Advertisement

கேளாய் பூ மனமே 25 FINAL அண்ட் எபிலாக் 

“கந்தா அந்த பக்கம் பார்த்தியா..? இருக்காங்களா..?” பரபரப்பான குரல் கேட்க

இல்லைண்ணா.. எங்கேயும் இல்லை.. ஆளுங்க எஸ்கேப் போல..” என்றான் கந்தன்

நாம தான் மொத்த வழியை அடைச்சுட்டோம் இல்லை, எப்படிடா போயிருப்பாங்க..?” ஆளுக்கொரு பக்கம் ஓடினர். நடுஇரவு. தயாநிதி ஊரே விழிந்திருந்தது. எங்கும் கூச்சல். எந்நேரமும் அடிதடி ஆகும் நிலை. கலவரத்துக்கான அறிகுறி அப்பட்டமான தெரிந்தது

பெரிய தலைகள் தயாநிதி வீட்டில் குவிந்திருந்தனர். தயாநிதி தீவிர சிந்தனையில் இருக்க, மாதவன் அவரிடம் குனிந்து போனை காட்டி ஏதோ சொன்னான். அவர் மறுக்க, மாதவன் அவரிடமே போனை கொடுத்துவிட்டான். “ஏன் வேணாம் சொல்றீங்க..?” என்றான் அந்த பக்கம் யுவராஜ்

சொந்த ஊர்லே போலீஸ் வர வைக்க முடியுமா..? இவங்க இன்னைக்கு அடிச்சுக்கிட்டாலும், நாளைக்கு சரியாகிடும், போலீஸ் வந்தா மொத்த ஊருக்கும் தான் கெட்ட பேர்..” போனுடன் தள்ளி வந்து சொன்னார்

ஏன்  எங்க ஊர் நல்ல ஊர்ன்னு அவார்ட் ஏதும் கேட்டிருக்கீங்களா..?”  என்றான் யுவராஜ்ம்ப்ச்.. தயாநிதி குழப்பத்தில் நிற்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்த ஊரும் பத்திகிட்டு எரிய போகுதுஇப்போ போய் ஊருக்கு நல்ல பேர் கெட்ட பேர் பார்த்தா ஆகாது, யாருக்கும் எதுவும் ஆகாம இருக்கணும், எப்படியும் போலீஸ் ஆளு உங்க ஊருல எவனாவது இந்நேரத்துக்கு சொல்லியிருப்பான், நீங்களும் கவுண்டரா மாதவனை விட்டு போலீசுக்கு உடனே சொல்லுங்க, நான் ஊருக்கு  தான் வந்துட்டு இருக்கேன், பார்த்துக்கலாம்..” என்று வைத்தான் யுவராஜ்

மாமா.. அண்ணா சொல்றது சரி, நாம போலீசுக்கு போறதும் ஊர் நல்லதுக்கு தானே..” என்றான் மாதவன்

மாதவா.. எங்க ஆளுங்க சண்டைக்கு நிப்பாங்க, சொந்த பங்காளிங்களையே போலீஸ்ல மாட்டிவிடுவியான்னு கேட்பாங்க..” என்றார் தயாநிதி

மாமா.. இதெல்லாம் பார்த்தா ஆகாது. உங்க பங்காளிங்களை அப்புறம் பேசிக்கலாம். முதல்ல போலீசுக்கு போலாம்..” என்றான் மாதவன்.

ஊரில் சத்தம் கூட, தயாநிதிக்கும் வேறு வழி இருப்பது போல தெரியவில்லை. சரி என, மாதவன் போலீசுக்கு அழைத்துவிட்டான். அடுத்த சில நொடியிலே கலவரம் வெடித்தது. இரு கூட்டத்துக்கும் இடையே கை கலப்பு, அடிதடி. கைக்கு கிடைத்ததை வைத்து மற்றவரை தாக்கி கொண்டனர்

