Advertisement

மறுநாள் காலையிலே வெங்கடேசன் தோப்பில் சென்று நின்றனர். “அவனுக்கு நம்ம சொத்து மேல கண்ணு, மொத்தமா முடிக்க தான் வட்டிக்கு கொடுத்திருப்பான் யுவராஜ், ரொம்ப உஷாரா தான் பேசணும்..” அருணாச்சலம் சொல்ல, இப்போது புரிந்தது

நான் வட்டின்னு பெருசா போடலைங்க ஐயாஒரு ரூபாய் வட்டி தான், மாசாமாசம் இருபத்தைஞ்சு ஆயிரம் மட்டும் கொடுத்தா போதும், வெளியே எல்லாம் ஆறு ரூபாய் வரை வட்டி, உங்களுக்கு அப்படி செய்வேனா..?” என்றான் வெங்கடேசன் எடுத்ததும் வட்டி பற்றி பேசி நல்லவனாக

மூல பத்திரம்..?” யுவராஜ் கேட்க

என்கிட்ட தான் பத்திரமா இருக்கு, நீங்க அதை பத்தி கவலையே பட வேணா, என்கிட்ட ஒரு பொருள் வந்துட்டா அதுக்கு நான் முழு பொறுப்பு, என் பத்திரம் போல பாதுகாப்பேன்..” என்றான் சிரிப்புடன். காரியத்தை சாதித்துவிட்டான், சிரிப்பதற்கு என்ன..? அருணாச்சலம் வெறுப்புடன் நினைக்க

அக்ரீமெண்ட் காபி இருந்தா கொடுங்க..” என்றான் யுவராஜ். வெங்கடேசன் தோப்பு வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுக்க, படித்த யுவராஜ் கொதித்து தான் போனான். “இது என்ன..?” என்று அக்ரீமெண்டை தூக்கி வீசியே விட்டான்

தம்பி.. இது தப்புங்க..” வெங்கடேசன் வினயமாக சொல்லி எடுத்து வைக்க, விஷயம் என்ன என்று தெரிந்த அருணாச்சலம் அதிர்ந்து போனார்

இதை பத்தி கேசவன் எங்ககிட்ட எதுவும் சொல்லையே..?” என்று மகனை பார்க்க

எனக்கும்.. எனக்கும் தெரியாதுப்பா..” என்றார் கேசவன் அச்சத்தில் திணறி

இதுல சொல்ல என்ன இருக்கு ஐயா, நம்மகிட்ட வட்டிக்கு வாங்கினா இது தானே மேஜர் கண்டிஷனேஉங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நினைச்சேன்..” என்றான் வெங்கடேசன் சாதாரணமாக

யுவராஜ் ரத்த அழுத்தம் உச்சத்துக்கு செல்ல, “நீங்க கவலையே படாதீங்க ஐயா, வெளியே உங்களுக்கு பணம் கொடுத்தது பத்தி ஒருத்தர்கிட்டேயும் பேச மாட்டேன், உங்க கௌரவம் என் கௌரவம் இல்லையா..?” என்று வேறு சொல்ல, யுவராஜால் அங்கு நிற்கவே முடியவில்லை

அவன் எலும்பை எண்ணி எண்ணி உடைக்கும் ஆக்ரோஷம். தாத்தா, அப்பாவை கொண்டு வந்து வீட்டில் விட்டவன், பிரிக்கப்படாத டிராலியை இழுத்து கொண்டு சென்னைக்கே பஸ் ஏறிவிட்டான். ஆறு மாதம் ஆகிற்று

இடையில் யுவராஜ், ஜமுனா திருமணமும் முடிந்துவிட்டது. மாதாமாதம் வெங்கடேசனுக்கு வட்டி சென்று கொண்டிருக்கிறது. அருணாச்சலம் அதற்கு பொறுப்பெடுக்க, யுவராஜ் அசல் பணம் திரட்டும் முனைப்பில். இதோ விஷயம் வீட்டு மாப்பிள்ளை தயாநிதிக்கு தெரிந்துவிட, சங்கடம் என்பதை தாண்டி ஒரு இறக்கம் போல

