Advertisement

அத்தியாயம் 5

 

“நாம் வார்த்தைகளை அலைக்கழிப்பது          

போல    வார்த்தைகளும்   நம்மை

அலைக்கழிக்கும் ”  –   லாரன்ஸ் பீட்டர்

            அதன் பிறகு வந்த நாட்களில் அவன் அவளிடம் கோபமாக எதுவும் பேசாவிட்டாலும் யோசனையோடு நேரத்தைக் கடத்தி கொண்டிருந்தான்….  சில நேரம் பேசத் தொடங்கி விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்வான்… கிளம்ப வேண்டியது வேறு இருந்ததால் அவனுக்குத் தேவையானதை எடுத்து வைப்பதில் மாறனின் அம்மாவிற்கும் நந்தினிக்கும் நேரம் சரியாக இருந்தது…. நந்தினிக்கு அவனது மாற்றம் ஏன் என்று புரியாமல் சற்று குழப்பத்துடன் இருந்தாள்… அவளுக்கு தெரியும் அவனது கோபம் பற்றி இருந்தாலும் அமைதியுடன் கழித்துக் கொண்டிருந்தாள்….

       அவனோ யோசனையுடனே இருந்தான். அன்று அவன் அமெரிக்கா நண்பன் சைனா காரி…. என்று பேச்சு எடுத்ததற்கு வீட்டிற்கு வந்து சண்டை போடுவாள் என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க… அவளோ அதை பற்றி பேசவே இல்லை ஏன் கேட்க கூட இல்லை…..  ஏன் என்று அவனுக்கு அதுவும் குழப்பமாகத்தான் இருந்தது….

     எல்லாவற்றையும் இன்றைக்கே எடுத்து வைத்து விடு நாளை கிளம்பும் அவசரத்தில் எதையும் விட்டு விடக் கூடாது என்று மாறனின் அப்பாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்தையும் எடுத்து வைத்து தயார் செய்தான்…. கொண்டு போக வேண்டிய வற்றை  எடுத்து சரி செய்து பார்த்துவிட்டு மாடி அறைக்கு செல்லும் முன் நந்தினி எங்கே இருக்கிறாள் என்று தேடினான்….

     அவள் கிச்சனில் இருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக அவளருகில் சென்று கொஞ்சம் சீக்கிரமாக வா…. உன்கிட்ட நெறைய பேசனும் என்று சொல்லிவிட்டு மாடியறைக்கு  சென்றான்….

      அவன் சென்ற சற்று நேரத்தில் எல்லாம் தேவகியே வந்து நீ போமா போய் அவன்கிட்ட பேசிக்கிட்டு இரு…..  நாளைக்கு அவன்  ஊருக்கு கிளம்பறான் இல்ல என்று சொல்லி அனுப்பிவைத்தார்…..

      கீழே உள்ளவற்றை முடித்துக் கொண்டு மேலே  அறைக்கு சென்றாள் …. இவள் போகும்போது அவன் கையை மடித்து  முகத்தில் வைத்து மறைத்துக் கொண்டு படுத்து இருந்தான்…. யோசனையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது எதுவும் பேசாமல் அமைதியாக போய் நின்றாள்….

       இவள் வந்ததை அவன் உணரவில்லை என்பதை அறிந்த பின் மெதுவாக அவனை கூப்பிட்டாள்… ஏதோ பேசணும் சொன்னீங்க என்று அவனருகில் சென்று சொன்னாள்…..

        முகத்திலிருந்து கையை எடுத்தவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்… பின் மெதுவாக எழுந்து அமர்ந்தான் அவன் முகம் கலங்கி இருப்பது நன்றாகவே தெரிந்தது….. எப்படி கேட்பது என்று புரியாமல் குழம்பிப் போய் நின்றாள்……

           இங்கே இருந்து பேசவேண்டாம் மொட்டை மாடிக்கு போகலாமா என்று கேட்டான்…….

        அவளும் சரி என தலையாட்டினாள்….

        மேலே சென்று தரையில் ஒரு ஓரமாக அமர்ந்தான் அவனிடம் இருந்து சற்று தள்ளி நந்தினியும் அமர்ந்தாள்….

     சற்று நேரம் அவனிடமிருந்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை…. அமைதியாகவே இருந்தான்… நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து இருப்பது மட்டுமே தெரிந்தது…. அவன் முகத்தில் ஓடும் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை…. நாளை அவன் கிளம்ப இருப்பதுதான் அவனது கலக்கம் என்பது அவளுக்கு தெரிந்தது…. எப்போதும் இப்படித்தான் இருப்பான் ஆக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்….

