்தின் உச்சியில் இருந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என கேட்கவும் வேண்டுமா?

கிண்டலும் கேலியும் அந்த சூழலுக்கு ஏற்ற பாடலுமாக குட்டி கலாட்டாவாக இருந்தது அந்த இடம்.

“அடியேய் உன்னை வச்சுத்தான் அவனை கிண்டல் செய்றாங்க போல” என்றாள் வாசுகி.

“அப்படியா! இருக்காது” என்ற மிதுன்யாவுக்கு சங்கடமாக இருந்தது.

அவனது கல்லூரி பேராசிரியர் வந்து ரகளையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கண்டித்து விட்டு சென்றார்.

சற்றே அடங்கி அமர்ந்தனர் சேட்டைக்கார ஆட்டக்காரர்கள். அவனது பார்வை தன் முதுகு துளைப்பதை உணர்ந்து கொண்ட மிதுன்யா இனியும் அங்கிருக்க வேண்டாமென கருதி வெளியேறினாள்.

அவள் நினைத்தவாறு அவளை அவன் பின் தொடர்ந்து வரவில்லை.

சற்று நேரம் கழித்து வாசுகியும் அவளுமாக உணவருந்தும் ஹாலுக்கு சென்றனர். தங்களுக்கானத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தனர் இருவரும்.

“அவன் அங்க இருக்கான், பாருடி” என காதோரம் கிசு கிசுத்தாள் வாசுகி.

“யாரு?”

“அவன்தான் டான்ஸ் ஆடி தெறிக்க விட்டானே. நீ போனதுக்கப்புறம் அவனும் ஆடவே இல்லை. நீ போயிட்ட சோகத்துல இருந்தான் போல” என்ற வாசுகியை முறைத்தாள்.

“அவன் பக்கம் கொஞ்சம் பாரேன், ஆளும் ஸ்மார்ட்டா இருக்கான்”

தோழியிடம் அலட்டிக் கொள்ளாத பார்வை பார்த்த மிதுன்யா கள்ளத்தனமாக அவனை தேடினாள். இவள் பக்கமாக திரும்பாமல் இவளது ஈகோவை சீண்டி விட்டான் அவன்.

அவனை தவிர மற்றவர்கள் இவளை பார்த்தனர், அவன் மட்டும் கடைக்கண் பார்வையை கூட இந்த பக்கமாக வீசவில்லை.

வேறொரு ஆடவர் குழு குளிர்பானங்களில் எதையோ ரகசியமாக கலந்து கொண்டிருக்கவும், “ஃபிராடு பசங்க என்னமோ செய்றாங்கடி, சொல்லி கொடுத்திடுவோமா?”எனக் கேட்டாள் வாசுகி.

தோழி பேசுவது கவனத்தில் பதியாமல் அவ்வப்போது ஆட்ட நாயகனை கள்ளப்பார்வை பார்த்திருந்தாள் மிதுன்யா.

தோழியை கண்டு கொண்ட வாசுகி, “இங்க என்னடி நடக்குது?” என குழப்பமாக கேட்டாள்.

சுற்றம் உணர்ந்த மிதுன்யா தனக்குள் வெட்கி, “நாம போலாம்” என்றாள்.

“முதல்ல சாப்பிட்டு முடி” என்ற வாசுகியின் வார்த்தையை பொருட் படுத்தாமல் எழுந்து சென்று விட்டாள் மிதுன்யா.

தங்குவதற்கு அங்கேயே அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருத்தன. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை இருந்த கட்டிடத்திற்குதான் சென்று கொண்டிருந்தாள் மிதுன்யா. திடீரென வழியில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கு அணைந்து விட்டது. இருளில் எல்லாமே விகாரமாக தென்பட, அவளும் நன்றாக பயந்து விட்டாள்.

