Advertisement

“இதென்னடி..”  ஜமுனா அதட்ட வர, 

“விடு..”  என்றவன், மகளை வைத்து கொண்டே சாப்பிட்டு எழுந்தான். ‘சரியாக சாப்பிடவில்லையே..’ ஜமுனா மகளை கோவமாக பார்த்து சென்றாள். 

“அம்மா என்னை முறைக்கிறாங்கப்பா..” மகள் அப்பாவிடம் மூக்கை உறிஞ்சினாள். 

“பின்ன அவங்க புருஷரை சரியா சாப்பிட விடாம பண்ண..? அக்கா மாமக்காகவே பார்த்து பார்த்து சிக்கன் கீ ரோஸ்ட் பண்ணா, பாவம்..” தாரணி ரோஸ்ட்டை வெளுத்து கட்டி கொண்டு சொன்னாள். 

‘இம்சைங்க..’ ஜமுனா கிச்சனில் முணுமுணுத்து கொண்டாள். 

அடுத்து பெண்களும் உணவு முடித்து, சிறிது நேரம் அமர்ந்தனர். அன்று மாலை சென்னை கிளம்ப வேண்டும் என்பதால், வைஜெயந்தியும், ஜெயாவும் சேர்ந்து பொடி வகைகள், தொக்கு ரெடி செய்ய ஆரம்பித்தனர். எல்லாம் வேலைக்கு செல்பவர்கள், காமாட்சியும் முடியாதவர் என்பதால், இட்லி மாவு வரை எடுத்து வைத்தனர். 

“நமக்கு இல்லைனாலும் போகுது, அந்த ஆகாஷ் பையனுக்கு சேர்த்து வைங்க..” காமாட்சி சொன்னார். அவர் எதற்கு சொல்கிறார் என்று புரிந்து பெண்கள் சிரிக்க, ஆகாஷ், ஆர்த்தி வந்தனர். 

“என்ன கிழவி புருஷனை ராக்கம்மாகிட்ட விட்டுட்டு போறோமேன்னு கவலை இல்லாம சிரிச்சுக்கிட்டு இருக்க..?” ஆகாஷ் பாட்டியை வம்பிழுத்தான்.

“அது பரவாயில்லை, அவங்களை விட இங்க வேற யார் நிலைமையோ தான் ரொம்ப கவலைக்கிடமா இருக்காம், பாவம்..” தாரணி உச்சு கொட்டியவள், “ஆமா ஆர்த்திக்கா.. நீங்க நல்லா சமைப்பிங்களாமே..? கிச்சடி ரொம்ப அருமையா இருக்குமாமே.. ஆகாஷ் மாமாக்கு ரொம்ப பிடிக்கும் போல, ஹெவன் இன் கிச்சடின்னு ஸ்டேட்டஸ் எல்லாம் வச்சிருந்தார், இனி தினமும் அதையே பண்ணி போடுங்க, நல்லா சாப்பிட்டு..”

“சாவட்டும்  சொல்றியா எருமை..” ஆகாஷ் கடுப்புடன் சொன்னான். ஆர்த்தி கணவனை முறைக்க, பெண்கள் வாய்க்குள் சிரிப்பை அடக்கினர். 

“என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க..? ஆர்த்திக்கா வருத்தப்படுறாங்க பாருங்க..” தாரணி அப்பாவியாக சொல்ல, 

கோர்த்து விட்டாளே..? ஆகாஷ் மனைவியை பார்த்து, ஹிஹி.. என்று சிரித்தவன், “அது.. செத்தா தானே சொர்க்கத்துக்கு போக முடியும், நான்  உன் கிச்சடிய சாப்பிட்டே தினம் தினம் சொர்க்கத்துல தானே  இருக்கேன், அதை  சொன்னேன் ஆர்த்தி..” என்றான். 

