Advertisement

கேளாய் பூ மனமே 24 FINAL

யுவராஜ் பேச பேச மனைவி அவனை பார்த்து நின்றுவிட்டாள். அவன் கைப்பிடியில் அவள். அவன் வார்த்தைகள் வெகு அருகில். உதடுகளின் அழுத்தமான உச்சரிப்பு, அவன் பாவங்கள், அவளை இறுக்கும் பிடி என்று முழுதாக அவனில் தான் அவள்.

நெற்றி முட்டிய கணவன், “என்னடி ரொம்ப பேசுறனா..? கிளாஸ் எடுக்கிறது போல இருக்கா..?” என்றான்.

ஜமுனா இல்லையென்று தலையசைத்தாள். ஆனால் என் ஏமாற்றங்களே நான் சொல்லி தான் அவருக்கு தெரிகிறது என்பது அவளை நிச்சயம் வருத்தியது. வாடிய முகம் பிடித்து கொண்டவன், “இப்போ என்ன..?” என்றான்.

ஜமுனா மறைக்காமல் அவள் வருத்தத்தை சொன்னாள். “கண்டிப்பா இருக்கும்..” என்றான் யுவராஜ். “சில உணர்வுகள் பொண்ணுங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்டி, அதை புரிஞ்சுக்காமல் கோட்டை விட்டதுல உன் புருஷனும் ஒருத்தன். ஆனா கண்டிப்பா நான்  காலம் முழுக்க இப்படியே இருக்க மாட்டேன், அப்படி புரியாத நேரத்துல நீ புரிய வைடி, தப்பு ஒன்னும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் புரிஞ்சிடுறது இல்லை தானே..?” என்றான்.

ஜமுனவிற்கு கணவன் வேலை சார்ந்த விஷயங்கள்  நினைவிற்கு வந்தது. அவளும் தானே அவன் போராட்டங்களை தெரிந்து கொள்ள நினைக்கவில்லை.

“நான் இவ்வளவு நேரம் உன்கிட்ட சொன்னது எல்லாம்,  இத்தனை வயசுக்கு நான் அனுபவிச்சது, உணர்ந்தது, யோசிச்சது. இதுக்கான விலை நம்ம பிரிவு. அதே போல உனக்கும் ஒரு நாள் தோணும், வாழ்க்கையை பத்தின கண்ணோட்டம் எல்லோருக்கும் மாறும், ஒன்னு போல இருக்காதுடி..” என்றான். ஜமுனா அவன் சொன்னவற்றை தனக்குள் பதிய வைத்து, அதை யோசித்து நின்றாள்.

“நாம பேசினது இதுவே ரொம்ப லேட் தான். ஆனா பணம் தான் ஆரம்பிச்ச புள்ளி. அதை பத்தி உன்கிட்ட முழுசா நான் பேசினதில்ல. என் அம்மா, பாட்டி பார்த்து கூட இருக்கலாம், ஆனா என் பொண்டாட்டி பொறுப்பா இருக்கணும் நினைக்கும் போது அவளை விட்டா நான் என்ன புருஷன்..? உண்மையை சொல்ல போனால் நீ பண கணக்கை பார்த்துக்கிட்டா  எனக்கு பெரிய ரிலீப் தான்..” முழுதும் அணைத்து சொன்னான்.

ஜமுனா அவன் நெஞ்சில் முகம் வைத்து கொண்டாள். தன்னிடம் பணம் பற்றி சொல்ல கூடாது, பேச கூடாது என்பது கணவனின் எண்ணம் இல்லை. புரிந்தது.

“உனக்கு என்னை பிடிக்குங்கிறதுக்காக நான் எல்லாத்திலும் பர்பெக்ட் எல்லாம் இல்லைடி, என்கிட்டேயும் குறை இருக்கும், அதை ஏத்துகிறது தான் உன்னோட சகிப்பு தன்மையும், விட்டு கொடுத்து போறதும். புரியுது தானே..?” அவள் முகம் நிமிர்த்தி கேட்டான்.

