Advertisement

கேளாய் பூ மனமே 7

இறுதி வரை தயாநிதி ஆசைப்பட்டது போல விருந்து என்ற ஒன்று நடக்காமலே புது மணமக்கள் அவரவர் இடம் சென்று சேர்ந்தனர். வாக்குவாதம் நடந்த மறுநாள் யுவராஜ்  மனைவியை தானே அழைத்து சென்று கேம்பஸில் விட்டு, அப்படியே சென்னை சென்றுவிட்டான்

ஆரம்பித்த நொடியே இருவருக்கும் வேலை சரியாக இருந்தது. யுவராஜ் புதிதான வாடிக்கையாளர்களை பிடிப்பதுடன், கைவசம்  இருக்கும் கிளைண்ட்களின் தேவைகளையும் உடன் உடனே செய்து தருவதில் முழு மும்முரம் காட்டினான். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் இவனை போன்ற ஆட்களுக்கு, முயன்றால் வேலை கிடைத்து கொண்டே தான் இருந்தது.

அவனின் குறிக்கோளான,  “BUG” எனப்படும், அப்ளிகேஷன்களில் வரும் எரர்’களை சரி செய்வதற்கான எக்ஸ்பெர்ட்டாக மாற, தனி நேரத்தை ஒதுக்கினான். இப்போது எல்லாமே ஆஃப் வடிவில் தான் நடைபெறுகிறது. சாதாரண மக்கள் தொடங்கி, மிக பெரிய கம்பெனிகள், கவர்மெண்ட் வரை அப்ளிகேஷனில் தான் இயங்கி கொண்டிருந்தது

எத்தனை எத்தனையோ வகையான  அப்ளிகேஷன்கள் நம்மிடையே ஊடுருவியிருக்க, அதில் வரும் எரர்களும், அதை சரி செய்வதும், அதில் தனக்கென ஒரு தடத்தை பதிப்பதும் தான் யுவராஜின் ஆக பெரும் கனவு, குறிக்கோள், ஆசை எல்லாம்.  

மிகச்சிறிய ரூமில் ஒற்றை லேப் மட்டுமே வைத்து ஆபிஸ் ஆரம்பித்தவன் இன்று, மூன்று அறைகள் இருக்கும் ஆபிஸ் வைத்திருக்கிறான். உடன் மூன்று பேர் பணிபுரிகின்றனர். சொல்லிக்கொள்ளும்படி வருமானம். ம்ம்ம்.. பரவாயில்லை.. இத்தனை வருஷத்துல  நாமளும் எதையோ செஞ்சிருக்கோம்.. சிறு ஆசுவாசம் மட்டும் தான்திருப்தி இல்லை

அப்ளிகேஷன் உலகில் அவனுக்கான பெயர், தடம் பதிப்பது தான் தலைவருக்கு திருப்தியை கொடுக்கும். ‘ம்ஹ்ஹ்ஹ்ம்.. இன்னார் தான் மன்னார்ன்னு சொல்லணும்  போல..’  { அவ்வ்  நானே என் ஹீரோவை கலாய்ச்சுட்டேன்அம்மே}  

ஜமுனாவிற்கும் அவுஸ் சர்ஜன் என்பதால் டியூட்டி பார்க்க, கிடைத்த நேரத்தில் ஓய்வெடுக்க என்று சென்றது. செய்யும் வேலையை முழு மனதுடன் விரும்பி செய்பவர்கள் என்றாலும், தங்களின்  இணையையும்  அதிகமே மிஸ் செய்தனர்

திருமணத்திற்கு முன்னர் இருவருக்குமே தங்கள் வாழ்க்கை குறித்து ஒரு கனவு இருக்கும். இப்போதோ கனவு நினைவானதில், பிரிவின் ஏக்கம் மிஞ்சி நின்றது. கூடி வாழ்ந்த அந்த ஒரு வாரம் மகிழ்ச்சியை கொடுத்து, தேடலை விதைத்து விட்டு சென்றது. இனி எப்போது அப்படி ஒரு நேரம் வாய்க்கும். அவ்வளவு ஆசை. வாய்ப்பு மிக குறைவு. பெரு மூச்சுடன் போனில் தங்கள் தேடலை பேசியும் பேசாமலும் தீர்த்து கொண்டனர்

