Advertisement

கேளாய் பூ மனமே 20

மனைவி மடியில் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற யுவராஜ் கண் விழிக்கும் நேரம் விடியல் வர ஆரம்பித்தது. ஜமுனாவின் அலாரம் சத்தம். கையணைப்பில் மனைவி தூக்கத்தில் இருக்க, எட்டி மறுபுறம் இருந்த அலாரத்தை நிறுத்தினான்

அதற்குள் ஜமுனாவிற்கு விழிப்பு வந்துவிட, “தூங்கு.. இன்னைக்கு சண்டே தானே..” என்றான் கணவன். ம்ம்.. ஜமுனாவும் நன்றாக வசதியாக படுக்க கணவனை விட்டு நகர்ந்தாள்

ம்ஹூம்.. என்மேலே கால் போட்டு வசதியா படு..” என்றவன், மனைவியை விடவில்லை. அந்த தூக்கத்திலும் ஜமுனா கணவனை கண் திறந்து பார்க்க, “தூங்குடி..” என்று அவளை  வருடி கொடுத்தபடி தானும் கண் மூடி கொண்டான்ஜமுனா சில நொடிகளிலே  தூக்கத்திற்கு செல்ல, யுவராஜ் விரல்கள் வருடலை நிறுத்தவில்லை

இரவு அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கள் நினைவுக்கு வர, இப்போதும் சிரித்து கொண்டான். ‘எனக்காக தான்..’ புரியாமல் இல்லை. இன்னும் வாஞ்சையாய் அவளை தன்னோடு சேர்த்து கொண்டான்

மணவாழ்வில் முதல் கசப்பு. தன்னிடம் தோற்று போனதாக மறுகுகிறாள். அதையும் ஏற்று என்னோடு வாழவும் தயாராகிவிட்டாள். பத்தோடு பதினொன்றாக ஒரு வாழ்க்கை. இது யுவராஜ்க்குமே ஏற்க முடியாத ஒன்று தான். அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். சரி செய்ய வேண்டும். ஆனால் எப்படி..? மிக மிக பெரிய கேள்வி குறி..? 

வெளியே காமாட்சியின் நடமாட்டம் தெரிந்தது. யுவராஜ் மனைவியை அலுங்காமல் தள்ளி படுக்க வைத்தவன், குளித்து ஹாலுக்கு வந்தான். காமாட்சி கிச்சனில் இருக்க, பால் பேக்கட் எடுத்து வந்தவன், அவருடன் இணைந்து கொண்டான்

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் கஞ்சி, காபியுடன் சோபாவில் அமர்ந்தனர். நியூஸ் பேப்பரும் வந்திருக்க, காமாட்சி கணவருக்கு அழைத்து பேசினார். நன்றாக வெளிச்சம் பரவ, ஆகாஷ் வந்தான். “ஆர்த்தி தூங்கிட்டு இருக்காளா..?” காமாட்சி கேட்க

ஆமா..” என்றான் ஆகாஷ். யுவராஜ் எழுந்து சென்று தம்பிக்கு காபி கலந்து எடுத்து வந்தான். “நீங்க ஏன்ண்ணா..?” என்றபடி வாங்கி கொண்டான். இரவு அண்ணனின் முகம், அவன் பேச்சு.. தம்பிக்கு ஒப்பவில்லை. ஏதாவது பிரச்சனையா..? அண்ணன் சொல்லவே மாட்டான்கேட்டாலும் பதில் வராது. மனைவி தூக்கத்தில் இருக்க தொந்தரவு செய்யாமல் இங்கு வந்துவிட்டான்

இப்போது அண்ணன் சாதாரணமாக இருந்தான். கவனித்து காபி குடிக்க, யுவராஜ்க்கு புரிந்தது. நைட் அப்படி சொல்லியிருக்க கூடாது, முகமே சுருங்கி போச்சு.. அண்ணனுக்கும் யோசனை. “உனக்கு அந்த நிலம் வாங்கணும் தோணுதாடா..?” என்றான்

வேணாம்ண்ணா..” தம்பி உடனே மறுத்தான்

இல்லைடா.. அப்போ வேற டென்ஷன், இப்போ பேசலாம் சொல்லு..” என்றான் அண்ணன் அமைதியாக

நானும் நைட்  ரஃபா கணக்கு பார்த்தேன், பெரிய அமவுண்ட் தான், திரும்ப ரிஸ்க் எடுக்க கூடாதில்ல..” என்றான் தம்பி

ம்ம்.. பெரிய அமவுண்ட் தான்.. ஆனா வாங்கலாம்..” என்றான். மனைவி, தம்பிக்கு விருப்பம் இருப்பது புரிந்தது. முதல் முறையாக அவனிடம் ஒன்றை கேட்கவும் செய்கின்றனர்.

