Advertisement

கைப்பாவை இவளோ 03

                        லண்டன் செல்வதற்கான ஆயத்தங்களில் வெகு தீவிரமாக இறங்கியிருந்தாள் சாஷா. அவள் மருத்துவமனைக்கு சென்று வந்து இரண்டு நாட்கள் கடந்திருக்க, அன்று இரவு அவளை அழைத்தார் மருத்துவர் மீனலோசனி. எப்போதுமே அவர்மீது பயம் கலந்த மரியாதை உண்டு சாஷாவுக்கு. ஆனால், அவருக்கு தன்னைப் பிடிக்காது என்பது அவர் நடவடிக்கைகளில் தெரிந்து போக, அவரிடம் இருந்து எட்டியே இருப்பாள் எப்போதும்.

                   ஆனால், அவள் மருத்துவத்தேவைகளுக்கு அவள் வேறெங்கும் செல்ல முடியாதே. வேறு மருத்துவமனைகளில் அவளின் ரகசியம் காக்கப்படுமா என்பது கேள்விக்குறி அல்லவா. அதோடு, நடிகை கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உபயோகிப்பது செய்தியானால் அவளின் நிலை. இதை யோசித்தே பீஷ்மனை மறுக்காமல் அவனுடைய மருத்துமனைக்கே செல்ல பழகி இருந்தாள் சாஷா.

                    அன்று அதே மருத்துவமனைக்கு சென்றதும் கூட பழக்கதோஷத்தில் தான். மீனலோசனி தன் கர்ப்பத்தை உறுதி செய்தபோதும் கூட, அவர் பார்வைக்கு அஞ்சித்தானே அவள் ஓடி வந்தது. ஆனால், அவரே  அழைக்கவும், “என்னவோ ..” என்று பயந்து கொண்டே தான் அழைப்பை ஏற்றாள் அவள்.

                      ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, “எப்படி இருக்க சாஷா..” என்றார் மீனலோசனி.

                      அவர் கேள்வி ஒரு விரக்திபுன்னகையை வரவழைக்க, “ம்ம் இருக்கேன் டாக்டர்.. சொல்லுங்க..” என்றாள் சாஷா.

                    “என்ன முடிவு பண்ணி இருக்க.. எப்போ ஹாஸ்பிடலுக்கு வர்ற..” என்று அவர் விசாரிக்க 

                     “ஹாஸ்பிடல்.. நான் எதுக்காக ஹாஸ்பிடல் வரணும் டாக்டர்எனக்கு ஒண்ணுமில்லையே..” என்று அவள் திக்கி திணற 

                     “எதுக்காக வரணும்ன்னு கேட்டா, என்ன சொல்றது நான்உனக்கு தெரியாதா.. பீஷ்மன் மதியமே என்னை அழைச்சு பேசிட்டார்..” என்றார் அவர்.

                    பீஷ்மனின் பெயரைக் கேட்டவளுக்கு இன்னும் பதட்டம் கூடிப்போக, “என்ன.. என்ன சொல்றிங்க டாக்டர்…” என்றவளுக்கு மூச்சே நின்றுவிடும் நிலை.

                      “ஏன் இவ்வளவு பதட்டம் சாஷா.. நீ வழக்கமா பில்ஸ் எடுக்கறவ தானே. இப்போ ஏதோ தெரியாம தங்கிடுச்சு.. அதுக்காக பெத்துக்கவா முடியும். நாளைக்கு மதியம் டைம் பிக்ஸ் பண்ணிடறேன்ஹாஸ்பிடல் வந்திடு..” என்றார் மீனலோசனி.

                      “நோ டாக்டர்.. என்னஎன்ன நினைக்கறீங்க நீங்க. நான் ஏன் அபார்ஷன் பண்ணனும். என்னால முடியாது. எனக்கு என் குழந்தை வேணும்.. நிச்சயமா என்னால என் குழந்தையை அழிக்க முடியாது..” என்று தன்னை மீறி கத்த தொடங்கினாள் சாஷா.

                      மீனலோசனி அவள் கதறலைக் கேட்டு கொஞ்சமும் அதிராமல்அப்போ பீஷ்மன் கிட்ட சொல்லிடவா.. சாஷா உன் பிள்ளையை பெத்துக்க போறாளாம் ன்னு.. ” என்று இடியை இறக்கினார் மீண்டும்.