“அப்படியா..? நம்ப முடியலையே..?” ஆர்த்தி சொல்ல, 

“அட நம்புங்க ஆர்த்திக்கா, எங்க மாமா பொய் எல்லாம் சொல்ல மாட்டார், அப்படியும் உங்களுக்கு டவுட் இருந்தா மூணு வேளையும் கிச்சடியே கொடுங்க, மாமா எப்படி சாப்பிடுறார்ன்னு மட்டும் பாருங்க..” என்றாள் தாரணி. 

‘மூணு வேளைக்கும்  கிச்சடியை கன்பார்ம் பண்ணாம விட மாட்டா போலயே..?’ ஆகாஷ் அத்தை மகளை முறைத்தவன், “இன்னும் கிளம்பாம என்ன பேச்சு இங்க..? கிழவி உன் பை எங்க, எடு கிளம்பலாம்..” என்றான்  வேகமாக. 

“இன்னும் நேரம் இருக்கு மாமா.. நாம கிச்சடியை முடிச்சிடலாம்..” என்றாள் தாரணி விடாமல். 

“நீ என்னை முடிக்க பிளான் போடுறேன்று நல்லா தெரியுது..” ஆகாஷ் முணுமுணுக்க, ஆர்த்தியே சிரித்துவிட்டாள். 

“எனக்கு தெரியும் என் சமையல் எப்படி இருக்கும்ன்னு, நானும் அதை தானே சாப்பிடுறேன்..” என்றவள், “பாட்டிகிட்ட லீவ் நாள்ல கத்துகிறேன்..” என்றாள். 

“படிச்சு முடிக்கவும் வேலைக்கு போயிட்ட, இவ்வளவு சமைக்கிறதே பெருசு ஆர்த்தி, ஒன்னும் அவசரமில்லை, பொறுமையா கத்துக்கோ..” என்றார் வைஜெயந்தி. 

“ஏன்ம்மா ஏன்..? அதான் என் பொண்டாட்டியே கத்துகிறேன் சொல்றா இல்லை, நீங்க என்ன..?” ஆகாஷ் அம்மாவிடம் குதித்தான். 

“ஏன் ஆர்த்திக்கா மட்டும் சமைக்கணும், நீங்களும் கத்துக்கிட்டு சமைங்க..” என்றாள் தாரணி. “அதானே.. நீ கத்துக்கோடா.. அவளும் தானே வேலைக்கு போறா..?” காமாட்சியும் சேர்ந்து கொள்ள, 

“கத்துகிறேன்.. கத்துக்கிட்டு உங்க இரண்டு பேருக்கும் தான் முதல் படையல்..” ஆகாஷ் நம்பியார் போல் கைகளை பிசைய, அலறலான சிரிப்புடன்  கிளம்பும் வரை அங்கு அரட்டை தான்.

கிளம்பும் நேரம் யுவராஜ் மகளுடன் கீழே வர, எல்லோரும் தாயாகினர். மாலை எடுத்த கார் இரவு சென்னை வந்து சேர்ந்தது.  அடுத்த நாளில் இருந்து எல்லோருக்கும் நாட்கள் வழமையாக சென்றது. 

வார இறுதி வர, ஆகாஷ், மனைவியுடன் அண்ணன் வீட்டில் தான். பாட்டியை வம்பிழுத்து கொண்டிருந்தவன், யுவராஜ் வரவும், “ண்ணா.. நிலம் பத்தி யோசிச்சீங்களா..?” என்றான். 

“இல்லைடா..” யுவராஜ் சொல்ல, 

“வாங்குவோமாண்ணா.. எனக்கு லோன் கிடைக்கும்..” என்றான் ஆகாஷ். 

“எனக்கு முடியும்ன்னு தோணலை ஆகாஷ்.. விடு..” என்றவன், “உனக்கு வேணும்ன்னா வாங்கு, நான் பேசி முடிச்சு  தரேன்..” என்றான். 

“ண்ணா..” ஆகாஷ் முகம் சுருங்கிவிட்டது. “நமக்கு  வாங்க தான் கேட்டேண்ணா.. எனக்காக இல்லை..” என்றான் தம்பி. பார்த்திருந்த பெண்கள் என்ன சொல்வர்..? யுவராஜ் ரூமிற்கு சென்றுவிட, ஜமுனா அவர்களை சாப்பிட வைத்து அனுப்பினாள். 