“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..? பணம்..” ஆகாஷ் கேட்டான்

பணம் கண்டிப்பா இடிக்கும், மத்தபடி பிரச்சனை இருந்தா நான் நிலம் பத்தி பேசவே மாட்டேன்..” என்றான் அண்ணன்

அது சரி தான்..’ பணம் விஷயத்தில் யுவராஜ் கண் மூடி தனமான ரிஸ்க் எடுக்க மாட்டான். அவனுக்கு நம்பிக்கை இருந்தால் ஒழிய தொடவும்  மாட்டான். எனவே ஆகாஷ் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே அண்ணனுடன் கலந்து பேசினான்

அவனுடைய பேங்க் இருப்பு, பண சேமிப்பு, எவ்வளவு லோன் கிடைக்கும் என்று சொன்னவன், “பேலன்ஸ் நிக்கிறது அதிகம்ண்ணா..? என்ன வழி..?” என்று கேட்டான்.  

யுவராஜ் மகிழ்ச்சியுடன் அவன் தோள் தட்டியவன், “பரவாயில்லை நல்ல சேவிங்ஸ் வச்சிருக்க..? பேலன்ஸ் நான் கணக்கு பார்த்துட்டு சொல்றேன், டிஸ்கஸ் பண்ணலாம்..” என்றான். சரிண்ணா.. ஆகாஷ் தலையாட்ட

தாத்தாகிட்ட பேசிடுங்க, அவர் குப்புசாமிகிட்ட வேற யாராவது பார்த்துக்கோங்கன்னு சொல்ல போறதா சொன்னார்..” என்றார் அதுவரை அமைதியாக இருந்த காமாட்சி

ஆகாஷ் மொபைலில் தாத்தாவிற்கு அழைத்த  யுவராஜ், “ஒரு வாரம் பொறுங்க தாத்தா.. நம்மால முடியுமா, முடியாதான்னா பார்த்துட்டு சொல்றேன்..” என்றான்

சரிப்பா.. உனக்கு சுமை இல்லாம பார்த்துக்கோ..” அருணாச்சலம் ஒன்றுக்கு மூன்று முறை சொன்னார்

இருக்காது தாத்தா.. பார்த்துக்கலாம்..” யுவராஜ் சொல்ல

நல்லதுப்பா.. ஜமுனா தான் பொறுக்க சொன்னா, இல்லை அப்போவே குப்புசாமிகிட்ட முடியாது சொல்லியிருப்பேன்..” என்று வைத்தார் அருணாச்சலம்

காமாட்சி நேரம் பார்த்து காலை உணவு செய்ய கிச்சனுக்கு செல்ல, “இன்னைக்கு ஒரு நாள் வெளியே பார்த்துக்கலாம் பாட்டி.. நீங்க உட்காருங்க..” யுவராஜ் அவரை செய்யவிடவில்லை.  

ஆகாஷ் உடனே வாங்க செல்ல, ஜீவிதாவிற்கு மட்டும் இட்லி ஊத்தி வைத்தார் காமாட்சி. ஜீவிதா முதலில் விழிக்க, ஜமுனாவும் எழுந்துவிட்டாள். இருவரும் சுத்தம் செய்து வர, டிபன் தயாராக இருந்தது. ஆர்த்தியும் வந்துவிட, காலை உணவு ஒன்றாக  முடிந்தது

ஆகாஷ், ஆர்த்தி இருவரும் ஜீவிதாவுடன் முன்னமே புக் செய்திருந்த 3D  படத்திற்கு கிளம்பினர். மதிய உணவு வெளியே என்றுவிட, இவர்களுக்கு மட்டும் ஜமுனா செய்தாள். காமாட்சி நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார். ஹாலில் யுவராஜ் லேப்பில் இருக்க, காமாட்சி டிவியில் இருந்தார்

ஜமுனா அமர, “தாத்தாகிட்ட லேண்டுக்கு பேசிட்டேன்..” என்றான் யுவராஜ். ஜமுனா ஆச்சரியமாக பார்க்க, “உனக்கு இப்போ ஏதாவது வேலை இருக்கா..?” என்றான்

சொல்லுங்க..” ஜமுனா கேட்க

நான் உனக்கு ஒரு பைல் அனுப்புறேன்.. பணம் எவ்வளவு தேறும்ன்னு பார்த்து சொல்லு..” என்றான்