எப்போது அவுஸ் சர்ஜன் முடியும், எப்போது சேர்ந்து இருப்போம்.. என்ற ஏக்கத்துடன்,  வருங்காலம் என்ன என்று யோசிக்கவும் செய்தனர். திருமணம் ஒரு மாங்கல்யத்தில் பிணைக்கப்பட்டு விட்டாலும், குடும்பத்தை இவர்கள் தானே அமைக்க வேண்டும். ஆளுக்கொரு இடத்தில் இருப்பதால் குடும்பம் என்ற அமைப்பில் வெற்றிடம் இருந்தது

ஜமுனாவிற்கு படித்து முடித்து அடுத்து என்ன என்ற குறிக்கோளுடன், யுவராஜ் உடனான பிரிவையும் தீர்க்க யோசித்தாள். யுவராஜிற்கோகுடும்பத்திற்கு தேவையான பணம், எங்கு எப்படி அவன் குடும்பம் என்ற யோசனை. இப்படியே ஒரு மாதம் கழிந்துவிட, ஜமுனாவிற்கு இரண்டு நாள் விடுமுறை. அவளே எடுத்தாள் என்பது சொல்லவில்லை

நான் ஈவினிங் ஊருக்கு வரேன்..” என்று கணவனுக்கு சொல்ல, அவன் அடுத்த நொடி சென்னையில் இருந்து கிளம்பிவிட்டான். இடையில் ஒரு முறை கேம்பஸ் சென்று மனைவியை சில அடி தூரத்தில் நிறுத்தி பார்த்து வந்திருந்தாலும், இது வேறு தானே. 

ஜமுனா அவனுக்கு முன்னால் அவன் வீட்டில் இருந்தாள்கார் சத்தத்தில் வாசலுக்கு வந்த நின்ற மனைவியை பார்த்து கொண்டே இறங்கினான். அவளுடன் தாரணி, காமாட்சி இருக்க, பொதுவான தலையசைப்புடன் வீட்டினுள் சென்றான்

தயாநிதி, ஜெயலக்ஷ்மி மகளை பார்க்க வந்திருக்க, அவர்களை வரவேற்று அமர்ந்தான். இரவு உணவு நேரம் என்பதால், பாட்டி அறையில் ரிப்ரெஷ் செய்து வந்தான். இவனுக்காக காத்திருந்த ஆண்கள் டேபிளை நிறைக்க, காமட்சி, ஜெயலக்ஷ்மி பரிமாறும் பொறுப்பில்

தள்ளி கீழே அமர்ந்தபடி தங்கையுடன் பேசி கொண்டிருந்த ஜமுனா  கண்கள் யுவராஜ் மீது  நொடிக்கொரு முறை பட்டு மீண்டது. அவள் முகத்தில் ஏதோ ஒன்று. இவன் புருவம் தூக்கி என்ன என்று கேட்க, தங்கையிடம் முகம் திருப்பிவிட்டாள். யுவராஜ் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன் உணவை முடித்து எழுந்தான்

மற்ற ஆண்களும் உணவை முடிக்க, பெண்கள் அமர்ந்தனர். அவர்களே பரிமாறி கொண்டு சாப்பிட, அருணாச்சலம் பேரனிடம் வண்டி கணக்கை ஒப்படைத்து கொண்டிருந்தார். தயாநிதி போன் பார்த்து அமர்ந்திருக்க, பக்கத்தில் கேசவன். இருவரிடமும் எப்போதும் போல ஒரு அமைதி. யுவராஜ் கண்கள் அதை அதிருப்தியுடன் பார்த்து கொண்டது

