Advertisement

கேளாய் பூ மனமே 2

மனைவி மடியில் படுத்திருந்த கணவனிடமும், கணவனை மடி தாங்கியிருந்த மனைவியிடமும் பெரும் மௌனம். சுவாசிக்கும் மூச்சு காற்றை கூட கட்டுப்பாட்டுடன் சுவாசிப்பது போலான அமைதி. நான்கு சுவர்களுக்குள், தங்களின்  ஜீவன்களுக்குள்  உணர்வுகளை புதைத்து வாழ்பவர்களிடம் மௌனத்தை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? 

பேச வேண்டும், சண்டையிட வேண்டும், கத்த வேண்டும், அழ வேண்டும்.. ம்ஹூம்.. எதுவுமே இங்கு இல்லை. இப்போது என்று இல்லை, எப்போதுமே இல்லைஇதற்கான அத்தனை சாத்தியம் இருந்தும் தங்களை மிக அதிகமாகவே அடக்கி ஆளும் ஆளுமை கொண்டவர்கள். இது மூன்றாம் மனிதருக்கு நல்லது என்றாலும், அவர்களுக்குள்  அது ஆகாததே..? அதன் பிரதிபலிப்பே ஜமுனாவின் இந்த பிரிவும், யுவராஜின் மறுப்பும்

அதையும் எனக்கு இது தான் வேண்டும் என்று கேட்க முடியா ஆளுமை கொண்ட ஜீவன்கள். ஆளுமை எல்லா இடத்திலும் செல்லுபடியாகாதே. மண்டியிடவும் தெரிய வேண்டும், மடி சாயவும் மனம் வேண்டும், தாங்கி கொள்ளவும் கை நீள வேண்டும். அணைக்கவும் தன்னை கொடுக்க வேண்டும்..!

உறவுகளுக்கான உணர்வுகளை வெளிப்படுத்த தயங்குபவர்கள், வீம்பு பிடிப்பவர்கள், ஜெயிப்பதில்லை. இது தான் சரி என்பதும், இது தான் தவறு என்பதும் ஒருவரால் மட்டுமே தீர்மானிக்க கூடியதில்லையே..! 

சிறு வாய்ப்பையும் விடாமல் தன்னை தேடி வரும் கணவனை மடி சாய்த்து கொள்ள முடிந்த ஜமுனாவிற்கு அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க விருப்பமில்லை. ஒதுக்கி தள்ள மனமில்லை. நீயே என்னை விட்டுடு என்றால்..? அது அவனால் முடியுமா..? முடியாது என்பதே அவன் இப்போதிருக்கும் நிலை. இன்னும் அழுத்தமாக தன் முகத்தை மனைவி மடியில் புதைத்தான்

கை வலி எல்லாம் இப்போது அவனின் நினைவிலே இல்லை. அவனை தாங்கும் மடி, அவன் சுவாசிக்கும் மஞ்சள் வாசனை, முகத்தில் பதியும் மாங்கல்யம், அவ்வளவு தான். அவன் இந்த கணம் முழுமை அடைந்துவிட்டான். நொடியில் வாழும் வல்லமை படைத்தவன் போல..! 

அவனின் உதடுகள்  மாங்கல்யத்தில் சங்கமித்தது. எனக்கான மாங்கல்யம் மதிப்பிழந்து போவதா..? உரிமையிழந்து போவதா..? அவளிடம் என் உரிமைக்கு எல்லையா..? அஹ்ஹா.. அது நடக்குமா..? 

வலித்த கையை சட்டையே செய்யாமல் படுத்திருக்க, நாள் முழுதும் கூட இது நீளும் என்று தெரிந்திருந்த ஜமுனா,  “ஹாஸ்பிடல் போகணும்..” என்றாள்.

“போலாம்..” படுத்தே சொன்னான் கணவன்

மேலும் சில நிமிடங்கள் செல்ல, இதற்கு மேல் முடியாது. ஜமுனா தன் மாங்கல்யத்தை கணவன் முகம் உறுத்தாதபடி எடுத்து கொண்டவள், “பார்த்துட்டு வந்துடலாம், எழுங்க..” என்று அவன் தலையை அசைக்க, மனமே இல்லாமல் எழுந்தமர்ந்தான்

ஜமுனா வேகமாக ரிப்ரெஷ் செய்து, உடை மாற்றி வந்தவள், அவனுக்கு ஷர்ட் என்ன செய்ய என்று பார்த்தாள். கணவனின் உடைகள் அவளிடம் உண்டு என்றாலும், அணிய முடியா கை வீக்கம். “ஷால்வை போட்டுக்கலாமா..?”கணவனிடமே கேட்க