                      “ஏன் டாக்டர் என்னை இப்படி சித்ரவதை பண்றிங்க.. நான் என்ன பாவம் செஞ்சேன் உங்களுக்கு. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..” என்று சாஷா இறுதியில் அழுதுவிட

                        “நீ சுமக்கிறது பீஷ்மனோட பிள்ளையை சாஷா. அந்த குழந்தை இருக்கணுமா வேண்டாமா ன்னு பீஷ்மன் தான் முடிவு பண்ணுவான் இல்லையா. அதோட, நீயும் பீஷ்மனோட எந்த முடிவுக்கும் மறுப்பு சொல்லமாட்டியே.. இப்போ மட்டும் என்னாச்சு உனக்கு..”

                      “டாக்டர் ப்ளீஸ்.. ஆமா.. நான் பீஷ்மனோட கீப்தான்.. பீஷ்மனோட விருப்பத்துக்கு ஆடின பொம்மைதான் நான்.. இதுல என்னைத்தவிர யாருக்கும் இழப்பு இல்லையே.. அப்போ உங்களுக்கு என்ன சங்கடம் இதுல.. ஏன் இப்படி வார்த்தைகளால என்னை குத்தி கிழிக்கறிங்க..” 

                   “நான் பேசினதே இத்தனை வலிக்குதா உனக்கு. அதுதான் நீயே சொல்லிட்டியே.. பீஷ்மனோட கீப் ன்னு.. அதைவிட என்ன வேணும். பீஷ்மனோடு குழந்தை உனக்கு பிறந்தால், அவனை இந்த சமுதாயம் எப்படி பார்க்கும். ஏன் பிறக்காத ஒரு பிள்ளையோட வாழ்க்கையை அழிக்க நினைக்கிற சாஷா..” 

                 “எனக்குள்ள இருபிப்பது பீஷ்மனோட குழந்தைன்னு உங்களுக்கு யார் சொன்னது.” என்று சட்டென அவரை அதிர வைத்தாள் சாஷா.

                  அவளேஅதுதான் நீங்க அக்செப்ட் பண்ணிட்டிங்களே.. கீப் ன்னு.. ஏன் நான் பீஷ்மனுக்கு மட்டும்தான் கீப்பா இருந்திருப்பேனா.. பணத்துக்காக உடம்பை காட்டுறவ தானே.அதே உடம்பை ஏன் நான் பணத்துக்காக வித்திருக்க கூடாது. உங்க பார்வையில நான் அதை செய்றவளும் கூடவேறென்ன பிரச்சனை..” 

                   “இந்த சமுதாயத்தைப் பற்றியா.. நான் யாருமே இல்லாம தவிச்சப்போ இந்த சமூகம் நான் இருக்கேன் ன்னு எனக்காக நிற்கலையே.. என்னை எப்படி கொத்தி தின்னலாம் ன்னு தான் திட்டம் போட்டுச்சு. போங்க டாக்டர் நீங்க…”

                   “அறுபது வயசு கிழவனுக்கு பதினெட்டு வயசுல முன்னாடி நின்ன சாகித்யாவை பிடிச்சு இருந்தது.. போட்டோ ஷூட் ன்னு பேர் வச்சுட்டா, அவன் என்ன வேணா செய்யலாம் ன்னு நினைப்பு. எங்கெங்கே தொட்டான் தெரியுமா.. எப்படி கையை வச்சான் தெரியுமாஏதாவது தெரியுமா உங்களுக்கு..” 

                     “அன்னைக்கு என்னை காப்பாற்றியது பீம்தான்.. எவனோ சாப்பிட நினைச்ச என் உடம்பை நானே அவனுக்கு கொடுத்தேன்.. இதுல என்ன தப்பு கண்டீங்க நீங்க.. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் கொடுத்தது விலை. என் உடம்பை வேற யாரும் நெருங்காம இருக்க,. என்னையே விலையா கொடுத்தேன் நான்.. எனக்கு அது தப்பா தெரியல..” என்று உணர்ச்சிபூர்வமாக சாஷா பேசி முடிக்க 

                      “விலையை கொடுத்துட்டு அதற்குப்பதிலாக பீஷ்மனோட சொத்து மொத்தத்தையும் வளைக்க திட்டம் போட்டுட்டியே.. பரவாயில்ல.. நல்ல முதலீடு..” என்று மீண்டும் அவளை தளரச் செய்தார் மீனலோசனி.

