Advertisement

தாரணி படிப்பு முடியும் நிலையில் இருக்க, அவள் விடுமுறை எடுத்து கொண்டு ஊர் வந்த பிறகு திருமண பட்டு எடுக்க நாள் குறித்தனர். அது மாதவன் செலவு. தயாநிதி கலங்கிய அளவு எதுவும் இல்லாமல் ஓரளவு எல்லாம் சுமூகமாக முடிவானது. தொலைந்த பணம் மட்டுமே கேள்விக்குறி. யுவராஜ் விடாமல் பாலோ செய்தான். துப்பு கிடைக்கவில்லை என்றால், ரமேஷ் மேல் சந்தேகத்திற்கான கம்பளைண்ட் கொடுக்க யோசித்தான்

மாதவனுக்கு ஊரில் நல்ல தொடர்பு. அவன் எந்த தேவையில்லாத வம்பிலும் பங்கெடுக்க மாட்டான் என்றாலும், நண்பர்கள் அதிகம். இவன் அப்பா வீட்டு கூட்டமும் ஜாஸ்தி. தயாநிதி பங்காளிகள் அளவை விட அதிகமே. ஏன் அந்த ஊரிலே மாதவன் பங்காளிகள் தான் அதிகம். அவர்களுடன் எல்லாம் நல்ல பழக்கத்திலே இருந்தனர் அம்மாவும், மகனும்

இவர்கள் தான் யாரிடமும் பணத்துக்காக சென்று நிற்க மாட்டார்களே..? கௌரவமான இடைவெளியில் நிற்க, உறவுகளுக்கு இடையே நல்ல மரியாதை உண்டு. மாதவனின் அந்த தொடர்பை வைத்து தான், யுவராஜ் அவனிடம் விசாரிக்க சொல்லியிருந்தான். ரமேஷ் மேல் அவனுக்கு எப்போதும் ஒரு கண்ணும் உண்டு. தண்ணீர் பிரச்சனை என்றில்லை, அதற்கு முன்னமே. எனவே அவனையும் தொடர்ந்து கொண்டிருந்தனர்

கூடவே திருமண வேலைகளும் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. யுவராஜ் எல்லாம் பேசி முடித்த உடனே சென்னை சென்றுவிட்டான். அங்கிருக்கும் வேலையும் பார்க்க வேண்டுமே..? ஜமுனாவிற்கு தான் வருத்தம். அப்பா அவள் பணத்தை எடுக்கவில்லை என்றதில். “அவர்கிட்ட இல்லைன்னா எடுத்திருப்பார், இருக்கு தானே..? அப்புறம் என்ன..?” யுவராஜ் சொல்ல, அமைதியாகிவிட்டாள். 

காமாட்சி, ஜீவிதா இவர்களுக்கு முன்னமே திருமணத்திற்கு கிளம்பிவிட்டனர். தாரணியும் ஊருக்கு வந்துவிட, முகூர்த்த பட்டு எடுத்து முடித்தனர். இந்த முறையும் ஜமுனா தான் கணவன், மகளுக்கு எடுத்தாள். தயாநிதியும் அவர் முறைக்கு எடுத்து கொடுத்தார். 

யுவராஜ் ஒரு வாரம் முன்பே ஊருக்கு வந்துவிட்டவன், கடைசி கட்ட வேலைகளை பார்த்து கொண்டான். தயாநிதிக்கும் காயங்கள் ஓரளவு சரியாகியிருக்க, அவரும் இணைந்து கொண்டார். ஜமுனா விடுமுறை பிரச்சனை காரணமாக மூன்று நாள் முன்பு தான் வர முடிந்தது. வேலைகளுக்கு பிரச்சினையில்லை. வைஜெயந்தி, காமாட்சி, பங்காளி உறவு பெண்கள் இருந்தனர். 

தாரணிக்கு தான் அக்கா மிகவும் தேவைப்பட்டாள். அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு. முன்பு ஒரு திருவிழாவில், மாதவனிடம் வம்பு வளர்ந்திருந்தாள் பெண். அது பற்றி பேச, அவளுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. மாதவன் அவளுடன் பேச முனையவில்லை. “உனக்கு முழு சம்மதம் தானே..?” உறுதி செய்யும் போது மட்டும் கேட்டு கொண்டான். 

