Advertisement

கணவன் மனம் விட்டு சரணடைவதன் பலன் போல. அவன் பக்கமும் பெண்ணை யோசிக்க வைக்கிறதே..? ‘இது மட்டும் மாமாக்கு தெரிஞ்சா நொந்து போயிடுவார், மூணு வருஷம் போச்சேன்னு கடுப்படிப்பார்..’ ஜமுனா முகத்தில் ஒரு சிரிப்பு.

“என்னடி தனியா சிரிச்சுட்டு இருக்க..?” யுவராஜ் அப்போது தான் வேலை முடித்து வந்தவன் கேட்டான். டிவியில் இருந்த ஜீவிதா, காமாட்சியும் ஜமுனாவை பார்த்தனர்.

“அது.. கேம்பஸ்ல நடந்த விஷயம்.. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” ஜமுனா கிட்சன் சென்றுவிட்டாள்.  இரவு உணவுக்கு நேரமாகிவிட, குடும்பமாக அமர்ந்து உண்டனர். ஆகாஷ், ஆர்த்தி மாலையே வந்து சென்றிருந்தனர்.

“அடுத்த வாரம் நிலம் ரிஜிஸ்டர்..” என்றான் யுவராஜ் மனைவி, பாட்டிக்கு. வார  நாட்களில் வருவதால், யுவராஜ், ஆகாஷ் மட்டும் சென்றனர். யார் பெயருக்கு எழுதுவது என்று முதலிலே சென்றது. “நாம தான் அதிகமா கொடுத்திருக்கோம்ன்னு நம்ம பேர்ல பண்ணனும் தாத்தா சொல்றாங்க, பணத்தை பொறுத்து ஏக்கரை பிரிச்சி..” யுவராஜ் மனைவியிடம் சொன்னான்.

ஜமுனாவிற்கு அது அந்தளவு சரியாக தெரியவில்லை. “நீங்க என்ன நினைக்கிறீங்க..?” என்றாள் கணவனிடம்.

“உன் எண்ணத்தை சொல்லு..” என்றான்.

“எனக்கு வேண்டாம், பொதுவா தாத்தா பேர்லயோ, வீட்ல யார் பேர்லயோ பண்ணிடலாம்..” என்றாள் ஜமுனா.

“நானும் இதை தான் யோசிச்சேன்டி..” யுவராஜ் மலர்ந்து சொன்னவன், தாத்தாவிடம் பேசி அவரை ஒத்துக்கொள்ள வைத்திருந்தான். அருணாச்சலம் பேரில் தான் எழுத போகின்றனர். அதனால் அவர் பேரிலே எல்லா ஏற்படும் முடிந்திருக்க, இவர்கள் அதற்காக கிளம்பி செல்கின்றனர்.

யுவராஜ்க்கு அதனுடன் வேறொரு வேலையும் இருந்தது. அண்ணன், தம்பி இருவரும் விடியற்காலையில்  கிளம்பினர். எல்லாம் முடித்து இரவு எந்நேரம் ஆனாலும் திரும்பிட திட்டம். பெண்களுக்காக. ஊர் சென்று சேர்ந்ததும், குப்புசாமியிடம் பாக்கி பணத்தை கொடுத்தனர். “பத்திரம் முடிச்சுட்டு கொடுக்கலாம்..” அவர் சொல்ல,

“உங்ககிட்ட என்னண்ணா..?” முடித்துவிட்டான் யுவராஜ். இவர்கள் பத்திர பதிவும் முதலிலே இருக்கும் படி செய்திருக்க, சில நிமிடங்களில் சொத்து இவர்கள் கைக்கு வந்து சேர்ந்தது. முதன் முதலாக ஒரு சொத்து வாங்குகின்றனர்.

அருணாச்சலமும் அப்பா கொடுத்த சொத்துடன், மூன்று ஏக்கர் வாங்கியிருந்தார். இப்போது பேரன்கள் தலையெடுத்து வாங்க, பெருமை தான். வைஜெயந்தி, ஜெயா மதியம் ஒரு விருந்தே தயார் செய்திருந்தனர். யுவராஜ் உணவு முடித்து, மாதவனை பார்க்க கிளம்பினான்.