கடன் வாங்கி வண்டி வாங்கணுமா..? ஒரு மகன், செல்ல மகன்னு இன்னமும் கூட மச்சான் இப்படி இருந்தா எப்படி மாமா..?” தயாநிதிக்கு அவ்வளவு அதிருப்தி. கேசவன் திருமணம் நடந்த விதமே அவருக்கு இன்னமும் ஏற்புடையது இல்லை எனும் போது இதுவுமா என்றிருந்தது.  

இவ்வளவு பணத்துக்கு யுவராஜ் என்ன பண்ணுவான் மாமா..? நான் ஏதாவது ஏற்பாடு பண்ணவா..?” என்று கேட்டிருந்தார் தயாநிதி. பேரன், மகளுக்கு தெரிந்தால் அவ்வளவு தான். அருணாச்சலம் அதை நினைத்து பெருமூச்சுடன் நிற்க, அங்கு ஜெயா கணவனை குமுறி கொண்டிருந்தார்

“இதுக்காக தான்  இத்தனை வருஷமா காத்திட்டிருந்தீங்களா..? கடைசில உங்க புத்தியை காமிச்சிட்டீங்க இல்லை..” பொரிந்து கொண்டிருக்க

ஜெயா.. நான் விஷயம் உண்மையான்னு தான் உங்க அப்பாகிட்ட கேட்டுட்டு இருந்தேன், நீயும் உன் அண்ணன் மகனும் சேர்ந்து தான் அதை வேற மாதிரி எடுத்துட்டு போனீங்க..” தயாநிதி சொன்னார்.

நாங்க பேசுவோம்.. ஏன்னா எங்களுக்கு உங்களையும் தெரியும், உங்களுக்குள்ள  ஒளிஞ்சிட்டு இருக்கிறது அந்த சின்ன பத்தியும் நல்லா தெரியும்..” ஜெயா சொல்ல

சின்ன புத்தி, அது இதுன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன் ஜெயா, அப்படியென்ன என்கிட்ட நீ சின்ன புத்தியை கண்டுட்ட..” தயாநிதி எகிறினார்

ஆஹ்.. நீங்க கோவப்பட்டு பேசினா இல்லன்னு ஆகிடுமா..? அப்படி உங்களுக்கு உண்மையிலே சின்ன புத்தி இல்லன்னா எதுக்கு என் அப்பாகிட்ட போய், நீங்க நிலத்தை அடமானம் போட்டிருக்கீங்களான்னு  கேட்டிங்க..? ஊருக்கு பெரிய மனுஷன், உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் அவர்கிட்ட போய் இப்படின்னு நேரா கேட்கலாமா, இதை கேட்டா அவர் சங்கடப்படுவார்ன்னு உங்களுக்கு தெரியாதா..?” ஜெயா கூர்மையாக கேட்டார்

அது.. அது அவருக்கு எதாவது உதவி தேவைப்படுமோன்னு தான்..”

உங்களை உதவி  செய்ய சொல்லி நாங்க கேட்டோமா..? உங்க பங்காளி என் அண்ணனை ஏமாத்தி பண்ண வேலை எல்லாம் எங்களுக்கு தெரியாது நினைச்சானா..? என் அண்ணன் மகன் எல்லாத்தையும் புரிஞ்சுட்டு தான் இருக்கான், பணம் மட்டும் ரெடியாகட்டும், அப்புறம் இருக்கு உங்களுக்கு, அவனுக்கு எல்லாம்..”

ஏய் இதுல என்னை எதுக்குடி கூட்டு சேர்க்கிற..? நான் சும்மா விசாரிக்க தானே செஞ்சேன், பொண்ணு கொடுத்த வீட்ல இதை கூட நான் விசாரிக்க கூடாதா..?”