என்ன திடீர்ன்னு என்கிட்ட..? நான் பேசினதலாவா..?” ஜமுனா குரலை தழைத்து கேட்க

அப்படியும் இருந்தா தப்பா என்ன..?” என்றான் கணவன். “முன்ன நான் யோசிச்சது வேற..? நீ பேசினதுக்கு அப்புறம் உன் பக்கம் யோசிக்கிறேன், அவ்வளவு தான், அனுப்பவா..?” என்றான்

ஜமுனா தலையசைக்க, உடனே அனுப்பி வைத்துவிட்டான். ஜமுனா அவள்  லேப்புடன் பாட்டி பக்கத்தில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள். அவளுக்கு பக்கத்தில் சோபாவில் யுவராஜ். அந்த பைலை ஓபன் செய்ய, பேங்க் அக்கவுண்ட்ஸ், ஷேர், கோல்ட் இன்வஸ்ட்மன்ட், பைனான்ஸ் என்று தனி தனியாக போல்டர்

முதல் ஆன்லைன் வங்கி கணக்கிற்குள் நுழைய போக, லாகின் கேட்டது. “ஏங்க..?” என்று ஜமுனா காட்ட, “இரு..” என்று அதற்கும் ஒரு பைல் அனுப்பி வைத்தான். அதில் எல்லாவற்றுக்கும் இருக்க, ஒவ்வொரு பக்கத்திற்கும் சென்று பார்த்தாள். சிலதெல்லாம் முதலில் ஒன்றும் புரியவில்லை

யுவராஜ் மிகவும் தீவிரமாக வேலையில் இருக்க, ஜமுனா தவிர்க்க முடியாத சந்தேகம் மட்டும் கேட்டவள், மற்றதுக்கு அவளே கூகிள் செய்து கொண்டாள். பணம் இருப்பு பார்க்க வேண்டும் என்பதால், ஒவ்வொன்றும் பார்த்து குறித்து, கணக்கு பார்த்து, எடுத்து வைத்தாள்

நேரம் செல்ல காமாட்சி உணவு முடித்து, குட்டி தூக்கத்திற்கு சென்றார். யுவராஜ்க்கும் பசிக்க மனைவியை பார்த்தான். அவள் கண்களை சுருக்கி பேனாவை வாயில் வைத்து கடித்து கொண்டிருந்தாள்

இந்த பழக்கம் வேற இருக்கா உனக்கு..? சாப்பிடலாம் வா..” யுவராஜ் பேனாவை இழுத்து  வைத்து எழுந்து சென்றான்.

 “ஸ்ஸ்ஸ்.. மாமா..”  ஜமுனா முகம் சுருங்க கணவனுடன் சென்றாள்

இதுவே வலிச்சிருச்சா உனக்கு..? என் பொண்டாட்டி பூ மாதிரி ஆகிட்டா போல..” என்றான் கணவன் ரகசிய குரலில்

பூவை புயலா மாத்த வேண்டியது தானே..?” ஜமுனா நொடித்து உணவை எடுத்து வைக்க,

புயல் என்னை அடிச்சுட்டு போயிட்டா..?” என்றான் கணவன் சிரிப்புடன்

ஏன் அடிச்சுட்டு போனா என்ன..? சேதாரத்துக்கு பயப்படுறீங்களா..?”

சேதாரம் ஆனா சந்தோசம் தான், நிவாரணம் கிடைக்கும் இல்லை..”

மாமா..” ஜமுனா சிரித்துவிட, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்

 ஜமுனா கணக்கில் அவளின் சந்தேகங்களை கேட்க, யுவராஜ் பதில் சொன்னபடி உணவை முடித்தான். காமாட்சி எழுந்துவிட்டவர், “இப்போ தான் சாப்பிடுறீங்களா..?” என்று ரூம் சென்று வந்தார்.  

ஜமுனா அவருக்கு டீ போட்டு கொடுக்க, அவர் வைஜெயந்திக்கு போன் செய்து  ஊர் கதை, உறவு கதை பேச ஆரம்பித்துவிட்டார். கணவன் கொடுத்த வேலையை முடித்து அவனிடம் தொகையை சொன்னாள். “அக்கியூரட்டா இருக்காது..” ஜமுனா சொல்ல

ம்ம்ம்..” யுவராஜ் பார்த்து மனதில் ஏற்றி கொண்டான். ஓரளவு நல்ல தொகை தான். யுவராஜிடம்  நம்பிக்கை தெரிய, ஜமுனாவிற்கு ஆச்சரியம். மூன்று வருட வளர்ச்சி..! 

எப்படி மாமா..?” என்றாள் கணவனிடம். யுவராஜ் முகத்தில் நல்ல மலர்வு. பணத்தால் இல்லை. மனைவி கேட்டதால்..?