       அவனோ இதுவரை 2 முறை வந்து சென்றிருக்கிறோம்…. ஆனால் இந்த அளவு மனதிற்கு வருத்தமாக இருந்தது இல்லையே…. ஏன் இம்முறை மட்டும் இவ்வளவு வருத்தம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்….

          கண்டிப்பாக இவளை விட்டு விட்டு செல்வதால் அல்ல…..  வீட்டில் கணவன் மனைவி குடும்பம் என்று சேர்ந்து இருந்தாலே மாமியார் மருமகள் பிரச்சினை வரும்….. அவளைத் தனியே விட்டு விட்டு செல்லும் போது எதுவும் பிரச்சினை வந்துவிட்டால் என்ன செய்வது நர்மதா சில சமயங்களில் வாய்  துடுக்காக பேசிவிடுவாள்….. அம்மா அமைதியாக இருந்தாலும் சில நேரங்களில் எதுவும் சொல்லிவிடக்கூடாது…. இவளும் வாயை திறந்து எதுவும் பேசினால் பிரச்சினையாகிவிடும் என்ன செய்வது.,

      அப்பா எதையுமே கண்டு கொள்ளாத மனிதன் அவரிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை இவ சொன்னா புரிஞ்சுக்கணும்…

         விட்டுக்கொடுத்து போகணும்…..   பிரச்சினை எதுவும் வந்துற கூடாது… என்ற பல குழப்பங்களுக்கு நடுவே அவனது மனம் வருத்தம் வந்ததற்கான காரணம் என்று கற்பித்துக் கொண்டு இருந்தது…..

          ஒரு பெருமூச்சுடன் பேச்சைத் தொடங்கினான்…

         நாளைக்கு நைட்டு கிளம்பிடுவேன்….. பார்த்துக்கோ…..  நர்மதா க்கு அலையன்ஸ் பார்த்திட்டிருக்காங்க….  அவளுக்கு எப்படி பிடிக்கும் அப்படிங்கறத நீ கொஞ்சம் பேசிப்பாரு…. உனக்கு எது வேணும்னாலும் அம்மா கிட்ட கேளு வாங்கி தருவாங்க…. இல்ல அவங்க கிட்ட கேக்க ஒரு மாதிரி இருக்கு ன்னா…..  எனக்கு போன் பண்ணு இல்ல ஒரு மெசேஜ் போட்டு விடு…. நான் டெய்லி கால் பண்ணுவேன்.. மத்தபடி நான் சொன்னதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கறேன்…..

ம்ம்ம்….. பாத்துக்குறேன்…… சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு…..

     எனக்கு தெரியாம மறைச்சு எதுவும் செஞ்சா  எனக்கு பயங்கரமா  கோபம் வரும் இப்பவே சொல்லி விட்டேன்…. என்ன நடந்தாலும் மறைக்காத….. எதையும் என்  பெர்மிஷன் இல்லாம  செய்து விடாதே…. இருக்கிற கோபத்துல கூட கொஞ்சம் கோபத்தை ஏத்தி விட்டுறாதே…. புரியுதா….

        ம்ம்ம்…. என் மேல நம்பிக்கை இல்லை ன்னா…. ஏன் மறுபடியும் சொல்லுறீங்க….

       சற்று நேரம் அவனிடம் பதில் இல்லாமல் போனது…..

       சில விஷயங்கள் மறக்கமுடியலை…. அதனால் தான் இந்த பிரச்சனை…. இப்ப எல்லாம் அடிக்கடி தோணுது…. கல்யாணத்திற்கு சம்மதிச்சது தப்போ ன்னு….

      அவளுக்கு மனதில் அடிவாங்கியது போல இருந்தது…. அவள் கண்ணீர் இருட்டில் அவனுக்கு தெரியாமல் போனது….

     உனக்கு என்ன தோணுது….. என்றான் இவள் அமைதியை தொடர்ந்து….

      இப்போதும் அவள் பதில் எதுவும் சொல்லாமல்….. மனதிற்குள் மட்டும் உன்னை அடி பின்னி எடுக்கணும் ன்னு தோணுது…. என்று நினைத்துக் கொண்டாள்…..

        என்ன பதிலே இல்லை……

        நான் என்ன சொல்லணும் என்று எதிர்ப்பார்க்குறீங்க…..

       உன் மனசுல என்ன நினைக்க ன்னு …. எனக்கு எப்படி தெரியும்….

        ஒரு பெரும் மூச்சுடன்  அமைதியாக இருக்கவும்….

        அவனும் எதுவும் பேசவில்லை…..

