Advertisement

அவளுக்கு ஒரு தங்கை தாரணி உண்டு. அவளும் ஆகாஷ் படிக்கும் என்ஜனியரிங் கல்லூரியில் தான் படித்து கொண்டிருந்தாள். ஜமுனா தந்தை தயாநிதிக்கு விவசாயம் தான் தொழில் என்றாலும், டவுனில் ஹார்ட்வேர் கடை ஒன்றையும் வைத்திருந்தார்

நாள் நெருங்கவும் முகூர்த்த பட்டு எடுக்க  மொத்த குடும்பமும் காஞ்சிபுரம் சென்று வந்தனர். விடுமுறையை சேர்த்து வைக்க ஜமுனா செல்லவில்லை. யுவராஜ் சென்றான் என்றும், அவன் தான் முகூர்த்த பட்டும் எடுத்தான் என்றும் தாரணி சொல்ல, அவன் போன் செய்யாதது கூட பெண்ணிற்கு பின்னால் சென்றுவிட்டது.

“மாமா செமயா உனக்கு பட்டு செலக்ட் பண்ணியிருக்கார்க்கா..” என்று போட்டோ அனுப்பி வைத்தாள் தங்கை. திருமண அழைப்பிதழும் அவன் செலக்ஷ்ன் தான் என்று அவளுக்கும் நண்பர்களுக்கு கொடுக்க அனுப்பி வைத்திருந்தனர்

ஜெயலக்ஷ்மி இளைய மகளுடன் ஜமுனாவிற்கு உடைகள், புதிதான நகைகள் என்று வாங்கினார். தயாநிதிக்கு மாமனார் குடும்பத்திலே மகளை கொடுப்பது மிக்க மகிழ்ச்சி தான். ஜமுனாவின் சிறு மறுப்பும் மறைந்து எல்லாம் நல்லபடியே சென்றது

திருமண நாளும் மிக அழகாக விடிய, யுவராஜ் ஜமுனா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கி கொண்டான். அவனின் விருப்பமான புடவையில் புதிதான மஞ்சள் கயிற்றுடன் மின்னும் மனைவியை அடிக்கடி பார்த்து கொண்டான்

ஜமுனாவிற்கு அவன் பார்வை வெட்கத்தை கொடுத்தாலும், சற்று பதட்டத்தையும் கொடுத்தது. புது மணப்பெண். எல்லார் பார்வையும் அவள் மேல் என்பது வேறு. யுவராஜ் பார்வை என்பது வேறல்லவா..? 

தாரணி, ஆகாஷ் கலகலப்பில், பெரியவர்களின் ஆசீர்வாதத்தில் எல்லாம் நல்ல படியாக முடிய, ஜமுனா புகுந்த வீட்டில் விளக்கேற்றினாள். ரிசப்ஷன் போல் எதுவும் இல்லை. திருமணத்துடன் முடிந்துவிட்டது. ஜமுனா அம்மாவிடம் கேட்டதுக்கு, “அதான் எல்லாம் கல்யாணத்துக்கு வந்துட்டாங்களே..?” என்று முடித்துவிட்டார். மணமக்களின் நண்பர்களும் திருமணத்திற்கு வந்து சென்றிருக்க, ஜமுனாவிற்கும் அம்மா சொல்வது சரிதான் என்று இருந்தது.  

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ஜமுனா..” வைஜெயந்தி மருமகளுக்கு அறை ஒதுக்கி கொடுக்க, தாரணி அக்காவுடன் இருந்து கொண்டாள். பாட்டி வீடு என்பதால் அவர்களுக்கு பெரிதான வித்தியாசம் இல்லாமல், இருவரும் நன்றாக தூங்கி எழ, வெளியில் யுவராஜ் குரல்

தாரணி வெளியே சென்று ஒட்டு கேட்டு வந்தவள், அக்காவை சீண்டலாக பார்த்து, “மாமா உன்னை கடத்திட்டு போக சண்டை போட்டுட்டு இருக்கார்..” என்றாள்

