Advertisement

கேளாய் பூ மனமே 21

இப்படி என்று விஷயம் தெரிந்ததும் புது மாப்பிள்ளை ‘மாதவன்’ மருத்துமனைக்கு வந்துவிட்டான். யுவராஜ் போலீசிடம் பேசி கொண்டிருக்க, அங்கேயே தேங்கி நின்றான். யுவராஜ் அவனை பார்த்து தலையசைத்து அவன் சந்தேகங்களை சொல்ல, அவர்களும் விசாரிப்பதாக சொல்லி சென்றனர். 

“ஏதவாது தெரிஞ்சுதா மாதவா..?” யுவராஜ் கேட்க, 

“ஆளுங்க தெரியலண்ணா, ஆனா சம்பவம் நடக்க போறதா ரமேஷுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு..” என்றான் மாதவன். 

“நினைச்சேன்..” யுவராஜ் சொல்ல, அருணாச்சலம் வந்தார். 

அவரிடம் பேசிவிட்டு, “நான் போய் மாமாவை பார்த்துட்டு வரேன்..”  என்று உள்ளே சென்றான் மாதவன். தயாநிதி நல்ல காயங்களுடன், பணத்தை பறிகொடுத்த பரிதவிப்புடன் படுத்திருந்தார். அவரிடம்  நலம் விசாரித்தவன், “பார்த்துக்கலாம் மாமா..? நீங்க உடம்பு பார்த்துக்கோங்க, கல்யாணம் பத்தி டென்ஷன் எடுத்துக்க வேண்டியதில்லை, நாம தான் இருக்கோம் இல்லை..” என்றான். 

“ம்ம்..” தயாநிதி தலையசைத்தார். அவன் அனுசரணையான பேச்சு அவரை கொஞ்சம் முகம் தெளிய வைத்தது. பணம் கைவிட்டு போனது தெரிந்திருக்கும், கல்யாணம் எப்படி என்ன என்று ஏதாவது கேட்டுவிடுவானோ என்ற எண்ணம் இருந்தது நிச்சயம். மாதவன் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட, கொஞ்சம் ஆசுவாசமானார். 

தாரணி கிளம்பி வந்து கொண்டிருக்க, பெண்களுக்கு தைரியம் சொல்லி வெளியே வந்தான் மாதவன். ஆகாஷ் இருக்க, இருவரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.  ஆகாஷும், அவனும் பல வருட பழக்கம். பள்ளி கல்லூரி எல்லாம் உள்ளூரில் தான். மாதவனை தேர்ந்தெடுக்க ஆகாஷ் அவனை பற்றி நல்ல விதமாக சொன்னதும் காரணம். 

மருத்துவர் வந்து பார்த்தவர், “மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு அழைத்து போலாம்..” என்றார். 

உணவு வைஜெயந்தி பார்த்து கொள்ள, ஜெயா கணவருடன் தங்கி கொண்டார். இரவில் கேசவன் இருக்க கேட்க, ஜெயலக்ஷ்மி மறுத்துவிட்டார். கணவருக்கு அதில் உடன்பாடு இருக்காது என்பது புரியுமே..? அதற்காக இவர்களை மட்டும் தனியே விட முடியாது என்பதால், யுவராஜ் இரவு அங்கேயே இருந்தான். ஒருமுறை மாதவனும் இணைந்து கொண்டான். 

ஆகாஷ் அடுத்த நாள் சென்னை கிளம்பிவிட்டான். ஜமுனாவையும் கணவன் உடன் அனுப்பி வைத்துவிட்டான். எப்படியும் தாரணி திருமணத்திற்கு அவளுக்கு விடுமுறை எடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய விடுமுறை அவளுக்கு கிடைக்காது. ஜமுனாவும் புரிந்து, அப்பாவிடம் பேசிவிட்டு கிளம்பினாள். 

காமாட்சி, ஜீவிதா இங்கேயே இருந்து கொண்டனர். காயங்கள் ஓரளவு இருக்க, நான்காம் நாள் வீடு வந்துவிட்டனர். அந்த வார இறுதிக்கு ஜமுனா ஊர் வந்துவிட்டாள். மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தது. சரசு, மாதவனும் அங்கு இருந்தனர். திருமணம் குறித்து எப்படி, என்ன என்று பேச வேண்டும். 

தயாநிதிக்கு அவர் திட்டங்கள் எல்லாம் மாற, குழம்பிய நிலை. தொலைந்த பணத்தை பற்றி இன்னும் தகவல் கிட்டவில்லை. நினைத்தளவு செய்ய முடியாத நிலை. செய்யவே முடியாத சூழல் இல்லை. மூன்று வருட வருமானம் மட்டும் தான் அந்த இருபது லட்சம். நகை, மற்ற சேமிப்பு கைவசம் இருக்கவே செய்தது. ஆனால் கைவிட்டு போன பணம், அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாதே..? 

