Advertisement

கேளாய் பூ மனமே 5

இப்போ உனக்கு சந்தோஷமா கேசவா..? இன்னும் உன்னால  நான் என்ன எல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ..?” கோயிலில் இருந்த வந்த அருணாச்சலம் வருத்தத்துடன் அமர்ந்துவிட்டார்

ப்பா.. நான் இப்படி எல்லாம் ஆகும்னு நினைக்கலைப்பா, தொழில் அமையும்வருமானம் பெருகும்ன்னு தான் செஞ்சேன், அது இப்படி..”

இதையே திரும்ப திரும்ப சொல்லாத கேசவா..? விடு..” என்றார் அருணாச்சலம் சலிப்புடன்

ஏங்க அவன் நல்லதுக்கு தான் செஞ்சான், அவன் நேரம் கடனா தலையில உட்கார்ந்துக்குச்சு, அவன் என்ன பண்ணுவான்..?” காமாட்சி எப்போதும் போல ஒரு மகன் மீதான அன்பில் பேச

போதும் காமாட்சி.. நீ உன் மகனுக்கு பேசினது போதும், இங்க யாரும் அவன் கெட்டுப்போக திட்டலை, செய்யாத காரியத்துக்கு பேசல, அவன் இன்னும் கைப்பிள்ளையும் இல்லை, மருமகள் வீட்டுக்கு வந்தாச்சு, இன்னும் கூட யோசிக்காம செஞ்சிடுறது, அப்புறம் அதுக்கு ஒரு காரணத்தை தூக்கிட்டு ஓடி வரது, முடியல, இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு நான் தான் இத்தனை வருஷம் பட்டேன்னா, இப்போ என் பேரனும் அப்பாவால கஷ்டப்படுற நிலைமை..”

ப்பா.. நான் எப்படியாவது அடமானம் வச்ச நிலத்தை மீட்டுடுவேன். என்னை நம்புங்க, யுவராஜ் வரைக்கும் என்னை வச்சு பேசாதீங்க, கஷ்டமா இருக்குப்பா..” கேசவன் எங்கோ பார்த்து சொல்ல

உன் மகனை வச்சு உன்னை பேசணும்ன்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன கேசவா..? இதோ கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள அடமானம் பிரச்சனை தலையெடுக்க ஆரம்பிச்சிடுச்சு, பாவம் பிள்ளை என்ன செய்வான், நம்மகிட்ட என்ன வருமானம் கொட்டியா கிடக்கு, தூக்கிட்டு போய் கொடுத்துட்டு பத்திரத்தை மீட்டுட்டு வர…?”

வாங்கினதை  எல்லாம் வித்திடலாம்ப்பா.. மீதி நிக்கிற பணத்துக்கு..”

மீதி நிக்கிற பணத்துக்கு என்னையும், உன் அம்மாவையும் வித்துடு..” அருணாச்சலம் கோபத்துடன் சொன்னார்

ப்பா..” கேசவன் திணற

பின்ன என்னடா, வாங்கினதை  எல்லாம்  விக்க தெரியாம தான் நானும், உன் மகனும் மல்லு கட்டிட்டு இருக்கோமா..? எப்படி வாங்கினாலும் நம்ம களத்துக்கு வண்டிங்க  வந்து நின்னாச்சு, அதை காப்பாத்துறதை விட்டு விக்கிறதுக்கு நிக்கிறான். எல்லாத்துக்கும் அவசரம். முன்யோசனை இல்லை. வாங்கின ஆறு மாசத்துலே கை மாத்திவிட தான் அவ்வளவு பணம் கடன் பட்டியாக்கும், இனி எப்பாடு பட்டாவது பணத்தை திரட்டி பத்திரத்தை மீட்க வழி பார்க்கனும்..” அருணாச்சலம் மலைப்புடன் களத்தில் நின்றிருந்த வண்டிகளை பார்த்தார்

‘உழவு டிராக்டர், லாரி, JCB வண்டி..’ என்று வரிசையாக நின்றிருந்தது. இதில் உழவு டிராக்டர் வாங்க மட்டும் கேசவனிடம் பணம் கொடுத்த அருணாச்சலம், காமாட்சியின் மருத்துவத்திற்காக பெரிய மகள் ஜெயலக்ஷ்மியுடன் சென்னை சென்றார். காமாட்சிக்கு வயிற்றில் கட்டி ஒன்று வளர்ந்து தொந்தவு கொடுக்க, ஆப்பரேஷன் செய்ய வேண்டிய நிலை

மூன்று வாரம் அங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டது. உதவிக்கென ஆகாஷ் சென்னை சென்றுவிட, யுவராஜ் மும்பையில் இருந்தான். வேலையை விட்டு தனியே ஆபிஸ் ஆரம்பித்து இரு வருடம் ஆகியிருக்க, முதல் முறையாக மிகப்பெரிய கம்பெனி க்ளைண்டாக கிடைத்திருந்தனர். நல்லபடியாக முடித்து தர வேண்டி மும்பையிலே ஒரு மாத வாசம்