அப்படியென்ன என் அப்பா இவருக்கு..?’  சிறு கோவமும் உள்ளக்குள். எப்போதுமே இது அவனுக்கு உண்டு. வெளிப்படுத்தியதில்லை. ‘அவர் தான் பேசலை தெரியுது இல்லை, இந்த அப்பா ஏன் அவர் பக்கத்துல உட்கார்ந்திருக்கணும்..’ அப்பாவையும் நொந்து கொண்டான் மகன்

என் அப்பாவிற்கு இவர்கள் அளவு விவரம் போதவில்லை, சொதப்புகிறார், வீட்டினரையே வருத்துகிறார், உண்மை தான், அதுக்காக சொந்த தங்கை கணவரே அவரிடம் இப்படி நடந்து கொள்வதா..?’ மகனின்  ஆத்மார்த்தமான கோவம் அது. அவரின் மரியாதையை குறைக்கும் செயலை இவன் ஏற்று கொள்ள மாட்டான்.  “ப்பா..” என்றான்

கேசவன், “சொல்லுப்பா..” என, தயாநிதியும் மொபைலை வைத்துவிட்டு மருமகனை பார்த்தார். கோவத்தில் கூப்பிட்டுவிட்டான், என்ன சொல்ல..? 

கணக்கு.. இந்த கணக்கு சொல்லுங்க வாங்க..” என்றான் தாத்தாவிடம் இருந்த நோட் வாங்கி

அது அப்பாக்கு தெரியும் யுவராஜ்..” கேசவன் தங்கை கணவனை தனியே விட யோசித்து அசையாமல் சொல்ல, யுவராஜ் சூடான மூச்சை இழுத்துவிட்டான்

ண்ணா.. எழுந்து போய் உன் மகன்  கேட்கிறதை சொல்லேன், அப்படியென்ன உங்க வீட்டு மாப்பிள்ளை உங்ககிட்ட கொஞ்சிட்டு இருக்காருன்னு அவர் பக்கத்துல உட்கார்ந்திருக்கீங்க..” ஜெயலக்ஷ்மி வந்துவிட்டார். அவருக்கும் மருமகனின்  கோவம் இருக்காதா..? சாப்பிடும் இடத்தில் இருந்து கணவன் செயலை பார்த்து கொண்டிருந்தவர் தானே..? 

பாவம் அவர், அவர் வீட்ல மொபைல் பார்க்க முடியாம ஊர் விட்டு ஊர் வந்து மாமியார் வீட்ல உட்கார்ந்து மொபைல் பார்த்துட்டு இருக்கார், நீ அவர் பக்கத்தில பொம்மை மாதிரி உட்கார்ந்து சென்ன செய்ய போற..? உன் மகனை பாருண்ணே..” என்றார் ஜெயலக்ஷ்மி விடாமல்.

தயாநிதி மனைவியை முறைக்க, அவர் இவருக்கு மேல் பார்த்தார். கேசவன் தங்கை சொல்வதில் தயங்கி இன்னுமே வீட்டு மாப்பிள்ளையை பார்க்க, “ண்ணா.. அவர் பக்கத்துல உங்களுக்கு ஒன்னும் தேன் வடியலை, எழுந்து உன் மகன் கேட்கிறது என்னன்னு சொல்லுண்ணா..” ஜெயலக்ஷ்மி குரல் கொஞ்சம் கெஞ்சிதான் வந்தது

கேசவன் அதற்கு மேல் தயங்காமல் எழுந்து மகனிடம் செல்ல, அவன் தாத்தா பக்கத்தில் சேரை இழுத்து போட்டான். தயாநிதி இருப்பதால் இவன் நின்று தான் இருக்க, கேசவனிடம் நோட்டை கொடுத்து, தாத்தா சொல்வதை இவரை சொல்ல வைத்தான். அருணாச்சலமும் சூழ்நிலை புரிந்து உதவிக்கு வர, தயாநிதிக்கு ஒரு மாதிரியாகி போனது

அவர் ஒன்றும் வேண்டுமென்றே கேசவனை புறக்கணிப்பதில்லை. முதலில் இருந்தே அவர் மேல் பெரிதான அபிப்ராயம் இல்லை. வீட்டில் இரு தங்கைகள் இருக்க, பத்தொன்பது வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட கேசவன் மேல் என்ன அபிப்பிராயம் வைக்க முடியும்..?  