ஜமுனா கணவனை தனியே பிடித்தவள், “பணத்தை பத்தி தாத்தா ஏதோ சொன்னாரே..? என்ன பணம்..?” என்றாள். அவளுக்கு நிலத்துக்காக எடுத்து வைத்த பணமோ என்ற சந்தேகம். 

“உன் பணம் தான்.. ஏன் கொடுக்க மாட்டியா..?” என்றான் யுவராஜ். 

“அதெப்படி கொடுக்காம இருப்பேன்..? நான் கையோட செக் கொண்டு வந்திருக்கேன்..” என்றாள் ஜமுனா. 

“செக்கா.. நல்லா யோசிச்சுக்கோடி, உன் படிப்புக்கு நீ சேர்த்து வச்ச பணத்தை கொடுக்கிற, அப்புறம் படிப்புக்கு என்ன பண்ணுவ..?” என்றான். 

“நான் லோன் வாங்கிப்பேன்..” என்றாள் ஜமுனா. 

“முடிவோட தான் வந்திருக்க போல..” என்று யுவராஜ் முடித்துவிட்டான். அவனுக்கு தெரியும் திருமணம் முடிக்கும் அளவு மாமனாரிடம் பணம் இருக்கிறது என்று. என்ன அதை திரட்ட தான் நாள் எடுக்கும். 

அதுவரை நாம் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அருணாச்சலம் சொன்னது. ஜமுனா கையில் பணத்துடனே வந்துவிட, மகள் சம்பாத்தியத்தை கொடுக்கிறது வேற தானே..? கொடுக்கட்டும்.. என்று விட்டுவிட்டான். 

ஜமுனா எல்லோரும் பேசுமுன் தந்தையை பார்க்க சென்றாள். அவரிடம் பையை, செக்கை கொடுத்தாள். “என்னம்மா..?” தயாநிதி அதில் உள்ள செக்கை, நகையை பார்த்து கேட்டார். 

“தாரணிக்காக மூணு வருஷமா நான் எடுத்து வச்சிருந்த நகைப்பா.. நீங்க கொடுத்த பணத்துல எடுத்தது தான், இது வேலை பார்த்து சேர்த்த பணம், இது எடுத்துக்கலாம், கல்யாணத்தை நினைச்சு கவலைப்படாதீங்க..” என்றாள். 

தயாநிதி அதிர்ந்து, நெகிழ்ந்து மனைவியை பார்த்தார். அவரிடம் அப்படி ஒரு பூரிப்பு. ‘பெண் பிள்ளைகளை இவ்வளவு லட்சம் கொட்டி படிக்க வைக்கிறியே, அவங்க என்ன சம்பாதிச்சு உனக்கா கொடுக்க போறாங்க..?’ பல முறை பலரால் அவரிடம் கேட்கப்பட்டது. 

இன்று அவர்களை எல்லாம் நேரில் நிற்க வைத்து, ‘பாருங்க என் பொண்ணு கொடுத்தது..’ என்று காட்ட பரபரத்தது தந்தைக்கு. முகத்தில அப்படி ஒரு சந்தோசம். யுவராஜ் வந்தவன், ஓரமாக சாய்ந்து நின்றுவிட்டான். 

“ஜமுனா கொடுத்தா..?” தயாநிதி மருமகனுக்கும் சொன்னார். யுவராஜ் அத்தையை பார்த்தான். அவர் வேறு ஏதோ நினைவுடன் மகளை பார்த்திருந்தார். 

“எல்லாம் வந்துட்டாங்க, பேச போலாம்..” என்றான் யுவராஜ். 

“ம்ம்.. ஜமுனா நாம இதைப்பத்தி அப்புறம் பேசலாம்..” என்று மிகவும்  பெருமையுடன் மகள் தலையை தடவி வெளியே சென்றார். 

பணத்தை எடுத்து கொள்ள மாட்டாரோ..? ஜமுனா அப்பாவை பார்த்து நிற்க, “என்ன..?” என்றான் யுவராஜ். அவள் சந்தேகத்தை கேட்க, “ஆமா கண்டிப்பா எடுக்க மாட்டார்..” என்றான் கணவன். 

“ஏன்..? நான் கொடுத்தா என்ன..?” ஜமுனா வேகமாக கேட்க, 

“முதல் விஷயம் அவர்கிட்ட கல்யாணம் பண்ற அளவு பணம் இருக்கு, பெருசா பண்ண முடியாது. அவ்வளவு தான். இரண்டாவது அவருக்கு நீ கொடுத்ததே நிறைஞ்சு போயிருக்கும், உன் படிப்பை தான் பார்ப்பார்..” என்றான். ஜமுனா புருவம் சுருக்கி நிற்க, “வெளியே போலாம் வா..”  என்று கூட்டி வந்துவிட்டான்.  