                  “நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க டாக்டர். என்னோட சொத்து மதிப்புக்கே என் மகன் ராஜாவா வாழ்வான்.. எனக்கு யாரோட சொத்தும் தேவையில்லை. அதுக்கும்மேல நான்தான் என் மகன் பீஷ்மனோட பிள்ளையே இல்லை ன்னு சொல்லிட்டேனே.. இன்னும் என்ன..”

                  “நானும் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் டாக்டர். நீங்களே உங்க பாஸ்கிட்ட சொல்லிடுங்க. நான் சுமக்கிறது பீஷ்மனோட பிள்ளை இல்ல.. இவன் என் குழந்தைஎன்னோட மகன்..” என்று அவள் உச்சபட்சமாக சத்தமிட 

                   “அம்மா நீ.. அப்பாவுக்கு யாரை கைகாட்டலாம் ன்னு இருக்க..” என்று மீனலோசனி வருத்த 

                  “அவசியம் ஏற்பட்டால் அப்பாவையும் கைகாட்டுவேன் டாக்டர். அதற்கும் நான் தயாரா இருக்கேன்.” என்று சாஷா பதில்கூற, என்றுமில்லாத உறுதி அவள் குரலில்.

                   “அப்போ நீ சொன்னதாகவே நான் பீஷ்மன்கிட்ட சொல்லிடறேன்..” “என்று அழைப்பைத் துண்டித்தார் மீனலோச்சனி.

                     அவரிடம்  அந்த நேர கொதிப்பில் ஏதோ பேசிவிட்டாள் தான். ஆனால், அடுத்தகணமே மனம் அடுத்து என்னவோ என்று துடிக்க தொடங்கியது சாஷாவுக்கு. என்ன செய்வானோ?? என்ன செய்வானோ?? என்று பதைப்பிலேயே அவள் அன்றைய இரவை உறங்காமல் கழித்து காத்திருக்க, அடுத்தநாள் காலையில் வந்து நின்றது மீனலோசனி.

                    அவரைப் பார்த்தவள் தானாகவே எழுந்து நிற்க, அவளை பார்வையால் அளந்து கொண்டே வீட்டிற்குள் வந்தார் மீனலோசனி. சாஷாஇப்போது என்ன பேசப் போகிறாரோ…” என்று வேதனையை தாங்கிக் கொள்ள தன்னை தயார் செய்து கொண்டு நிற்க, அவள் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தார் அவர்.

                     சாஷா சிலையாக நிற்க, மீனலோசனி தொடங்கி வைத்தார். “பெத்துக்கறதா முடிவு பண்ணிட்ட. ஆஸ் டாக்டர், என்னோட கடமையை செஞ்சுடறேன்..” என்று அவர் கூற 

                     அப்போதுதான் உயிர் வந்தது சஷாவுக்கு. அவர் பேசியது ஏதும் அவள் கவனத்தில் விழாமல் போக, கடமை என்றது மட்டுமே முன்னால் நின்றது.

                      “எது கடமை டாக்டர்.. உங்க விசுவாசத்துக்கு என் பிள்ளையை பலி கொடுக்கப்போறதா. உங்களை ரொம்ப நல்லவங்க ன்னு சொல்றாங்களே எல்லாரும். எனக்கு மட்டும் ஏன் கெடுதல் நினைக்கறீங்க..” என்று அவள் இயலாமையில் கண்ணீர் விட 

                      “ஏன் கெடுதல் ன்னு நினைக்கணும். உனக்கு இது நல்லதா கூட இருக்கலாம் இல்லையா..” 

                   “ஹ்ம்ம்.. எனக்கு நல்லதா.. எங்கே உங்க முதலாளி. வர்றேன்னு சொல்லி இருக்காரா.. இல்லை கலைச்சுட்டு கால் பண்ணுங்க ன்னு முடிச்சுட்டாரா..” 

                   “ஏன் இன்னமும் உனக்கு மயக்கம் தீரலையா.. இப்பவும் உன் பீமை தேடறியா.” என்று மீனலோசனி அவள் கண்களை பார்க்க, தன்னை அவர் கண்டுகொண்டதில் இன்னும் அவமானமாக இருந்தது சாஷாவுக்கு.

