Advertisement

கேளாய் பூ மனமே 3

என்னை முழுசா அடக்கி வச்சிருக்கிற நீ அடக்கு முறையை பத்தி பேச கூடாது..” என்ற யுவராஜ்  விரல்கள் மனைவியின்  பின் தலையை அழுத்தமாக வருடியது

ஜமுனா அவனின் ஸ்பரிசத்தை வெகுவாக ஒதுக்கி தள்ள முயன்றவள், “UK போறேன்னு நீங்க என்னை கார்னர் பண்றதா உங்களுக்கு தோணவே இல்லையா..?”  அவனின் பிடியில் இருந்து திமிறி வெளியே வந்தாள்

கார்னர்ன்னு ஏன் சொல்ற..? பிளாக் மெயில்ன்னே  சொல்லு..” யுவராஜ் அவளின் கலைந்த தலை முடியை ஒதுக்கிவிட்டவன், “நான் பண்றது தப்புன்னு தெரிஞ்சே தான் பண்றேன், எனக்கு வேற வழியும் இல்லை..” என்றான் அவள் முகம் பார்த்தே

உங்களுக்கு இவ்வளவு தைரியத்தை கொடுத்தது நான் தானே..? நான் உங்க மேல வச்ச காதலை இவ்வளவு தான் உங்களால பயன்படுத்த முடியுமா..? இல்லை இன்னும் இருக்கா..?” ஜமுனா கேட்க

யுவராஜ் அவளை நேருக்கு நேர் பார்த்தான். ஜமுனா முகம் திருப்பினாள். எப்படி ஆரம்பித்த வாழ்க்கை இன்று இப்படி என்றால் ஜமுனாவிற்கு ஏற்க முடியவில்லை.  

ஐந்து வருடங்களுக்கு முன்பு..

இன்னும் ஒரு ஆறு மாசம் மட்டும்மா ப்ளீஸ்.. நான் அவுஸ் சர்ஜன் முடிச்சுட்டு உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம், இப்போன்னா எனக்கு ரொம்ப கஷ்டம்மா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..”  ஜமுனா அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்

இல்லை ஜமுனா.. உனக்கும், யுவராஜ்க்கும் வயசாகிட்டே போகுது, உன்னைவிட அவன் அஞ்சு வயசு பெரியவன், வர தை மாசம் வந்தா அவனுக்கு இருபத்தி ஏழு ஆரம்பிக்க போகுது, இப்போ கல்யாணம் வச்சா தான் சரியா இருக்கும்..” என்றார் ஜெயலஷ்மி மகளிடம்

ம்மா.. இதுவே உனக்கு பெரியா வயசா, இப்போ எல்லாம் யார் இந்த வயசுல கல்யாணம் பண்றாங்க..? நான் கேட்கிறது ஜஸ்ட் ஒரு ஆறு மாசம் மட்டும் தானே..” என்றாள் மகள்

ஜமுனா.. சொல்றதை புரிஞ்சுக்கணும், உன் ஜாதகத்துல இப்போதான் கல்யாண முகூர்த்தம் கூடி வந்திருக்கு, இந்த மூணு மாசத்துல கல்யாணம் வைக்கலைன்னா அடுத்த நாலஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் பண்ற அம்சமே இல்லன்னு சொல்றாங்க, எப்படி விடமுடியும் சொல்லு, என்னைக்கு இருந்தாலும் நீங்க தான் புருஷன், பொண்டாட்டின்னு ஆகி போச்சு, இப்போவே  பண்ணிக்கிட்டா என்ன..?” ஜெயலக்ஷ்மி சொல்ல, ஜமுனாவிற்கு அந்த புருஷன், பொண்டாட்டி வார்த்தை தித்திக்க அடுத்த பேச முடியாமல் நின்றாள்

இத்தனை வருடங்களில் முதல் முறையாக அவள் வீட்டில் இந்த வார்த்தைகளை கேட்கிறாள். இரு குடும்பத்திலும் இன்னாருக்கு இன்னார் என்ற உறுதி இருந்தும், அதை பிள்ளைகள் முன் பேசி கொண்டதில்லை. ஜெயலக்ஷ்மியின் சொந்த அண்ணன் மகன் தான் யுவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் தான் இவர்கள் சொந்த ஊர். அருணாச்சலம், காமாட்சி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் கேசவன், அடுத்து இரண்டு பெண்கள். அதில் மூத்தவர் ஜெயலஷ்மி. ஜெயலக்ஷ்மியை பக்கத்து கிராமத்திலே கட்டி கொடுத்துவிட்டனர். சின்னவள் பெங்களூரில் இருக்க, இவர்கள் இரு குடும்பத்தில் நல்ல ஒற்றுமை

அதிலும் ஜெயலக்ஷ்மிக்கு யுவராஜ் என்றால் தனிப்பட்ட பிரியம். என் அண்ணன்  மகன், என் மருமகன் என்ற உரிமை அதிகமாகவே இருக்கும். இன்னும் சொல்ல போனால் அவரின் ஆசை தான் மகளை யுவராஜ்க்கு கொடுப்பது. மகள் பிறந்த உடனே அண்ணனிடம் மாப்பிள்ளை கேட்ட மாமியார் அவர்