திருமணம் முடிந்து ஐந்து வருடம் முடிய போகிறது. இதில் மூன்று வருடம் பிரிவு. என்ன புரிந்து கொள்ள முடியும்..? வாழ்க்கையை பற்றியும், கணவனை பற்றியும் தான். ஜமுனா ஏதும் சொல்லாமல், அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“என்னடி டல்லடிக்குற..? என்னை ஏத்துகிறது அவ்வளவு கஷ்டமா இருக்கா..?” என்றான்.

“உங்களுக்கு இருக்கா..?” ஜமுனா நெஞ்சிலே கேட்டாள்.

“அதெப்படி இருக்கும்..? என்னடி பேசுற..?” என்றான் வேகமாக.

“அப்படி தான் எனக்கும் மாமா, நமக்குள்ள இருக்க பார்வைகள் தான் வித்தியாசம், நம்ம விருப்பம் இல்லை தானே..? அப்புறம் என்ன..?” ஜமுனா  அவன் கண் பார்த்து கேட்டாள்.

“உண்மைடி.. என்னதான் ஈருடல் ஓருயிர்ன்னாலும் ஒன்னு போல யோசிக்க முடியாது தான்..” என்றான்.

ஜமுனா முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு. “ஈருடல் ஓருயிர் எல்லாம் எனக்கு மறந்தே போச்சு மாமா..” என்றாள்.

“சேட்டை..” அவள் மூக்கை கடித்தவன், “பேசும் போதே பத்திக்கிற  தீயில ரொம்ப என்னை காயவிடாத, அப்புறம் நீ தான் ரொம்ப படுவ.. பார்த்துக்கோ..” என்றான் மிரட்டலாக. அவன் குரலில் உள்ள தீவிரம், ஜமுனா நெஞ்சில் திகிலை கொடுத்தது நிஜம்.

“இப்படி பயமுறுத்தினா எப்படி ஈருடல் ஓருயிர் எல்லாம்..” என்றாள்.

“ஏன் உன்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியாதா என்ன..?” என்றான் கணவன்.

“மாமா..” ஜமுனா முகம் சிவந்து அவனிடமே மறைந்தாள்.

“உன் சூடு எனக்குள்ள போகுதுடி..” என்றான் கணவன் விடாமல்.

“ஏற்கனவே உங்களுக்கு கொதிச்சுட்டு தான் இருக்கு..” ஜமுனா சொல்ல,

“அதென்னமோ உண்மை தான்.. எத்தனை நாள் தாங்கும் தான் தெரியல..” என்றவன், அவன் தவிப்பை தாக்கு பிடிப்பது போல அணைப்பை அதிக படுத்தினான். ஜமுனாவின் எலும்பு நோகும் இறுக்கம். “மாமா..” என்றாள் பெண் தாங்காமல்.

யுவராஜ் சில நொடி சென்றே அணைப்பை தளர்த்தினான். ஜமுனா மூச்சை கொஞ்சம் நன்றாக இழுத்துவிட, யுவராஜிடம் ஒரு சீண்டலான சிரிப்பு. “இதுக்கே மூச்சு வாங்குற..” என்றான்.

“போதும்.. எனக்கு கால் வலிக்குது..” என்றாள்.

“ம்ம்ம்.. தூங்க போலாம், அதை தானே மூணு வருஷமா பண்றோம்..” என்றான் கணவன் கடுப்பாக.

“உங்களை தூங்க சொல்லி இங்க யாரும் கட்டிவைக்கலை..” மனைவி முணுமுணுத்தாள்.

“ஒரு நாள் வரும்படி, என் பொண்டாட்டியை நான் உணருற நாள், அன்னைக்கு  நீயே கட்டிவைச்சாலும் பார்த்துக்கோ..” என்றவன்,  அவளை மேலும் ஒரு முறை நன்றாக அணைத்து, வீட்டுக்குள் கூட்டி சென்றான்.