போலீசும் மாதவன் சொல்லு முன்னே கிளம்பியிருக்க, உடனே வந்துவிட்டனர். ஆனால் மிக பெரிய ஊர். வீதி, தெரு என்று பல பல இருந்தது. ஐயாயிரம் வீடு என்றால் சும்மாவா..? போலீஸ் இருவர் எப்படி சமாளிப்பர்..? கலவரம் கட்டுப்பாடு மீறி போக, சில நிமிடங்களில் சைரன் ஒலிக்க, இரு வேன் போலீஸ் வந்துவிட்டனர்

இறங்கி இறங்காமலே லத்தியை கையில் எடுத்து விளாசினர். யார் கண்ணில் பட்டாலும் பாரபட்சம் இல்லாமல், வைத்தியம் நடந்தது. ‘வாடா பார்த்துடலாம்சத்தங்கள் மறைந்து, ‘ஐயோ, அம்மா என்னை விட்டுடுங்க சார்’ என்ற சத்தம் ஊரை நிறைத்தது. போலீஸ் இளைஞர்களை கையோடு வேனில் ஏற்றி பூட்டினர். அங்கும் அவர்களுக்குள் அடித்து கொள்ள போக, மூடிய வேனுக்குள் அலறல் சத்தம் தான்

ஒரு வழியாக விடியும் நேரத்தில் கலவரம் அடங்கி, இருபத்தி நாலு மணி நேர தடை உத்தரவு மொத்த ஊருக்கும். யாரும் உள்ளே வர முடியாது. வெளியே செல்ல முடியாது. தயாநிதியுடன் மாதவன் மற்றும் ஊர் பெரியவர்கள் இருக்க, போலீஸ் அவர்களிடம்  விசாரணையை ஆரம்பித்தது

அதாவது தயாநிதி பங்காளி பையனுக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு இனத்து பெண்ணுக்கும் காதல். இரு வீட்டுக்கும் தெரிந்து கட்டுப்பாடு விதித்து கட்டப்பஞ்சாயத்து நடந்தது. ஆனால் பெண்ணும், பையனும் முதல் சில நாட்கள் அமைதியாக இருந்தவர்கள், நேற்றிரவு ஜோடியாக கிளம்பிவிட்டனர். இரு வீட்டிலும் அவர்களை தேட ஆரம்பிக்க, அதில் ஊர் நுழைய, இறுதியில் கலவரம்

போலீஸ் காரணம் தெரிந்து கொண்டு, அந்த பெண், பையனை தேட ஆரம்பித்தவர்கள், கையோடு கலவரத்தை தூண்டிவிட்டது யார் என்று அவர்களையும் கண்டறிந்து, அரெஸ்ட் செய்தனர். அரெஸ்ட் ஆனதில் அதிகம் பேர் தயாநிதி பங்காளிகள் தான். முக்கியமாக ரமேஷ் சிக்கினான்

யுவராஜ் கலவரம் அடங்கும் நேரம் அவன் வீட்டுக்கு வந்துவிட்டான். மாதவன் போன் செய்து எல்லாம் சொன்னான். “மாட்டினான்..” யுவராஜ் மீசை நுனியை திருகினான். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து சிக்கியிருக்கான்

ஆம் ஏழு வருடங்கள் ஆகிவிட்டது

யுவராஜ் வீட்டில் பல மாற்றங்கள். குடும்பம் பெரிதாகி இருந்தது

தாரணி, மாதவன் தம்பதிக்கும் இரு ஆண் பிள்ளைகள். தாரணி உள்ளூரிலே இன்ஜினியரிங் கல்லூரியில் வேலை பார்க்க, மாதவன் சொந்த இடத்தில் பேர் சொல்லும் அளவு கார் செர்வீஸ் சென்டர் வைத்திருந்தான்

ஆகாஷ், ஆர்த்திக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே. போதும் என்றுவிட்டனர். ஆகாஷ் கம்பெனி மாற்றி, நல்ல பொஷிஷனில் இருக்க, ஆர்த்தி அதே கம்பனியில் இருந்தாள்

யுவராஜ், ஜமுனா குடும்பத்தில் ஜீவிதாவிற்கு ஐந்து வயதில் ஒரு தம்பி. ‘ஆத்விக்ஜமுனா சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கைனக் மருத்துவராக இருக்கயுவராஜ் ஆபிசும் வளர்ந்திருந்தது

மாதவன் நேற்றிரவு போன் செய்து இப்படி என்று சொல்லும் போது யுவராஜ் ஆபிசில் தான் இருந்தான். புது கம்பெனிக்கான வேலையை முடித்து வைக்கசரியாக மாதவன் அழைத்தான். ஜமுனாவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தவன், அங்கிருந்து அப்படியே கிளம்பிவிட்டான். விடியும் நேரம் ஊருக்கும் வந்துவிட்டான்.

