Advertisement

கேளாய் பூ மனமே 9

அப்படி ஒரு கனமான அமைதி அங்கு. தாரணி, ஜீவிதா தவிர மற்ற எல்லோரும் யுவராஜ் வீட்டு ஹாலில் கூடியிருந்தனர். எல்லோரும் அடுத்து என்ன கேள்வியுடன், கலக்கத்துடன் ஒருவரை  ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்

அருணாச்சலம் சங்கடத்துடன் தயாநிதியை  பார்த்திருக்க, தயாநிதி முகத்தில் கோவம் வெளிப்படையாக தெரிந்தது. இத்தனை வருடங்களில் மாமியார் வீட்டில் இப்படி ஒரு முகத்தை அவர் காட்டியதே இல்லை. இன்று எல்லோரையும் ஒரு வழி செய்யும் கோவம் அவரிடம்

முக்கியமாக மருமகன் மேல் உச்சக்கட்டத்தில் இருந்தார். அவர் கண்கள் ஸ்க்ரீனில் தெரிந்த மருமகனை நேரே பார்க்கவும் செய்தது. யுவராஜ் UK சென்று இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஆகாஷ் மொபைலில்  யுவராஜ் எல்லோரும் பார்க்கும்படி டேபிளில் வைக்கப்பட்டிருக்க, அவன் கண்களும் தயங்காமல் மாமனார் பார்வையை தாங்கி  நின்றது

அதுவே இன்னும் தயாநிதியை கொதிக்க வைக்க, “இது தான் உங்க முடிவா..?” என்றார் அவனிடம்

யுவராஜ் மனைவியை பார்த்தான். ஜெயலக்ஷ்மி அருகில் அமர்ந்திருந்தவள் கணவனின் பார்வையை எதிர்கொள்ளவே இல்லை. அவள் அவன் முகம் பார்த்தே இரண்டு வாரம் ஆகிவிட்டது

அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் மாமா..” என்றான் யுவராஜ் அவளை பார்த்தே

என் பொண்ணு ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சிருக்கா யுவராஜ்.. அதுவும் குழந்தை பிறந்தும்  நைட் பகல் பார்க்காம உழைச்சிருக்கா, இப்போ வந்து முடியாது சொன்னா எப்படி விட..?” தயாநிதி கேட்டார்

விஷயம் என்னன்னு நான் முழுசா சொல்லிட்டேன் மாமா..” யுவராஜ் சொல்ல

என்கிட்ட மட்டும் பணம் கொட்டி கிடந்தா என் பொண்ணை டாக்டருக்கு படிக்க வைச்சேன்..?” தயாநிதி மாமனாரை பார்த்து கேட்டார்

நானும் லாபத்துக்கும்நஷ்டத்துக்கும் இடையில தவிக்கிற விவசாயி தான், என்கிட்ட இருக்கிற ஹார்டுவேர் கடை வச்சு,  கடன் வாங்கி கூட என் பொண்ணை நான் டாக்டருக்கு படிக்க வைக்கலை, உங்களுக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிறீங்க, இப்போ கூட வெளிநாட்டுல போய் உட்காந்திருக்கீங்க, நீங்களும் பணம் புரட்டி  என் பொண்ணை  MD படிக்க வைச்சா என்ன..?” தயாநிதி ஏற்கவே முடியாமல் கேட்டார்

காமாட்சி கண்கள் கெஞ்சலாக ஜெயலக்ஷ்மியை பார்த்தது. பேரனிடம் கேள்வி கேட்கும் மாப்பிள்ளை அவருக்கு கலவரத்தை கொடுத்தார். ம்ஹூம்.. ஜெயலக்ஷ்மி இந்த முறை பிறந்த வீட்டு ஆட்கள் யாரையும் பார்க்கவில்லை. அவர் மருமகன் உட்பட. கணவனுக்கு ஆதரவாக நின்றார். அவருக்கு தெரியும்  ஜமுனா டாக்டர் படிக்க கணவன் பட்ட கஷ்டம்

எத்தனை முறை கடன் வாங்கி, நகை வைச்சு மகளுக்கு சின்ன குறை கூட வைக்காம ஓடி ஓடி செஞ்சிருப்பார், ஏன் ஜமுனா எனக்கு இது வேணும்ப்பானு கேட்டா உடனே பணத்தை பிரட்டி அக்கவுண்டில் போட்டுவிடுவார். அப்படி இருக்கும் பொழுது மாமியார் வீட்டில் மகளை படிக்க வைக்க முடியாதுன்னா  கேட்காமல் இருப்பாரா..? அவருக்கு கேட்க முழு உரிமையும் இருக்கு, தகுதியும் இருக்கு..’ ஜெயலக்ஷ்மி எண்ணம் இது தான்