தயாநிதிக்கு அப்போதே, என்ன மனிதன் இவன்..? என்ற எண்ணம் தான். பக்கத்து ஊர், அருணாச்சலம் குடும்பம் பேர் சொல்ல கூடிய குடும்பம். நடப்பது தெரியாமல் இருக்குமா..? அப்போது மனதில் பதிந்த பிம்பம், பெண் எடுத்து, அருகே பார்த்த கேசவனின் குணத்தால் இன்னும் வேர் ஊன்றி தான் போனது. மகனாக யுவராஜ் நியாயம் ஒன்று என்றால், சக மனிதனாய், தயாநிதிக்கு அவர் காரணம் அவ்வளவு தான்

இதில் மனைவி குதிப்பது  தயாநிதிக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. ‘நான் இப்படித்தான் போங்க..’ என்று இன்னும் வீம்பாய் வைத்த மொபைலை தூக்கிவிட்டார். ஜெயலக்ஷ்மி பல்லை கடித்து டேபிளுக்கு வந்தார். காமாட்சி, வைஜெயந்தி இருவரும் கிச்சனில் இருக்க, தாரணி பேசஜமுனா இன்னும் பிளேட் வைத்து அமர்ந்திருந்தாள்

அவள் கண்கள் வீட்டில் நடப்பதை பார்த்து மூளையில் ஏற்றினாலும், கவனம் எங்கோ தான். “எங்க அம்மா வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கியா ஜமுனா..? நான் உன் பிளேட் எடுக்கவா..?” ஜெயலக்ஷ்மி குரல் மகளை அதட்டியது. யுவராஜ் சட்டென்று திரும்பி பார்க்க, ஜமுனா பிளேட்டை எடுத்து கொண்டு கிட்சன் சென்றாள்

எடுத்துக்கோங்கண்ணா..” தயாநிதிக்கு பழத்தை கொடுத்தார் வைஜெயந்தி. முகம் பார்த்து லேசான சிரிப்புடன் எடுத்து கொள்ள, மாமியார், மருமகன் கண்களில் சிறு ஆறுதல். கேசவனிடம் காட்டும் ஒதுக்கத்தை வைஜெயந்தியிடம் அவர் எப்போதும் காட்டுவதில்லை. மரியாதையும் குறைந்தது இல்லை

இவர் நாயகன் படம் கமல் போல, நீங்க நல்லவரா..? கெட்டவரா..? என்றே சுற்ற விடும் மனிதர் தயாநிதி. மனைவிக்கும் சரி, மருமகனுக்கும் சரி இன்று வரை அவரை எந்த கணக்கில் வைப்பது என்றே தெரியாது. வில்லனும் இல்லை, ஹீரோவும் இல்லை. தயாநிதி குறித்து அவர்களின் பார்வை இதுதான்

தயாநிதிக்கும் அது புரியாமல் இல்லை. அதுவே பல நேரங்களில் அவரை வீம்பு பிடிக்கவும் வைக்கும். இதோ இப்போதும் மொபைலுடன் அமர்ந்திருப்பது போல. ‘புதுமாப்பிள்ளையே அமைதியா இருக்கான், தலை வெளுத்து போய், இவருக்கு இன்னும் மாப்பிள்ளை முறுக்கு..’ ஜெயலக்ஷ்மி முணுமுணுத்து கொண்டார்.