                   அங்கிருந்த சோஃபாவில் பட்டென அமர்ந்தவள் தளர்ந்து போனாள் மொத்தமாக. அவள் கண்களை இறுக மூடிக் கொள்ள, மூடிய விழிகளில் வழிந்த மௌனக்கண்ணீர் அவள் சஞ்சலங்களின் ஆதாரமாக நின்றது. “உன்னையும் என்னால் காக்க முடியாமல் போனதே..” என்ற நினைப்பு அவளின் மிகப்பெரிய தோல்வியாக தெரிந்தது அந்த நிமிடம்.

                 “அம்மா உன்னை விடமாட்டேன் செல்லம்.. அம்மா உன்கூட உனக்கு துணையாகவே வந்திடுவேன். ஒருநாள் பொறுத்துக்கோ.. இவங்க போகட்டும்அம்மா வருவேன் உன்னோட..” என்று தன் பிள்ளையிடம் மானசீகமாக பேசிக் கொண்டவள் எதற்கும் தயாராக நின்றாள்.

                    அவள் கண்களில் வழிந்த கண்ணீர் மீனலோசனியை உருகச் செய்ய, மெல்ல தன் கையால் அவள் தலையை தொட்டார் அவர். அவர் தொடுகையில் கண்களைத் திறந்தவள் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு சத்தமாக வெடித்து அழ, அவளை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டார் மீனலோசனி.

                    அவர் செய்கையில் இன்னும் அழுகை வர, விம்மலும், தேம்பலுமாக பத்து நிமிடங்கள் கதறி தீர்த்தாள் அவள். மீனலோசனி அவள் முதுகை வருடியபடியே நின்றவர்நீ இப்படி அழுதுட்டே இருந்தால், உன் பிள்ளையும் அழுமூஞ்சியா தான் வருவான். உனக்கு அழுமூஞ்சி பீஷ்மன் தான் வேணுமா…” என்றார் அவளை தேற்றும் பொருட்டு.

                     அதில் சட்டென கலைந்தவள், அழுகையை நிறுத்தி அவரைப் பார்க்க, அவளை அப்படியே அள்ளிக் கொள்ள தோன்றியது மீனலோசனிக்கு. அழுது சிவந்திருந்த அவள் கன்னங்களை துடைத்து விட்டவர் அவள் தலையையும் சரி செய்து விட்டார்.

                      சாஷா இன்னும் சற்று அச்சத்துடனே அவரை ஏறிட, “உன் விஷயம் பீஷ்மனுக்கு இன்னும் தெரியாது. என் வழியா தெரியவும் வராது.. கவலைப்படாத..” என்று மென்மையாக சிரித்தார் அவர்.

                    சாஷா கண்களில் மீண்டும் கண்ணீர் வழிய, கையை கூப்பி விட்டாள். அவள் கைகளை தன் ஒரு கையால் பற்றிக் கொண்டாலும், “நிச்சயமா பீஷ்மனுக்கு தெரியவரும் சாகித்யா. அவன் அத்தனை சீக்கிரம் உன்னை விடமாட்டான்.” என்று எச்சரித்தார் மீனலோச்சனி.

                  “ரெண்டுநாள் போதும் டாக்டர் எனக்கு. நான் இங்கிருந்து மொத்தமா கிளம்பிடுவேன்.” 

                  “பீஷ்மனை ஏமாற்றி நீ அப்படியெல்லாம் போயிட முடியாது.அதற்கு அவன் விடவும் மாட்டான்.. தைரியமா உன்னோட சவால்களை எதிர்கொள்ள பழகிக்கோ. பயந்து ஓட நினைக்காத..” என்று அவர் அறிவுறுத்த, மெல்ல தலையசைத்துக் கொண்டாள் அப்போதைக்கு.

                    அவளுக்கான கர்ப்பகால அறிவுரைகள், எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் என்று அனைத்தையும் தானே ஏற்பாடு செய்து கொடுத்தார் மீனலோச்சனி. “எனத நேரத்திலும் எனக்கு அழைக்கலாம்.. யோசிக்க வேண்டாம்..” என்று தைரியம் சொல்லி அவர் புறப்பட, தன் முடிவில் இன்னும் ஸ்திரமானாள் சாஷா.