வெளியே சென்றிருந்தவர்கள் எல்லாம்  சென்ற காரியத்தை நல்ல படியே முடித்து வீடு வந்து சேர, பிரச்சனை நடுகளத்தில் வரிசை கட்டி நின்றிருந்தது. அருணாச்சலம் இடிந்து போய் அமர்ந்திருக்க, பின்னாலே வந்த யுவராஜ்க்கு தலை சுழன்றது. புத்தம் புது வண்டிகள் அவனை அச்சறுத்தியது

என்னப்பா இது..?” என்று கேசவனிடம் கேட்க

அவரோமுதல்ல வந்து பூஜை பண்ணு, காலையில தான் வண்டிங்க வந்துச்சு, நீ வந்து பூஜை பண்ணனும்ன்னு தான் காத்திட்டு இருக்கோம்.. வா.. வா..” என்றார் ஆர்பரிப்பாய்

யுவராஜ் தாத்தாவை பார்க்க, அவரோ பேரனின் பார்வையை சந்திக்க முடியாமல் அமர்ந்திருந்தார். வீட்டு பெண்கள், ஆகாஷ், ஜெயலக்ஷ்மி குடும்பம், ஊர்காரர்கள், உறவுக்காரர்ங்கள் என்று மிகப்பெரிய கூட்டம் வண்டிகளை பார்த்து ஆச்சரியத்தில் இருக்க, “பணம்.. பணம் இதுக்கு..?” என்றான் யுவராஜ் தந்தையிடம்

அது.. அது..ம்ப்ச்.. அப்புறம் சொல்றேன் யுவராஜ், நீ முதல்ல போய் குளிச்சுட்டு வா, ஓடு..” என்று விரட்ட, காமாட்சி, வைஜெயந்தி இருவரும் வண்டிகளை பூஜைக்கு தயார் செய்து கொண்டிருந்தனர்

ஜெயலக்ஷ்மிக்கு அம்மா வீட்டு வருமானம் தெரியும் என்பதால் இவ்வளவு பணம் திடீர் என்று எங்கு முளைத்தது, அதுவும் அப்பா, யுவராஜ் ஊரில் இல்லாத நேரம் அண்ணா என்ன பண்ணார்..? ஓரமாக யோசித்து நின்றிருக்க

வந்து பூ வை ஜெயா.. வா..” என்று காமாட்சி மகளை அழைத்தார். ஜெயலக்ஷ்மி இடிந்து போய் அமர்ந்திருந்த அப்பாவை பார்த்தபடி எல்லாம் செய்ய, யுவராஜ் குளித்து வந்தான்.

ஆகாஷும், தாரணியும் JCB பக்கம் நின்று வீடியோ காலில் ஜமுனாவிடம் பேசி கொண்டிருக்க, யுவராஜ் தாத்தாவிடம் வந்து நின்றான். இருவருக்கும் வாய் திறக்கவே அவ்வளவு பயம். திரைக்கு பின் ஒளிந்திருக்கும் பூதம் எவ்வளவு பெரிதோ  என்று உள்ளுக்குள் தடதடத்தது

நல்ல நேரம் முடிய போகுது வாங்க..” காமாட்சி வர, தாத்தாவும் பேரனும் கடமைக்கே வந்து நின்றனர். “நீங்க தேங்காய் உடைங்க, நீ கற்பூரம் காட்டு..” என்று காமாட்சி இருவரையும் முன் நிறுத்தி பூஜை முடிக்க, வந்திருந்தவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கப்பட்டது

நீ கொஞ்ச நேரம் உட்காரும்மா, ஆப்பரேஷன் முடிஞ்ச உடம்பு..” ஜெயலக்ஷ்மி அன்னையை அதட்டி அமர வைத்து, அண்ணியுடன் சேர்ந்து எல்லாம் முடித்தார். கூட்டம் கலைய, வீட்டு ஆட்கள் மட்டும்

அதுவரை பல்லை கடித்திருந்த அருணாச்சலம், “கேசவா..” என்றார். பெரிதான சத்தமே. காமாட்சி, வைஜெயந்தி, ஜெயலக்ஷ்மி வேகமாக வர, யுவராஜ் தாத்தா பக்கத்தில் அப்பாவை எதிர்பார்த்து நின்றான்

கேசவன் பூரிப்புடன் வந்து நின்றவர், “சொல்லுங்கப்பா.. பொறுமையா உட்கார்ந்து பேச முடியல, வண்டிங்க எல்லாம் புடிச்சிருக்கா..?” ஆர்வத்துடன் அப்பா, மகன் முகம் பார்க்க, 

இதுக்கு எல்லாம் பணம் எங்கிருந்து வந்துச்சு கேசவா..?” அருணாச்சலம் அடக்கி வைத்த கோபத்துடன் கேட்டார்.