இத்தனை வருடங்களில் இரு குடும்பத்திற்கு இடையில் எவ்வளுவோ நடந்த பிறகும் அவரின் உறுதி, ஆசை மட்டும் மாறவே இல்லை. யுவராஜ் வளர வளர ஆசையும் ஆழமானது. அவரின் நல்ல நேரமோ என்னமோஜமுனா, யுவராஜ்க்குமே அந்த பொறி விழுந்துவிட்டது..’ வீட்டினர் பேசி வைத்தது தான் என்றாலும், சாதாரணமாகவே இருக்கும் அத்தை மகள், மாமா மகன் என்ற ஈர்ப்பு இவர்களை சிறிது அதிகமாகவே மற்றவர் பால் ஈர்த்துவிட்டது

ஒருவர் மற்றவரை பார்க்கும் பார்வையில் தெரியும் அளவு அவர்கள் விருப்பம் இருந்துவிட, இரு குடும்பத்தினருக்கும் ஆசுவாசம். முக்கியமாக ஜெயலக்ஷ்மிக்கு. முதலிலே அவர்கள் இருவருக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே இந்த பேச்சு என்று வீட்டின் பெரியவர்கள் எல்லாம் ஒன்று போல சொல்லிவிட்டனரே.!

இதோ இருவரும் வளர்ந்து கல்யாண வயதில் இருக்க, ஜெயலக்ஷ்மி சட்டென பேச்சை ஆரம்பித்துவிட்டார். மகள் மருத்துவம் படிக்க என்று ஐந்து ஆண்டு கடந்துவிட்டது. ஹவுஸ் சர்ஜன் மட்டும் இன்னும் மிச்சமுள்ளது, அதையும் திருமணம் முடிந்து படிக்கட்டும் என்று ஒற்றை காலில் நின்றார். அவருக்கு வலுவாக கை கொடுத்தது ஜாதகத்தில் சொன்னது

மகள் விடுமுறைக்கு வீட்டில் இருக்கும் போதே, அண்ணன் வீட்டினரிடம் பேசி நாள் குறிக்க ஏற்பாடு செய்தார். யுவராஜ் வீட்டிற்கு வந்து நின்றான்எப்போதாவது வரும் அண்ணன் மகன் இன்று திடுமென வந்து நிற்க, ஜெயலஷ்மி மகள் மேல் கோவம் கொண்டார். மருமகனை அமர வைத்தவர், மகள் ரூமிற்கு சென்றுயுவராஜ்கிட்ட பேசுனியா..?” என்றார் கொஞ்சம் கோவமாகவே

அவள் அம்மா ஒத்துக்காததில் முறுக்கி கொண்டு படுத்திருந்தவள், “நான் யார்கிட்டேயும் பேசல..” என்றாள் கடுப்பாக

அப்புறம் ஏன் யுவராஜ் வீட்டுக்கு வந்திருக்கான்..?” என்றார்

ஜமுனா வேகமாக எழுந்தவள், “மாமா வந்திருக்காரா..?” என்றாள்

ஆமா.. உனக்கு தெரியாதா..?” ஜெயலஷ்மி சந்தேகமாக கேட்டார்

நீங்க நம்பலைன்னாலும் நானும் அவரும் பேசிக்கிறதில்லைன்றது தான் உண்மை..” என்ற ஜமுனா, ‘நான் பேசணும் நினைச்சாலும் உன் அண்ணன் மகன் பேசணுமே..?’ உள்ளுக்குள் தாளித்து கொண்டாள்

என் அண்ணன்  மகன் பொறுப்பானவன்டி.. உன் படிப்புக்காக தான் பார்த்திருப்பான்..” மகள் முகம் வைத்தே கழுத்தை வெட்டி சொன்னவர், காபி போட்டு எடுத்து சென்றார்

ஜமுனா அவசரமாக முகம் கழுவி, இரவு உடை மாற்றி, வெளியே வந்தவள், ஹாலில் அமர்ந்திருந்த யுவராஜ் பக்கம் திரும்பாமலே, வேகமாக சென்று டைனிங் டேபிளில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்துகொண்டாள். யுவராஜ் பார்வை அவளை துளைப்பது நன்கு உணர முடிந்தது

வா’ன்னு கூப்பிட்டியா..?” கிச்சனில் இருந்து பலகாரம் எடுத்து வந்த ஜெயலக்ஷ்மி மகளை கடிந்து கொண்டே, ஹாலுக்கு சென்றார்

சில நொடி அமைதிக்கு பிறகு, “ஜமுனா சித்தப்பா  உன்னை பார்க்கணும் சொன்னாங்க பாரு, போய்ட்டு வா..” என்றார் ஜெயலக்ஷ்மி பக்கத்திலே இருக்கும் மைத்துனன் வீட்டிற்கு.  

