Advertisement

கேளாய் பூ மனமே 18

‘இன்னும் இன்னும் கடினமாக்கி கொள்கிறோம் ..’ அவர்களுக்கே புரிந்தது. ஆனால் முடிந்துவிட்ட செயலில் என்ன பயன்..? கனமான மௌனம்.  ஜீவிதா தூக்கத்தில் இருக்க, அவளின் இருபுறமும்  யுவராஜ், ஜமுனா சுவற்றை பார்த்து அமர்ந்திருந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட முடியவில்லை

யுவராஜ்க்கு திரும்ப எதாவது பேசி விடுவோமா என்ற பயம் என்றால், ஜமுனாவிற்கு அவன் வார்த்தை கொடுத்த துக்கமே அவளை போட்டு அழுத்தியது. என்ன நடக்கிறது..? நாங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறோம்..? கையில் மகளை வைத்துக்கொண்டு, இதென்ன..? தலை பிடித்து கொண்டான் யுவராஜ்

ஒருவரை ஒருவர் வெறுத்துவிட்டால் கூட இவ்வளவு வலிக்காது போல, விருப்பமான உறவுக்குள் போராடுவது தான் தாங்கவே முடியவில்லை. இனிப்பான கையால் கசப்பை விழுங்கு என்றால்..? அப்படி ஒரு நிலை தான் இருவருக்கும்

கணவன், மனைவி இருவருமே மற்றவருக்கு அவ்வளவு இனிப்பான, விருப்பமான உறவு தானே..? அதில் கசப்பை கலந்து விழுங்கு  என்றால், இருவருக்குமே அதை விழுங்கி  கரைக்க தெம்பு இல்லை, சகிப்பு தன்மை இல்லை

இனிப்பான வாழ்க்கை மட்டுமே வேண்டுமென்றால், அது எங்கு கிடைக்கும்..? கற்பனை மாய உலகத்திலா  எந்நேரமும் வாழ முடியும்..? நிதர்சனத்தை சிறிதும் எதிர்கொள்ளா மனிதனை என்ன சொல்ல..? பார்ப்பது, கேட்பது, வாழ்வது எல்லாம் ஆனந்த மயாமாகவே வேண்டும் என்றால்..? அவ்வளவு பூ போன்ற படைப்பா மனிதன்..?  

எல்லோரும் எதிர்பார்ப்பது ஆனந்தமான வாழ்க்கையை தான், மறுப்பதற்கே இல்லைஅதற்காக அது கிட்டவில்லை என்றால் கிடைத்ததை எட்டி உதைத்து ஓடி விட வேண்டுமா..? விருப்பமான உறவுக்கே போராடவில்லையென்றால் எப்படி..? ஆறாம் அறிவை வைத்து பூஜையா செய்ய வேண்டும்..? அவரவர் படிப்புக்கு, தொழிலுக்கு அவ்வளவு வலுவாக போராடி, வெற்றியை கண்டவர்கள், கணவன், மனைவி உறவில் தளர்கின்றனர் என்றால்..? 

போராட மாட்டேன்விட்டு கொடுக்க மாட்டேன், மனம் விட்டு பேச மாட்டேன், எப்படி முடியும்..? கசப்பை ஏற்று கொள்ளும் பக்குவமும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் மட்டுமே உறவில் வெற்றி கிட்டும். அப்படி தானே இங்கு பல தலைமுறைகள் வெற்றியை அடைகின்றன. அடுத்த தலைமுறை பாதுகாப்பான கூட்டில் வளர்கின்றது.  

இங்கு வெற்றிக்கு எந்த சுலபமான வழியும் இல்லை. இதில் ஆண், பெண் என்பெதெல்லாம் இல்லை. விட்டு கொடுக்காத ஆண்கள் இல்லாமல் இல்லை. என்ன பெண்களை விட, அவர்கள் குறைவு அவ்வளவு தான். சுயமரியாதையை காவு கேட்கும் உறவுக்கும், அடிமையாய் நடத்தும் உறவுக்கும், புரிதல் இல்லா உறவுக்கும், விட்டு கொடுக்கா உறவுக்கும் ஆயிரம் வித்தியாசம் உண்டு

பிடித்தம், விருப்பம், காதல் எல்லாம்  மற்றவரை முழுமையாக புரிந்து கொள்வதற்கான கருவிகளா என்ன..? அது ஒரு உணர்வு அவ்வளவு தான். அது இல்லாமல் வாழும் மனிதர்களும் கோடி உண்டு

மனிதன் மனமும், உடலும் அவனுக்கே புரியாத பேரதிசயம். உடல் உறுப்புகள் அதன் வேலையை சரியாக செய்யும் போது, மூளை தான் யோசிக்கிறேன் என்று குரங்காகிறது. துடிக்கும் இதயத்துக்கும், மூளைக்கும் பாலம் அமைத்து, ஒன்றோடு ஒன்றை பிணைத்து, கட்டுப்படுத்தி, அதிகாரம் செலுத்தி, அழ வைத்து, காயப்படுத்தி.. ஹப்பா.. போதுமா..? இங்கு இருவரும் இப்படி தான் இருந்தனர். 