கதவு பூட்டி வர, ஜமுனா பிளாஸ்கில் இருந்த பாலை கணவனுக்கு கொடுத்து, தானும் குடித்தாள். இருவருக்கும் இளம் சூட்டில் இருந்த பால் மிகவும் நன்றாக இருந்தது. குடித்து, கழுவி வைத்து ரூம் சென்றனர். ஜீவிதா இல்லாததில், அணைத்தே படுத்தனர். ஜமுனாவிற்குள் கணவன் பேச்சு ஓடி கொண்டே இருந்தது.

மறுநாள் மாலை வரை ஊரில் இருந்து சென்னை கிளம்பினர். மாதவனிடம் தனியே பேசியிருந்தான் யுவராஜ். அவனும் தயாநிதி வம்படியாக கொடுத்த காரில் தாரணியை கல்லூரியில் விட கிளம்பினான். நாட்கள் எப்போதும் போல தான் சென்றது. ஆனால் சிறு சிறு மாற்றங்கள்.

ஜமுனா அவள் நிலையில் இருந்து சற்று மாற்றி பார்க்க ஆரம்பித்தாள். குடும்பத்தின் ஓட்டத்தை அமைதியாக உள்வாங்கினாள். வீட்டு பெரியவர்களின் பேச்சை பத்தோடு பதினொன்றாக கேட்காமல், கவனித்தாள். படிப்பு அவளின் கனவு என்றால் குடும்பம் அவள் உயிர் மூச்சு. கனவை எட்டி பிடித்துவிட்டாள். தவித்து கொண்டிருக்கும் உயிர் மூச்சை நேர்படுத்தம் பொறுப்பில் பெண்.

கணவன் இது இப்படி தான், நான் இது தான் என்று அவளிடம் ஒத்து கொண்டு விட்டான். ஒப்பு கொடுத்து விட்டான். அவனுள் ஈகோ போன்ற எதுவும் இல்லை. வளர்ப்பு தான் அநேக நேரங்களில் எதிரொலிப்பது புரிந்து கொள்ள முடிந்தது.

இன்றும் வீட்டு பெண்களில்  பண நிர்வாகம் அறியாதோர், தெரியாதோர் உள்ளனர். ஆணாதிக்கமோ, அவளுக்கு ஏன் இந்த கஷ்டம் என்ற ஆண்களின் குணமோ தான் அதற்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. இதிலும் விதி விலக்கு உண்டு. ஆண்கள் சொல்ல விழைந்தாலும், காது கொடுத்து கேட்கா பெண்கள். அவர்கள் விருப்பம் அது. அவ்வளவு தான். ஜமுனா கடந்த பாதையின் பெரிய முள்ளாக இருந்தது பணம் தான். அதை விட அவளால் முடியாது.

‘இனியொரு பிரிவு, ஏமாற்றம் தாங்க அவள் தயாராக இல்லை. எங்களுக்குள்ள எதுவோ அது இரண்டு பேருக்கும் இருக்கட்டும், எல்லாம் தெரிந்துவிட்டால், அங்கு விளக்கங்களுக்கு இடம் இல்லாமல் சென்றுவிடுகிறது தானே..? நானும் அவரும் பேசி செய்றது வேற தானே..? மாற்று கருத்துன்னாலும் அது அங்கேயே முடிஞ்சிடும், எனக்கு அது தான் வேணும். வருடங்கள் நீடித்து இருவரும் பட்டது போதும்..’

‘உறவை நேர்படுத்த, உறுத்தலை களைய வேண்டும்..!’

 ‘இவர் மட்டுமே எல்லா இடத்திலும் தப்புன்னு சொல்லிட முடியாது. எங்க  உறவுக்கான பொறுப்பு அவருக்கு மட்டுமே இல்லை தானே..? நானும் என் கோவத்தை விட்டு, அவர்கிட்ட முதல்லே  பேசியிருக்கலாம், சண்டை போட்டிருக்கலாம், அவருக்கு என் ஏமாற்றமே தெரியலன்னும் போது, இந்த பிரிவு என்ன சாதித்தது..? அவர் என்னை புரிஞ்சுக்காதது தப்புன்னா, என்னை அவருக்கு புரிய வைக்க இடம் கொடுக்காததும் என் தப்பு தானே..?’ இருவரின் குறையும் கண்ணுக்கு தெரிந்தது.

Advertisement