Advertisement

அதுலயும் ரிஸ்க், எல்லாம் நம்ம பணம். சுத்தமா துடைச்சு போட்டு பண்ணது. முடிஞ்சா முடிஞ்சது தான். மீண்டு வர திரும்ப சில வருஷ போராட்டம். முன்னவாவது பரவாயில்லை. இப்போ நீ,  பாப்பா வேற. உள்ளுக்குள்ள எந்நேரமும் திக் திக் தான். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை, ஒரு பாசிட்டிவ் எண்ணம். துணிஞ்சு இறங்கி, அந்த ப்ராஜெக்டும் நமக்கு கிடைச்சிடுச்சு, நாமும் தப்பிச்சோம், இப்போ இப்படி இருக்கோம்..”

சில நேரம் நம்ம கம்பர்ட் ஸோன் விட்டு வெளியே வரதுல லாபமும் இருக்க தான் செய்யுது இல்லை. அந்த லாபம் தான் நீ இப்போ சொன்ன பணம்.. இனி இன்னும் நாம போகணும், நின்னுட கூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் போட்டிருக்கோமே..” என்றான்  மலர்ந்த சிரிப்புடன்

ஜமுனா கணவனையே பார்த்திருந்தவள், “இத்தனை வருஷத்துல இப்போ தான் என்கிட்ட இவ்வளவு பெருசா பேசியிருக்கீங்க..” என்றாள்

இதெல்லாம் உன்கிட்ட பேசக்கூடாதுன்னு இல்லை. நீயும் படிக்கிற சின்ன பொண்ணு, உனக்கு ஏன் பிரஷர் கொடுக்கணுங்கிறது தான்..” என்றான்

இனியும் என்னை சின்ன பொண்ணா பார்க்காதீங்க..” என்றாள் அழுத்தமாக

நீ சொன்னாலும் பார்க்க முடியாது, இப்போ நீ சின்ன பொண்ணே இல்லை..” யுவராஜ் கொஞ்சம் விஷமமாகவே கண்ணடித்தான்

மாமா..” ஜமுனா பேனாவால் அவன் கால் மேல் தட்டினாள். யுவராஜ் சிரிக்க, ஆகாஷ், ஆர்த்தி, ஜீவிதா வீட்டுக்கு வந்துவிட்டனர்

படம் எப்படி இருந்துச்சு..?” ஜமுனா கேட்க, நேரம் அவர்களுடன் சென்றது

அடுத்த வார நாட்கள் யுவராஜ் அவன் வேலையுடன், பணத்துக்காகவும்  பார்க்க செய்தான். முன்னமே சென்னையில் இடம் வாங்க லோனுக்கு விசாரித்து வைத்திருக்க, எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தோராயம் இருந்தது. அதனை பேங்கில் பேசி உறுதிப்படுத்தி கொண்டு, தாத்தாவிடம் கலந்து பேசினான்

ஆகாஷும் அண்ணனிடம் கேட்டு கொண்டான். வாங்க முடியும் என்ற முழு உறுதிகிட்ட, குப்புசாமியிடம் நாங்களே வாங்கிக்கிறோம் என்றுவிட்டனர். யுவராஜ் தன் கைவசம் இருக்கும் பணத்தை எடுத்து கொண்டான். “என்கிட்ட இருக்கு, நான் கொடுக்கவா..?” ஜமுனா மிகவும் தயங்கி தான் கேட்டாள்

வேணும்ன்னா வாங்கிக்கிறேன்..” யுவராஜ் அந்த பேச்சை முடித்துவிட்டான். வாங்கிக்க மாட்டார்.. ஜமுனாவிற்கு ஏனோ தோன்றியது. கேட்டு திரும்ப ஏதாவது பூதம் முளைத்தால், ம்ஹூம்.. போகிறபடி போகட்டும்.. அமைதியாகிவிட்டாள்