யுவராஜ் வெடித்தான் என்றால் ஜமுனா.. ம்ம்ம்.. அவள் என்ன சொல்ல..? அவளே அவள் மனதை சொன்னால் தான் உண்டு..? அமைதியான அழுத்தம் நிறைந்தவள். ஆர்ப்பாட்டத்தை உடைத்து விடலாம். இவளை என்ன செய்ய..?

அடுத்த நாள் விடியல் அதன் வேலையை சரியாக செய்ய, ஜமுனா அலாரம் அடித்தது. யுவராஜ் அந்த பக்கம் திரும்பி படுத்திருந்தவன், மனைவி நடமாட்டத்தை உணர்ந்து கொண்டான். அவளும் தூங்கவில்லை தெரியும். இன்று கல்லூரி உண்டு. இவனும் ஆபிஸ் செல்ல வேண்டும்

ஜமுனா குளித்து வந்தவள், யுவராஜை பார்த்து வெளியே சென்றாள். தூக்கம் இல்லாததில் தலை கனத்தது. முதல் வேலையாக பூஜை ரூம் சென்று வந்தாள். பால் வந்திருக்க, காபி கலந்தாள். “நைட் தூங்கலையா ஜமுனா..?” காமாட்சி பேத்தியை கண்டுகொண்டார்

படிச்சுட்டு இருந்தேன் பாட்டி, அவருக்கும் ஆபிஸ் வேலை..” சேர்த்தே சொன்னவள், கணவனுக்கும் காபி எடுக்க, யுவராஜ் முகம் துடைத்து வந்தான். சோபாவில் அமர, காபியை நீட்டினாள். அவள் கொடுத்த பணத்தில் தானே..? தோன்றாமல் இல்லை. வாங்கி கொண்டான். நீட்டி விட்டாலும் கொஞ்சம் பயத்துடன் நின்றிருந்த ஜமுனாவிற்கு கணவன் வாங்கவும் நிம்மதியானது

காமாட்சிக்கு சத்து மாவு கஞ்சி அடுப்பில் இருக்க, அங்கேயே நின்று குடிக்க, வெளியே காமாட்சி பேரனிடம், “நைட் எல்லாம் படிச்சு, வேலை பார்த்து உடம்பு கெடுத்துக்காதீங்க. நேரத்துக்கு தூங்குங்க, பொழுதுக்கும் வேலை இருக்கு, இரண்டு பேர் முகமும் அவ்வளவு சோர்ந்து போச்சு..” என்று சொல்லி கொண்டிருக்க, ஜமுனா அவருக்கு கஞ்சி ஆற்றி கொடுத்தாள்

ஜீவிதாவும் எழுந்துவிட, யுவராஜ் மகளை கவனிக்க சென்றான். அடுத்த நிமிடங்கள் காலை நேரத்திற்கே உண்டான பரபரப்புடன் கழிந்தது. யுவராஜ், ஜீவிதா கிளம்பி உணவுக்கு அமர, காமாட்சி பார்த்து கொண்டார். ஜமுனாஇன்று அவளுக்கு சீக்கிரமே செல்ல வேண்டும் என்பதால், உணவை கையில் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள். அவள் அழுது வீங்கிய முகம் கணவனை இன்னும் தளர்த்தியது

ஆகாஷ், ஆர்த்தி வந்து காமாட்சியை பார்த்து சென்றனர். யுவராஜ் அவர்களை சாப்பிட சொல்லி மகளுடன் கிளம்பிவிட்டான். அருணாச்சலம் மதியம் போல யுவராஜ்க்கு போன் செய்து, “குலதெய்வ கோவில்ல பூஜை..” என்றார்

முன்பே சொல்லியிருந்தார் வேண்டுதல் என்று. கடன் பிரச்சனை எல்லாம் தீர்வதற்கு. நிலத்தை மீட்டு கூட மூன்று வருடம் ஆகிவிட்டது. அப்போதே வைத்திருக்க வேண்டும், ஆனால் பேரன், பேத்தி  குடும்பமாக இல்லாமல் தனியாக நிற்கின்றனரே..? அந்த கவலை இப்போது தீர்ந்துவிட, நாள் பார்த்து  பூஜைக்கு சொல்லிவிட்டார்

இவர்கள் எல்லாம் வந்து செல்ல ஏதுவாக, வார இறுதியை தான் தேர்ந்தெடுத்திருந்தார். அதன்படி எல்லோரும் கிளம்ப வேண்டும். காமாட்சி இரவு ஜமுனாவிடம் இது பற்றி பேச, அவளுக்கும் இது முன்பே தெரியும் என்பதால், அந்த வரை இறுதியில் குடும்பமாக கிளம்பிவிட்டனர். ஆகாஷ், ஆர்த்தி எல்லாமும்