என்னடி சொல்ற..?” ஜமுனா முகம் கழுவி கொண்டே கேட்க

அதான்.. அதுக்கு தான்..” என்று அக்காவிடம் கண்ணடித்தாள் தங்கை

ஒழுங்கா பேசுடி..” ஜமுனா அதட்ட

நீ இவ்வளவு மக்கா, பாவம் மாமா..” சலித்து கொண்ட தாரணி, “உங்க பர்ஸ்ட் நைட் இங்க இல்லையாம், ஸ்பெஷலா ஏலகிரி மலை மேலயாம்..” என்றாள்

ஏய்..” ஜமுனா தங்கை தோளில் அடித்தவள், “சின்ன பொண்ணு இதென்ன பேச்சு..?” என்றாள் கண்டிப்புடன்

காலேஜ் படிக்கிற நான் சின்ன பொண்ணா, சரி தான் விடு..” என, பெண்கள் இவர்களை தேடி கொண்டு வந்துவிட்டனர்

ஜமுனா குளிச்சுட்டு கிளம்புமா..” என்று காமாட்சி பேத்திக்கு சொல்ல, தாரணி அக்காவை சிரிப்புடன் பார்த்து வெளியே சென்றாள். அடுத்த சில நிமிடங்களில் மணமக்கள் கிளம்பி நின்றவர்கள், பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர்

முறையாக ஜெயலக்ஷ்மி வீட்டில் தான் இன்று சடங்கு நடக்க வேண்டும். ஆனால் அண்ணன் மகன் பிடிவாதத்தில் அவர் ஒவ்வொரு முறையும் முழி பிதுங்கி தான் போனார். அவன் மேல் கோவம் இருந்த போதும், பாசம் துளியும் குறையவில்லை. “சந்தோஷமா, எல்லாம் நிறைஞ்ச வாழ்க்கை வாழணும்..” என்ற வேண்டுதலுடன் ஆசீர்வாதம் செய்தார் அத்தை

யுவராஜ்க்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஆசீர்வாதம் வாங்கியவன் நகராமல் அவர் முன்னேயே  நின்றான். ஜெயலக்ஷ்மி அவனை ஆதங்கத்துடன் பார்க்க, “வருத்தப்படுறீங்களா..?” என்றான்

ஆமா சொன்னா..?” ஜெயலக்ஷ்மி கேட்க

எங்க வீட்டு பொண்ணு வருத்தப்பட்டு நான் எதுவும் செய்ய மாட்டேன், உங்க வீட்டுக்கே போலாம்..” என்றான் நல்லவன்

அதெப்படி காரியம் சாதிச்சுட்டு சொல்ற, பொண்ணை கொடுத்துட்டேன்னு எல்லாம் பார்க்க மாட்டேன், எப்போவும் நீ அண்ணன் மகன் தான், அடி வாங்கிடுவ..” என்றார் முறைப்புடன்

பக்கத்தில் நின்றிருந்த ஜமுனா இவர்கள் பேச்சில் அம்மாவை உர்ரென்று பார்க்க, “உன் பொண்டாட்டி என்னை முறைக்கிறா..” என்றார்

அப்படியா..?”  என்று யுவராஜ் திரும்பி மனைவியை பார்க்க, அவள் உடனே தன் பார்வையை வேறு இடத்திற்கு மாற்றி கொண்டாள். “எங்க அத்தை பொண்ணு அப்படி தான் இருப்பா..” என்றான்

இதோட இருபது முறை என்னை அத்தை சொல்லியிருக்க..” என்றார் ஜெயலக்ஷ்மி. உண்மை தான். அத்தை என்று கூப்பிட்டு பேசுவது இல்லை. என்னமோ முதலில் இருந்தே அப்படி தான். ஒரு வித்தியாசமான உறவு இந்த அத்தை, அண்ணன் மகன் உறவு.  