                  தன் அலைபேசியில் இருந்த சித்தார்த் வர்மாவின் எண்ணுக்கு அழைத்தவள் அப்போதே தன் நிலை குறித்து அவனிடம் தெரிவித்தாள். அவன் வாய்க்கு வந்தபடி கத்தி தீர்க்க, அத்தனையும் எந்தவித முகச்சுழிப்பும் இல்லாமல் கேட்டு நின்றாள் சாஷா.

                  அவன் பேசி முடித்து ஓய, “நான் என்னோட முடிவுல உறுதியா இருக்கேன் சித்து. உன்கிட்ட உதவி கேட்டது கூட, நீ என்னோட நல்ல பிரெண்ட் ன்ற எண்ணத்தில் தான். முடிஞ்சா நான் கேட்டதை செய். ப்ளீஸ்..” என்றாள் சாஷா.

                  அடுத்த மூன்றுமணி நேரத்தில் அவளுக்கான பயணசீட்டு அவள் கையில் இருந்தது. அவள் கிளம்பும் அதே விமானத்தில் மணிக்கும் பயணசீட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

                மெல்ல இரண்டு நாட்களின் நிகழ்வை அசைபோட்டுக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, மணி வந்து நின்றான்.

                “கூப்பிட்டீங்களா..” என்று அவன் நிற்க

                 “நாளைக்கு மார்னிங் ஏழு மணிக்கு பிளைட். உன் பொருளெல்லாம் எடுத்து வச்சுக்கோ..” என்று அவனை அனுப்பிவிட்டாள்.

                  அவள் ஊருக்கு செல்வதற்காக தன் பயணப்பெட்டியை தயார் செய்து கொண்டிருக்க, ஒவ்வொன்றிலும் அவன் நினைவு. இதை உடுத்தியிருந்தபோது என்ன சொன்னான்? இதை எங்கே வாங்கினோம்? இது எப்போது பரிசளித்தான்?? இதை எங்கிருந்து வாங்கி வந்திருந்தான் ?? என்று அத்தனை கேள்விபதில்கள் அவளிடம்.

                   பீஷ்மனை தவிர்த்து எதுவுமே இல்லை அவள் வாழ்க்கையில். பெற்ற அன்னையை பிரியப் போகிறோம் என்பதோ, உடன்பிறந்தவனை பிரியப்போகிறோம் என்பதோ கொஞ்சமும் பாதிக்கவில்லை அவளை. அவள் ஒவ்வொரு அணுவும் பீஷ்மனின் பெயரைச் சொல்லியே கத்திக்  கொண்டிருக்க, உறக்கமில்லாத இரவுதான் அன்றும்.

                   அடுத்தநாள் காலையில் எழுந்து கொண்டவள் சரியான நேரத்திற்கு தயாராகி விட்டாள். தன் பொருட்களை எடுத்து வைத்து அவள் காத்திருக்க, மணி அவள் அறைக்கதவை தட்டினான். அவள் அழைக்கவும் உள்ளே வந்தவன் அவளது பெட்டிகளை காரில் ஏற்றினான்.

                   இன்னும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்ப, அவர்கள் விமான நிலையத்தை அடையும் நேரம் மெல்ல விடியத் தொடங்கி இருந்தது. எந்த சலனமும் இல்லாதவளாக முகத்தை மூடி மறைத்துக் கொண்டு அவள் விமான நிலையத்திற்குள் நுழைய, அங்கே அவளுக்காக காத்திருந்தான் சித்தார்த்.

                 அவனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை சாஷா. அவனும் தலையில் தொப்பி அணிந்து, முகக்கவசம் கொண்டு முழுதாகவே முகத்தை மறைத்திருந்தான். சாஷாவைக் காணவும், அவளை நெருங்கியவன் லேசாக அவளை அணைத்து விடுவிக்க, அமைதியாக நின்றாள் சாஷா

                 “அதான் கிளம்பிட்டியேஇன்னும் என்ன.. சந்தோஷமா சிரிச்சிட்டே இரு. நான் சீக்கிரமே அங்கே வந்து உன்னைப் பார்க்கிறேன் சாஷா. நீ எதற்கும் கவலைப்படாத. இனி சுதந்திரமா இருக்கலாம் நீ..” என்று அவன் பேசிக் கொண்டே போக, மணிக்கு பற்றி எரிந்தது.

