Advertisement

கேளாய் பூ மனமே 4

அடுத்த நாள் காலை யுவராஜ் போன் ஒலித்ததில் இருவருக்கும் உறக்கம் கலைய, ஜமுனாவால் கண்களை திறக்கவே முடியவில்லை. எரிச்சலுக்கு கண்களை திறந்து திறந்து மூட, கவிழ்ந்து படுத்தபடி மனைவியை ரசித்திருந்தான் யுவராஜ்

நின்ற போன் திரும்ப ஒலிக்க, ஜமுனா வெகுவாக முயன்று கண் திறந்து அருகில் படுத்திருந்த கணவன் முகத்தை பார்த்தாள். “தூங்கு..” யுவராஜ் மனைவி தலையை வருடி, எழுந்து போன் எடுத்தான்

ஜமுனாவிற்கும் தூக்கம் இழுக்க, திரும்ப தூக்கத்திற்கு சென்றாள். யுவராஜ் அம்மா வைஜெயந்தி தான் அழைத்திருந்தார். “கோயிலுக்கு கிளம்பலையா..?” என்று கேட்க,

யுவராஜ், “நீங்க போய் பூஜைக்கு ரெடி பண்ணுங்கம்மா, நாங்க வந்துடுறோம்..” என்று வைத்தவன் ஸ்க்ரீனை விலக்கி பார்க்க, சூரியன் உதிக்க ஆரம்பித்தார்

யுவராஜ் சென்று குளித்து வந்தவன், ஜமுனா இன்னும் தூக்கத்தில் இருக்க, தாத்தாவிற்கு அழைத்து பேசி கொண்டிருக்க, ஜமுனாவின் போன் ஒலித்தது. ஜெயலக்ஷ்மி. சைலெண்டில் போட்டவன், தாத்தாவுடன் பேசி கொண்டே, மனைவி தோள் தட்டி எழுப்பி போனை கொடுத்தான்

ஜெயலக்ஷ்மி திரும்ப அழைக்க, “சொல்லுங்கம்மா..” என்றாள் படுத்தபடி

இன்னும் தூங்கிட்டு இருக்கியா ஜமுனா..? கோயிலுக்கு கிளம்பலையா..? நேத்து அவ்வளவு சொல்லி அனுப்பினேன் தானே..?” என்று திட்ட ஆரம்பிக்க, நேரம் பார்த்தவள்

இதோ..இதோம்மா..” என்று வைத்து குளிக்க ஓடினாள். ஜன்னல் ஓரம் நின்று போன் பேசி கொண்டிருந்த யுவராஜ் குளித்திருப்பது கண்ணில் பட, ‘என்னையும் எழுப்பியிருக்கலாம் இல்லை..’ என்று முணுமுணுத்தபடி, அவரசமாக குளித்து வந்தாள்

யுவராஜ் கிளம்பி போனில் இருக்க, புடவையை கட்ட எடுத்தவள், கணவன் இருக்கவும், “மாமா..” என்றாள்

யுவராஜ் நிமிர்ந்து பார்க்க, “புடவை கட்டணும் மாமா..” என்றாள்

புரிந்தாலும், “கட்டிவிடணுமா..?” என்றான் வேண்டுமென்றே

ஆஹ்ன்.. எனக்கே கட்ட தெரியும் மாமா..” என்றாள் ஜமுனா வேகமாக

சரி..” என்று யுவராஜ் திரும்ப போனில் கண் பாதிக்க

மாமா..” என்றாள் ஜமுனா கதவை பார்த்து

கதவு மூடணுமா..?” யுவராஜ் எழுந்து சென்று மூடி வந்தான்

அச்சோ மாமா.. நீங்க.. நீங்க வெளியே..” ஜமுனா சொல்ல வந்தவள், கணவனின் பார்வையில் முகம் சிவக்க, கெஞ்சலாக பார்த்தாள்

நான் வெளியே போகணுமா என்ன..?” யுவராஜ் கண்களில் விஷமத்துடன் கேட்க

ஜமுனா புடவையை கையில் பிடித்தபடி, “மாமா..” சிணுங்கலாக லேசாக காலை உதைக்க, யுவராஜ் கண்கள் மின்ன மனைவியை பார்த்திருந்தான். 

