Advertisement

கேளாய் பூ மனமே 22

“அப்போ உழைச்சத்துக்கு தான் இத்தனை வருஷமா ரெஸ்ட்லே இருக்கீங்களே..?” என்றாள் ஜமுனா

ஏன் ரெஸ்ட்ல இருந்தா தப்பா என்ன..? பாரு இன்னைக்கு கூட கல்யாண வேலை பெண்டு கழண்டிடுச்சு, கவுந்தடிச்சா படுத்தா அப்படி தூக்கம் வரும்..” என்றான் கணவன்

ரொம்ப நல்லது.. கவுந்தடிச்சு படுங்க..ஜமுனா கணவனை முறைப்பாக பார்த்து அவன் அணைப்பில் இருந்து நகர

ம்ஹூம்.. சேர்ந்தே படுக்கலாம்..” என்றான்

நீங்க என் தொந்தரவு இல்லாம நல்லா ஜாலியா  படுங்க.. நான் போறேன்..” என்றாள் மனைவி

அட இருடி.. ரொம்ப தான் சிலுத்துகிற..” யுவராஜ் அவளுடனே பெட்டில் விழுந்தான்

ஜீவிதா சுவற்றோரம் இருக்க, “என் கால் மேல கால் போட்டுக்கோடி, வலிக்கு நல்லா இருக்கும்..” என்றான்

ஏன் எனக்கு மட்டும் கல்யாண வேலை இல்லையா..? கால் வலிக்காதா..?” என்றாள் மனைவி கட்டுப்பாக

இதை முதல்ல சொல்ல வேண்டியது தானே..?” யுவராஜ் தன் காலை அவள் மேல் போட

மாமா.. நானே போட்டுகிறேன்..” ஜமுனா தடுத்து தானே அவன்  மேல் போட்டு கொண்டாள்

நான் என்ன அவ்வளவு வெய்ட்டாவாடி இருக்கேன், இந்த பதறு பதறுற..” யுவராஜ் கேட்க

நீங்க சரியான வெய்ட் தான், நான் தான் வீக் வச்சுக்கோங்க..”

அப்புறம் எப்படி என்னை உழைக்க மட்டும் சொல்ற..?”

மாமா.. அது வேற, இது வேற, டையர்டா தானே இருக்கீங்க, அமைதியா படுங்க..” ஜமுனா சிரிப்புடன் அதட்ட, யுவராஜ் சில நொடியிலே தூக்கத்திற்கு சென்றான்

ஜமுனா அவனை பார்த்தபடி விழிந்திருந்தாள். அவ்வளவு சோர்வு, உடல் வலி தான். ஆனால் தூங்க முடியவில்லை. அவளின் எண்ணங்கள் அவளின் முகத்தில் பிரதிபலித்தது. ஒரு நேரத்தில் அவளுக்கே தெரியாமல் தூங்கி போனாள்

அடுத்தடுத்த  நாட்கள் மிச்சமிருந்த தாரணி, மாதவன் திருமண  சடங்குகள் நடந்தது. ஜமுனா விடுமுறை முடிய போக, குலதெய்வ கோயில் பூஜை, உறவு விருந்து எல்லாம் முடிந்தது. யுவராஜ், ஆகாஷ்  குடும்பம் அங்கு இருக்கும் போதே, தாரணி, மாதவனுடன் இரு குடும்பத்தையும் வர வைத்து வீட்டிலே பெரிதாக விருந்து வைத்துவிட்டனர் அருணாச்சலம் குடும்பத்தார்

சென்னை வர வேண்டும்..” என்று புது மணமக்களை யுவராஜ், ஆகாஷ் இருவரும் மனைவியுடன் முறையாக அழைத்தனர். மாதவன் தேனிலவுக்காக மூணாறு சென்றான். இவர்கள் சென்னை கிளம்பினர்

நாட்கள் வழமைக்கு திரும்பியது. ஆனால் தொலைந்த பணம் மட்டும் கண்ணாமூச்சி ஆடியது. யுவராஜ், தயாநிதி இருவரும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தனர். ஆனால் பணம் பறித்த வழி சிறிய மலை போன்ற வழி என்பதால், யாரும் எதுவும் பார்க்கவில்லை. வந்தவர்களும் தடயம் எதுவும் வைக்கவில்லை

இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தான் போலீஸ் விசாரித்து கொண்டிருந்தனர். மாதமே நெருங்கிவிட்டது. திருடின பணத்தின் நிலை என்னவென்று கேள்வி குறியாகவே இருந்தது. “எவ்வளவு வந்தாலும் பரவாயில்லை. திருடினவங்களை மட்டும் விட கூடாது..” தயாநிதி சொல்லி கொண்டே இருந்தார்

அந்த அதிர்ச்சிமனவுளைச்சலில் இருந்து மீண்டு விட்டார் மனிதர். மகளின் திருமணமும் நல்ல படியே முடிந்திருக்க, இதை கண்டறியும் வேலையில் இறங்கிவிட்டார். “உள்ளூர் ஆட்கள் போல தெரியவில்லை..” மாதவன் சொல்ல

ரமேஷுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அவன் மேல சந்தேகம் கேஸ் கொடுக்கலாம்..” என்றான் யுவராஜ்

இல்லை.. அண்ணன் மகன், அவன் எடுக்கலை, அவனுக்கு தெரியுங்கிறதுக்காக கேஸ் எல்லாம் போக முடியாது..” என்றார் தயாநிதி. அவருக்கு ரத்த பாசம். மாப்பிள்ளைக்கு புரிய, அவனும் கட்டாயப்படுத்தவில்லை

ஆனால் மாமனாரிடம் இருக்கும் அந்த பாசம் ரமேஷிடம் இல்லை என்பது தான் அவனுக்கு கோவமாக இருந்தது. ‘அவன் பண்ற வேலைக்கு கண்டிப்பா மாட்டுவான் பார்த்துக்கலாம்..’ யுவராஜ் தன்னை தானே அமைதி படுத்தி கொண்டான்

தாரணி விடுமுறை முடிந்து படிக்க கிளம்பினாள். முடியும் தருவாயில் இருந்தது படிப்பு. மாதவனுக்கு புது மாணவியை பிரிவது ஏக்கம் தான். ஆனால் இப்படி என்று முன்னமே  தெரிந்தது  தானே..? விடுமுறைக்கு வர போக இருப்பாள் என்பதில் மனதை தேற்றி கொண்டான். அவனே மனைவியை அழைத்து சென்று காலேஜில் விட்டு வந்தான்.

மேலும் சில நாட்கள் கடக்க, ஒரு வழியாக திருடியவர்கள் வெளியே வந்தார்கள். “நாம பாலோ பண்றோம் தெரிஞ்சா வர மாட்டாங்க, அமைதியா இருப்போம்..” போலீஸ் சொல்ல, இவர்களும் அமைதியாக எப்போதும் போல வேலை பார்த்திருந்தனர். திருடியவர்களும் தைரியமாக எடுத்த பணத்தை டாஸ்மாக் கடையில் கொடுக்க, அதை வைத்து தான் பிடித்தனர்

போலீஸ் டாஸ்மாக்கிலும் சொல்லி வைத்திருந்தனர். இது போன்ற ஆட்கள் முதலில் உல்லாசத்திற்கு தான் அதிகம் செலவு செய்வர் என்ற அவர்களின் கணக்கு இங்கும் உண்மையானது. தயாநிதி சீட் கட்டிய நபர், புதிதான இரண்டாயிரம் கட்டு ஒன்றுடன் ஐநூறு கட்டுகளை சேர்த்து கொடுத்திருந்தார். அந்த இரண்டாயிரம் கட்டின் சீரியல் எண்கள் அடுத்தடுத்து வரும். புத்தம் புதிதான கட்டு அது. திருடியவர்கள் முதலில் அந்த பணத்தை தான் வெளியே எடுத்து கொடுத்து சிக்கினர்

டாஸ்மாக் ஆட்கள் அவர்களை சில்லறை இல்லை என அங்கேயே இருக்க வைத்து, போலீசுக்கு தகவல் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் பிடியில். அவர்கள் வேறு யாருமில்லை. அந்த சீட் ஆபிசில் வேலை செய்யும் ஆளின் நண்பர்கள் தான். எடுபிடி வேலை பார்ப்பவன், தயாநிதிதிருமணத்திற்கு பணம் வேண்டும், இந்த முறை இரண்டு சீட்டும் எனக்கு தான்..” என்று சீட் நடக்குமுன் வாரம் நேரில் வந்து பேசி சென்றார்

சீட் நடத்துபவரும், “எடுத்துக்கலாம்..” என்று சொல்லியிருக்க, இவர்களும் திட்டம் தீட்டி பணத்தை அடித்துவிட்டனர். சீட் எப்போதும் முடிய முன் இரவாகிடும். தயாநிதி அதன் பின் கடைக்கு சென்று அடைத்து, பணத்துடன் வீட்டுக்கு திரும்ப தாமதம் ஆனது. ஊர் அடங்கிவிட, சாலையில் ஆட்களின் நடமாட்டமும் குறைந்து போனது