        அவளோ மனதிற்குள்….. மற்ற நேரம்  நான் நினைக்காதது எல்லாம் கற்பனை பண்ணுறது…. இப்ப கற்பனை செய்ய யோசிக்க வேண்டியது…. சரியான ஆளு தான்…. என்ற நினைப்போடு அமைதியாக இருந்து விட்டாள்…

       சரி….. உனக்கு எதுவும் சொல்லணுமா….

       டேக்  கேர்…. என்ற ஒற்றை வார்த்தையில் பேச்சை முடித்துக் கொண்டாள்….

        நீ ரூமுக்கு போ…. நான் கீழே போய்ட்டு வர்றேன்…. என்றவன் எழுந்து கீழே போகவும்…

         சற்று நேரம் அமைதியாக இருளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்….பின்பு எழுந்து  அறைக்குள் செல்லவும்…

அவன் இல்லாத அறை அவளுக்கு வெறுமையை காட்டியது….. நாளையில் இருந்து இந்த வெறுமையோடு தான் வாழ்க்கை என்று நினைக்கும் போதே ஏனோ ஒரு பயபந்து அவளை அழுத்தியது…

         பெங்களூரில் தனியே வேலை பார்த்தவள் தான்… குடும்பத்தையே ஒதுக்கி இருந்தவள் தான்…. அப்போது எல்லாம் தோன்றாத வெறுமை…. இப்போது தோன்றியது…. மனதிற்குள் காதல் புகுந்த பின் மனம் அவனிடம் என்ன எதிர் பார்க்கிறது என்று தெரியவில்லை…. திருமணத்திற்கு முன் எது நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தவள் தான்….இப்போது ஏன் இந்த தவிப்பு என்று யோசித்தாள்……

         அவனோ கீழே சென்றவுடன்…..

         ஏன்டா…. கீழே வந்துட்ட… நாளைக்கு கிளம்பணும்…. அந்த பொண்ணு பாவம் டா…. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்க வேண்டியது தானே…..

       என்னம்மா…. நீங்க… அது தான் தினமும் போன்ல பேசுவேனே…. அப்புறம் என்ன ம்மா…. நினைச்சா வீடியோ கால் போட்டு பார்த்துக்கலாம்…. அம்மா…. நான் உங்க கிட்ட பேசணும்…. அதுக்காக தான் வந்தேன்…

            நீங்க பார்த்துப்பீங்க ன்னு தெரியும் மா…. இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை…..

          என்னடா… ரொம்ப யோசிக்க… என்று அவனுடைய அப்பா கேட்கவும்…..

        இல்லப்பா…. நர்மதா மேரேஜ் ஆன  பிறகு தான்… நான் நந்தினிய யூ. எஸ் கூட்டிட்டு போவேன்…..

         ஏடா….. அந்த பொண்ணு க்கு இது தெரிஞ்சா…. நர்மதா மேல ஒரு கோபம் தான் வரும்…..

       ஏம்மா…. இவ்வளவு யோசிக்கீங்க…. அவளுக்கு நான் முதல் நாளே சொல்லிட்டேன்……

        என்னடா…. சொல்லுற… அந்த பொண்ணு ஒன்னும் சொல்லலையா…..

        ஒன்னுமே சொல்லலை…. அம்மா.. கொஞ்சம் ப்ரண்ட்லியா. இருந்துக்கோங்க….பிரச்சனை எதுவும் வராம பார்த்துக்கோங்க…

       இது எல்லாம் நீ சொல்லணுமா டா…. நான் பார்த்துக்குவேன்….

       நர்மதா போட்டியா நினைச்சிறக் கூடாது… அதுவும் பயமா இருக்கு மா…

        இங்க பாருடா… நம்ம வீட்ல கூட ஒரு பிள்ளை இருந்தா எப்படி பார்ப்போமோ… அப்படி பார்த்துக்கிறோம்…. நீ ரொம்ப யோசிக்காத…. புரியுதா…..

        இங்க பாரு…. அம்மா சொல்லுறத தான்… நானும் சொல்லுறேன்…. கவலை படாம போயிட்டு வா…..

       சரி…. ப்பா…. என்றபடி கொஞ்ச நேரம் அமர்ந்து அவர்களோடு பேசிவிட்டு மேலே அறைக்கு செல்லும் போது…. அவள் அமைதியாக அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருந்தாள்…. இவனை  பார்த்ததும் முடி வைத்து விட்டு அமர்ந்தாள்…

       ஆனால் அவனோ வேறு ஏதேனும் பேசுவாள் என்று எதிர்பார்த்தான்…. அவள்  அமைதியாக இருக்கவும் அவனும்  பேசவில்லை….  அவனுக்கோ இவளை இங்கு விட்டுச் செல்கிறோம் ஏதேனும் பிரச்சினை வந்துவிடக் கூடாது குடும்பம் அமைதியாக செல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருந்தது….

