Advertisement

முன்ன உன்னை பத்தி அவனுக்கு ஒன்னுமில்லை, இப்போ அப்படியில்லை, பார்த்துக்கோ..” என, மாதவனுக்கும் ரமேஷின் குணம் தெரியுமே. ஒரு ஊர் தானே

சரிண்ணா.. நான் பார்த்துகிறேன்..” என்றுவிட்டான்

தயாநிதிக்கு தான் அண்ணன் மகனின் செயல் நம்பமுடியவில்லை. அவ்வளவு வருத்தம். ஆதங்கம். அவர்கள் வீட்டிற்கே சென்றுவிட்டார். அவர் குணமே அது தானே. ரமேஷை நிற்க வைத்து, “என்னை இப்படி பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு..? உன்னை  என் மகனா தானே நினைச்சேன், குடோன் வச்சப்போ கூட, பணம் பத்தலைன்னா கேட்டவுடனே பணத்தை தூக்கி கொடுத்தேனே, இன்னவரைக்கும் அதில இருந்து ஒரு ரூபாய் வரலை, இப்போவரை பணத்தை பத்தி ஒரு சொல் கேட்டிருப்பனா..?  அண்ணன் மகன் பொழைக்கட்டும் நினைச்சதுக்கு என்னை கஷ்டப்பட நினைச்சிருக்கியே..?” என்று கொதிக்க

அவனோ எனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்தான். “யாரோ சொன்னாங்கன்னு என்னை சந்தேகப்படுறீங்களா..? உங்களுக்கு உங்க மாமியார் வீடு தான் முக்கியம்ன்னா எங்க மேல பழி போடுவீங்களா..?” என்று பேச்சை மாற்றி குதித்தான். தயாநிதியின் அண்ணனும், தம்பியும் கூட ரமேஷுக்கு ஆதரவாக பேச, தயாநிதி வெறுத்து போய் வீடு வந்தவர், மனைவியிடம் அப்படி புலம்பி தள்ளினார்

இதோட போச்சுன்னு நினைச்சுக்கோங்க, இதுலே அவனை பத்தி தெரிஞ்சு போச்சு, விடுங்க..” ஜெயலக்ஷ்மி கணவரை அமைதிபடுத்தினார். அண்ணன், தம்பி மேல் கணவருக்கு இருக்கும் பாசம் தெரிந்ததே. ரமேஷுக்கு மட்டுமில்ல, தம்பி மகனுக்கும் படிக்க பணம் கொடுத்திருக்கிறார் தயாநிதி

இரண்டு  பொண்ணு தானே வச்சிருக்கார், எங்களுக்கு செய்யட்டும்..’ இந்த மனநிலை அவர்கள் வீட்டில் இருப்பது ஜெயலக்ஷ்மிக்கு சில நேரம் உணர முடியும். ஆனால் கணவனின் பாசம் புரிந்தவர் என்பதால், தொழிலுக்கு, படிப்புக்கு தானே கொடுக்கிறார், கொடுக்கட்டும் என்று தடுக்கவில்லை

இப்போது ரமேஷ் உண்மையான குணத்தை கண்ட பிறகு, அப்போது தடுத்திருக்கணும் என்று தோன்றாமல் இல்லை. ‘நல்லது செய்யவும், பாசம் வைக்கவும் கூட தகுதி இருக்கணும்..!’ பலமான பாடம் தான். ஜமுனா, தாரணி கூட உறவுகளின் நிறத்தில் மலைத்து தான் போயினர். அனுபவம் தானே..? சிறிது நாளில் மீண்டும் கொண்டனர்.

ஆனால் யுவராஜ் மட்டும் தான் ரமேஷை விட கூடாது என்றிருப்பவன். அவனை பற்றி கேள்விப்பட்ட வேறு விஷயங்களும் காரணம். அந்த காரணங்கள் கூடிய சீக்கிரம் வெடிக்கும்.. பார்ப்போம்..

அதனை தொடர்ந்த  ஜமுனா, யுவராஜ் நாட்கள் எப்போதும் போல சென்றது. இடையில் காமாட்சி ஊருக்கு செல்லும் போது யுவராஜ் மகளை பார்த்து கொண்டான். ஜமுனாவிற்கு விடுமுறை கிடைத்தால் மட்டுமே ஊருக்கு சென்றுவருவர். அதுவும் ஒரு நாள், இரண்டு நாள் அவ்வளவு தான்

ஆகாஷ் லோன் வாங்கி அண்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டான். யுவராஜும் அவனின் லோனுக்காக காத்திருந்தான். ஊரில் அருணாச்சலம் பணம் கொஞ்சம் ரெடி செய்தார். தேங்காய் தோப்பில் பாதியை குத்தகைக்கு விட்டார். எப்போதும் இவர்களே தான் வெட்டி, மண்டிக்கு போடுவர். இந்த முறை பணம் தேவைப்படும் என்று யுவராஜிடம் கேட்டார்