அதோடு அவருக்கு அண்ணன் மகன் மேல் தனிப்பட்ட கோவமும் உண்டு. குற்றச்சாட்டுடன் ஸ்க்ரீனில் தெரிந்த யுவராஜை பார்த்தார் அத்தை. அவன் இவர் பார்வையும் தயங்காமல் எதிர்கொள்ள கொஞ்சம் வெறுத்து தான் போய்விட்டார். ‘ச்சு போடா..’ வருத்தத்துடன்  முகம் திருப்பி, மகள் கையை பிடித்து கொண்டார்

அருணாச்சலம், “எனக்கு உங்க வருத்தம் புரியுது மாப்பிள்ளை, நாங்க, நான் ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்..” என்றார்

பார்க்கிறீங்களா..? நான் என் பொண்ணு படிக்கணும்ன்னு பேசிட்டு இருக்கேன் மாமா, அவளோட இத்தனை வருஷத்து ஆசையை, உழைப்பை உங்க பேரன் தூக்கி போட சொல்றது தப்பில்லை..” மாமனாரிடம்  நியாயம் கேட்டார்

தப்பு தான் மாப்பிள்ளை.. கொஞ்சம் சூழ்நிலை சரியில்லை..” அருணாச்சலம் சொல்ல

அப்படி என்ன பெரிய  சூழ்நிலை..? பணத்தை கையில வச்சுட்டு தான் வேலை நடக்குமுன்னா எந்த வேலையும் நடக்காது, உங்களுக்கு தெரியாதா இது..? நீங்களும் பேரனோட சேர்ந்து பேசிட்டு இருக்கீங்க..?” தயாநிதி பேச

ஜமுனாவோட படிக்கிற முடிவை எடுத்தது நான் என்கிட்ட பேசுங்க..” என்றான் யுவராஜ் அழுத்தமாக

சரி உங்ககிட்டேயே கேட்கிறேன், ஒரு வருஷம் அப்பறம் படிக்க வைக்கிறதை இப்போவே படிக்க வைங்க, இருக்கிற கடனோட இதுவும் சேரட்டும்..” என்றார்

என்னோட ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு, நிலம் அடமானம் இருக்கிற வரை என்னோட பண பிரச்சனையை சொல்லிட்டேன் மாமா, இந்த வருஷம் நான் நிலத்தை மீட்கலைன்னா உங்க பங்காளிக்கே போயிடுற மாதிரி அக்ரீமெண்ட் போட்டு வச்சிருக்கான், விட்டா இருபத்தைஞ்சு ஏக்கரும் காலி. என்னை என்ன பண்ண சொல்றீங்க, இன்னும் நான் தலை மேல தூக்கி போட்டுக்கிட்டா புதைஞ்சு தான் போயிடுவேன்.. இதை விடுங்க..”  என்றான் எரிச்சலாக

சரி உங்களுக்கு கஷ்டம்ன்னா விடுங்க, என் பொண்ணை நான் படிக்க வைச்சுகிறேன்..” என்றார் தயாநிதி

இந்த வார்த்தை சொல்ல தானே இவ்வளவு பேச்சு..?’ யுவராஜ் மாமனார், மனைவியை பார்த்தான். ஜமுனாவிற்கு அப்பா இப்படித்தான் சொல்வார் என்று தெரியும், அதற்கு கணவன் பார்வையும் தன் மேல் கோவமாக படும் என்பதும் புரியும். ஆனாலும் கணவனை பார்க்கவில்லை அவள்

அவர் பிரச்சனையை அவர் பார்க்கட்டும், நான் தொந்தரவு பண்ணலை, என் அப்பா என்னை  படிக்க வைக்கிறதால என்ன இப்போ..? இவங்க மட்டும் என் அம்மாவை இப்போவரை, எங்க வீட்டு பொண்ணுன்னு முன்ன நின்னு செய்றதில்லை, எனக்கு மட்டும் என்ன..? என் அப்பா எனக்கு செய்யட்டும்..” உள்ளுக்குள் ஒரு முடிவுடன் தான் அமர்ந்திருந்தாள்.

அது வீட்டினருக்கும் புரிந்தது. அருணாச்சலம் பேத்தியை பார்த்து புரிந்து கொண்டவர், பேரனுக்கு கண் காட்டினார் பேசாத என்று. அவருக்கு இந்த பிரச்சனை பெரிதாவதில் விருப்பமில்லை. ஜமுனா கணவனுடன் ஒத்துவிட்டு செல்வது என்றால் பயமில்லை. ஆனால் அவள் அப்பா படிக்க வைத்தால் படிக்க தயாராக இருக்கிறாள் எனும் போது இவர்களும் என்ன செய்ய முடியும்..? யுவராஜ் தவிர மீதி எல்லோருக்கும் இது தான் தோன்றியது. ஆனால் அவன் ஏற்று கொள்ள வேண்டுமே..? 