அவளுக்கு சற்று முன் அவன் சொன்ன வார்த்தைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது…. கல்யாணம் பண்ணியதை  பற்றி அவன் சொன்னது பற்றி யோசித்துக்கொண்டு இருந்தாள்….

      அன்றைய இரவு இருவருக்குமே உறக்கமில்லா இரவாகவே கழிந்தது….. இருவரும் யோசனையிலேயே பலவித நினைவுகளை புரட்டிக்கொண்டே உறக்கமின்றி இருந்தனர்……

“நாட்குறிப்பாய் நினைவுகள்

நாளும் அதில் உன் கனவுகள்

குறிப்பேடும் தீரவில்லை

கனவுகளும் குறையவில்லை

கோபமா காதலா

என்றே தெரியாமல்

உன் நினைவுகளை மட்டும்

சேகரித்துக் கொண்டிருந்த

என் மனதிற்கு தெரியுமா …..

தெரிந்தாலும் புரியுமா

நீ என்னை வெறுக்கிறாய் என்று….”   

    விடிந்ததில் இருந்து அவன் கிளம்புவதற்கான ஆயுதங்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது… அவள் முகம் வாடி இருப்பது தெரிந்தாலும் அவனும் எதுவும் பேசவில்லை….  அவளும் எதுவும் பேசவில்லை….

     அவளோ செலவழித்த வார்த்தைகளை யோசித்துக் கொண்டிருக்க….  அவனோ சேகரித்த வார்த்தைகளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க….. வார்த்தைகளின் சாடலால் இருவர் உள்ளமும் ரணப்பட்டு…..  புரியாத புதிராய் இந்த வாழ்க்கை தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமலேயே அமைதி காத்தனர்……

       ஊருக்கு கிளம்பும் நாள் என்பதால் உறவினர்கள் வந்து சென்று கொண்டிருக்க நந்தினியின் வீட்டில் இருந்தும் அனைவரும் வந்து விட்டுச் சென்றனர்….  நண்பர்கள் அனைவரும் அங்குதான் இருந்தனர்….

     டேய் என்ன ஆச்சு டா நீயும் டல்லா இருக்க….  அந்த பொண்ணும் டல்லா இருக்கு….. எதுவும் பிரச்சனையா…..

      சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல….

      எனக்கு பயம் தான்…. வேற ஒன்னும் இல்ல… வீட்டில் ஏதும் பிரச்சனை வந்துருமோன்னு பயமா இருக்கு…. பேமிலி ல   ஏதாவது பிரச்சினை வர தானே செய்யும் தெரிந்ததுதான்…. ஆனா நான் இல்லாத நேரத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால்…. அது வெளியே தெரிந்தா  பெரிய பிரச்சினையா கிரியேட் பண்ணிருவாங்க அது தான் பயமா இருக்கு.

      நிஜமா அதுதானா…. இல்ல  13  நாளில் விட்டுட்டு போறோமேன்னு வருத்தமா….

     அப்படி எல்லாம் ஒன்னுமில்ல…. நீ அன்னைக்கு சொன்னதிலிருந்து அவள்ட கோபமா பேசுவது கூட இல்லை….. இதுல என் மனசுக்குள்ள இருக்கிற வலியும் வேதனையும் போகமாட்டேங்குது அது எப்படி மாறும் ன்னு…. எனக்கும் புரியல… மாறினா பாக்கலாம் மாறலனா இப்படியே இருந்துட்டு போக வேண்டியது தான்….

    லூசா டா நீ இப்படி இருக்குறது தான் கல்யாணம் பண்ணினேயா…. அந்த பொண்ண நெனச்சு பாத்தியா….

      ஏன் அவளுக்கு என்ன இஷ்டம்னா இப்படியே இருக்கட்டும்…. இல்லாட்டி டைவர்ஸ்….

       டேய் உனக்கு உண்மையில் லூசு தாண்டா புடிச்சிருக்கு….  கல்யாணம் ஆகி 13வது நாள் என்ன சொல்ற பார்த்தியாடா…. இது அந்த பொண்ணு காதுல கேட்டா என்ன ஆகும்….

        என்ன ஆகும்…. சந்தோஷம் நிம்மதி ன்னு போயிருவா…. அவ்வளவுதான் பேசாம இருங்க டா…..