இரண்டு வாரங்கள் சென்று அண்ணனும், தம்பியும் ஊருக்கு கிளம்பினர். “நான் எதுக்குண்ணா..?” ஆகாஷ் தயங்க

கத்துக்கோ.. வா..” என்றுவிட்டான் அண்ணன். ஒரு நாள் ஒதுக்கி நேரில் சென்று வியாபாரம் பேசினர். பணத்தை முடிந்தளவு உயர்த்த விடாமல் பார்த்து கொண்டவர்கள் அன்றே முன் பணமும் கட்டிவிட்டனர். ஆறு மாசம் அக்ரீமெண்ட். அதற்குள் முழு பணம் கொடுத்து ரெஜிஸ்டெரெக்ஷன்

இருக்கும் சொத்தை காப்பாத்த முடியுமா என்ற நிலையில் இருந்தவர்கள், புது சொத்தை பல லட்சங்கள் கொடுத்து வாங்க, வீட்டில் தானாகவே  ஒரு மகிழ்ச்சி. அருணாச்சலம் பூரித்து போனார். கேசவனுக்கு தன்னை போல மகன்கள் இல்லாததில் நிம்மதி. அப்பாவின் கையை தான் நெகிழ்வுடன்  பிடித்தார்

நீண்ட வருடங்கள் கழித்து எல்லாம் நல்லபடி செல்ல, அதை கூட்டுவது போல தாராணிக்கு வரன் கூடி வந்தது. தயாநிதி சொன்ன வரன் இல்லை. யுவராஜ் சொன்ன வரன். தயாநிதியின் ஒன்றுவிட்ட தங்கை சரசுவின் மகன். இவர்கள் அளவு வசதி இல்லை. தயாநிதி ஊரில் தான் கொடுத்திருந்தனர். அப்பா இல்லை, அம்மா மகன் மட்டுமே

அவர்கள் டவுனிலே கார் சர்வீஸ் சிறிய அளவில் செய்து கொண்டிருக்கிறான். எஞ்சினியரிங் முடித்தவன். ஓரிரு வருடம் புகழ்பெற்ற கார் சர்வீஸில் வேலை பார்த்து, சொந்தமாக தொடங்கிவிட்டான்யுவராஜ் கார் விட பழக்கம். மிகவும் நல்ல பையன். தாரணிக்கு ஏற்றவன். அதனுடன் யுவராஜ்க்கு வேறு சில காரணமும் உண்டு. அத்தை மூலமாக பேசி முடித்தான்

அவங்க நம்ம அளவுக்கு வசதி இல்லை, அத்தையும் மருமகனும் அங்க போய் கொடுக்கணுங்கிறீங்க..?” தயாநிதி சொன்னவுடன்  குதித்தார்

அவங்க  அப்படி இருக்க காரணம் யாரு..? பெத்த  பொண்ணுக்கு சீர் செய்ய உங்க சித்தப்பாக்கு நோவு வந்து, கஷ்டப்படுற இடத்துல தள்ளிவிட்டப்போநீங்க எல்லாம் கூட வேடிக்கை தானே பார்த்தீங்க, இப்போ உங்க பொண்ணுக்குன்னா மட்டும் கசக்குதா..?” ஜெயலஷ்மி சண்டைக்கு நின்றுவிட்டார்

நீ என்னடி ஏதேதோ பேசுற..? சரசு கூட  எங்களை இப்படி எல்லாம் கேட்டது இல்லை..” என்றார் தயாநிதி

அவ கேட்கமாட்டா, வாயில்லா பூச்சினு தானே இந்த வேலை பார்த்தீங்க, அப்புறம் என்ன..?” என்றார் ஜெயலக்ஷ்மி. அவருக்கு எப்போதும் சரசுவை பார்த்தால் வருத்தமாக இருக்கும். கணவர் விபத்தில் இறந்துவிட, கூலிக்கு சென்று மகனை படிக்க வைத்தார். மகனும் அம்மா கஷ்டம் பார்த்து வளர்ந்தவன், எந்த வம்புக்கும் அவன் சென்று யாரும் பார்த்ததில்லை