என்ன மாமா நான் சொல்றது சரி தானே..? கவுன்சிலிங் டேட் வந்ததுக்கு அப்புறம் நான் என் பொண்ணை கூட்டிட்டு போய் படிக்க வைக்கிறேன்..” என்றார் தயாநிதி

அது..” என்று அருணாச்சலம் பேரனை பார்க்க

அவனோ, “இங்க இருக்கிறது அவர் பொண்ணு மட்டுமில்லை, என் பொண்டாட்டியும் கூட தாத்தா..” என்றான்

யார் இல்லைன்னு சொன்னா மாமா.? பொண்ணை அவர் கையில் தூக்கி கொடுத்து, முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சதே நான் தான் மாமா..” என்றார் தயாநிதி மருமகனுக்கு குறையாமல்

மாப்பிள்ளை.. கோவம் வேண்டாம், உங்களுக்கு தெரியும் இல்லை நிலம் அடமானத்துல இருக்கிறது, அதை மீட்டுடலாம்ன்னு தான் யுவராஜ் பார்க்கிறான்..” கேசவன் பேச

‘உங்களால தானே அடமானத்துக்கே  போச்சு..’ தயாநிதி உள்ளுக்குள் பொருமி  கொண்டார்.

அருணாச்சலம், யுவராஜ் இருவருக்கும் கேசவன் பேசுவது விருப்பமில்லை. தயாநிதி கோவமாக இருக்க, வார்த்தைகளை நிச்சயம் விடுவார், “ப்பா.. நான் மாமாக்கு சொல்லிக்கிறேன் விடுங்க..” என்றான் யுவராஜ் அவரை தடுக்கும் விதமாக

இரு தம்பி நான் பேசினா மாப்பிள்ளை புரிஞ்சுப்பார்..” கேசவன் மகனிடம் சொல்ல,  

ண்ணா.. அது அவங்க மாமனார், மருமகன் பிரச்சனை, எப்படியோ போகட்டும், நீ விடுண்ணா..” என்றார் ஜெயலக்ஷ்மியும்

அதில் வைஜெயந்திக்கு அவர் மேல் கஷ்டம், என் புருஷன் பேசினா என்ன என்று..? “ஜமுனாக்காக உன் அண்ணா பேசுறதுல என்ன இருக்கு ஜெயா..?” என்றார்

இவங்க என் அண்ணாக்கு மேல..’  ஜெயலக்ஷ்மி தலையை பிடித்து கொள்ள, ஜமுனாவிற்கு அம்மாவின் டென்ஷன் குழப்பமாக இருந்தது. அப்பா மனதில் மாமனார் பற்றிய எண்ணம் என்று இவளுக்கு தெரியாதே..? 

கேசவன் பேச ஆரம்பிக்கவும் தயாநிதி முகம் கடுகடு என்றானது. கேசவனோ தான் செய்த தவறால் தான் இது எல்லாம் என்ற வருத்தத்தில், மகன், தங்கை மறுப்பை மீறி, “யுவராஜ் ஜமுனா படிக்க பணம் தனியா எடுத்து வச்சிருந்தான், ஆனா இந்த நிலம் மாட்டிக்கவும் தான் சூழ்நிலை சிக்கலாகிடுச்சு, அவன் சொல்றது போல ஒரு வருஷம் போகட்டும்..” சொல்ல

அது முடியாது, இப்போ அவளுக்கு நல்ல கட் ஆப் கிடைச்சிருக்கு, அவ இஷ்டப்பட்டது படிக்கலாம், அடுத்த வருஷம் பார்த்து இந்த முறை அவ  ஏன் விடணும்..? அதான் உங்களால படிக்க வைக்க முடியாதுன்னு சொல்லிட்டிங்க இல்லை, நான் என் பொண்ணை படிக்க வச்சிக்கிறேன். விடுங்க..” என்றார். குரலில் காரம் நன்றாக தெரிந்தது

மாப்பிள்ளை முடியாது சொல்லலை, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் தான் சொல்லுதுநம்ம கைக்கு மீறி கால் எடுத்து வைக்க பயமா இருக்கு, ஏற்கனவே நான் அவனை சிக்கல்ல மாட்டி வைச்சிருக்கேன், உங்களுக்கு தான்  காரணம் தெரியுமே, விவரம் புரியாம நான் பண்ணது..”

கையாலாகாதவன் தான் காரணம் சொல்வான்..” தயாநிதி பட்டென சொல்லிவிட்டார்

என்னங்க..” ஜெயலக்ஷ்மி அடுத்த நொடி குரலை உயர்த்திவிட்டார். யுவராஜ் குடும்பம் மொத்தத்துக்கும் முகம் செத்து போனது

Advertisement