யுவராஜ் வரும் வரை காத்திருந்தவர்கள், “சொல்லுங்க மாப்பிள்ளை.. எல்லாம் நம்ம குடும்பம் தான், உடைச்சு பேசலாம்..” என்றார் அருணாச்சலம்

தயாநிதியும் ஒரு வாரமாக யோசித்து வைத்திருந்தவர், தன்னிடம் இருக்கும் பணக்கணக்கை சொன்னார். நகை அளவை சொன்னார். ஜமுனா அப்பாவை பார்க்க, “அந்த நகையும் சேர்த்து தான்மா..” என்றார் தந்தை

ஜெயா நகை இருக்கு, அது போக, ஜெயா, என் பொண்ணுங்க பேர்ல கொஞ்சம் பிக்ஸ்ட் டெபாசிட் இருக்கு, வெளியே ரொட்டேஷன்ல கொஞ்சம் பணம் இருக்கு, வசூல் பண்ண கொஞ்ச நாள் ஆகும். உடனே கேட்டா வாங்கினவங்களும் கொடுக்கணும், இப்போ இதுக்குள்ள என்ன பண்ணனும்ன்னு பார்க்கணும்..” என்றார் மொத்த தொகையும் சேர்த்து

மண்டபத்துல குறைச்சுக்கலாம்..” என்றான் யுவராஜ்

ம்ஹூம்.. வேண்டாம், நல்லா பண்ண அங்க தான் சரியா இருக்கும்..” என்றார் தயாநிதி

மாமா.. லட்சத்தை அங்க கொட்டணுமா..?  முதல்லே நினைச்சேன், இப்போ வேண்டவே வேண்டாம் தோணுது, அந்தளவு பெருசு இல்லனாலும், நம்ம ஆறுமுகம் மண்டபத்துல பண்ணலாம், அதுவும் பெருசு தான். என்ன ஏசி, தேவையில்லாத ஆடம்பரம் இருக்காது..” என்றான் மாதவன். பணத்தோட பாடு தெரிந்தவன். சரசுவும் அதை தான் நினைத்தார்

தாரணிக்கு நீங்க செய்ய நினைக்கிறதை இப்போவே செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்லைண்ணா. எப்போவேணாலும் செஞ்சுக்கலாம். நாம என்ன அந்நியமா, அசலா, யாரு வந்து நம்மகிட்ட கணக்கு கேட்க போறாங்க, கேட்டாலும் நாம சொல்ல போறது இல்லை, அதை வச்சு எதுக்கு கவலை..?”

இப்போ முகூர்த்தத்துக்கு மட்டும் பார்த்தா போதும், அதுவும் ஆடம்பரமா இல்லாம, சந்தோஷமா செய்யணுங்கிறது தான் என்னோட ஆசை, நான் எல்லாம் தாரணியை மருமகளா, அம்மா வீட்டு சொந்தம் என் சம்மந்தியா நினைச்சதே இல்லை, இப்போ நடக்கவும் அதுவே எனக்கு பெரிய சீர் தான், நானும் உங்க வீட்டு பொண்ணு தானே..?” சரசு மிக தெளிவாக அவர் அன்பை சொல்லிவிட்டார்

பணத்துக்காக ஓடுபவர்கள் தான், ஆனால் பணத்தாசை பிடித்தவர்கள் இல்லை. சொந்தத்தை வேண்டுபவர்கள். தயாநிதி இந்த  நொடி அவர்களை முழுமனதாக ஏற்றார். இதுவரையிலும் கூட கட்டாயத்தின் பேரில் இருந்தவர், இப்போது உளமாராக நினைத்தார்

இரண்டு மருமகன்களும், சம்மந்தி வீடும் அவருக்கு கடைசி வரை வரும் என்பதில் மாற்றமே இல்லை. யுவராஜ், மனைவியை நிறைவாக பார்த்தவர், “நீங்க எல்லாம் சொல்றபடியே செஞ்சுக்கலாம்..” என்றுவிட்டார்.  

உடனே மண்டபத்தை மாற்றி, அட்வான்ஸ் கொடுத்துவிட்டனர். பத்திரிக்கை அச்சடிக்க முன்னமே ஓரளவு பணம் கொடுத்துவிட்டதால், மற்ற வேலைகளுக்கு பட்டியலிட்டனர். எந்த நாள் என்ன செய்வது என்று பேசி முடித்தனர். அந்தந்த செலவுக்கு கைவசம் எப்போதும் இருக்கும் சேமிப்பையும், மனைவி பேரில் இருக்கும் பிக்சட் டெபாசிட்டையும் எடுத்து கொள்ள தயாநிதி முடிவு செய்தார். யுவராஜிடம் கலந்து பேசினார்

மண்டபம், தேவையில்லாத ஆடம்பரத்தை குறைத்துவிட்டதால் பெருமளவு பணம் குறைந்தது. அரிசி, தேங்காய், பருப்பு போன்றவை யுவராஜ் தோட்டத்தில் வந்துவிடும். மறுக்கவே முடியாது. இதுதவிர தாய்மாமா சீர் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அருணாச்சலம் வைத்தார். ஜமுனா திருமணத்திலே வைத்தது தான்

Advertisement