அது.. அது அப்பறம் சொல்றேன்ப்பா, நீங்க வண்டிங்க பத்தி ஒன்னும் சொல்லலையே..” கேசவன் மீண்டும் கேட்க, 

கேசவா என்னை பேச வைக்காத, பணம் என்ன பண்ணன்னு மட்டும் சொல்லு..” அருணாச்சலம் எழுந்து  நின்று அதட்டியே கேட்டார்

அது.. அதுப்பா நம்ம இருபத்தைஞ்சு ஏக்கருக்கு வெளியே ஒவ்வொரு முறையும் டிராக்டர் கூப்பிட்டு கூலி கொடுக்கிறதுக்கு நாமளே டிராக்டர் வாங்கிடலாம்னு என்கிட்ட டிராக்டர் வாங்க பணம் கொடுத்துட்டு போனீங்களா..? அப்போ எனக்கு இன்னொரு யோசனையும் வந்துச்சு, லாரியும், JCBயும் கூட நமக்கு அதிகமா தேவைபடுதேன்னு.. அதான்..”

அதுக்கு என்ன பண்ண..?” அருணாச்சலம் தடதடக்கும் நெஞ்சை நீவிவிட்டார்

அதான் ஷோ ரூம் போனப்போ நான் வண்டிங்க விலை எல்லாம் விசாரிச்சுட்டு இருந்தேனா, அப்போ வெங்கடேசன் இருக்கான் இல்லை, பெரிய பாப்பா ஊர்ல வட்டிக்கு விடுவானே வெங்கடேசன் அவன் நான் விசாரிக்கிறதை பார்த்து என்கிட்ட பேசினான்..”

“சின்ன முதலீடு, பெரிய தொழில், உங்க ஊர்ல இந்த வண்டிங்க இல்லாம எங்க ஊர்ல தானே கூப்பிட வேண்டியிருக்கு, வாங்கி போட்டிங்கனா உங்களுக்கும் ஆச்சு, ஊருக்கு ஆச்சு, தொழிலுக்கும் ஆச்சுன்னு சொன்னான், நானும் அவன் சொன்னதை கேட்டு அவன்கிட்ட.. அவன்கிட்ட வட்டிக்கு..” என்று நிறுத்த, புரிந்த வீட்டு ஆட்கள் அதிர்ச்சியில் நிற்க

எவ்வளவு பணம்ப்பா..” என்றான் யுவராஜ்

அது.. இருபத்தைஞ்சு லட்சம், ஒரு ரூபாய் வட்டி தான் யுவா, கட்டிக்கலாம்..” கேசவன் வேகமாக சொல்ல, அருணாச்சலம் தூண் பிடித்து நின்றுவிட்டார்.

யுவராஜ் புருவம் சுருக்கியவன், “பணத்துக்கு செக்கியூரிட்டி கேட்டிருப்பானேப்பா..?” என்றான் கேள்வியாக

கேட்டான்ப்பா.. அதுக்கு.. அதுக்கு ஈடா நம்ம இருபத்தைஞ்சு ஏக்கர் பத்திர..” 

கிறுக்கனாடா நீ..? அடி மடியிலே கை வச்சிருக்கியே..?” அருணாச்சலம் கை ஓங்கியே விட்டார்

தாத்தா..” யுவராஜ் அவரை பிடித்து அமர வைத்து, ஜெயலக்ஷ்மி எடுத்து வந்த தண்ணீரை கொடுத்தான். “இதுக்கு பதிலா விஷத்தை கொடு..” அருணாச்சலம் தண்ணீரை  தள்ளிவிட்ட ஆவேசத்தில், கேசவனுக்கு வேர்த்தது.

“ப்பா.. நான்.. நான் வருமானம் வரும், தொழிலும் பெருகும், பசங்க கஷ்டப்பட வேணாம்ன்னு தான்..” கேசவன் சொல்ல

பேசாத கேசவா, நீ பேசி என்னை பேச வைக்காத..” அருணாச்சலம் கையெடுத்தே கும்பிட்டுவிட்டார்

ப்பா..” கேசவன் கலங்க, யுவராஜ் ரூமிற்கு சென்றுவிட்டான். நின்றால்  எதாவது பேசிவிடுவோம் என்ற பயம்

இரவு போல அருணாச்சலம் பேரனை தேடி வந்தவர், “அந்த வெங்கடேசனிடம் பேச வேண்டும்..” என்றார்

நேரில் பார்த்து பேசித்தான் ஆக வேண்டும். இருந்த நிலைக்கு அக்ரீமெண்ட் கூட வாங்கி பார்க்கவில்லை. கேசவன் சரியாக அக்ரீமெண்ட் போட்டிருப்பாரோ என்பது கூட சந்தேகமாகி போனது. அப்பாவிடம் அது பற்றி கேட்க  கூட  மனம் ஒத்துழைக்கவில்லை. வெங்கடசனிடமே வாங்கி பார்த்துவிட வேண்டும்.

Advertisement