அருணாச்சலம் பேரனுடன் அமர்ந்தார். அவரால் முன்பு போல தோட்டம் செல்ல முடிவதில்லை. கேசவன் எழுந்து வரவும் இருவரும் சேர்ந்து வண்டியில் செல்வர். யுவராஜ் ரூமிற்கு சென்று வந்தவன், தாத்தாவுடன் தோட்டம் சென்றான். தோப்பு நன்றாக வளர்ந்திருந்தது. தாத்தாவை அமர வைத்து, தண்ணீர் விட சென்றான். சொட்டு நீர் பாசனம். ஆட்கள் பற்றாக்குறை காரணம்.  

பட்டன் தட்டிவிட்டு தாத்தா பக்கத்தில் அமர்ந்தான். நெல் நாத்து விட்டிருக்க, அருணாச்சலம் வைத்திருந்த தேங்காய், தேக்கு எல்லாம் நல்ல வளர்ச்சி. பார்க்க பார்க்க  மனதில் உவகை. குளிர்ச்சி. எங்கு சென்று என்ன வேலை பார்த்தாலும் விவசாயி விவசாயி தானே. அந்த வேர் மறையுமா..? 

யுவராஜ் தான் வந்த விஷயத்தை சொன்னான். “உன் அத்தை இனிதான் போன் பண்ணுவா..” என, ஜெயாவும் அழைத்துவிட்டார். அருணாச்சலம் ஊர் நிலவரம் கேட்டு கொண்டு, யுவராஜ் வந்திருப்பதை சொல்லி போன் கொடுத்தார்

ஊர் கட்டுப்பாடு, உங்க மாமாவை தான் பங்காளிங்க படுத்துறாங்க..” என்றார் எரிச்சலாக.  

நீங்க எல்லோருக்கும் டிபன் போட்டு அனுப்பி விடுங்க, மாமாவை தூங்க வைங்க, அப்பறம் அவரே பார்த்துப்பார்..” என்றான். தயாநிதி குழப்பம் தீர்ந்தாலே மீண்டு விடுவார். மாதவனுக்கு அழைத்து பேசி வைத்த யுவராஜ், நேரம் பார்த்து மனைவிக்கு அழைக்க, அவள் எடுக்க வேண்டுமே..? “மேடம் முறுக்கிட்டாங்க..” யுவராஜ் உதடுகளில் ஒரு புன்னகை.

இருவரும் வீட்டுக்கு வர வைஜெயந்தி, காமாட்சி அவனிடம் பேசி குளிக்க அனுப்பி வைத்தனர். காலை டிபன் சீக்கிரமே நடந்தது. இரவு எல்லாம் முழித்திருந்து கார் ஓட்டியது நல்ல பசி. மகளும், மகனும் அழைத்துவிட்டனர். “எங்களை விட்டு நீங்க மட்டும் ஊருக்கு போயிருக்கீங்கப்பா..” இருவரும் ஒரே குரலில் கேட்டனர்

அர்ஜன்ட் வேலை..” யுவராஜ் சொல்ல, பிள்ளைகள் காது கொடுத்து கேட்க வேண்டுமே..? 

நீங்க அங்கேயே இருங்கப்பா.. நாங்களும் ஊருக்கு வருவோம்..” என்றான் மகன் உடனே பிளான் போட்டு

டேய் அப்பா நாளைக்கு வந்திடுவேன்..”