ம்ஹூம்.. கொஞ்சம் லூசான ஷர்ட் இருக்கா பாரு..” என்றான்

ஸ்லீவ் டிஷர்ட் இருக்கு..” என்றவள், எடுத்து வர, யுவராஜ் மறுப்பாகவே பார்த்தான். “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இதை போட்டுக்கிட்டு வெளியே போலாம்..” என்றவள் முதலில் வீங்கிய கையில் பொறுமையாக அணுவித்து, மீதம் போட்டுவிட்டாள்

யுவராஜ் ஒற்றை கையால் கலைந்த தலையை வார, ஜமுனா உதடு சுளித்தாள். பார்த்த யுவராஜிடம் குறுஞ்சிரிப்பு. இருவரும் கிளம்பி கீழே வர, ஹாலில் ஜெயலக்ஷ்மியும், தயாநிதியும். “ம்மா.. நாங்க ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடுறோம்..” என்றாள் ஜமுனா

என்ன ஆச்சு..?” ஜெயலஷ்மி மருமகனை நெருங்க, தயாநிதி கண்கள் கை வீக்கத்தை கண்டு கொண்டது

கார் எடுக்கிறேன்..” என்றவர் வெளியே செல்ல, ஜமுனா அம்மாவிற்கு சொன்னவள், கணவனுடன் காருக்கு வந்தாள். யுவராஜ் பின்னால் மனைவியுடன் ஏறி கொள்ள, கார் மருத்துவமனை சென்றது. காலையில் பஞ்சாயத்து என்பதால், மதியத்தை நெருங்கி கொண்டிருந்தது நேரம்

ஜமுனா வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் என்பதால், உடனே எல்லாம் நடந்தது. எலும்புக்கு எதுவும் இல்லை என்று, கைக்கு பெல்ட் கொடுத்தனர். கழுத்து வழியாக கைக்கு பெல்ட் போட்டு, வலிக்கு மெடிசன் கொடுக்க, வீட்டிற்கு கிளம்பினர். தயாநிதி மருமகனை கேள்வியாக பார்க்க, அவன் எதுவும் சொல்லவில்லை என்பதால் கார்  அவர் வீட்டுக்கே வந்தது

ஜெயலஷ்மி மூவருக்கும் மதிய உணவு பரிமாறினார். வலது தோள் அடி என்பதால், ஸ்பூன் மூலம் உணவை முடித்து கொண்ட யுவராஜ் ஹாலில் அமர்ந்தான். ஜெயலக்ஷ்மி அம்மா வீட்டிற்கு போன் செய்து இப்படி என்று சொல்லி வைத்தவர், “எதுக்கு இந்த காட்டு மிராண்டி கூட்டத்துகிட்ட எல்லாம் பஞ்சாயத்து பேசிட்ட இருக்க நீ..?” என்று தயாநிதி முன்னாலே மருமகனிடம் கேட்டுவைத்தார்

தயாநிதி மனைவியை முறைத்தவர், “ஊர் விஷயத்தை வீட்டுக்குள்ள கொண்டு வர கூடாதுன்னு என்கிட்ட அவ்வளவு சண்டை போட்டவ, எதுக்கு என் ஊரை பத்தி பேசணும்..?” என்று சண்டைக்கு நின்றார்

எனக்கு ஒன்னும் உங்க சண்டைக்கார ஊரை பத்தி பேசணும்ன்னு அவசியம் இல்லை, என் அண்ணன்  மகனை அடிச்சதுக்கு நான் கேட்கத்தான் செய்வேன்..” என்றார் ஜெயலஷ்மி

சண்டையில தப்பி அடி விழத்தான் செய்யும்வேணும்ன்னு அடிக்கலை இல்லை..”

ஏன் அடிச்சு தான் பாருங்க, அப்போ தெரியும் சங்கதி, வேணும்ன்னு அடிக்கலையாமே, அவ்வளவு தைரியம் வந்துடுச்சா இந்த ஊர்காரனுங்களுக்கு, எவன் அவன் என் அண்ணன் மகன் மேல கை வச்சுடுவான் நானும் பார்க்கிறேன், எப்போ பாரு நாங்க பெரிய ஊரு, சீமை ஊருன்னு ஜம்பம் பேசிட்டு திரிய வேண்டியது, இவங்க பெரிய ஊரா இருந்தா மொத்த பேரும் பயந்துக்குவாங்களா என்ன..? நாலு போலீஸுக்கு ஓடி ஒளிஞ்ச ஊர் தானே இது, ஒத்தை லத்திக்கு தாங்காத கூட்டத்துக்கு இவ்வளவு பேச்சு எதுக்குங்குறேன்..” ஜெயலஷ்மி பொங்கி கொண்டே போக

அத்தை.. போதும், விடுங்க..”  என்றான் யுவராஜ்

முழுசா பேசவிட்டு அடக்கிறான் பாரு..” தயாநிதி மருமகனை உர்ரென்று பார்த்து வைத்தார்.  