மாதவன் இவனை வரவேற்று, இடம் பார்க்க கூட்டி சென்றான். ஆம் டவுனில் இடம் கேட்டிருந்தான். திருப்பத்தூர் புதிதான மாவட்டமாக மாறியிருக்க, இப்போதே இடம் வாங்கிவிட பார்க்க சொல்லியிருந்தான். மாதவனும் பார்த்து வைத்திருக்க,மெயின் ரோடில் இருந்து தள்ளியே இருந்தது. பின்னால் சாலையை பெரிதாக மாற்றினாலும் பிரச்சனையில்லை. மாதவனும் அதை யோசித்து தான் பார்த்திருந்தான்.

யுவராஜ்க்கு இடம் பிடித்துவிட, போன் எடுத்து தயாநிதியை வர சொன்னான். கடையில் இருந்தவர், மருமகன் அதிசமயமாக கூப்பிட உடனே வந்துவிட்டார். “யார்  இடம்..? எதுக்கு இடம்..?” யுவராஜ் காட்டிய இடம் பார்த்து புரியாமல் கேட்டார். கடைக்கு கஸ்டமர் வந்திருக்க, மாதவன் கிளம்பியிருந்தான்.

“எல்லாம் நமக்கு தான் மாமா.. இடம் எப்படி இருக்கு..? வாங்கலாமா..?” என்றான் யுவராஜ்.

“இடம் நல்லா இருக்கு, ஆனா பணம் அதிகமா வருமே, இப்போ தான் நிலம், சரி விடு, நாம வாங்கலாம்..” என்றார். யுவராஜ்க்கு அவர் சொல் அப்படி தொட்டது.

“என்ன யுவராஜ், யார் இடம் இது..? போன் நம்பர் கொடு நான் பார்க்கிறேன்..” என்றார் திரும்ப.

“இடம் பத்தின எல்லாம் மாதவன்கிட்ட இருக்கு..” என்றான்.

“சரி.. நான் பேசுறேன்..” தயாநிதி உள்ளுக்குள் பணகணக்கு போட்டு கொண்டிருக்க,

“இது தாரணிக்கு மாமா..” என்றான்.

“என்ன..?” தயாநிதி புரியாமல் கேட்டவர், மருமகன் திரும்ப சொன்னதில், “தாரணிக்கா..?” என்றார்.

“ஆமா நீங்க கொடுத்த இருபது லட்சத்தோட, மாதவனும் இடம் வாங்க வச்சிருக்க பணத்தை சேர்த்து வாங்கலாம்..” என்றான்.

“அது நான் உனக்காக கொடுத்தது..” தயாநிதி கோபத்துடன் சொன்னார்.

“ஆனா அந்த பணம் தாரணிக்காக சேர்த்தது தானே, உரிமைப்பட்ட இடத்துக்கு போகட்டும்..” என்றான் யுவராஜ் பொறுமையாக.

“சரி இப்போ என்ன தாரணிக்கு இதே இடத்தை நான் வாங்கி கொடுக்கிறேன், நீ அந்த பணத்தை கொடுக்காத..” என்றார்.

“மாமா.. இருக்கிறதை வச்சு பண்ணுவோம், இப்போ வாங்கி போட்டா தான் உண்டு. இந்த இடம் என்னைவிட மாதவனுக்கு தான் அத்தியாவசிய தேவை. சொந்த இடத்தில கட்டிடம் எழுப்பி கடை வைக்க  ரொம்ப உதவியா இருக்கும், யோசிங்க..” என்றான்.

“நீ சொல்றது சரி தான், ஆனா பணம்..”

“மாமா.. அந்த பணம் இல்லன்னா என்ன..? நாளைக்கே எனக்கு ஏதாவதுன்னா உங்ககிட்ட தானே வர போறேன்..” என்றான்.

“நிஜமா..?” தாயநிதி நம்பாமல் கேட்டார்.

“சத்தியம் பண்ணனுமா..?” என்றான் மருமகன்.

“பண்ணாலும் நான் உன்னை நம்ப மாட்டேன்..” என்றார் மாமனார் விறைப்பாக.

“நான் உங்களை நம்புறேன், அது போதும், இப்போ தாரணிக்கு பார்க்கலாம், எனக்கு வரும் போது பேசிக்கலாம்.. மாதவன் வரான், அவன் முன்னாடி பேசி அவனை வருத்தப்பட வைக்காதீங்க, ரொம்ப ரோஷக்காரன் தெரியுமில்லை..” என்றான்.