‘வேணும்ன்னு பண்றார்..’ என்று கண்டுகொண்டாள். ‘லேட் வேற ஆகுது..’ நகராமல் வம்பாக அமர்ந்திருக்கும் கணவனையும் பார்த்தவள், ‘பேசாம நாம ஹாலுக்கு போயிடலாம்..’ என நகர

போறேன்..” என்று யுவராஜ் கதவை திறந்தவன், “இன்னைக்கு மட்டும் தான்.. அதுவும் கோயிலுக்கு போறதால..” என்று கதவு மூடி சென்றான்.

ஜமுனா கணவன் சொன்னதில் நொடி திகைத்து, நேரம் ஆவதை உணர்ந்து புடவை கட்டியவள், கதவை திறந்தாள். குத்தகைக்கு இருப்பவர் பூ எடுத்து வந்திருக்க, யுவராஜ் வாங்கி கொண்டு உள்ளே வந்தவன் கண்ணாடி முன் வைத்து அமர்ந்தான்

யுவராஜ் மொபைலில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பலவகையான பாடல்கள் ஒலிக்க, பார்வை என்னமோ மனைவி மேல்தான் இருந்தது. கிரேப் சில்க் சேரியை லேசாக தூக்கி பிடித்தபடி, புதிதான கொலுசு சத்தமிட, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்

அவன் மூன்று முடிச்சிட்டிருந்த மஞ்சள் கயிற்றின் மிச்சம் அவளின் வெற்று முதுகில் ஈரபதத்துடன் உரசி கொண்டிருக்க, ஜமுனா ஜிமிக்கி அணிந்தவள், ஆரம் பூட்டினாள். இரு கைகளுக்கும் வளையல் மாட்டியவள், முடியை உதறி கிளிப் இட்டு, யுவராஜ் வைத்திருந்த பூவை வைத்தாள்

இறுதியாக குங்குமம் வைத்தவள், மீதம் இருந்த நகைகளை  பத்திரப்படுத்த

“இளையவளின் இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்..” வரிகள் அவனின் மொபைலில் ஒலிக்க, யுவராஜின் கண்கள் அவள் இடை சேலை விலகளில் சிக்கி கொண்டிருந்தது

“இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன..?” தொடர்ந்து பாட

மாமா நான் ரெடி போலாம்..” மனைவி கண்ணாடி முன் நின்று சரிபார்த்து, மொபைலுடன் வாசலுக்கு நடந்தாள்

யுவராஜ் வாரியிருந்த முடியை திரும்ப வாரி, வீட்டை பூட்ட, ஆகாஷ் காருடன் வந்தான். உடன் தாரணியும். “உன்கிட்ட யார் கார் கொடுத்தா..?” யுவராஜ் தம்பியிடம் கேட்டு தான் கார் எடுக்க, பின்னால் ஜமுனா தங்கையுடன் ஏறி கொண்டாள்

மலை வளைவுகளில் கவனம் தேவை என்பதால், ஆகாஷ் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்லாமல் முன்னால் ஏறிக்கொண்டான். அப்பா சொல்ல சொல்ல கேட்காமல் எடுத்து வந்திருந்தானே

க்கா..  குளிர் அதிகம் போலயே, முகம் எல்லாம் சிவந்திருக்கு..” தாரணி அக்காவிடம் மெல்லிய குரலில் கேட்க

ஜமுனா தங்கையை சந்தேகமாக பார்த்து, “உனக்கு இங்க இருக்கிற குளிர் தெரியாதா..? புதுசா கேட்கிற..” என்றாள்

தெரியும் தான் சும்மா கேட்டேன்..” யுவராஜ் இருப்பதால் தாரணி அமைதியாகிவிட்டாள்

அரை மணி நேர பயணத்தில் யுவராஜின் குலதெய்வ கோயில் வர, இரு குடும்பமும், உறவுகளும் இவர்களுக்காக காத்திருந்தனர். ஜெயலக்ஷ்மி மகளை முறைக்க, வைஜெயந்தி மருமகள் வரவும் பொங்கல் வைத்து, பிரகாரத்தின் முன் தம்பதி சகிதமாக நின்றனர்

எல்லாம் தயாராக இருந்ததால் அடுத்த சில நிமிடங்களில் பூஜை முடிந்து, அன்னதான உணவும் பரிமாறப்பட்டது. இவர்களும் உணவை முடிக்க, தயாநிதி அருணாச்சலத்திடம் தனியாக பேசி கொண்டிருந்தார்