“கிளம்பலாமா..?” தயாநிதி நேரம் பார்த்து எழுந்து நின்றார். தாரணிக்கு அக்காவுடன் இருக்க ஆசை இருந்தாலும், அம்மாவின் பார்வைக்கு பயந்து கிளம்பிவிட்டாள். “ஆகாஷ் வந்தா நாங்க வந்துட்டு போனதா சொல்லுங்க..” என்றார் தயாநிதி நின்று

அவன் நண்பர்களுடன் படத்திற்கு சென்று இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதை  சொல்லி காட்டுகிறாராம்.! 

இப்போ தான் போன் பண்ணேன் ண்ணா, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன் சொன்னான்..” வைஜெயந்தி சொல்ல

நேரம் பார்த்தவர், “இரண்டு படம் பார்த்துட்டு வரார் போல.. வயசு பையன் தானே, ஜாலியா இருக்கட்டும்..” என்றார் மாமியாரையும், மருமகனையும் பார்த்து சிறு சிரிப்புடன்

கிழவன் உங்களுக்கே நின்னா, நடந்தா, படுத்தா மொபைல் கேட்குது, என் அண்ணன் மகன் இந்த வயசுக்கு இரண்டு என்ன மூணு படம் பார்த்துட்டு வந்தாலும் ஒன்னுமில்லை, வாங்க..” என்று ஜெயலக்ஷ்மி சொல்ல

அவர் ஆகாஷ் நல்லதுக்கு தான் சொன்னார்..” என்றான் யுவராஜ்

ஏத்திவிடுறான்..’ உஷாரான தயாநிதி, “வரேன்..” என்று பொதுவாக சொல்லி வாசலுக்கு நடந்துவிட்டார்

அவர்களை வழியனுப்பி வைத்து, பெண்கள் வீட்டிற்குள் செல்ல, ஆண்கள் களத்தில் நின்றனர். டிராக்டர் மட்டும் இருக்க, JCB, லாரி இல்லாமல் வெறுமையாக இருப்பது போல் உணர்ந்தான் விவசாயி மகன். களம் நிறைந்திருந்தால் தான் நிம்மதி. அது வெள்ளாமை காலத்தில் மட்டும் தானே நடக்கும். அந்த குறைய தீர்க்க, வண்டிகள் ராஜாவாய் நின்றிருந்தது

இப்போது  அவனாலே  இரு வண்டிகள் ரோட் காண்ட்ரேக்ட் என, சென்றுவிட, நாளை நேரில் சென்று வண்டி கண்டிஷனை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். “யுவராஜ் டிராக்டர்ல டீசல் லீக்கேஜ் இருக்கு, ஷோ ரூம்ல பேசியிருக்கேன்..” கேசவன் தகவல் சொன்னார்

 “அப்போ அதுவரை வண்டியை நமக்கு மட்டும் எடுங்கப்பா, வாடகைக்கு வேண்டாம்..” டிராக்டரில் லீக் ஆகும் இடத்தை  பார்த்தபடி சொன்னான்

பனி அதிகமா இருக்கு, உள்ள வாங்க..” காமாட்சி குரல் கேட்க, மூவரும் உள்ளே சென்றனர். ஜமுனா ரூமிற்கு சென்றிருக்க, யுவராஜும் மேலேறிவிட்டான்.

உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்த ஜமுனா கணவனின் கதவு அடைத்தலில் திரும்பி பார்த்தாள். யுவராஜ் வேக நடையுடன் வந்தவன், மனைவியை இறுக்கமாக அணைத்து கொண்டான்

மிஸ்ட் யூ..” என்று கழுத்தில் அளவில்லா சிறு சிறு முத்தமும்ஜமுனாவும் கணவனை அணைத்து கொள்ள, சில நிமிடங்கள் அணைப்பிலே  அவர்கள் பிரிவின் ஏக்கத்தை கரைக்க முயன்றனர் போல

யுவராஜ் விலகி மனைவி நெற்றியில் முத்தம் வைத்தவன், “என்ன ஆச்சு..?” என்றான். உடனே ஜமுனா முகத்தில் ஒரு வெட்கம், தவிப்பு. தடுமாற ஆரம்பித்தாள் பெண்