தயாநிதி தனியே காரில் வர, சிறிய மலை போன்ற பாதைக்குள் சில மீட்டர் சாலை இருக்கும். அங்கு வைத்து பைக் பஞ்சர், பிள்ளைத்தாச்சி பெண் என்று பெண் வேஷம் போட்டு ஆண் சற்று தள்ளி பைக்கிடம் நிற்க, இவரும் இருட்டில் சரியாக கவனிக்காமல் என்னவென்று விசாரிக்க இறங்கியது தான். அடுத்த நொடி மறைந்திருந்தவர்கள் அவர் மேல் பாய்ந்து அடித்து, பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிட்டனர்

மிக சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. அந்த சாலையில் பைக்கில் வந்த இருவர், தயாநிதியை பார்த்து மருத்துமனையில் சேர்த்து, அதன் பின் நடந்தது தான் எல்லாம். தயாநிதியின் இத்தனை வருட வாழக்கையில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருந்ததில் மனிதர் சிக்கி கொண்டார். அவருக்கு அப்போதும்காரில் பணம் இருக்கிறது, கூட கூட்டிட்டு போறது ரிஸ்க், விசாரிச்சு ஆளுங்களை வர வச்சு உதவு செய்வோம்..’ என்று இறங்கியது தான்.  

அந்த வேலை செய்யும் ஆள், எப்போதும் போல ஆபிசுக்கு வந்து செல்ல, போலீஸ் ஒருமுறை அவனிடமும் விசாரித்திருந்தனர். எப்படியோ திருடர்கள் சிக்கிவிட்டனர். விஷயம் கேள்விப்பட்டு அந்த சீட் நடத்துபவர் தான், நடுங்கிவிட்டார்

அவரிடம் எப்போதும் பணம் ரொட்டேஷனில் இருக்குமே. அவரிடமே அடித்தால் கூடவே இருப்பவன், நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்ற உஷாரில் இருந்துள்ளனர். இதற்கு முன்பும் சில இடங்களில் சிறு  சிறு திருட்டு செய்திருந்தது விசாரணையில் வெளியே வர, பலமான தண்டனை தான்

இதில் எங்கு ரமேஷ் வந்தான், அவனுக்கு எப்படி தெரியும் என்பதும், அப்புறம் தான் புரிந்தது. அந்த கூட்டத்திற்குள் ஒருவன் ரமேஷின் அரிசி குடோனுக்கு மூட்டை இறக்க வருபவன். மூட்டை அதிகமான லோடு இறங்கும் நாட்களில் எப்போதும் கூலியுடன் சரக்கும் கிடைக்கும். நடு இரவு ஆகிவிட, அங்கேயே குடித்து படுத்துவிடுவர்.

அன்றும் அப்படி தான் குடித்து, மற்றவனிடம்இது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், அடுத்து லம்பா அடிக்க போறோம்..” என்று இன்னொரு போதையில் இருக்கும் அவன் கூட்டாளியிடம் எல்லாம் பேச, உள்ளே கணக்கு பார்த்து கொண்டிருந்த ரமேஷ் காதில் விழுந்தது

நல்லா வேணும், அன்னைக்கு பஞ்சாயத்துல  மாப்பிள்ளைக்காக என்னை என்ன பேச்சு பேசினார், இப்போ பணம் போகட்டும், இரண்டு பொட்ட பிள்ளையை பெத்து வச்சுட்டு நாம தானே அவருக்கு, நம்மக்கிட்டயே இப்படி பேசுவாரா..?” என்று நெருங்கிய நண்பனிடம் சொல்லியிருக்க, அது மாதவன் பங்காளி மூலம் அவன் காதுக்கும் வந்தது

என்ன எல்லாம் முடிந்தபிறகு தான் தெரிய வந்தது. இப்போதும் அப்படி ஒன்றும் நஷ்டம் ஆகிவிடவில்லை. சில ஆயிரத்தை தவிர, முழு பணமும் கைக்கு வந்துவிட்டது. யுவராஜ்க்கு ரமேஷை அப்படியே விட மனமில்லை. அவன் குணத்துக்கு எப்படியாவது சிக்குவான் என்றுவிட்டவன், மாதவனை கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க சொன்னான்

Advertisement