பெண்ணுக்கு தான் புதிதான தடுமாற்றம். தலை மட்டும் ஆட்டினாள். மறுக்க அவளுக்கு காரணமும் இல்லை. அவளுடைய ஆசை கற்பித்தல் தான். மொத்த குடும்பத்திற்கும் இது தெரியும். உள்ளூரில் இருந்தாலும், இங்குள்ள கல்லூரியில் சேர போகிறாள். மற்றபடி அவள் ஊரிலே வாக்கப்பட்டு போவது மகிழ்ச்சியே. 

ஜமுனா குடும்பம் பக்கத்து  ஊர் என்றாலும் வசிப்பது சென்னை. அப்பா, அம்மாவிற்கு பக்கத்திலே இருக்க ஒரு பெண். அதனுடன் யுவராஜ் சொன்ன மற்ற காரணமும் இருந்தது. தாரணி யோசித்து எல்லா விதத்திலும் திருப்தியாக இருந்ததிலே சம்மதம் சொல்லியிருந்தாள். ஆனால் மாதவன் மாப்பிள்ளையாக. அவளே எதிர்பாராத ஒன்று தான். அதில் ஒரு குறுகுறுப்பு. 

“அக்கா..  எப்படிக்கா..?” என்று சுற்றி கொண்டிருந்தாள். 

“நீ அவர்கிட்ட பேசாததால் தான் இப்படி இருக்கு, ஒருமுறை பேசு..” என்று மாதவனுக்கு அழைத்துவிட்டாள். 

“அக்கா என்ன செய்ற..?” தாரணி ஓட பார்க்க, ஜமுனா அவள் கை பிடித்து கொண்டாள். 

“சொல்லுங்க அண்ணி..” மாதவன் எடுத்து கேட்க, 

“ஏன் என் தங்கச்சிகிட்ட பேச மாட்டிங்களா..?” என்றாள். அக்கா.. தாரணி பல்லை கடிக்க, மாதவனிடம் ஒரு புன்னகை. 

“பேசலாமே..? நான் கூப்பிடுறேன்..” என்று தாரணி மொபைலுக்கு அழைத்தான். 

“அக்கா என்ன பண்ண நீ..?” தாரணி படபடத்து எடுக்க, ஜமுனா சிரித்து வெளியே வந்துவிட்டாள். 

“சொல்லுங்க மேடம்..?” மாதவன் அந்த பக்கம் கேட்டான். 

“என்ன சொல்லணும், ஒன்னுமில்லை..” தாரணி வேகமாக சொன்னாள். 

“சரி.. நான் உனக்காக ஒன்னு வாங்கி வச்சிருக்கேன்.. நாளைக்கு நைட் காட்டுறேன்..” என்றான் அவன் கிசுகிசுப்பாக. என்ன..? கேட்ட தாரணி குரலில் சத்தமே இல்லை. 

“நீ திருவிழாவுல கேட்டது தான்..” மாதவன் சொல்ல, தாரணி முகமும் சிரித்தது. 

தாரணி பள்ளி படிக்கும் சமயம் ஒரு வருடம் திருவிழா சந்தையில், ஜிமிக்கி, வண்ண சாந்து, வளையல் எடுத்தவள் பணம் கொடுக்க தந்தையை தேட, அவர் கண்ணிலே படவில்லை. மாதவன் சரியாக வர, “மாமா.. இதுக்கு கொஞ்சம் பணம் கொடுங்க, நான் அப்புறமா அப்பாகிட்ட வாங்கி தரேன்..” என்றாள்.

 மாதவன் அவளை ஒரு பார்வை பார்த்து கடந்துவிட்டான். “மாமா மக தானே, வாங்கி கொடுத்தா என்ன..? சரியான கஞ்சம்..” தாரணி பின்னால் பேசியது கேட்டபடி தான் சென்றான். 

“அப்போ வாங்கி கொடுக்காம இப்போ மட்டும் என்ன..?” தாரணி போனில் கேட்டாள். 

“அப்போவும் வாங்கி கொடுத்திருப்பேன், ஆனா நீ அப்பாகிட்ட வாங்கி தரேன் சொன்ன, அதான் போயிட்டேன், அப்போ எனக்கு தெரியவும் தெரியாதே நீதான் என் வீட்டம்மான்னு..” என, தாரணி பேச என்று அவர்களுக்குள் பேச்சு நீண்டது. முன்பை விட தாரணி முகமும் ஜொலித்தது. வீட்டிலும் திருமண கொண்டாட்டம். 