ம்ப்ச்.. மாமா எனக்காக தான் பேச வந்திருப்பார், கேட்கலாம்ன்னா விடுறாங்களா..?’ ஜமுனா பொருமி கொண்டே பின்பக்க கதவு வழி சென்றாள்

இங்கு யுவராஜ், ஜெயலக்ஷ்மி பேச ஆரம்பித்து காரசாரமான விவாதத்தில் முடிய, ஜமுனா வரவும் சரியாக இருந்தது. யுவராஜ் முகம் கோவத்தில் சிவந்திருக்க, ஜெயலக்ஷ்மி அவனுக்கு மேல் இருந்தார்.

ஜமுனா தள்ளி இருவர் முகம் பார்த்து நிற்க, யுவராஜ் அவளை பார்த்தவன், கிளம்ப எழுந்து நின்றுவிட்டான். ஜெயலக்ஷ்மியும் அவனை வழியனுப்பி வைக்க, ஜமுனாவை மேல் பலமான பார்வை செலுத்தியே வாசலுக்கு நடந்தான்

மாமாகிட்டேயும் சண்டை போட்டியாம்மா..?” ஜமுனா அம்மாவிடம் கேட்டாள்

கொஞ்ச நேரம் என்னை விடு ஜமுனா..” ஜெயலக்ஷ்மி தளர்ந்து போய் சோபாவில் விழுந்தார்

ம்மா.. என்ன ஆச்சு..?” ஜமுனா அவர் பக்கத்தில் அமர்ந்து கேட்க

ஒன்னுமில்லை.. கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடு..” என்றார். ஜமுனா வேகமாக எடுத்து வந்து கொடுத்தவள், “இந்த மாசம் பிபி செக் பண்ணீங்களா..?” கேட்டபடி வீட்டில் இருக்கும் இரத்த அழுத்த மானிடர் வைத்து பார்த்து, அதிர்ந்து தான் போனாள். ஏகத்துக்கும் எகிறியிருந்தது

கொஞ்ச நேரத்துல சரியாகிடும்..” ஜெயலக்ஷ்மி சாதாரணமாக சொல்ல, மகளுக்கு ஏத்துக்க முடியவில்லை

அப்படியென்ன பிரஷர் எடுத்துகிற நீ..?” என்று படபடக்க

இப்போதைக்கு உன்னை தவிர எனக்கு வேறெந்த பிரஷரும் இல்லை போ..” என்றார் ஜெயலக்ஷ்மி

ஒரு கல்யாணத்துக்கு நீ ஏன் இவ்வளவு அமக்களம் பண்றியோ தெரியலம்மா..” ஜமுனா சலித்து கொண்டவள், “என்னவோ பண்ணு, நான் எதுவும் கேட்க மாட்டேன், எனக்கு சம்மதம்..” என்றுவிட்டாள்

நடக்க வேண்டிய ஒன்று தானே என்ற எண்ணம் இருந்தாலும், யுவராஜுடனான திருமணம் என்பதும் பெண்ணை பிடிவாதம் பிடிக்க விடாமல் சீக்கிரமே சம்மதம் சொல்ல வைத்துவிட்டது

“உண்மையாவா..? முழு மனசோட தான் சம்மதம் சொல்றியா, அப்புறம் திரும்ப எதுவும் ஆரம்பிக்க கூடாது..” ஜெயலக்ஷ்மி ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை மகளிடம் கேட்டு கொண்டார்

ம்மா.. எனக்கு எப்போவும் முழு சம்மதம் தான், ஆனா ஆறு மாசம் போகட்டும் பார்த்தேன், சரி விடுங்க..” என்றுவிட்டாள். அவ்வளவு தான் ஜெயலக்ஷ்மி அடுத்த இரண்டாம் மாதத்திலே முகூர்த்தம் குறித்துவிட்டார்

கேசவன் வீட்டில் இருந்து முறையாக வந்து ஜமுனாவிற்கு பூ வைத்து, உறுதி செய்து கொண்டனர். யுவராஜ் சாப்ட் வேர் கன்சல்டண்டாக தனியாக சிறிய ஆபிஸ் ஒன்றை சென்னையில் வைத்திருந்தான். அவனுக்கு ஒரு தம்பி ஆகாஷ் உண்டு. அவன் எஞ்சினியரிங் படித்து கொண்டிருக்க, அம்மா வைஜெயந்தி, அப்பா கேசவன். தொழில் விவசாயம்

திருமண நாள் நிச்சயமானதும், வேலைகளும் முழு வீச்சில் சென்றது. தான் சம்மதம் சொன்னதும் யுவராஜ் தன்னிடம் போன் செய்து பேசுவான் என்று எதிர்பார்த்திருந்த ஜமுனாவிற்கு மிகப்பெரிய ஏமாற்றம். அவள் வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி MBBS படிக்கும் மருத்துவ மாணவி. வெற்றிகரமாக ஐந்து வருடத்தை முடித்துவிட்டு, ஹவுஸ் சர்ஜனில் இருந்தாள்

Advertisement