Advertisement

கேளாய் பூ மனமே 19

அன்றைய இரவு யுவராஜ் தம்பதிக்கு அங்கேயே கழிந்தது. ஜமுனா கணவனை அணைத்து அழுது, ஓய்ந்து சோர்ந்து போக, ஷெட்டில் உள்ள கட்டிலிலே மனைவியை படுக்க வைத்து, தானும் அவள் பக்கத்தில் படுத்து கொண்டான். ஜமுனா சிறிது நேரத்திலே தூக்கத்திற்கு செல்ல, யுவராஜ் கண்கள் வெறிக்க வெறிக்க படுத்திருந்தான்.  

நீங்க என்னை புரிஞ்சுக்கலை, விளக்கம் கொடுக்க வச்சிட்டீங்க..? நான் தோத்துட்டேன்..’  கண்களை மூடி திறந்தான். அவள் மனம் திறந்து பேசியது ஒரு விதத்தில் ஆறுதல் என்றால், தோற்று போனதான அவளின் அழுகை, அவனுக்கு ஒரு அழுத்தமே. கனத்த நெற்றியை நீவிவிட்டு கொண்டான்

அவனுக்குள் பருவ உணர்வுகள் முளைத்த  நாட்களில் இருந்து அவனின் எல்லா உணர்வுகளுக்கும் ஒரே சொந்தக்காரி அவனின் மனைவி மட்டுமே. கனவிலும் நிழல் உருவமோ, நடிகையோ, கிரஷ் போன்ற எதுவுமே கிடையாது. இவளின் முகம் மட்டுமே

நன்றாக படிக்க கூடிய பெண், மருத்துவம் படிக்கிறாள்.. உண்மையிலே அவனுக்கு அப்படி ஒரு பிரமிப்பு. இவனும் நன்றாக படிக்க கூடியவனே என்றாலும், மனைவியின் சாதனை வேறல்லவா..? அவளுக்கு  MBBS சீட் கிடைத்த போது  அவளிடம் வாழ்த்து சொல்லி முடித்துவிட்டாலும், தனக்குள் அவ்வளவு கொண்டாடினான். ஏன் நண்பர்களுக்கு ஏதோ டிரீட் கொடுத்ததாக கூட நினைவு

படிக்கட்டும்.. நல்லா படிச்சு முடிக்கட்டும்.. தொந்தரவு பண்ணகூடாது..’  நேரில் பார்க்க நேரும் போதெல்லாம், அவ்வளவு கட்டுப்பாட்டுடன் விலகி நின்றவன்இப்போது மட்டும் எப்படி அவளின் படிப்பை விட்டான்..? 

அவர்கள் திருமணம், அதை தொடர்ந்த வாழ்க்கை, ஜீவிதா பிறந்தது, அவனுக்கு ப்ராஜெக்ட் கிடைத்தது, அவளின் படிப்பு.. ம்ப்ச்.. யோசிக்க யோசிக்க இனிமையான நினைவுகளில் கூட மகிழ முடியவில்லை. இரவு அவனுக்கு நீண்டு கொண்டே சென்றது

ஒரு கட்டத்தில் எல்லாம் போட்டு அழுத்துவதாக  தோன்ற, அவனுக்கே முடியாமல், மனைவி நெஞ்சில் முகம் புதைத்து படுத்துவிட்டான். அவன் மனைவியோ பதறி விழித்து,  இவனை பார்த்து ஆசுவாசமாகி கண் மூடினாள். அவளின் இதய துடிப்பு எகிறி குதித்தது இவனுக்கே  உணர,  “ஏன் இவ்வளவு டென்ஷன்..?” என்றான்.

பயந்துட்டேன் மாமா.. ரொம்ப வருஷம் ஆச்சு கழிச்சு நீங்க இப்படி..” என,  இவன்  நொந்தே போய்விட்டான். மனதில் உள்ளதை பகிர்ந்ததில் அவளுக்கு ஆழ்ந்த தூக்கம் போல.