பொண்ணு கொடுத்தா கட்டிட்டு போன உங்க மருமகனை போய் கேட்க வேண்டியது தானே..? என் அப்பாகிட்ட ஏன் கேட்டிங்கன்னு தான் கேள்வி, இது தான் சொல்றது யானை மல்லாக்க விழுந்தா எறும்பு காதுல ஏறி டேன்ஸ் ஆடும்ன்னு..”

இது அதிகம் ஜெயா.. உன் அம்மா வீட்டு ஆளுங்களை யானை சொல்றதுக்கு, கட்டுன புருஷனை எறும்புன்னு சொல்வியா..? சும்மா விசாரிச்சதுக்கு இவ்வளவு பேச்சா..?” 

ஏன் நீங்க கூடத்தான் பத்து வருஷத்துக்கு முன்னாடி வெள்ளாமை நஷ்டமானுதுல என் நகை, நிலத்தை எல்லாம் அடமானம் வைக்கலை..? பொண்ணு கொடுத்திருக்கோம்ன்னு என் அம்மா வீட்டு ஆளுங்க வந்து உங்களை ஏன், எதுக்குன்னு விசாரிச்சாங்களா..? இல்லை தானே, உங்களுக்கு மட்டும் என்னங்கிறேன்..?”

உன் அண்ணா என்னை கேட்டானே பணம் கொடுக்கட்டுமான்னு..? அப்படி தான் நானும்..தயாநிதி சொல்ல

இந்தா வந்துடுச்சு இல்லை பூனை குட்டி, அவர் பாசத்துல கேட்டதுக்குஇத்தனை வருஷம் காத்திருந்து இப்போ என் அப்பாவை கேட்டு பழி வாங்கியாச்சு, சரி இருக்கட்டும், என் அண்ணா உங்க அளவுக்கு விவரம் இல்லாதவர் தான்னு தானே நீங்க, உங்க பங்காளி எல்லாம் சேர்ந்து என் அம்மா வீட்டு கூரைல கை வச்சுட்டீங்க, பார்த்துகிறோம் நீங்களா, நாங்களான்னு..” ஜெயா முந்தானைய உதறி இடையில் சொருகி கொண்டு செல்ல, தயாநிதி தலையில் கை வைத்து கொண்டார்

‘இவ அண்ணா கேட்டா பாசம், நான் கேட்டா பழி வாங்கிறதா..? புதுசா என்னையும் அந்த வெங்கடேசன் கூட சேர்த்து வச்சு பேசுறா, நான் எப்போ அந்த வெங்கடேசன் கூட கூட்டு சேர்ந்தேன், இவளும், இவ அண்ணன் மகன் மட்டுமே போதும் எனக்கு மாமியார் வீடு இல்லாம பண்ண..?’ தயாநிதி தலையில் கை வைத்து கொண்டார்.

இங்கு இரு குடும்பமும் நொந்து போய் இருக்க, மாமனார் வெளியில் படுத்திருக்க, அங்கு  புது மணமகனோ மனைவி மடியில் ஐயக்கிமாகி இருந்தான்

ஜமுனா விரல்கள் கணவன் தலை முடியை கோத, கண் மூடி தாலி கொடியின் மஞ்சள் வாசனையை அனுபவித்து கொண்டே படுத்திருந்தான். இருள் சூழ்ந்திருக்க, ஊர் அடங்கியிருந்தது. இரவு உணவு முடித்து படுக்கைக்கு வந்தவுடன் மடிக்கு மாறிவிட்ட கணவனிடம் எப்படி கேட்க என்று  ஜமுனா பார்த்திருக்க