பாதி மட்டும் போட்டுக்கலாம் தாத்தா..” என்றான் பேரன்

சரி.. மூணு வருஷத்துக்கு போட்டுக்கலாம்..” என்றார். யுவராஜ் பணம் எவ்வளவு வரும் என்று கேட்டு சரி என, அந்த பணமும் கணிசமாக சேர்ந்தது. யுவராஜின் லோன் பணமும் வந்துவிட்டது. அவன் கேட்டிருந்தது விட சில லட்சங்கள் குறைந்து வந்தது

அண்ணனும், தம்பியும் அன்றிரவே அமர்ந்து கணக்கு பார்த்தனர். எவ்வளவு துண்டு விழுகிறது..? என்ன வழி..? அவர்கள் அக்ரீமெண்ட் போட்ட ஆறு மாதமும் நெருங்கிவிட்டது. ஒரு நல்ல தொகை தான் தேவைப்படுகிறது. அருணாச்சலமும் போனில் இருந்தவர், “உங்க பாட்டி, அம்மா நகை வச்சுக்கலாமா..?” என்றார்

வேணாம் தாத்தா..” யுவராஜ் உடனே உறுதியாக மறுத்தான். நகை வைத்து தான் அவன் இன்னும் இறங்கி வேலை பார்த்தது. இப்போது திரும்பவும் என்றால்..? 

ண்ணா.. ஆர்த்தி சேலரில லோன்..?” ஆகாஷ் கேட்க, ஆர்த்தியும் அங்கு தான் இருந்தாள். காமாட்சி, ஜமுனா உட்படலோனா..? என்று ஆர்த்தி கண் விரிக்க, யுவராஜ் வேண்டாம் என்றுவிட்டான். அவளுக்கு பயம். புதிதான விஷயம். ஆனால் அவர்களின் தேவை பார்த்து, “லோன் போலாம் மாமா.. நான் கேட்கிறேன்..” என்றாள்

இல்லைமா.. வேண்டாம், நம்மால சமாளிக்க முடியும்..” என்றுவிட்டான். அதிக நேரம் பேசி கலைந்து சென்றனர். ஜமுனா ரூமிற்க்கு வர, யுவராஜ் புருவம் சுருக்கி அமர்ந்திருந்தான். அவனுக்கு அது ஒன்றுதான் வழி. ஆனால் உடன்பாடு இல்லை

என்ன பண்ணலாம் இருக்கீங்க..?” ஜமுனா கேட்டாள்

அந்த பணத்தை தான் எடுக்கலாம் இருக்கேன்..” என்றான். வீட்டில் அத்தனை பேர் உள்ளனர், அவசரத்துக்கு தேவைப்படும் என்று எப்போதும் சில லட்சங்களை எடுத்து  வைத்திருப்பான். அதை தான் சொல்கிறான்

அது வேண்டாம், நீங்க என்கிட்ட வாங்க வேண்டாம், என் அக்கவுண்ட்ல மூணு வருஷமா நீங்க போட்ட பணம் இருக்கு, அதை எடுத்துக்கோங்க, தாராளமா இருக்கும்..” என்றாள் ஜமுனா

யுவராஜ் மனைவியை பார்த்தானே தவிர, அதற்கான  பதில் இல்லை. “தலை வலிக்குது..” என்றான். ஜமுனா கணவனை பார்த்தபடி, தைலத்துடன் பக்கத்தில் அமர்ந்தாள். யுவராஜ் அவள் மடியில் படுத்தான்

இதுக்கு மட்டும் தான் உங்களுக்கு பொண்டாட்டியா..?” ஜமுனா மசாஜ் செய்தபடி கேட்டாள்

எல்லாத்துக்கும் தான் பொண்டாட்டி.. இது என்னடி கேள்வி..?” என்றான் கணவன் வாகாக படுத்து

பணம் வாங்க மாட்டீங்க, நீங்க கொடுத்த பணத்தையும் எடுக்க மாட்டீங்க, ஜீவிதாக்கு தம்பி, தங்கச்சியும் பார்க்க மாட்டீங்க, ஆனா எல்லாத்துக்கும் பொண்டாட்டியாம்..”

பாப்பா உன்கிட்ட கேட்டாளா தம்பி வேணும்ன்னு..”

ஜீவி கேட்டு தான் அவ பிறக்க அப்படி உழைச்சிங்களா..?”

இல்லை தான்..”

இப்போ மட்டும் என்ன..?” ஜமுனா கணவனை பார்த்தாள். அவனோ மனைவி வயிற்றோடு ஒட்டினான்

சரி ஏன் அந்த பணத்தை எடுக்க மாட்டீங்க..? உங்க சம்பாத்தியம்  தானே..? அப்பறம் என்ன..?”

என் பொண்டாட்டிக்கு கொடுத்ததுக்கு அப்பறம் அது அவ பணம் மட்டும் தான், அவ அதை யூஸ் பண்ணாலும், பண்ணலைன்னாலும்..”