அருணாச்சலம் முகத்தில் தவிப்பு, சங்கடம் தெரிய, வேலைக்காக கட்டியிருந்த வேஷ்டியை இறக்கிவிட்டபடி அவர்களிடம் சென்ற யுவராஜ், “என்ன தாத்தா..?” என்றான் கேள்வியாக. தயாநிதி மருமகன் வரவும் பேச்சை நிறுத்திவிட்டார்

அது.. அது சும்மா பேச்சு தான்..” அருணாச்சலம் சொல்ல, யுவராஜ் பார்வை தாத்தாவை விட்டு அசையவில்லை. சொல்லாமல் நகர மாட்டேன் என்பதாய் நிற்க

அது.. க்கும்.. நம்ம நிலம் அடமானத்துல இருக்கிறது பத்தி கேட்டுட்டு இருக்கார்..” என்றார் அருணாச்சலம்

இதுல உங்களுக்கு எதாவது கஷ்டம் இருக்கா மாமா..?” என்றான் மருமகன் எடுத்ததும் நேரே மாமனாரிடம்

தயாநிதிக்கு ஒரு மாதிரி ஆனதுடன், கோவமும் வந்தது. ‘என் பொண்ணை கொடுத்திருக்கேன், எனக்கு கஷ்டம் இருக்கான்னு கேட்டா  என்ன அர்த்தம்..?’ அவர் அவரின் மாமனார் அருணாச்சலத்தை பார்த்தார்

அருணாச்சலம் பேரனிடம் பேசாத என்பது போல கண் காட்டினார்அவனோ, “உங்களுக்கு யார் சொன்னா..?” என்று மாமனாரிடம் கேட்டான்

விஷயம் உண்மையான்னு தான் கேட்டுட்டு இருந்தேன்..” என்றார் தயாநிதி

உண்மை தான்.. உங்களுக்கு சொன்ன ஆளை சொல்லுங்க மாமா..” என்றான் மருமகன் விடாமல்

அது.. அவனே தான்.. வெங்கடேசன்..” தயாநிதி சொல்ல

வெளியே பேச மாட்டேன்னு எங்ககிட்ட சொல்லி, சொல்லியிருக்கான்..” யுவராஜ் முகம் இறுகியது

அவன் என்கிட்ட தான் சொன்னான்..” தயாநிதி சொல்ல

உங்கிட்ட கூட அவன் ஏன் சொல்லணும்..?” என்றான் யுவராஜ் பட்டென

என்ன மாமா இது..? என்கிட்ட சொன்னதுல என்ன இருக்கு..?” தயாநிதி அவர் மாமனாரிடம் கேட்டார்

“இது பத்தி வெளியே பேச மாட்டேன்னு சொல்லி,  சொல்லியிருக்கான் அவன், இன்னைக்கு உங்ககிட்ட சொன்னது போல, நாளைக்கு மத்தவங்ககிட்டேயும் சொல்வான், என்ன தைரியம் அவனுக்கு..?” யுவராஜ் தாடை இறுக

மாமா.. இது சரியில்லை, அவன் என்கிட்ட சொன்னது தப்புங்கிறது போல இருக்கு உங்க பேரன் பேச்சு..” என்றார் மாமனாரிடம் தயாநிதி

உங்ககிட்ட சொன்னது தப்புன்னு நான் எப்போ சொன்னேன்..? அவன் வெளியே சொன்னது தான் தப்புன்னு சொல்றேன்..” என்றான் யுவராஜ்

இது என்ன மாமா..?” மருமகனின் பேச்சில் மாமனாரின் முகம் பார்த்தார் தயாநிதி

சரி அப்படியே அவன் சொல்லியிருந்தாலும் நீங்க என்கிட்ட தான் மாமா கேட்டிருக்கணும், தாத்தாகிட்ட இல்லை..” என்றான் யுவராஜ்

அவர் என் மாமனார் யுவராஜ், கேட்கிறதுல ஒன்னுமில்லை..” தயாநிதி சொல்ல

நானும்  உங்க மருமகன் தானே, என்கிட்ட கேளுங்கனு தான் நானும் சொல்றேன்..” என்றான் மருமகன் விடாமல்