காரில் ஆகாஷ் அண்ணனுடன் முன்னால் அமர்ந்து கொள்ள, பெண்கள் பின்னால். ஜீவிதா குரல் ஒலித்து கொண்டே இருந்தது. “இப்படி குடும்பமா போறது கூட நல்லா இருக்கு..” காமாட்சி சொன்னார். இடையில் டீ, உணவுக்கு என்று நிறுத்தி நிறுத்தி தான் சென்றனர்

இரவு இவர்கள் சென்று சேர, தாரணி ஓடி வந்தாள். ஜெயலக்ஷ்மி குடும்பமும் இருக்க, இளையவர்கள் முறையாக அவர்களிடம் பேசி உள்ளே சென்றனர். யுவராஜ், கேசவன் வண்டியை பார்க்க செல்ல, தயாநிதி போன் வந்ததில் வெளியே  நின்றார்

காமாட்சி வீட்டுக்குள் நுழைந்ததும் கால் நீட்டி தரையில் அக்காடா என்று அமர்ந்தார். அவ்வளவு ஆசுவாசம். அவர் வீடல்லவா இது. “கிழவி வந்தவுடன் காலை நீட்டிட்டா..?” அருணாச்சலம் சொன்னார். மனைவி வந்த பின் தான் அவருக்குமே வீடு நிறைந்த உணர்வு

என்னயவே பார்த்துட்டு இருப்பீங்களா..?” காமாட்சி நொடித்து கொண்டார்

பின்ன உங்களை பார்க்காம, தாத்தாவோட  அத்தை பொண்ணு ராக்கம்மா பாட்டியை பார்க்க சொல்லலாமா..?” என்றான் ஆகாஷ் கிண்டலாக

அதெல்லாம் பார்த்துட்டு தான் இருக்காங்க, ஈவ்னிங் கூட மாமா உங்களுக்கு பிடிக்குமே இந்தாங்கன்னு சர்க்கரை வள்ளி கிழங்கு வந்துச்சு..”என்றாள் தாரணி

ஓஹொன்னானா.. கதை அப்படி போகுதா..?”  காமாட்சி கட்டிய கொண்டையை அவிழ்த்து திரும்ப முடிந்தார்

எதுக்கு இப்போ கட்டுன கொண்டையை உதறி திரும்ப முடிஞ்ச..?” ஆகாஷ் கேட்க

இவங்க பாஷையில இது தான் போர் முரசு..” தாரணி விளக்கம் சொன்னாள்

அப்படி.. போர்..”

ஆமா போர்..” இருவரும் மாற்றி  மாற்றி சொல்ல

டேய் கம்முனு இருங்கடா..” அருணாச்சலம் அதட்டியவர், ‘வந்ததும் கிழவி கையால பத்து போட வைச்சுடுவாங்க போல..’ என்று முணுமுணுத்தார்

இதுக்கு தான் நான் இல்லாம நிம்மதியா இருப்பேன்னு சொன்னீங்களா..? கிழவனுக்கு நடக்கவே தெம்பில்லை, இதுல அத்தை மக கையால் கிழங்கு கேட்குதோ..? நாளைக்கு அந்த ராக்கம்மாக்கு இருக்கு, திண்ணை எப்போ காலியாகும்ன்னு காத்து கிடந்தாளாக்கும்..?”

உங்க புருஷன் வேணான்னு சொல்ல வேண்டியது தானே..? எதுக்கு வாங்கினார்..?” தாரணி கேட்டாள்

அத்தை மக பாசம் இன்னும் பொங்குது போலபல்லை இளிச்சு வங்கியிருப்பார், போறதுக்குள்ள கிழங்கு சாப்பிட பல்லு இல்லாம பண்ணிடுறேன்..” காமாட்சி கடைசி வார்த்தைகளை, வீட்டுக்குள் வந்த தயாநிதியை பார்த்து  வாய்க்குள் அமுக்கி கொண்டார்

தயாநிதி பின்னால் யுவராஜ், கேசவனும் வந்துவிட, ஒரு மாதம் கழித்து குடும்பமாக சேர்ந்ததால், வெகு நேரம் பேச்சு நீண்டது. “காலையிலே கோவிலுக்கு போகணும்.. தூங்க போலாம்..” காமாட்சி சொன்னவர், ஜமுனாவை பார்த்தார். இங்கேயே தானே தங்குவாள்..? அவருக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் இந்த சந்தேகம் இருந்தது

யுவராஜிற்கோ அப்படி எதுவும் இல்லை போல, எழுந்து ஜமுனா  மடியில் தூங்கிவிட்டிருந்த மகளை, தூக்கி கொண்டவன், “பேக் எடுத்துட்டு வா..” என்று முன்னால் சென்றான். ஜமுனா மூச்சை இழுத்துவிட்டு அவனுடன் சென்றாள். மொத்த குடும்பமும் நிம்மதியுடன் கலைந்தது. ஜெயலக்ஷ்மி குடும்பம் கிளம்பிவிட, மற்றவர்களும் தூங்க சென்றனர்

Advertisement