ஜமுனா எல்லாம் கேட்டபடி சமையல் அறையை  ஒதுங்க வைத்து வந்தவள், “படுக்கிறீங்களா..?” என்று கணவனிடம் கேட்டாள்

ம்ம்.. பைவ் மினிட்ஸ்.. என் போன் மட்டும் வேணும்..” என்றான். ஜமுனா மேலே சென்று எடுத்து வர, தாத்தாவிற்கு அழைத்து சில விஷயங்களை செய்ய சொல்லி சொல்ல, தயாநிதி அதிர்ந்து போனார். செய்யாத என்று அவனிடம் கேட்க முடியாது

“இதை நீ முதல்லே செஞ்சிருக்கலாம்..” ஜெயலஷ்மி யுவராஜிடம் சொல்ல

உன் ஊர் இது தான்ங்கிறது உனக்கு அடிக்கடி மறந்து போயிடுது..” தயாநிதி மனைவியிடம் கோவமாக சொன்னார். அவரோ அதுக்கு என்ன என்று பார்த்து வைத்தார். அது சரி ஒரே ரத்தம் தானே நீங்க..? என்று அத்தையும், மருமகனையும் பார்த்தவர், போன் எடுத்து வேகமாக வெளியே சென்றார்

யுவராஜ் சொன்ன விஷயம் கேட்டு, கேசவன் மகனுக்கு போன் செய்து நிறுத்த சொன்னார். “இல்லைங்கப்பா.. செஞ்சா தான் சரி வரும்..” என்றுவிட்டான் யுவராஜ். அதை தொடர்ந்து வேறு சில ஆட்களும் அவனுக்கு போன் செய்து பேச, சந்தேகம் கேட்க என்று ஆரம்பித்துவிட, யுவராஜ் ஹாலிலே அமர்ந்துவிட்டான்

ஜமுனா மருத்துவமனைக்கு மாலை நேர ஷிப்ட் செல்ல வேண்டும். ஆனால் கணவன் ஆரம்பித்திருக்கும் வேலையால், விடுமுறை சொல்லிவிட்டாள். நேரம் செல்ல செல்ல, தயாநிதி வீட்டின் முன் ஆட்கள் சேர ஆரம்பித்துவிட்டனர்

“பஸ் வரல..” என்ற கூச்சல். ஆம் இவர்கள் ஊர் தான் கடைசி என்பதால், நான்கு கிராமும் சேர்ந்து பஸ்ஸை முந்தின நிறுத்ததோடு திருப்பி அனுப்பிவிட்டனர். “பள்ளிக்கூட போன பிள்ளைங்க, வேலைக்கு போனவங்க எல்லாம் எப்படி வீட்டுக்கு வர..?” என்று ஆளாளுக்கு கேள்வி. சத்தம்.  

ப்ரெசிடெண்ட் போன் செய்து அருணாச்சலத்திடம் பேச, அவர் முடியாது என்றார். “நாங்க எங்க ஊர் வழியா பாதை விட்டா தான் இவனுங்களுக்கு வழியே, இவங்க என்ன எங்களுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன்னு சொல்றது..? வரட்டும் எந்த கவர்மெண்ட் ஆபிசர் வேணா வரட்டும், நாங்க பேசிக்கிறோம்..” என்றார் அடித்து

அடுத்து அவர் யுவராஜ்க்கு போன் செய்ய, பிடிகொடுக்காமல் பேசி கொண்டிருந்தான். அவர்கள் ஊரில் இருந்து கொண்டு  அவர்களுக்கே வேட்டு வைக்கும் கணவனை என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தாள் ஜமுனா

ஜெயலஷ்மி மருமகனுக்கு மாலை நேர பலகாரம், டீ கொடுக்க, டீ மட்டும் எடுத்து கொண்டவன், ஜமுனா நேரம் பார்க்கவும், போனை மூடி, “ஆகாஷ்கிட்ட ஜீவியை  கூட்டி போக மெசேஜ் பண்ணிட்டேன்..” என்றான்

நல்லது தான்..’ நினைத்து கொண்ட ஜமுனா முகத்தில் என்ன கண்டானோ, போனில் பேசி கொண்டிருந்தவரிடம், “கூப்பிடுறேன்..” என்று வைத்துவிட்டவன்,  “என்ன..?” என்றான் மனைவியிடம்

“இப்படி செஞ்சா தான் பிரச்சனை தீருமா..?” என்றாள்

பேசி புரிய வைக்க முடியாத இடத்துல செயல் மட்டும் தான் புரியும்..” என்றான்

Advertisement