இரவு ஜீவிதா தூங்கிவிட, ஜமுனா கணவனிடம் பேச பார்த்தாள். ஆனால் அவனுக்கு முடிக்க வேண்டிய அவசர வேலை இருக்க லேப்புடன் அமர்ந்துவிட்டான். இந்த வாரத்துக்குள் கொடுத்தாக வேண்டும். புது கம்பெனி கிடைத்திருந்தது. சிறிது நேரம் பார்த்த ஜமுனா, கணவன் மும்முரமாக வேலை பார்ப்பதில் மகள் பக்கத்தில் படுத்துவிட்டாள். 

யுவராஜ்க்கு வேலை முடிய நடுநிசி ஆகிவிட்டது. லேப் மூடி வைத்து நிமிர்ந்தால் கழுத்து பளீர் என்றது வலிக்கு. டீபாய் மேல் வைத்து குனிந்து வேலை பார்த்தன் பலன். ‘முதல்ல ஒரு டேபிள், சேர் வாங்கி போடணும்..’ எல்லாம் எடுத்து வைத்து, ரிப்ரெஷ் செய்து வந்தான். 

ஜமுனா அவன் நடமாட்டத்தில் தூக்கம் கலைந்து பார்க்க, கணவன் கழுத்தை தேய்த்தபடி மொபைலை சார்ஜ் போட்டு கொண்டிருந்தான். ஜமுனா தூக்கத்திற்கு கண் மூட, கணவன் வலியில் சுருங்கிய முகம். திரும்ப பார்க்க, யுவராஜ் மகள் பக்கத்தில் குப்புற படுத்து கொண்டான். தூக்கத்திற்கு கண் எரிந்தாலும் வலிக்கு முடியவில்லை. கழுத்தை தேய்த்துவிட்டு கொண்டான். 

ஜமுனா “வலிக்குதா..?” என்று கேட்டாள். 

“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” என்றான். ஜமுனா எழுந்து தைலம் எடுத்து வந்தவள், கணவன் பக்கத்தில அமர்ந்து கழுத்தில் தேய்த்து, மசாஜ்  செய்தாள். நன்றாக இருந்தது. மனைவி மடியில் படுக்கும் ஞாபகம். ஆனால் அசையவில்லை. 

“போதும்.. நீ போய் தூங்கு..” என்றான். 

ஜமுனா நினைவு வந்தவளாய், “ஏன் ஆகாஷ்கிட்ட அப்படி பேசுனீங்க, உங்களுக்கு அதை வாங்க வேண்டாமா..?”  என்றாள். 

“எனக்கு அதை எல்லாம் எடுத்து செய்ய முடியும்ன்னு தோணல..” என்றான் சோர்வாக. 

“அதான் ஆகாஷ் உதவிக்கு வராரே..”

“அவனுக்கு வேணும்ன்னா  வாங்கிக்க சொல்லு, நான் உதவி பண்றேன், பணம் கூட கொடுக்கலாம், அவன்கிட்ட பேசு..” என்றான். 

“நீங்களும் ஆசைப்பட்டீங்க தானே இப்போ என்ன..?”

“அப்போ தோணுச்சு தான், ஆனா இப்போ அந்த இன்டிரெஸ்ட் இல்லை, வாங்கி என்ன பண்ண போறோம்ன்னு தோணுது..? விடு..”

“ஏன் இப்படி பேசுறீங்க..?” 

இனியும் எதையும் எடுத்து தலை மேல போட்டுக்க முடியாது. இடையில வேற ஏதாவது கமிட்மென்ட் வந்தா, பெரிய அமவுண்ட்..” 

“அப்புறம் எப்படி முதல்ல யோசிச்சீங்க..?” மனைவி விடாமல் கேட்டாள். 

“அப்போ நான் என்ன வாழுறேன்னு  எனக்கு தோணலை, இப்போ தோணுது, யாருக்கு இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறேன்னு இருக்கு..” 