தயாநிதி நொந்து போக, “யுவராஜ்.. நீ போ, நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிக்கிறேன்..” என்றார் அருணாச்சலம்

தாத்தா.. நானும் அவர் மாப்பிள்ளை தான், அவர்  என்கிட்ட பேசட்டும்..” என்றான் பேரன் அசைய மாட்டேன் என்பதாய்

என்ன யுவராஜ்..?” என்று வந்தார் ஜெயலக்ஷ்மி. இவ வேறயா..? தயாநிதிக்கு தெரியுமே மனைவி எப்படி பேசுவாள் என்று. அருணாச்சலத்தின் முகத்தை மறுப்பாக பார்க்க, அவர் மகளிடம் சொன்னால் யுவராஜை கூட்டி கொண்டு சென்றுவிடுவாள் என்று நடந்த பேச்சை சொல்லிவிட்டார்

அவன் சொன்னான்னு நீங்க என் அப்பாகிட்ட இதை கேட்பீங்களா..?” என்று கணவனிடம் சண்டைக்கு நின்றுவிட்டார் ஜெயலக்ஷ்மி. யுவராஜாவது குரல் அடக்கி பேசினான். ஜெயலக்ஷ்மி அப்படி ஏதும் பார்க்கவில்லை

ஜெயாம்மா.. என்ன இது..? நீயும் ஆரம்பிக்காத..” அருணாச்சலம் மகளை கண்டிக்க

எங்க அப்பாகிட்ட இதை கேட்கலாமா நீங்க..?  என்கிட்டயோ, யுவராஜ்கிட்டேயோ, என் அண்ணாகிட்டயோ தானே கேட்டிருக்கணும், அவர் சங்கடப்படுவார்ன்னு தெரிய வேண்டாம்..” ஜெயலக்ஷ்மி விடுவேனா என்றார்

விடுங்க..” யுவராஜ் சொல்ல

என்ன விட, இந்த சின்ன விஷயம் இவருக்கு தெரிய வேண்டாம், இல்லை இதான் வாய்ப்புன்னு என் அப்பாவை பேச பார்த்தீங்களா..?” என்றார் ஜெயலஷ்மி

ஐயோ.. மாமா இவ பேச்சை கேட்காதீங்க, நான் அப்படி எல்லாம் நினைக்கலை, உதவி தேவைப்படுமான்னு தான் கேட்க வந்தேன்..” என்றார் தயாநிதி உண்மையான பதற்றத்துடன். 

அப்போ எங்க அம்மா வீட்டு ஆளுங்களால சமாளிக்க முடியாதுன்னு சொல்றீங்களா..?” ஜெயலஷ்மி பேச

ஜெயாம்மா.. போதும்..” அருணாச்சலம் அதட்டிலிட்டு மகளை நிறுத்தியவர்,  “இதை பத்தி அப்புறம் பேசலாம்.. எல்லாம் கிளம்ப நிக்கிறாங்க..” வீட்டின் பெரிய மனிதராய் அவர்களை இழுத்து கொண்டு குடும்பத்துக்கு அருகில் வந்துவிட்டார்.

நால்வரின் முகம் சரியில்லாமல் இருக்க, மற்றவர்கள் கேள்வியாக பார்த்தனர். “நாங்க கிளம்புறோம்..” யுவராஜ் அங்கிருந்து அப்படியே ஏலகிரி மலைக்கு செல்ல

வீட்டுக்கு வந்துட்டு போங்க..” என்றார் காமாட்சி

அதுவும் நம்ம வீடு தான் பாட்டி..” பேரன் முடித்துவிட, ஜமுனா எல்லோருக்கும் சொல்லி கொண்டு காரில் ஏறினாள்

ஏலகிரி பாதைக்கு சென்றுகொண்டிருந்த கார் வழியில் பாதையை மாற்ற, ஜமுனா கணவனை கேள்வியாக பார்த்தாள். அவன் முகம் இறுகியிருக்க, வழியில் உள்ள தேங்காய் தோப்பின் முன் காரை நிறுத்தியவன், “டூ மினிட்ஸ்..” என்று உள்ளே சென்றான்

இது வெங்கடேசன் அண்ணாவோட தோப்பாச்சே..” தயாநிதியின் பங்காளி என்பதால் ஜமுனா கார் கண்ணாடி வழியே பார்க்க, சற்று தொலைவில் யுவராஜ் தெரிந்தான்.  