ஏய் என்னடி..” யுவராஜ் அவளை சிரிப்புடன் பார்த்தான்

மாமா.. க்கும்.. அது.. நாம, எனக்கு, நாள்.. டேட்ஸ் தள்ளி போயிருக்கு..” என்றாள் கணவனின் நெஞ்சில் பார்வை பதித்து. யுவராஜ் உடலில் சட்டென ஒரு சிலிர்ப்பு

ஜமுனா ஆச்சரியத்துடன் அவன் உடலில் சிலிர்த்து நின்ற முடிகளை பார்க்க, “என்னை பாருடி..” என்றான் கணவன் கரகரத்த குரலில். ஜமுனா தயங்கி அவன் கண்களை எதிர்கொள்ள, அழுத்தமாக அவள் உதட்டில் முத்தம் வைத்து, திரும்ப அணைத்து கொண்டான்.  

இதை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. சட்டென கைக்கு கிடைக்கும் புதையல் எவ்வளவு சந்தோஷத்தை, பரவசத்தை, ஆர்பரிப்பை கொடுக்குமோ அப்படி ஒரு நிலை

இந்த ஒரு மாதத்தில் பல திட்டங்கள். தொழில், குடும்பம் என்று. அதில் குழந்தை என்ற ஒன்று தோன்றவே இல்லை. முதலில் இருவரும் ஓரிடத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருவருக்கும்

இப்போதோ அந்த இருவர் எனும் இடத்தில் மூவரா..?   நினைக்கவே நினைக்காத புதையலில், கட்டுப்பாடே இல்லாமல்  கலங்கும் கண்களை பற்றிய நினைப்பு இல்லை.

யுவராஜ் ஏதோ தோன்ற மனைவியை விலக்கி,“இப்போவே கண்டுபிடிச்சுட்டியா..?” என்றான்

ஒரு மாதம் தானே ஆகிறது, ஏமாற்றம் அடைந்து விட கூடாதே என்ற தவிப்பும் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் என்பது இருவரும் எதிர்பார்க்கா விஷயம் தான், ஆனால் சொன்ன நொடி பெரிதான எதிரிபார்ப்பு. தவிர்க்க முடியாத ஆவல். பரபரத்தது உடலும், உள்ளமும்

“அது மாமா.. எனக்கு எப்போவும் இருபத்தி எட்டு நாள்லே.. இப்போ மூணு நாள் ஆச்சு, இன்னும் இல்லை..” ஜமுனா சங்கடம், வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்து சொன்னாள்

கணவன், மனைவிக்குள் இயல்பாக மாற வேண்டிய விஷயங்கள் அவ்வளவு இருக்க, அதற்குள் அப்பா, அம்மா. ‘டேய் என்னடா இது..?’ யுவராஜ்க்கே அவ்வளவு வெட்கம்

தலையை கோதி கொள்ள, நிமிர்ந்து பார்த்த ஜமுனாவிற்கு கணவனின் வெட்கத்தில் கண்கள் விரிந்தது. அதில் இன்னமும் காதோரம் சிவந்து சூடானது. “ஏய் பார்க்காதடி..” என்று அவள் முகத்தை நெஞ்சில்  அமுத்தி கொண்டான். ஜமுனா இதழ்கள் சிரிப்பில் விரிவது உணர, யுவராஜ் அவளுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து இறுக்கமான அணைப்பை பரிசளித்தான்

மாமா.. பாப்பா..” ஜமுனா முணுமுணுக்க, சட்டென இறுக்கத்தை தளர்த்தியவன், அணைப்பை விலக்கவில்லை. மகிழ்ச்சி, லேசான அச்சம், எதிர்பார்ப்பு, காதல் எல்லாம் மிகுந்து அந்த நேரத்தை அனுபவித்தனர்.

Advertisement