அதற்கு மேல் எங்கு படுக்க..? அவளிடம் இருந்து தள்ளி வந்துவிட்டான். அவன் விலகளில்ஜமுனா, “ஏன் மாமா, தூங்குங்க..” என்றாள். 

“இல்லை.. நீ தூங்கு, நான் தண்ணி பாய்ச்ச போகணும், மணி நாலு ஆச்சு..” என்று ஷெட்டை மூடி வெளியே சென்றுவிட்டான். ஜமுனாவிற்கு கண்கள் எரிந்ததில் திரும்ப தூங்கிவிட்டாள். ஆனால் வழக்கமான  நேரத்துக்கே விழிப்பு வர, எழுந்து வெளியே வந்தாள்

விடியும் நேரம் நெருங்கிவிடஆட்களின் நடமாட்டம் தெரிந்தது. சற்று தூரத்தில் யுவராஜ் நிற்பது தெரிய, அவனிடம் சென்றாள். தண்ணீர் மடை மாற்றி கொண்டிருந்தவன், “எழுந்திட்டியா..? வீட்டுக்கு போலாம்..” என்றான்

நீங்க முடிச்சுட்டு வாங்க..” என்றாள்

அவ்வளவு தான் இந்த மேட்டு நிலத்தோட முடிச்சுக்கலாம்..” யுவராஜ் சொன்னபடி தண்ணீர் வரத்தை மாற்றி விட்டான்

ஜமுனா வரப்பில் அமர்ந்து கொண்டாள். ‘இனி எதையும் நினைக்க போவதில்லை. வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படியே போகட்டும்..’ மனதில் பலமான முடிவுடன் தான் கணவனுடன் எல்லாம் பகிர்ந்தது. இப்போது அவளுக்கே மனதின் கனம் காணமல் போன உணர்வு. அதிகாலை வேளையில் கணவனுடனான நேரம். கண்கள் அவனில் பதிந்தது. 

அவனின் வெள்ளை வேஷ்டி அங்கங்கு மண்ணாகி இருக்க, பனியனில் வேர்க்க நின்றிருந்தான்  கணவன். தலை முடி முற்றிலும் கலைந்து, முன் நெற்றியில் படிந்திருக்க, வேர்வை துளிகள் அங்கங்கு மினுத்தது. கழுத்து  செயின் அவன் கீழே குனிந்து வேலை பார்க்கும் நேரம் எல்லாம் அவன் முகத்தோடு உரசி ஆடி கொண்டிருக்க, வெகு நாட்களுக்கு பிறகு கணவனை.. கணவனாக பார்த்தாள் மனைவி.

முடிஞ்சுதா யுவராஜ்..?” அருணாச்சலம் வந்து கொண்டிருந்தார்

இல்லை தாத்தா.. மீதி முனியன் வந்து  பார்க்கட்டும்..” யுவராஜ்  நிமிர்ந்து நெற்றி வேர்வையை ஒற்றை விரலால் சுண்டி விட்டபடி சொன்னான். 

“அவன் வேலையை காமிச்சுட்டானா..? ஆளுங்களோட சேர்ந்தா புத்தி புல்லு மேயத்தான் போகும் போல..” அருணாச்சலம் சொன்னபடி பேத்தி பக்கத்தில் அமர்ந்தார். 

“தாத்தா.. இந்த வார கணக்கை முனியன் சம்சாரத்துக்கிட்ட கொடுங்க,  இவன் கையில பணத்தை கொடுக்காதீங்க..” யுவராஜ் சொல்ல, 

“அப்படி தான் பண்ணனும்..” என்றவர், “நீ குப்புசாமி கேட்டதை எதாவது யோசிச்சியா..?” என்றார் பேரனிடம். 

“பார்க்கலாம் தாத்தா..” என்றான் பேரன். 

“உனக்கு முடியும்ன்னா  செய்யலாம் யுவராஜ், போட்டு அழுத்திக்க வேண்டாம், வாங்கிட்டா நமக்கு வரப்பு, வழி பிரச்சனை இருக்காது, அவ்வளவு தான், மத்தபடி வாங்கியே ஆகணும்னு எல்லாம் இல்லை..” என்றார் அருணாச்சலம். 