யுவராஜ் சொன்ன பிறகு ஏன் கொடுத்தால் என்ன என்றுதான் ஜெயலக்ஷ்மிக்கு தோன்றியது. தயாநிதிக்கு அறவே விருப்பமில்லை. ஆனாலும் மனைவியும், பெரிய மருமகனும் அங்கேயே நிற்க, இவரால் அவர்களை சரிக்கட்ட முடியவில்லை. பெரிய மகளிடம் பேசி பார்த்தார்

ஜமுனாவிற்கும் கணவன் சொன்னது சரியாக இருக்கும் என்ற எண்ணம். அவளுக்கும் மாப்பிள்ளையை தெரியுமே..? ஒரே ஊர். அருணாச்சலத்திடம் தயாநிதி பேசினார். நாள் இழுத்து ஒன்றிரண்டு  மாதங்கள் ஆனது. இறுதியில் தாரணிக்கு சரசுவின் மகன் தான் உறுதியானான். யுவராஜ் தாத்தாவை மாப்பிள்ளை வீட்டில் பேச வைத்து சரிக்கட்டினான்

ஒரு சுப நாளில் பெண் பார்த்து உறுதியும் செய்தனர். தாரணி அக்கா கணவரிடம் பேசி சரியென்றாள். திருமணம் அடுத்த இரண்டாம் மாதம் முடிவானது. அதற்கடுத்த மாதங்கள் திருமணம் செய்ய எதுவாக இல்லாததில், அருகிலே வைத்துவிட்டனர்

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஓர் நாள் தயாநிதி அடிபட்டு மருத்துமனையில் சேறும் வரை. மொத்த குடும்பமும் பதறி போனது. சென்னையில் இருந்து கிளம்பிவிட்டனர். தயாநிதி கண் விழித்து முதலில் யுவராஜை தான் கேட்டார். அதிலே ஏதோ பிரச்சனை என்று புரிந்தது

யுவராஜ் அவர் முன் நிற்கவும் கண் கலங்கிவிட்டார் மனிதர். “தாரணி கல்யாணத்துக்கு சீட் போட்டிருந்த இருபது லட்சம் போச்சு..” என்றார். கேட்டிருந்த மொத்த குடும்பமும் அதிர, யுவராஜ் பொறுமையாக, என்ன..? எப்படி..? என்று விசாரித்தான்

எப்போதும் சீட் கட்டும் இடத்தில் தான் சீட் கட்டியுள்ளார். பத்து பத்து லட்சமாக, மூன்று வருடம் கட்டியவர், மகள் திருமணத்திற்காக ஒரே நாளில் இரண்டையும் எடுத்துகொண்டு வீட்டுக்கு வர வழியில் ஆட்கள் மடக்கி அடித்து பணத்தை எடுத்து சென்றுவிட்டனர். காரில் தான் சென்றுள்ளார். உதவு கேட்பது போல நிறுத்து அடித்துவிட்டனர்

மூணு வாரம் கூட இல்லை கல்யாணத்துக்கு..? என்ன பண்ணுவேன்..?” தயாநிதி புலம்ப

மாமா.. பணம் பிரச்னையில்லை, நம்மகிட்ட அது மட்டுமே பணம் இல்லை, நீங்க உடம்பு சரியாகி வாங்க, பார்த்துக்கலாம்..” என்றவன்,   முதலில் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தான். நன்றாக தெரிந்தவர்கள் செய்த வேலை தான் இது. பிடித்துவிடலாம்.. என்றனர் போலீசும்

ஆனால் அது கிடைக்கும் வரை செலவிற்கு பணம்..? தயாநிதி தவிக்க, “நம்ம கையில பணம் இருக்கு மாப்பிள்ளை.. உங்க பணம் வந்ததும் பேசிக்கலாம்..” அருணாச்சலம் முடித்துவிட, என்ன பணம் என்று ஜமுனா தான் விழித்து நின்றாள்.

Advertisement