வெங்கடேசனிடம் ஏதோ கையை ஆட்டி பேசியவன் முகத்தில் கோவம் நன்கு தெரிந்ததுவெங்கடேசன் ஏதோ மறுக்க, யுவராஜ் நின்று கேட்கவில்லை. காருக்கு திரும்பியவன், சரியான பாதைக்கு காரை  திருப்பினான்.

ஏதோ பிரச்சனை என்று புரிய, கேட்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் வந்து கொண்டிருந்த  ஜமுனா, யுவராஜ் முகம் தெளியாததில்,   “எதாவது பிரச்சனையா மாமா..?” என்று கேட்டுவிட்டாள்.  

யுவராஜ் புருவம் சுருங்க ஏதோ சிந்தனையில் இருந்தவன், “என்ன..?” என்றான் மனைவியிடம் கவனிக்காததால்

எதாவது பிரச்சனையான்னு..” ஜமுனா மீண்டும் கேட்க

யுவராஜ் முகத்தில் இறுக்கம் குறைய ஆரம்பிக்க, “பெருசா ஒன்னுமில்லை.. பார்த்துக்கலாம்..” என்றான்

இதற்கு மேல் என்ன என்று எப்படி கேட்க..? ஜமுனா வெளியே பார்க்க, யுவராஜ் தன் சிந்தனைகளை தள்ளி வைத்தவன், மலை ஏறுமுன் வழியில் நிறுத்தி, “இளநீர் குடிக்கலாம்..” என்றான் மனைவியிடம். வெயில் ஏற ஆரம்பித்திருக்க, இருவரும் குடித்து மலை ஏறினர்

மலை ஏற ஏற வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பிக்க, கார் கண்ணாடியை இறக்கிவிட்டான் யுவராஜ். காற்று சில்லென்று வீச, ஜமுனா கைகளை தேய்த்துவிட்டாள். யுவராஜ் கண்கள் அவள் கைகள் மீது பட்டதுடன், பளிச்சென்ற இடையிலும் சிக்ககாலையில் கேட்ட பாடல் வரிகள் ஹம்மிங்காக வெளியே வந்தது.

ஜமுனா ஆச்சரியத்துடன் கணவனை பார்த்தவளுக்கு, அந்த வரி புரியவில்லை. எங்கோ கேட்டது போல் இருக்க, “என்ன பாட்டு மாமா இது..? கேட்டது மாதிரி இருக்கு..” என்றாள் கணவனிடம்

யுவராஜ் குறும்புடன், தொடர்ந்த வரிகளையும் ஹம் செய்து காட்டஜமுனாவிற்கு நினைவு வராமல் யோசித்தாள்

யுவராஜ் யோசிக்கும் மனைவியை ரசிப்புடன் பார்த்தபடி, வீட்டின் முன் காரை நிறுத்திசாவியை மனைவியிடம் கொடுத்தான். ஜமுனாவிற்கு அந்த பாடல் எது என்று தெரியாமல், தானும் அதையே  ஹம் செய்தபடி கதவை திறந்து உள்ளே செல்ல, பின்னால் கதவை லாக் செய்தான் யுவராஜ்

ஜமுனா ரூமிற்கு சென்று  மொபைலை வைக்க, யுவராஜ் விரல்கள் அவள் சேலை விலகிய இடையை அழுத்தமாக பற்றியதுடன்

இடையவளின் இடைவெளி ஒரு நூலகம்..

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்..” ஹம் செய்ததை பாடினான்

இடையில் அழுந்த படிந்த கரத்தின் சூட்டில், ஜமுனாவிற்கு இப்போது பாடல் வரிகளே கவனித்தில் இல்லை

புரிந்தாலும்

இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன..?” என்று தொடர்ந்து பாடி அவளை அனைத்தவன்

இப்போ என்ன பாட்டுன்னு தெரிஞ்சுதா..?” என்றான் மனைவி காதோரம்

ஆஹ்ன்..” ஜமுனா அவன் அணைப்பில் திணற

தெரியலையா.. நான் சொல்றேன்..” என்ற புதுமணமகன், சொல்லி தந்ததில், பாடல் என்ற ஒன்றையே ஜமுனா மறந்து தான்  போனாள்.

Advertisement