“ம்ம்.. புரியுது தாத்தா..” என்றவன் கண்கள், பக்கத்து நிலத்துக்கு சென்றது. ஐந்து ஏக்கர் நிலம். விலைக்கு வருகிறது. வாங்கிவிட்டால் நல்லது என்ற எண்ணம் ஆண்களுக்கு உண்டு. யுவராஜ் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான் தான். ஆனால் இப்போது என்னமோ முழுதும் அடைத்த உணர்வு. எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. 

“நான் போய் மோட்டார் நிறுத்திட்டு வரேன்.. வீட்டுக்கு போலாம்..” யுவராஜ் கிளம்பினான். தூரமே செல்ல வேண்டும். 

“இந்த நிலமா தாத்தா..” ஜமுனா கை காட்டி தாத்தாவிடம் கேட்டாள். 

“ஆமாம்மா.. அண்ணன் தம்பிங்க நிலம், கூட்டு கிணறு பாத்தியம், தண்ணீர் வேண்டாம்ன்னு விலை குறைச்சுக்கலாம், நம்மகிட்ட இப்போ தண்ணீர் இருக்கு, ஊற்று இருக்க போரும்  போட்டுக்கலாம், வரப்பு, வழி ஒன்னா போயிடும்ன்னு யுவராஜ் தான் யோசிச்சு சொன்னான், அதான் கேட்டேன், என்னமோ யோசிக்கிறான், அவனுக்கும் நிறைய சுமை வைக்க கூடாது, வேணா சொல்லிடலாம்..” என்றார்.  

ஜமுனாவிற்கும் வாங்கினால் நல்லது என்று தான் தோன்றியது. “ஒரு இரண்டு நாள் கழிச்சு கூட இவர்கிட்ட பேசி பாருங்க தாத்தா..”  என்றாள். நான் பேசுனதுல அப்செட் ஆயிட்டார் போல. 

“இல்லைம்மா.. அவனுக்கு  சரின்னா தயங்க மாட்டான், ஏதோ யோசிக்கிறான், திரும்ப எதிலும் சிக்கிக்க கூடாது இல்லை, அவனுக்குன்னு எதாவது யோசிச்சிருந்தா, சுத்தி முத்தி ஊரிலே வாங்கினா, பொழைப்பு நடத்துற இடத்திலும் பார்க்கணும் இல்லை..” என்றார் தாத்தா. 

‘இப்படியும் இருக்கா..?’ ஜமுனா யோசிக்க, 

“உனக்கு தான் தெரியும் இல்லை, மூணு வருஷத்துக்கு முன்னாடி கேசவன் பண்ணி வைச்ச வேலை, இருபத்தஞ்சு லட்சம் கடனை நோகாம பையன் தலையில கட்டிட்டான்.  இரண்டு வருஷத்துக்குள்ள அசல், வட்டியோட செட்டில் பண்ணலைன்னா நிலம் அவனுக்கேன்னு வெங்கடேசன் ரெஜிஸ்டர் அக்ரீமெண்ட் போட்டு, உன் மாமன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டான். இதுல பாதி நிலம் அவன் பேர்ல தான் இருக்கு, கோர்ட்டுக்கு போலாம்ன்னா அது எத்தனை வருஷம் இழுக்குமோ..? கொடுத்த அசல், வட்டியை செட்டில் பண்ணாம எதையும் மேற்கொண்டு பண்ணவும் முடியாது,.”

“வெங்கடேசன் கணக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் விலை. எவ்வளவு அநியாயம் பாரு, ஒரு ஏக்கரே இருபது லட்சத்துக்கு மேல போயிட்டிருக்கு, கோடிக்கணக்கான  சொத்தை அமுக்க பார்த்தான், அவனுக்கும் கேசவனை எப்படி ஏமாத்தலாம்ன்னு நல்லா தெரிஞ்சிருக்கு, சாமர்த்தியம், சாதுர்யம், யோசிக்கிறது எதுவும் கிடையாது. பிரச்சனை வந்துட்டா சமளிக்காம முழிப்பான், என் மருமகன் அன்னைக்கு பேச்சில, கையாலாகாதவன்னு சொன்னப்போ உள்ள அவ்வளவு வேதனை தான். கேட்டுட முடியல, ஆம்பிளையா லட்சணமா பொழப்பு பண்ண தெரியலைன்னா, இந்த வார்த்தை எல்லாம் தான் வாங்கியாகணும் என்ன பண்ண..?”