மாமா.. ப்ளீஸ்.. என்னை திரும்ப டென்ஷன் பண்ணாதீங்க, அந்த பணத்தை எடுங்க.. அதான் இருக்கு இல்லை

ஜமுனா.. அது வேண்டாம்..”

ஏன் வேண்டாம், எடுங்க..”

முடியாதுடி.. உனக்காக நான் கொடுத்தது கொடுத்தது தான், எப்படி நீ உன் வைராக்கியத்துல படிச்சு முடிக்கணும் இருக்கியோ, அப்படி தான் நான் உனக்கு கொடுத்த பணமும்..”

ஆமா என் வைராக்கியம் தான். அதுல தப்பு இருக்கா என்ன..?” ஜமுனா குரல் உயர்ந்தது.

இப்போ வந்து தாத்தா அவரு நிலமையை சொல்றார், என் அம்மா உங்களுக்கு பார்க்கலைனா அழுறாங்க, என் அப்பா மாமனார் குடும்பம்ன்னு உருகிறாங்க, அப்போ நான் இங்க யாரு, என்னமோ நான் பண்ணது தப்பு போல, என் ஆசை பெருசு போல, நான் உங்கமேல நம்பிக்கையே வைக்ககூடாது போல, என்னோட எதிர்பார்ப்பு எதோ அடம் போல..”

ஏன் நான் என்ன தப்பா மாமா..? என் புருஷன் என்னை படிக்க வைக்கணும்னு எதிர்பார்த்தது தப்பா..? நான் ஒன்னும் நீங்க நிலத்தை மீட்க கூடாதுன்னு எங்கேயும் கேட்டனா என்ன..? நீங்க ஏன் எனக்காக யோசிக்கலைஎன்கிட்ட உட்கார்ந்து பேசலவேற வழி தேடலைன்னு தான் கோவம்..”

பாப்பா பிறந்தும் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சா, நீங்க சாதாரணமா எக்ஸாம் கிட்ட வந்து வேண்டாம் சொல்வீங்களா..? ஒரு மூணு மாசம் நீங்க அந்த ப்ராஜெக்டுக்கு உழைச்சருப்பீங்களா..? அதுக்கே உங்களுக்கு அதை விட முடியல, கையில இருக்கிற பணத்தை எல்லாம் துடைச்சு போட்டு செஞ்சிருக்கீங்க..?”

அன்னைக்கு நான் உங்ககிட்ட எக்ஸாம் பத்தி சொல்லலைன்னு  எவ்வளவு கோவம்..? நீங்க மட்டும் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா செஞ்சிங்க..? அந்த ப்ராஜெக்ட் பத்தி எனக்கிட்ட தெளிவா பேசியிருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது தானே..? அப்படியா நான் சின்ன பொண்ணு..? இருபத்தி நாலு, இருபதிஞ்சு ஒன்னும் புரியாத வயசு இல்லை மாமா..”

என் மாமா என்னை ஏமாத்த மாட்டார், எனக்காக எப்போவும் நிற்பார்ன்ற நம்பிக்கையை உடைச்சுது தப்பு இல்லையா..? எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்ற என் மாமா, அவர் பொண்டாட்டி என்னை  விட்டுட்டீங்க தானே..?  நீங்க என்ன இப்படியா மாமா, என் மாமா இப்படி இருக்கலாமா..? நான் பாவம் இல்லையா..?” ஜமுனா இத்தனை நாள் அழுத்தத்தில் கேட்டு கொண்டே வந்தவள், இறுதியில் உடைந்து போக, யுவராஜ் மனைவி மடியை விட்டு எழுந்திருந்தவன், அவளை அணைத்து கொண்டான்

ஜமுனாவிற்கு சில நாட்களாக அவளை சுற்றி நடப்பது அப்படி ஒரு அழுத்தத்தை கொடுத்திருந்தது. அதை எல்லாம் ஒதுக்க நினைத்தாலும் முடியவில்லை. பாரத்தை கூட்டி கொண்டே செல்ல, இன்று முடியவே இல்லை. யுவராஜ்க்கு மனைவியை புரியாமல் இல்லை

நீ தோத்துட்டேன்னு உன்னை நீயே போர்ஸ் பண்ணி என்னோட வாழ நினைக்கிற ஜமுனா..? உன்னாலே முடிஞ்சுதா அது..?” என்றான் அமைதியாக

நான் உன்கிட்ட நெருங்கினா உனக்கு எங்கெங்க சிவக்கும், எங்கெங்கே வேர்க்கும், எங்கெங்கே நடுங்கும்ன்னு எனக்கு தெரியும்டி, என்கிட்ட பேசுற ஜமுனா என் பொண்டாட்டி இல்லை, எனக்கு இவ வேண்டாம். என் பொண்டாட்டி தான் வேணும்..” யுவராஜ் மனைவி முகம் பார்த்து சொல்லி அழுத்தமாக அவளை தன்னுடன் பிணைத்து கொண்டான்.

Advertisement