நோ.. நாங்களும் வருவோம், இந்த வீக் எண்ட் ஊர்ல தான், நான் சித்தப்பாகிட்ட பேசுறேன்..” என்று ஓடிவிட்டான். அண்ணனும், தம்பியும் இடம் வாங்கி வீடு கட்டி கீழே மேலே இருந்தனர். ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. பெண்களின் பங்கும் அதில் உண்டு. கூட தயாநிதியினதும். இடம் யுவராஜ் தம்பியுடன் சேர்ந்து வாங்கியிருக்க, வீடு கட்ட யுவராஜ் பங்கு முழுதும் அவர் தான் கொடுத்திருந்தார்

ஒரு முறை செய்ய விடுங்க மாமா.. இல்லைன்னா திரும்ப திரும்ப இதை தான் பண்ணுவார்..”  ஜமுனா சொல்ல, யுவராஜ்க்கும் அது தான் தோன்றியது. தான் அவரை செய்ய விடாமல் செய்வதே அவர் வீம்பை வளர்த்திருக்க, அவரையே கொடுக்க விட்டான். தயாநிதிக்கு நிம்மதியானது

போனில் மகள் மட்டும் இருக்க, “பாப்பா.. அம்மா எங்க..?” என்று கேட்டான்

பக்கத்துல தான் இருக்காங்கப்பா.. ஆனா பேச மாட்டாங்க, புல் கோவம்..” என்றாள் மகள் முணுமுணுப்பாக

என்னடி என்னை பத்தி..” ஜமுனா மகள் தலையில் கொட்ட

ப்பா.. கொட்டிட்டாங்க..” மகள் ராகாமிழுத்தாள்

லேசா தான் கொட்டினேன், சத்தம் வந்துச்சு ஓட்டை விழுகும்..” ஜமுனா மிரட்ட

போனை ஸ்பீக்கர்ல போடு பாப்பா..” என்ற தந்தை, “என்னடி என் பொண்ணை ரொம்ப தான் மிரட்டுற..” என்றான். ஜமுனா பதில் சொல்ல வேண்டுமே

என் அப்பா உங்களை தான் கேட்கிறார், பதில் சொல்லுங்க டாக்டர் மேடம்..” என்றாள் மகள்

அம்மாவோ  “வேன் வர போகுது, உன் தம்பியை கூட்டிட்டு வந்து ஸ்கூல் கிளம்புற வழியை பாரு.. வேன் மிஸ் பண்ணா கூட்டிட்டு போய் விட  உன் அப்பா இல்லை, நான் ஹாஸ்பிடல் கிளம்பிடுவேன், பார்த்துக்கோ..” என்றாள்ஜீவிதா முனங்கி கொண்டே தம்பியை கூப்பிட சென்றாள்

ஒருநாள் என் பசங்களை கொண்டு போய் விட்டா குறைஞ்சா போயிடுவ..” யுவராஜ் கேட்க

நைட்டோடு நைட்டா ஊருக்கு ஓடுனவங்ககிட்ட எல்லாம் நான் பேசுறதில்லைன்னு உன் அப்பாகிட்ட சொல்லுடி..” ஜமுனா மகளிடம் சொல்வது போல சொன்னாள்.

“நைட்டோடு நைட்டா ஓடுனது நான் இல்லடி, உன் அப்பா ஊரு காதல் பறவைங்க தான்..” என்றான் கணவன்.  

இவர் எதுக்கு பின்னாடியே ஓடுனாராம், கல்யாணம் ஏதும் செஞ்சுக்க வைக்க கூப்பிட்டாங்களா..?” ஜமுனா கடுப்புடன் கேட்டாள்

ஜீவிதா தம்பியை கூட்டி கொண்டு வந்துவிட, “ப்பா.. பிளான் டன், நாங்க ஊருக்கு வரோம்..” என்றான் மகன் கத்தலாக

அது அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல டிபன் சாப்பிட்டு ஸ்கூல் கிளம்புங்க..” ஜமுனா நேரம் ஆவதை உணர்ந்து விரட்ட, யுவராஜும் பிள்ளகளுக்கு சொல்லி வைத்துவிட்டான்