ட்ரைவர் கார் எடுக்க, மணமக்களை தனியாக அனுப்ப மனமில்லாமல், கேசவன் உடன் வந்தார். யுவராஜ் மனைவியுடன் பின்னால் ஏறிக்கொள்ள, ஜெயலக்ஷ்மி மகள் கையை பிடித்து அனுப்பி வைத்தார். அவர்கள் வீட்டில் இருந்து நாற்பது நிமிட பயணம்

ஏலகிரி மலையில் அருணாச்சலத்திற்கு நிலங்கள் இருக்க, அதை அங்கிருப்பவருக்கே குத்தகைக்கு விட்டிருந்தார். சிறிய வீடு ஒன்றும் இருக்க, யுவராஜ் மனைவியுடன் அவ்வீட்டிற்குள் நுழைந்தான். உடமைகள் வந்து சேர, கேசவன் குத்தகைக்கு இருப்பவரிடம் உணவு பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்

இரவும் கவிழ்ந்திருக்க, உணவை முடித்து வெளியே அமர்ந்தனர். அதிகமான குளிர் இல்லாமல், அந்த இரவின் நிலவை பார்த்து நின்றிருந்த யுவராஜை தான் பார்த்து நின்றிருந்தாள் ஜமுனா. புது மணமகனாக, மணாளனாக பட்டு வேஷ்டி சட்டையில் சந்தனம் மணக்க நின்றவன் அவளை நிறைத்தான்

பால் பிளாஸ்கில் வர, ஜமுனா வாங்கி உள்ளே டேபிளில் வைக்க, பின்னால் கதவடைக்கும் சத்தம். ஜமுனா உடலில் சட்டென ஒரு நடுக்கம். பரபரப்பு. திரும்பி பார்க்க, யுவராஜ் அவளை பார்த்தபடி அவள் அருகில் வந்தான். சில அடி இடைவெளி. இத்தனை வருடத்தில் இதுவே முதல் முறை இவ்வளவு அருகில்

இவர்கள் தான் என்று திருமணத்திற்கு  பேசி வைத்திருந்தாலும் இப்போதும் கிராமங்களில் அப்படி எல்லாம் நெருங்கி பழகிவிட முடியாது. பொதுவான பேச்சுக்கள் கூட அளவு தான். பெரியவர்கள் கட்டுப்பாட்டை மீற முடியாது என்பதை விட அதற்கான வாய்ப்பும் மிக குறைவு. ஏற்படுத்தி கொள்ளவும் யுவராஜ் முயலவில்லையே. படிப்பில் கவனம் வைப்பதும் என்ற ஒன்று உண்டேஅதிலும் ஜமுனா நன்றாக படிக்கும் பெண். டாக்டர் படிப்பு வேறு

ஆனால் அந்த பெரிதான இடைவெளிக்கும் சேர்த்து தனியாக பார்க்கும் நேரங்களில் அவன் பார்வை அவளை தின்றுவிடும்இதோ இந்த நொடி கணவன் மனைவியாக அருகில் நிற்க, அவன் பார்வை அவளின் உடலில் வெப்பத்தை ஏற்றியது

கணவன் இன்னும் நெருங்கி அவனின் இரு கைகளையும் அவளுக்கு அணைக்கட்டி டேபிளில் வைக்க, ஜமுனா பார்வை படபடப்பில் வேகமாக சுழன்றது. யுவராஜ் முகம் அவளை நோக்கி வர, ஜமுனா கண் மூடி கொண்டாள். திடீரென அதிகரிக்கும் இதய துடிப்பின் வேகத்தில் பெண் வேர்த்து நின்றிருக்க, கணவன் முகமோ  அவள் தோளில் பதிந்தது

ஜமுனா அப்படியே சிலையாக நிற்க, கணவனிடமோ அசைவில்லை. ஜமுனா கண் திறந்து பார்க்க, கணவனின் தலை முடி அவளின் கன்னத்தை உரசி கொண்டிருக்க, குளிர்ந்த மூச்சு அவளின் கழுத்தில் பட்டு வெப்பத்தை குறைத்து கொண்டிருந்தது

ஜமுனாவிடம், “மா.. மாமா..” என்ற மெல்லிய அழைப்பு

ம்ம்.. அவனின் பதில் அவளின் கழுத்தில் இருந்தே வர, அடுத்து என்ன கேட்க என்று முழித்து நின்றாள் பெண். நொடிகள் கடக்க, அவன் முகம் அழுத்தமாக பதிந்து நிமிர்ந்தது. ஜமுனா என்னவோ என்று அவன் முகம் பார்க்க, “பால் எடுத்துட்டு வா..” என்று ரூம் சென்றான்