“எப்படியோ என் பேரன் எல்லாத்தையும் காப்பாத்தி கொடுத்தான், இல்லன்னா வீட்ல ஒன்னுக்கு நாலு ஆம்பிளைங்க இருந்தும், பரம்பரை மண்ணை காப்பாத்த துப்பில்லன்னு தான் பேச்சு வாங்கியிருப்போம், இப்போ நடந்த ஏரி தண்ணீர் பிரச்சனைக்கும் நாம முன்னாடி நின்னிருக்க முடியுமா..? சொந்த மண்ணே இல்லை,  இதுல எங்க வந்தீங்கன்னு தான் கேட்டிருப்பானுங்க, ஏதோ உன் புருஷன் புண்ணியத்துல, உழைப்புல தான் இந்த பேச்சை எல்லாம் வாங்காம தப்பிச்சோம், தலை நிமிர்ந்து நடக்கிற மரியாதையை தக்க வச்சான்..”

“ஆனா என்ன எங்களை பார்த்து, இந்த மண்ணை பார்த்து அவனுக்கும், உனக்கும் மனசு கஷ்டம் வந்திடுச்சு, சொந்த பேரன், பேத்தி, பிரிஞ்சு, இதுக்கு இந்த மண்ணே  இல்லாம  போயிருந்தா கூட பரவாயில்லைன்னு தோணிடுச்சு, ஏதோ இப்போ நீ படிக்கிறேன்னு திரும்ப உன் புருஷன்கிட்ட போன,  எங்களுக்கும் நிம்மதி ஆச்சு, இனியும் எதுக்கும் அவனை தொந்தரவு பண்ண கூடாது, அவன் வாழ்க்கையை அவன் பார்க்கணும்..”

“இந்த மண்ணு  தான் கௌரவமா யுவராஜ்  தலை மேல உட்கார்ந்து அவனை இங்க அங்க திமிர விடாம  பண்ணிடுச்சு, இப்போ அப்படி எதுவும் இல்லை, உனக்கும், அவனுக்கும் பிடிச்சதா பார்த்து செய்ங்க, எங்களுக்கு உங்க சந்தோசத்தை தவிர வேறென்ன வேணும்..” அருணாச்சலம் முடித்து, கண்ணை ஒற்றி கொண்டார். ஜமுனா தாத்தா கை பிடித்து கொண்டாள் ஆதரவாக. 

“என்ன தாத்தா..?”  யுவராஜ் வந்தான். ஷெட்டுக்கு போய் சட்டையோடு வந்தான். 

“என் பேத்திகிட்ட பேசிட்டிருந்தேன்.. அவகிட்ட இப்படி உட்கார்ந்து பொறுமையா பேச இன்னைக்கு தான் முடிஞ்சது..” என்றார் தாத்தா. 

“அது சரி தான்.. கிளம்பலாமா..? என்றான். 

“இல்லை.. நான் முனியன் வரவும் வரேன், நீங்க கிளம்புங்க..” என, இருவர் மட்டும் கிளம்பினர். 

யுவராஜ் பைக்கில் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு குட்டி பயணம். தோள்களில் இயல்பாய் கை வைத்து கொண்டாள் மனைவி. அதிகாலை பைக் பயணம். பிடிக்கவே செய்தது. வீட்டில் பைக் நிற்க, ஜமுனா ரூமிற்கு குளிக்க சென்றாள். யுவராஜ் மனைவி வரவும் அவனும் குளித்து வந்தவன், “பாப்பா எங்க இன்னும் காணோம்..?” என்றான்.