       நீ எப்படி இப்படிலாம் பேசுற…  உன்னால் எப்படி இப்படி யோசிக்க முடியுது….

     என்னைய தான் கல்யாணம் பண்ணிக்க போறா என்று அவளுக்கு சொல்லும்போதே பிரச்சினை சந்திக்க வேண்டியது இருக்கும் ன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்கும் தெரியாம  என்னைய கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா….

      நண்பர்களுக்குள் பேச்சின்றி பெரும் அமைதி நிலவும் நேரத்தில் கதவை மெதுவாக தட்டி கொண்டு நந்தினி அவர்களுக்கு குடிப்பதற்காக காபி  கொண்டு வந்தாள்….

         யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் காபி கொடுத்து விட்டு செல்லவும்…. இளமாறன் மிக அமைதியாக இருந்தான்….

        டேய் மாறா…. அந்த பொண்ணு கேட்டுட்டுச்சு ன்னு நினைக்கேன்…..

         மாறனுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும்…. அதெல்லாம் இருக்காது நீயா யோசிக்காதே…

         அந்தப் பொண்ணு முகமே சொல்லுச்சி. கண்டிப்பா கேட்டு இருக்கு….   சொல்றேன் ன்னு தப்பா நினைக்காத இது உன்னோட பெர்சனல்.. நாங்க தலையிடக்கூடாது தான் ஆனாலும் நாங்கள் சொல்லவேண்டியதை சொல்லி விடுறோம்…..

       நீ குழப்பத்துல இருக்க…. நல்லா யோசிச்சி நிதானமா முடிவுக்கு வா…. எனக்கு தெரிந்து இது உனக்கு கண்டிப்பா வெறுப்பு கிடையாது…. அந்த பொண்ண உனக்கு புடிச்சிருக்கு… புடிக்காமத்தான் அன்னைக்கு போட்டோக்கு போஸ் கொடுத்தீயா….

       இப்ப உன் மனசுக்குள்ள இருக்கிற விருப்பத்துக்கும் முன்னாடி இருந்த வெறுப்புக்கும் நீ முடிச்சு போட்டு வைத்துவிட்டு குழப்பிக்கிற…. அவ்வளவுதான் விஷயம்…. நல்ல தெளிவா யோசி….. சிஸ்டர் மேரேஜ் வரும்போது கூட்டிட்டு போறேன் ன்னு   உங்க அம்மாகிட்ட சொல்லி இருக்க….. ஆனா இப்போ வேற மாதிரி பேசுற….

    ஏன்டா உன்னையும் குழப்பி எல்லாரையும்  குழப்பி…..  தெளிவான முடிவெடு அவசரமே இல்லை….. நிதானமா யோசிச்சு முடிவெடு தினமும் போனில் பேசும் போது உனக்கு கோவம் வந்தால் திட்டிக்கோ….. மனசுக்குள்ளேயே இந்த கோபத்தை வைத்து யோசிக்காதே…..  ஆழ்மனசு ங்கிறது ரொம்ப மோசமான ஆள்….   மனதில் பதிந்த விஷயங்கள் வந்து எப்போதும் எந்திரிச்சி வெளியே வரும்….  எப்போ எந்த மாதிரி ரியாக்ட் பண்ணும் ன்னு…. யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்…. மனநல மருத்துவர்களாலேயே கண்டு பிடிக்க முடியாத ஒரு விஷயம்…. அதனால  ஆழ்மனசுல எதையும் போட்டு வைக்காதே….

       அவன் அமைதியாக இருக்கவும்….

        இப்பக் கிளம்பற வேலைய மட்டும் பாரு…  இப்ப இதப்பற்றி யோசிக்காத…  நீ அங்க போனதுக்கப்புறம் தெளிவா யோசிச்சி முடிவு பண்ணு புரியுதா…..

      இன்னொரு நண்பனோ….. நாம தான் தப்பு பண்ணிட்டோம்…. இவன் கல்யாணம் பேசி முடிச்ச உடனே…. இவன் கிட்ட பேசி இருக்கணும்  நாம…

         பேசாம இருடா அவன் யோசிப்பான்…. நாம் அவனை குழப்பக் கூடாது….. இப்ப கிளம்பற வேலையை மட்டும் பார்….

           “எந்த ஒரு வார்த்தையை நாம் திரும்பத் திரும்ப கூறுகிறோமோ அந்த வார்த்தை மந்திரத்திற்கு சமமான சக்தியை பெற்று விடுகிறது… எதற்காக அந்த வார்த்தையை கூறுகிறோமோ அதை அவ்வார்த்தை நிறைவேற்றியே தீரும் “

Advertisement