தயாநிதி சின்ன மருமகன் வந்ததில் அமைதியாகிவிட்டாலும், ஜமுனாவிற்கு போன் செய்து பேசவே செய்தார். யுவராஜ் இடத்துக்காக மேற்கொண்டு பேச சொல்லி ஆகாஷுடன் சென்னை கிளம்பிவிட்டான். யாருக்கு என்று மாதவனிடம் சொல்லவில்லை. தயாநிதிக்கு சின்ன மருமனுக்காக இடம் வாங்குவதில் ஒப்புதல் என்றாலும், பெரிய மருமகன் பணத்தை மறுத்தது கோவம்.

ஜமுனா அப்பா பேசுவதை கேட்டு, அவருக்கு ஏற்றபடி பேசி  வைத்துவிட்டாள். இரவு கணவன் வர, அவனிடம் அது பற்றி கேட்கவும் செய்தாள். மாமனாருக்கு சொன்னதை மனைவிக்கும் சொல்லி முடித்துவிட்டான். அந்த இடம் பற்றி இனி தயாநிதி பார்த்து கொள்வார் என்று தெரியும்.

மாதாமாதம் ஆகாஷ், யுவராஜ் எடுத்த லோனுக்கான பணம் போக ஆரம்பித்தது. ஆகாஷ்க்கு பிரச்சனையில்லை. அவன் மிச்ச சம்பளம் ஓரளவு சரிக்கட்டும் என்றாலும், ஆர்த்தி சம்பளமும் இருந்ததே. யுவராஜ்க்கு கணிசனமான தொகை துண்டு விழுந்தது. ஆபிஸ் மெயின்டனன்ஸ் உண்டே.

வீட்டு செலவு யுவராஜ் அன்று பேசியதில் இருந்து அவன் பணத்தில் தான். எனவே அதுவும் பார்க்க வேண்டும். சம்பளம் இல்லையே. இவன் தானே அந்த மாதத்திற்கான பணத்தை பார்க்க வேண்டும். கிளைண்ட்ஸ் வேலை முடித்து உடனே கொடுப்பர் என்று சொல்ல முடியாதே. அதற்காக அவர்களிடம் ஓரளவுக்கு மேல் கேட்கவும் முடியாது.

மிகவும் பார்த்து பார்த்து அடுத்த மாதத்திற்கும்  யோசித்து தான், செலவு செய்யும் நிலை. ஜமுனாவிற்கு இப்போது அவனின் பணம் பற்றி எல்லாம் தெரியும் என்பதால், முதல் இரு மாதங்கள் அமைதியாக இருந்தவள், “மாமா.. வீட்டுக்கு  நான் பார்க்கவா..?” என்றாள்.

“ஏன் இந்த திடீர் கேள்வி..?” கணவன் கேட்க,

“முன்ன போல எல்லாம் இல்லை மாமா, என் சேவிங்ஸ் இருக்கு, உங்க பணம் இருக்கு, எனக்கு ஸ்டைபண்ட் வந்திட்டு இருக்கு, நீங்க ஏன் கஷ்டப்படணும்..?” என்றாள். யுவராஜ் பார்க்க, “என்னோட வீட்டுக்கு நான் செய்ய கூடாதா..? செய்வேன்..” என்றாள்.

உன் பணம், என் பணம் என்று பிரிச்சு பார்க்காமல், என் குடும்பம் இது, நான் பார்க்க வேண்டும் என்ற மனமாற்றம், பொறுப்பு, உரிமை. யுவராஜ் அடி மனது சிலு சிலுக்க, “பாரு..” என்றுவிட்டான்.

ஜமுனாவிற்கு கேட்டுவிட்டாலும், கணவன் ஒத்துக்கொள்வான் என்ற நம்பிக்கை குறைவு தான். அன்றே அந்த வார்த்தை கேட்டவன் ஆயிற்றே. அவளும் கணவன் சம்மதத்தில் மனம் பூக்க அமர்ந்துவிட்டாள். இருவரிடமும் முதல் மாற்றம். பெரிதான மாற்றம்.

Advertisement