                  “இவனை யார் உள்ளே வரச்சொன்னது..” என்று முனகிக் கொண்டே அருகில் நின்றான் அவன். சாஷா சித்துக்கு பதில் எதுவும் கொடுக்காமல் இருந்தாலும், அவள் புன்னகை போதுமாக இருந்தது சித்துவுக்கு. அதே சிரித்த முகத்துடன் அவன் சாஷாவுக்கு விடை கொடுக்க, திரும்பி நடந்தவளின் கையை அழுத்தமாக பற்றியது ஒரு கரம்.

                    அந்த தொடுகையை உணர்ந்த கணம் எப்போதும் போலவே சாஷாவின் உடலில் சில மின்னலைகள் ஓடி மறைய, இந்த முறை பாதுகாப்பு உணர்வுக்கு பதிலாக பயம் ஆட்கொண்டது அவளை. மொத்தமும் கலங்கிப் போனவளாக அவள் திரும்ப, அழுத்தமாக நின்றிருந்தான் பீஷ்மன்.

                    அவளைப் போல எந்த கவசமும் இல்லாமல், “யார் பார்த்தால் எனக்கென்ன..” என்ற அதே அவனின் அலட்டாத  பாவனைதான்.

                சாஷா மெல்லிய நடுக்கத்துடன் திரும்பிப் பார்க்க, அவன் கண்களில் இருந்தது என்னவென படிக்க முடியாமல் முதல் முறை தோற்று நின்றாள் அவள். அவன் பார்வைக்கான அர்த்தம் நிச்சயம் அவளுக்கு விளங்கவே இல்லை

                அவள் தடுமாறி நின்ற சில நொடிகளை பயன்படுத்திக் கொண்டவன் அவளை இழுத்து தன் அணைப்பில் நிறுத்திக் கொள்ள, சித்தார்த் அவர்களை நெருங்கினான்.

                 “நீ பண்றது சரியில்ல பீஷ்மன்.. மரியாதையா விட்டுடு அவளை. இனி அவ உனக்கு அடிமையா இருக்கமாட்டா..” என்று தன் நிலை மறந்து பீஷ்மனை எச்சரித்தான் அவன்.

                பீஷ்மன் அவனை பொசுக்கிவிடுபவன் போல் முறைத்து, “ஏன் விடணும் இவளை. நான் விட்டுட்டா, உனக்கு ஓகே சொல்றதா எதுவும் சொல்லி இருந்தாளா…?? வாய்ப்பில்லையே..” என்று நக்கலாக கேட்க, அவன் பார்வை கர்வத்துடன் எரித்தது சித்துவை.

                 “இது தப்பு பீஷ்மன். அவளை பத்தி யோசிக்கவே மாட்டியா நீ.. மனுஷன் தானே நீ.” என்று சித்தார்த் மேலும் பேச 

                   “உன் லிமிட்டை தாண்டி பேசிட்டு இருக்க சித்தார்த்.. இவ விஷயத்துல நீ இதுவரைக்கும் பண்ணதே அதிகம். இனி ஒருவார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது. கிளம்புடா..” என்று பீஷ்மன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கர்ஜிக்க, இப்போது வெளிப்படையாக நடுங்கினாள் சாஷா.

                 இத்தனைக்கும் இன்னும் அவள் கரம் பீஷ்மனிடம் தான் இருந்தது. அவள் நடுக்கத்தில் சித்தார்த்தை மறந்தவனாக பீஷ்மன் சாஷாவிடம் திரும்ப, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

                  அவள் சரியில்லை என்பது பீஷ்மனுக்கு புரிய, அவன் அவளை முழுதாகப் பிடிக்கும் முன்பே மயங்கி சரிந்தாள் அவள். அவள் கீழே விழாதவாறு சமாளித்து பிடித்தவன் அப்படியே அவளை ஏந்திக் கொண்டான் தன் கைகளில்.

                   சித்தார்த் பீஷ்மனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளில் எதுவும் பேசாமல் அமைதியாக, சாஷாவைக் கைகளில் ஏந்தியிருந்த  பீஷ்மனின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.

 

 

                      

Advertisement