முதல் நாள் நலங்கு முடித்து, மண்டபம் கிளம்பினர். ஜமுனா அக்காவாக, தாய் மாமா வீட்டு பெண்ணாக அதிகம் ஓடினாள். ரிசப்ஷன் போல் இல்லாமல், நிச்சயம் வைத்து, மணமக்களை மேடையில் அமர வைத்தனர். அடுத்த நாள் சுப நேரத்தில் மாதவன் தாரணி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கி கொண்டான். 

ஆகாஷ் தான் மாதவனை கட்டியணைத்து “பங்காளி பத்திரம்டா..” வராத கண்ணீரை துடைத்து, தாரணியை கடுப்பேற்றினான். 

மூத்த மாப்பிள்ளையாக யுவராஜ் எல்லா இடத்திலும் நிற்க, ரமேஷ் கூட்டம் தானே தள்ளி நிற்கும் நிலை. அப்படி அவர்களை நிற்க வைத்தான் யுவராஜ். தாரணி புகுந்த வீடு கிளம்ப, ஜமுனா மகளுடன் சென்றாள். அன்றிரவு தாரணி, மாதவன் அவர்கள் வீட்டில் வாழ்க்கையை தொடங்க, அவர்களை தனியே விட்டு மொத்த பேரும் தயாநிதி வீடு வந்துவிட்டனர். சரசுவும்.

எல்லாம் கூடத்தில் அமர்ந்து பேசி கொண்டிருக்க, யுவராஜ் மகளுடன்  லேப்பில் இருந்தான். மூன்று  நாட்களாக ஆபிஸ் வேலை பக்கம் செல்ல முடியவில்லை. அவன் வேலை நின்றது. ஜீவிதா வழக்கத்தை விட சீக்கிரமே தூங்கிவிட, அவளுடன் மனைவி ரூம் சென்றுவிட்டான். இரவு பேச்சு நீண்டு கொண்டே செல்ல, ஜெயலக்ஷ்மி எல்லோருக்கும் குடிக்க எடுக்க சென்றார்

ஜமுனாவும் அம்மாவுடன் சென்றவள், திருமணத்தை பற்றி பேச, ஜெயா ஏதோ ஒரு யோசனையில் நின்றார். “என்னம்மா..?” ஜமுனா அவரை கவனித்து கேட்க

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஜமுனா, நமக்கு ஒரு சூழ்நிலை வந்தா தானே அதனோட கனம் தெரியுது இல்லை..” என்றார் கலங்கிய குரலில்

என்ன சொல்றீங்கம்மா எனக்கு புரியல..?” ஜமுனா கேட்க

என் அம்மா வீட்டை நினைச்சு தான் ஜமுனா, அன்னைக்கு இப்படி ஒரு சூழ்நிலை தானே அவங்களுக்கும் வந்துச்சு. அப்பா கௌரவம், தாரணி வாழ்க்கை, பணம் கையை விட்டு போனதுனு..  நாம பட்ட கஷ்டம் தானே அன்னைக்கு அவங்களும்  பட்டாங்க, நீ கூட அப்பா கஷ்டப்படுறப்போ எப்படின்னு தானே, அவ்வளவு வைராக்கியமா வேலை பார்த்து  சேர்த்து வச்ச பணத்தை கொடுத்த, இதை தானே அன்னைக்கு யுவராஜும் பண்ணான்..? நமக்கு ஏன் அவன் மேல அவ்வளவு கோவம் வந்துச்சு..?” தனக்கே தானே கேட்டார் ஜெயலக்ஷ்மி. அவரை சிறிது நாளாக அரித்து கொண்டிருக்கும் விஷயம் இது

இத்தனை வருஷம் வாழ்ந்தும்  நான் நல்ல பாடத்தை கத்துக்கலை ஜமுனா, இங்க யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை, எப்போவேனாலும் யாருக்கும் கஷ்டம் வரும். சூழ்நிலை தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.. மனுஷங்க அதன் முன்னாடி தோத்து போயிடுறோம்..” என்றார் கண்ணீரை ஒற்றி.