தொலைவில் ஆடவர்கள் ஏடாகூடமான சினிமா பாடலை பாடிக் கொண்டே வரும் சத்தம் கேட்டது. அங்கிருந்து விரைந்து ஓடி செல்ல நினைத்தவள் இருளில் வழி புரியாமல் தடுக்கி விழுந்து விட்டாள். அணிந்திருந்த டாப்பின் தோள் பகுதி எந்த வஸ்தில் சிக்கியதோ அவள் எழுந்த வேகத்தில் கிழிந்து போனது, கூடவே அவளது சருமத்தையும் பதம் பார்த்து விட்டது.

தோள், கையெல்லாம் திகு திகுவென எரிய, அங்கே தடவிக் கொண்டே அடுத்து என்ன செய்வது என பார்த்தாள்.

அங்கிருந்து அவள் வேகமாக சென்றாலும் ஆள் நிறைந்த பகுதியை கடந்துதான் அறைக்கு செல்ல வேண்டும். இடது பக்க டாப் முழுதும் கிழிந்து விட்டது.

யாரையும் உதவிக்கு அழைக்கலாம் என்றால் அவளது கைப்பேசியை சார்ஜில் போட்டு விட்டுத்தான் வாசுகியுடன் கிளம்பி வந்திருந்தாள்.

அந்த ஏடாகூட பாட்டு சத்தம் சமீபத்தில் கேட்கவும் அருகில் தென்பட்ட கட்டிடத்திற்கு ஓடி சென்று விட்டாள். எப்படியும் வாசுகி இந்த வழியாகத்தான் வருவாள், அவளை அழைத்தால் போதும், அவளது துப்பட்டாவை மேலே போர்த்திக் கொண்டு சென்று விடலாம் என நினைத்து அங்கேயே காத்திருந்தாள்.

அந்த பாட்டு சத்தம் மிக மிக அருகில் கேட்கவும் அவளுள் திகில் பரவியது. அணைந்து போன விளக்கு எரிய ஆரம்பித்தது.

“ஹேய் யாரோ நிக்கிறாங்க டா” என்றான் ஒருவன்.

“பொண்ணு போலடா” என்றது இன்னொரு குரல்.

யாரென பார்க்க முன்னேறி சென்றான் ஒருவன். காலடித் தடம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து எந்தப் பக்கம் செல்லவென புரியாமல் தவித்தவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.

சில நொடிகள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“நீங்கல்லாம் போங்கடா இங்கேருந்து” என யாரோ சொல்வது கேட்டு கண்கள் திறந்தாள்.

அவனது வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்து வம்பு செய்து கொண்டிருந்தனர் மற்றவர்கள். அவன் அதட்டலாக சொல்லவும் அவனை முறைத்துக் கொண்டே அகன்று சென்றனர்.

மீண்டும் அந்த விளக்கு அணைந்து போகவும் பூனை ஒன்று அவளின் காலை உரசிக் கொண்டு ஓடிச் செல்லவும் சரியாக இருந்தது. பயத்தில் அலறிக் கொண்டே கண் மண் தெரியாமல் ஓடியவள் சுவற்றில் இடித்துக் கொண்டு கீழே விழுந்தாள்.

அவ்வளவுதான் அவளின் நினைவில் இருந்தது. கண் விழித்த போது ஏதோ அறையில் இருந்தாள். நன்றாக நினைவு வரவும்தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள். கையில் நன்றாக சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. நெற்றியிலும் காயம். களிம்பு தடவியிருந்தார்கள்.

எப்படி இருக்கிறது என விசாரித்த வாசுகி, அவள் நன்றாக இருப்பதாக சொல்லவும் வெளியே சென்றாள். சில நிமிடங்களில் அவர்களுடன் வந்த கல்லூரி பேராசியர்கள், மருத்துவர், மதுரையில் கலைவிழா நடந்து கொண்டிருந்த கல்லூரியின் ஆசிரியர்கள், இன்னும் சிலர் என ஆறேழு பேர் உள்ளே வந்தனர்.

சற்று தள்ளி, கலைந்த கேசமும் கலங்கிய முகமுமாக மேல்சட்டை இல்லாமல் உள் பனியன் போட்டுக் கொண்டு நின்றிருந்தான் அந்த ஆட்ட நாயகன்.