என்ன கேட்கணும்..?” என்றான் கணவன் கண் திறந்து

ஊர்ல இருந்து சித்தி, பெரியம்மா, அத்தை எல்லாம் போன் பண்ணியிருந்தாங்க, விருந்துக்கு எப்போ வரீங்கன்னு கேட்டு..?” ஜமுனா சொல்ல

நாம எப்போ விருந்துக்கு வறோம்ன்னு அவங்ககிட்ட சொன்னோம்..?” என்றான் கணவன்

ஜமுனா புரியாமல் பார்த்தவள், “விருந்துக்கு போறது முறை தானே..?” என்று முணுமுணுத்தாள்

போறது மட்டுமில்லாம, நாமும் சொந்த பந்தத்துக்கு விருந்து கொடுக்கிறது கூட முறை தான். நாம செய்யலையே..” என்றான்

ஆமா தானே ஏன் செய்யல..? ஜமுனா கேள்வியாக பார்க்க

உனக்கு கிடைச்சு இருக்கிறதே ஒரு வார லீவ் தான். இதுல விருந்து, அது இதுன்னு அலைய முடியாதுன்னு தான்..” என்றான்

எல்லாம் தப்பா நினைப்பாங்க மாமா, ஒரு நாள் மட்டும் போய்ட்டு வந்துடலாம்..” என்றாள் ஜமுனா

தப்பா நினைச்சா நினைச்சுட்டு போகட்டும் , நாம முதல்ல நம்ம லைஃபை பார்க்கலாம், அப்புறம் சொந்த பந்தத்தை பார்க்கலாம், நாம வாழத்தானே ஊர்க்கூடி கல்யாணம் பண்ணி வச்சாங்க, அப்பறம் என்ன..?” என்று முடித்துவிட்டான்

இவர் என்ன புதுசா பேசுறார், நாளைக்கு அவங்க போன் பண்ணா என்ன சொல்ல..? அம்மாகிட்ட கேட்க சொல்லிடலாமா..? அவங்க சமாளிச்சுப்பாங்க..’ என்று கணவன் முகத்தை பார்த்தபடி யோசித்திருக்க

கண் சிமிட்டாம பார்க்கிற, உன் அளவு இல்லை நான்..” என்றான் கணவன் அவள் விலகா பார்வையில்

ஜமுனா சிந்தனை கலைந்தவள், “ஏன் இவருக்கு என்னவாம்..?” என்று  உரிமையாய் அவன் புருவத்தை நீவிவிட்டாள்

அவள் கவனம் தன் பக்கம் திரும்பியதில், யுவராஜ் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை விரிய, மனைவி பின் தலைக்கு கை கொடுத்து  இழுத்தவன்உதட்டோடு உதடு ஒத்தடம் கொடுத்தான்

அடிக்கடி இழுத்துக்க வேண்டியது..’ ஜமுனா செல்ல முறைப்புடன் பார்க்க, கணவன் கைகள் திரும்ப நீண்டது. ஜமுனா தலையை பின்னுக்கு இழுத்தவள், விரிந்த சிரிப்புடன் புருவம் தூக்க

அழகிடி நீ..” என்றான் கணவன் ரசித்து. முதல் முறையாக யுவராஜ் அவளை அழகி என்று சொல்லி கேட்கிறாள்

ஆச்சரியத்துடன் முகமும் சிவக்க, திரும்ப ஒரு இதழ் ஒத்தடம் கொடுத்தவன், “நான் பார்க்கிற பார்வையிலே உனக்கு புரியும்னு நினைச்சேன்..” என்றான்

ஜமுனாவிற்கு அவன் பார்வைகள் நினைவிற்கு வந்து சிலிர்க்க வைக்க, யுவராஜ் கரங்கள் அவளை அவனுள் இழுத்து கொள்ள ஆரம்பித்தது. கனவிலும், நினைவிலும் ஒருவனே அவளை ஆட்சி செய்ய, அவனுக்கோ முற்று முழுதாக மனைவியில் தொலைந்து போகவே விருப்பம்.

Advertisement