 “உன் அப்பா அடிபட்டு ஹாஸ்பிடல்ல படுத்து கிடந்தப்போ, என் அம்மா குடும்பம் வந்து நிக்கலைன்னா..? நம்மால சமாளிக்க முடிஞ்சிருக்கும் தான், ஆனா அந்த ஆதரவு, நாங்க இருக்கோம்ன்ற தைர்யம், அது கொடுக்க சொந்தம் இல்லைன்னா.. நினைச்சு பார்த்தாலே முடியல, ஆனா அன்னைக்கு அவங்க அப்படி தானே இருந்தாங்க..”

யுவராஜ் பொண்டாட்டியா உனக்கு காரணம் இருந்துச்சு, அவன்கிட்ட கேள்வி கேட்கிற உரிமை இருந்துச்சு, பொண்ணுக்கு அம்மா, அப்பாவா நாங்களும் உனக்கு துணை நின்னது தான் சரி, அதுல இப்போவும் எனக்கு உடன்பாடு தான், ஆனா என் வீட்டு பொண்ணா நான் சரியா இல்லையோன்னு வருத்துது ஜமுனா, மகளுக்கு அம்மாவா, அவங்க வீட்டு பொண்ணா.. இந்த இக்கட்டுல சிக்கிக்கிறது நமக்கு தான் தலையெழுத்து..” என்று அழுக, ஜமுனா அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார்.

யுவராஜ் தண்ணீர் எடுக்க வந்தவன், “என்ன ஆச்சு..?” என்றான். பின்னால் சரசு வர, ஜெயலக்ஷ்மி முகம் துடைத்து மகள், மருமகனுக்கு பால் கொடுத்து சென்றார்

யுவராஜ் மனைவியை கேள்வியாக பார்க்க, ஜமுனா விஷயம் சொன்னாள். “இதுக்காகவா..?” யுவராஜ் சாதாரணமாக எடுத்து மனைவியுடன்  ரூம் சென்றான்

உங்களுக்கும்  அம்மா மாதிரி இப்போ அப்பாக்கு நடக்கவும்  தோணுச்சா மாமா..?” ஜமுனா கேட்க

உனக்கு எப்படி தெரியுது..? மாமா அடிபட்டு படுத்ததும் நாங்க குடும்பமா குத்து பாட்டுக்கு டேன்ஸ் ஆடின மாதிரியா..?” என்றான். மாமா.. ஜமுனா சிரித்துவிட

பின்ன..? என்னடி..?” யுவராஜ் அவளை தன்னுடன் வளைத்து கொண்டவன்

அத்தை எங்க வீட்டு பொண்ணு, அவங்க குடும்பத்துல ஒரு கஷ்டம்ன்னா எப்படி விடுவோம்..? இது நான் மட்டுமில்லை, இப்போவும் எல்லா வீட்லயும் இருக்கிறது தான், அவங்களுக்குள்ள எவ்வளவு பிரச்சனை வந்து அடிச்சுக்கிட்டாலும், பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைன்னா முன்னாடி ஓடி வந்து நிக்கிற அம்மா வீடு இன்னும் எவ்வளுவோ இருக்கு, இதை பத்தி பெருசா பேச ஒன்னுமே இல்லை, கடமையை பாசத்தோடு செய்றோம் அவ்வளவு தான், நாளைக்கு நம்ம ஜீவிக்கு ஒரு தம்பி இருந்தா அவனும் இப்படி தான் இருப்பான்..” என்றான் கணவன்

க்கும்.. அதுக்கு வாய்ப்பில்லை..” ஜமுனா முணுமுணுத்தாள்

எதுக்கு..?” யுவராஜ் அவள் முகம் பார்க்க

ஜீவிக்கு தம்பி தான்..” என்றாள் மனைவி

ஏண்டி இப்படி சொல்ற..?” யுவராஜ் சிரிப்புடன்  கேட்டான்

ஓயாம மடியில படுத்தா மட்டுமே  பிள்ளை வராது மாமா..” மனைவி நொடித்தாள்

எனக்கு தெரியாம தான் பாப்பா பிறந்தாளா..? இல்லை நீ தான் அந்த ஒரு  வாரம் அப்படி  உழைச்சியா..?” என்றான் கணவன் அவள் காதை கடித்து.  

Advertisement