ஜமுனா பாலுடன் கணவன் பின் சென்றவள், அவனுக்கு கொடுத்து, தானும் குடித்தாள். யுவராஜ் மனைவி கை பிடித்திழுத்து அமர வைத்தவன், மடியில் புதைந்து போனான். அவனின் விரல்கள் உரிமையாய் மனைவி சேலைக்குள் இருந்த மாங்கல்யத்தை எடுத்து வருடி, அதன் புத்தம் புது மஞ்சள் வாசனையை ஆழ்ந்து சுவாசித்தவன், “எப்போவும் இந்த வாசனை மாறக்கூடாது..” என்றான் மனைவி முகம் பார்த்து

முதல் முறையாக தன்னிடம் ஒன்று கேட்கும் கணவன். ஜமுனா தலையசைத்து ஏற்று கொள்ள, யுவராஜ் உதடுகள் விரிந்தது. தன் உறவை ஆழமாக அவளுடன் பிணைத்த மாங்கல்யத்தின் மீது ஓர் அன்பு. மாங்கல்யத்தை மெல்ல விட, அது மனைவியின் நெஞ்சு மீது விழுக, அப்படியே அழுத்தமாக ஒரு முத்தம். மனைவிக்கும் சேர்த்து

எதிர்பார்க்கா ஜமுனா கண் விரித்து கணவனை பார்க்க, அவளின் பின் தலையில் கை கொடுத்து தன் முகத்துக்கு இழுத்தவன், அவளின் உதட்டில் ஒரு உத்தடம். “நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து என்னோட கனவு இது..” அவனின் உதடுகள் அவளின் மூக்கை உரசி சொல்ல, விரல்கள் அவளின் பின் தலையை அழுத்தமாக வருடியது

கணவனின் முத்தத்தை விட, அவன் சொன்னது ஜமுனாவை அதிகம் சிலிர்க்க வைத்தது. மனைவியை பின்னுக்கு சாய்த்தவன்,  அவள் நெஞ்சில் தலை வைத்து அவள் முகம் பார்த்தபடி,இவதான் பொண்டாட்டின்னு தெரியாதவரைக்கும் கூட ஓகே, தெரிஞ்சு விலகி இருக்கிறது.. ம்ஹ்ம்.. என்னை கொடுமைப்படுத்திட்டடி நீ..” என்றான்

நான் உங்களை விலகி இருக்க சொல்லலை..” ஜமுனாவிற்கு அவன் மீசையை வருட ஆசையாக இருந்த போதும் தொட தயங்கி சொல்ல

நல்லா படிக்கிற பொண்ணு என் பொண்டாட்டியா போயிட்டாளே..” என்றவன், அவள் விரல் எடுத்து தன் மீசை மீது வைத்தான்

ஜமுனா ஒற்றை விரலால் ஆவலாக மீசையை வருட, “இதை இழுக்க உனக்கு பல வருஷ ஆசைன்னு எனக்கு தெரியும்..” என்றான் கண்ணடித்து. ஜமுனா அதிர்ந்து பார்க்க, “என்னை பார்க்கிற உன் பார்வை எங்கெல்லாம் போகும்ன்னு எனக்கு தெரியும்..” என்ற கணவன் அவள் விரலை தன் உதட்டுக்குள் இழுத்து கொண்டான்

ஜமுனா இழுக்க, விட்டவன், நகர்ந்து அவள் உதட்டை தன் உதடுகளால் பிடித்து கொண்டான். ஜமுனா அவன் நெஞ்சு சட்டையை பிடிக்க, “என்னை உணருடி..” என்று சட்டையை கழட்டிவிட்டவன், அவளையும் உணர ஆரம்பித்தான். உணர்ந்தது மட்டுமில்லாமல், மற்றவரை தன்னுள் நிரப்பி கொண்டு, வேகமில்லா, நிதானமாய் ஒரு தேடல். இரவு அவர்களுக்கு நீண்டது.

Advertisement