“போன் பண்ணேன், இன்னும் தூக்கம் போல..” என்றவள், கணவனுடன் கீழே சென்றாள். காலை உணவு முடியவும் யுவராஜ் ரூமிற்கு சென்றுவிட்டான். ஜமுனா மாமியாருடன் மதிய உணவு வேலையில் ஈடுபட்டாள் 

“ஜெயாவை மதியம் சாப்பிட வர சொல்லியிருக்கேன், அரிசி கொஞ்சம் கூட சேர்த்து போடு ஜமுனா..” என்றார் மாமியார். இன்று வீட்டில் அசைவ விருந்து. காமாட்சி மருமகளிடன் ஊர் நிலவரம் கேட்டு கொண்டிருந்தார். ஆகாஷ் போன் செய்து பேசி வைத்தான். “ஒரேடியா ஊருக்கு கிளம்பும் போது வராங்களாம்..” வைஜெயந்தி சொன்னார். 

“ஆர்த்திக்கு கொஞ்சம் சமையல் கத்து கொடுக்கணும் வைஜெயந்தி, அன்னைக்கு கிச்சடின்னு ஏதோ பண்ணியிருந்தா, உன் மகன் இன்னும் கொண்டான்னு விழுந்து  விழுந்து சாப்பிடுறான், எனக்கு தான் முடியல, முழுங்கிட்டு ஓடி வந்துட்டேன்..” என்றார் காமாட்சி. 

“அவனுக்கு நல்லா வேணும்த்தை, நம்மகிட்ட எவ்வளவு குறை படிப்பான்.. இன்னும் கொஞ்ச நாள் படட்டும்..” வைஜெயந்தி சிரிப்புடன் சொன்னார். 

“அவன் பட்டா பரவாயில்லையே, என்னையும் இல்லை வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கிறான், முடியாதுன்னு சொன்னா டப்பாலே அடைச்சு கொண்டு வந்துடுறான், ஆர்த்தியை வச்சுக்கிட்டு முடியாதுன்னா சொல்ல முடியும், படுத்தறான் உன் மகன்..” காமாட்சி நொந்து கொண்டவர், “எனக்கு என்னமோ உன் மகன் என்னை வச்சு காலி பண்றான் நினைக்கிறேன், மீதம் ஆனா அதுவே அடுத்த வேளைக்கு போல..” சந்தேகமாக சொல்ல, ஜமுனா, வைஜெயந்தி சிரித்துவிட்டனர். 

“என்ன இங்க சிரிப்பு..?” தாரணி வர, உடன் ஜெயா, ஜீவிதாவும். “ம்மா..” ஜீவிதா அம்மாவை கட்டி கொண்டாள். காமாட்சி பேத்திக்கு  திரும்ப சொல்ல, “இது இத்தனை நாள் தெரியாம போச்சே.. இனி பார்த்துகிறேன்..” தாரணி சொல்லி கொண்டிருக்க, ஜீவிதா அப்பாவை தேடி ரூமுக்கு ஏறிவிட்டாள்.

ஜெயலக்ஷ்மி  பெரிய மகளை கவனித்து, முகம் வாடினார். இவர்கள் வாழ்க்கை அவரை அதிகம் அரித்து கொண்டிருந்தது. “ஜெயா..” வைஜெயந்தி கூப்பிட, அண்ணியுடன் இணைந்து கொண்டார். இவர்கள் மதிய உணவு முடிக்க,  ஆண்களும் உணவுக்கு வந்துவிட்டனர். தயாநிதி கடையில் இருக்க, அவருக்கு அங்கேயே உணவு சென்றது. 

ஜீவிதா அப்பாவிடம் சாப்பிட, ஜமுனா கணவன், மகளுக்கு நின்று பார்த்து கொண்டாள். மகள் சாப்பிட்டு முடித்தும், யுவராஜ்  மடியை விட்டு நகராமல் இருக்க, “பாப்பா.. நீ பாட்டிகிட்ட போ, அப்பா சாப்பிடட்டும்..” என்றாள் ஜமுனா. மகளோ, நான் இன்னும் சாப்பிடுவேன் என்றாள். 

Advertisement