அன்று வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தவன், மதியம் நன்றாக தூங்கி எழுந்தான். மாலை போல வண்டிகள் களத்துக்கு வர, இறங்கி சென்று பார்த்தான். டிராக்டர்கள்  மட்டும் புதிதாக மாற்றியிருந்தான். “JCB, லாரி இரண்டும் இரவு தான் வரும்..” என்றார் கேசவன். அவர் பொறுப்பில் தான் இப்போதும்

அவனின் பிள்ளைகள் பள்ளி முடித்து வரவும் அப்பாவிற்கு அழைத்து பேசினர். அவன் சொன்னால் தான் விடுவர் போல. போன் எடுத்து பேசியவன், “நான் உங்க சித்தப்பாகிட்ட பேசுறேன், வீக் எண்ட் வாங்க..” என்றுவிட்டான். அவர்கள் குஷியுடன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம், நாங்க வரோம் என்று பேசி வைத்தனர்

ஆர்த்தியின் அம்மா வந்திருக்க, சீனியர் மருத்துவருடன் பிரசவம்  பார்த்து ஜமுனா ஒரேடியாக இரவு தான் வந்தாள். மாலை சாப்பிட அவரே பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டார். ஆர்த்தி மகள் தீப்தியுடன் இவர்கள்  நேரம் செல்ல, ஜமுனா வரவும் இரவு உணவு முடித்து, படித்து தூங்க சென்றனர்

ஊரில் அடுத்த நாள் கூட்டம் கூடியது. மாதவன் போன் செய்து சொல்ல, “ரமேஷை  இனியும் விடாத மாதவா, மாமாவை தான் டார்கெட் பண்ணுவான். உங்க ஆளுங்களை வச்சு பார்த்துக்கோ..” என்று மட்டும் சொன்னான். மாதவனும் ஊர்க்காரன் தானே. புரிந்து கொண்டான்

 காதலர்கள் அவர்களே காலை போலீஸ் ஸ்டேஷன் சென்றுவிட்டனர். இருவரும் மேஜர். திருமணமும் முடிந்திருக்க, அவர்கள் திரும்ப ஊருக்குள் போக மறுத்தனர். போலீஸ், பெற்றவர்கள் பேசி பார்த்து விட்டுவிட்டனர்

அதிகாரிகள், ப்ரெசிடெண்ட், போலீஸ் கூட்டத்திற்கு வந்தவர்கள், “இனி இதை வச்சு அடிச்சுக்க கூடாது, அந்த பொண்ணும், பையனும் தெளிவா இருக்காங்க, பெத்தவங்க இனி பிரச்சனை பண்ண மாட்டோம்ன்னு கையெழுத்து போட்டு முடிச்சு விடுங்க..” என்றார் அதிகாரி

பெற்றவர்களும், பிள்ளைகள் செயலில் வெறுத்து போய் கையெழுத்து போட, சாட்சியாக தயாநிதி  உள்ளிட்ட பெரியவர்களும் போட்டனர். அரெஸ்ட் செய்திருந்தோர்  இப்போது தான் ஊருக்குள் வந்தனர். ஒரு நாள் முழுதாக  ஸ்டேஷன்  போய் வந்ததில் ரமேஷ் கொதித்து நின்றிருந்தான்

அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சது, நீங்க இனி பிரச்சனை பண்ண மாட்டோம்ன்னு ஒத்துக்கிட்டதால ஊரடங்கு கட்டுப்பாட்டை நீக்கிடுறோம்.. பார்த்துக்கோங்க..” என்று தயாநிதியிடம் சொல்லி அதிகாரிகள், போலீஸ் கிளம்பிவிட, ரமேஷ் ஆரம்பித்தான்

ஊர்ல கட்டுப்பாடு இல்லை.. என்றான். கவுண்டர் சரியில்லை என்றான். ஒழுங்கு சரியில்லை என்றான். அவருக்கு வயசாகிடுச்சு, இவ்வளவு பெரிய ஊரை அவரால கட்டுப்பாட்டோட வைக்க முடியல. அவரை மாத்துங்க..” என்றான். தயநிதிக்கு அண்ணன் மகன் பேச்சில் ஆச்சரியம் எல்லாம் இல்லை

Advertisement