“இத்தனை வருஷம் நான் போட்டது வெறும் அடித்தளம் தான், இப்போ தான் மேல் வளர்ச்சி. அது தான் இது..?” என்று பணக்கணக்கை காட்டினான்

இந்த நாள் எல்லாம் என்னோட பல வருஷ கனவு. வேலையை விட்டு ஆபிஸ் ஆரம்பிச்சப்போ  கைவசம் ஒரு க்ளைண்ட் கூட இல்லை. நான்,  ஒரு லேப், டேபிள், சேர்சின்ன ரூம்.. இது தான். என்னால கார்ப்ரேட்கிட்ட வேலை பார்க்க முடியல, ஒர்க் பிரஷர், நம்மளோட ஐடியாஸ் அவன்கிட்ட கொடுத்தா அது நம்மளோட ஐடியாஸாவே இருக்காது. அவனுக்குஅவ்வளவு தான்..”

நாம அவன் கேட்கிற வேலை எல்லாம் முடிச்சு கொடுத்துட்டே இருக்க வேண்டியது தான், அதுக்கான லாபம் சில லட்சம். கொஞ்சம் பெரிய பொஷிஷன், இரண்டு வருஷம் பார்த்தேன், எனக்கு இது செட் ஆகாதுன்னு தெரிஞ்சிடுச்சு, என்னோட குறிக்கோள் இந்த பீல்ட்ல எனக்கான பேர். அதுக்கு என்ன பண்ணனும்ன்னு பார்த்து வெளியே வந்து தனியே ஆபிஸ் வச்சுட்டேன்..”

ஆனா ஆபிஸ் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வேற ப்ரெஷர். கிளைண்ட்ஸ் சாமானியத்துல கிடைக்கலை, ஆறு மாசம் என்னோட சேவிங்ஸ் வச்சு தான் சிட்டில பொழப்பு ஓடுச்சு. கிடைக்கிற சின்ன சின்ன வேலை எல்லாம் செய்வேன். எத்தனை நாள் தாங்கும். இப்படியே போனா என்ன ஆவோம்ன்னு பயம். ஒரு நேரத்துல முடிஞ்சோம்ன்னு கூட தோணிடுச்சு, திரும்ப கார்ப்பரேட்கிட்ட போகணுமான்னு கழுத்தை பிடிக்குது..”

வீட்டுக்கும் பணம் சுத்தமா கொடுக்க முடியல, நான் கொடுக்காம சமாளிச்சவங்க தான். இரண்டு வருஷம் வேலைக்கு போய் தான் நான் கொடுத்தான்னாலும் அதை வச்சு அதுக்கான கமிட்மெண்ட்ஸ் வீட்ல இருக்குமே, ஆகாஷ்க்கும் அப்பப்போ கொடுப்பேன், எல்லாம் அப்படியே நின்னுடுச்சு, என்னடா பண்ணிட்டோம்ன்னு கவலைப்பட்டப்போ தாத்தா தான் என்னை, வீட்டை சமாளிப்பார், மத்தவங்க எனக்கு மேல கவலைப்படுவாங்க..”

தாத்தா மட்டும் தான் அப்படி நம்பிக்கை  கொடுப்பார், நீ சம்பாதிக்கலைன்னா என்ன, உனக்கு பிடிச்ச வேலை பார்க்கிற இல்லை, அதுவே நமக்கு சந்தோஷம் தான்னு சொல்வார். நமக்கென்ன பெரிய பணத்தேவை இருக்குன்னுடுவார், சில மாசம்  எனக்கு தெரியாம என் அக்கவுண்ட்ல பணம் கூட போட்டிருக்கார், கடைசியா ஆகாஷ் பீஸ்க்கு அம்மா நகை ஏதோ வச்சாங்கன்னு கேள்விப்பட்டபோ தான், போடான்னு தோணிடுச்சு.”

“என் கான்டெக்ட்ஸ்ல இருக்கிறவங்ககிட்ட போய் நின்னேன், அவங்களுக்கு பாதி பணத்துக்கு வேலை செஞ்சேன், அவங்களை வச்சு ரிபரன்ஸ் வாங்கினேன், எங்கேயும் நம்ம திறமை மட்டுமே பேசாதுன்னு புரிஞ்ச நாள் அது, சிலருக்கு எல்லாம் சும்மா கூட வேலை பார்த்து கொடுத்தேன். அவங்க மூலமா சில கம்பெனிங்க கிடைச்சது, அதை வச்சு அடுத்து அடுத்துன்னு போனது தான், அந்த மும்பை கம்பெனி. அவங்க ரெபரென்ஸ் மூலமா UK கம்பெனி..”

Advertisement