“நான் தான் சொல்லிட்டேன் இல்லை மாமா, எப்படி இருந்தாலும் உங்க பணத்தை நான்..”

“என் பணமா..?” யுவராஜ் மனைவியை பார்க்க, அவள் நிறுத்திகொண்டாள். 

“ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, நீ என்கிட்ட தோக்கலைடி,  நான் தான் வாழ்க்கையிலே ரொம்ப மோசமா தோத்துகிட்டு இருக்கேன், என் பொண்டாட்டி நான் கிட்ட போனா பதறி போறா..?”

“மாமா.. அது, நீங்க.. நான்.. நாம மூணு வருஷம் ஆச்சு இல்லை, அதான்..” 

“எனக்கெல்லாம் அப்படி இல்லை..”

“சரி எனக்கு மட்டும் தான், அதுக்கு காரணமும் நீங்க தான்..”

“இதுவுமா..?”

“ஏன் இல்லன்னு சொல்வீங்களா..?”

“சொல்ல முடியாது, ஆனா என் பொண்டாட்டி நான் கிட்ட வந்து சேர்க்கலைன்னா..?”

“கிட்ட வந்தா தானே தெரியும்..”

“இப்போவும் கிட்ட தான் இருக்கேன்..”

“கிட்ட இருந்தாலும் சும்மா தானே இருக்கீங்க..”

“போதும்டி..”  யுவராஜ் உதடுகள் இறுக்கத்தை தொலைத்து சிரித்தது. 

“நான் உண்மையா தான் சொல்றேன், ஒரு மாசத்துல பிள்ளையே வந்திடுச்சு, மூணு வருஷமா எப்படி இருக்கீங்க..?”

“பொண்டாட்டியா கேட்கிறியா..? டாக்டரா கேட்கிறியா..?”

“டாக்டருக்கு என் மாமாவை தெரியாதே, பொண்டாட்டிக்கு தானே தெரியும்..”

“நீ என்னோட பீலிங்ஸ் எல்லாம் யோசிச்சிருக்கியா..?”

“எப்படி யோசிக்காம இருப்பேன்..?”

“அப்புறம் ஏண்டி மடியில படுத்தா கூட கல்லு மாதிரி இருந்த..”

“அது அப்போ, இப்போ படுத்து பாருங்க..”

“என்ன பண்ணுவ..?”

“படுத்தா தானே தெரியும்..”

“உனக்கு இன்னைக்கு என்னமோ ஆகிருச்சுடி..”

“உங்களுக்கு ஒன்னும் ஆகலை போலயே..”

“ஆகணுங்கிறியா..?”

“இன்னுமா ஆகலை..” 

யுவராஜ் அடக்க முடியாமல் சிரித்துவிட, 

“ஷ்ஷ்.. பாப்பா.. பக்கத்து ரூம்ல பாட்டி..”

“சத்தமே வராம சிரிக்க முடியாதுடி..”

“சத்தமே வராம பண்ண எத்தனையோ இருக்கு..”

“நீ சேம்பிள் காட்டு..” யுவராஜ் சிரிப்புடன் கேட்க, 

“அப்போ நீங்க ஒன்னும் பண்ண போறதில்லை.. நான் தூங்க போறேன் போங்க..” ஜமுனா எழ, கை பிடித்து திரும்ப அமர வைத்தவன், அவள்  மடியில் தலை சாய்த்தான். 

“ரொம்ப மிஸ் பண்ணேன்டி..” தாலியுடன் நெஞ்சில் ஒரு அழுத்தமான முத்தம். அந்த முத்தத்தில் அவர்கள் முதல் இரவு நினைவுக்கு வந்தது. 

ஆனால் அன்று போல, கணவன் அடுத்து போகவில்லை. அவள் மடியில் ஒரு ஆழ்ந்த, சுகமான, சொர்க்கமான தூக்கம்.

கண்ணீர் வேண்டாம் 

காயங்கள் வேண்டாம் 

ஆறு மாத பிள்ளை போல 

மடியிலே மடியிலே உறங்கி விடு..

Advertisement