Advertisement

யுவராஜ் குளித்து டவலுடன் வந்தவன், தன்னிடம் தாவிய மகளிடம், “அப்பா டிரஸ் போட்டுகிறேன் இரு பாப்பா..” என்றான். மகள் உதட்டை பிதுக்க, “என்ன..?” என்றான் மனைவியிடம் உடைய எடுத்து கொண்டே

ஸ்கூலுக்கு போக கேட்டேன்..” ஜமுனா சொல்ல

என்ன பாப்பா ஸ்கூல் போகணும் தானே..? பாரு அப்பாவும் ஆபிஸ் கிளம்பிட்டேன்நீயும்  கிளம்பணும் சரியா..?” என்றான் அப்பாவின் குரலில். மகள் அப்பாவின் சப்போர்ட் கிடைக்காததில், “ம்ம்..” என்று முணுமுணுத்தாள்

குட்.. பாட்டி ஹால்ல இருக்காங்க பாரு ஓடு..” என்று மகளை அனுப்பிவிட்டவன், கதவை லேசாக மூடி, “இதென்ன அவகிட்ட போய் ஸ்கூல் போறியான்னு கேட்கிற..? அவ போகணும்ன்னா அவகிட்ட கேட்க கூடாது, போகணும் சொல்லு..” என்றான் சட்டையை அணிந்து கொண்டே மனைவியிடம்

ம்ம்..” ஜமுனா முணுமுணுத்தவள், அந்த சட்டையை கண்டு கொண்டாள். ஆகாஷ் திருமணத்தின் போது அவள் எடுத்தது. அவள் பார்வையில் கணவன் புருவம் தூக்கினான். ஜமுனா, “சாப்பிட வாங்க..” என்று ஹாலுக்கு வந்துவிட்டாள்.

யுவராஜ் சாப்பிட வரும் போது, அங்கு ஆகாஷ், ஆர்த்தி  இருந்தனர். “சாப்பிட்டீங்களா..?” இருவரிடமும்  கேட்டபடி, அமர்ந்தான். அவர்கள் சாப்பிட்டோம் என, ஜமுனா  இருவருக்கும் ஸ்வீட் கொடுத்தாள். முதல் நாள் என்பதால், பால் பாயசம் செய்திருந்தாள்

நல்லா இருக்குக்கா.. மில்க் மெய்ட் போட்டீங்களா..? எனக்கு ரொம்ப பிடிக்கும்..” ஆர்த்தி அவளே இன்னும் எடுத்து குடிக்க, ஜமுனா சிரித்தபடி கணவனுக்கு உணவு வைத்தாள். “பாட்டி..” யுவராஜ் குரல் கொடுக்க

இதோ வந்துட்டேன்..” அவர் உணவு முடித்திருந்தாலும் பேரனுடன் அமர்ந்தார். ஜீவிதா இன்னும் முகம் தூக்கி வைத்து அமர்ந்திருக்க, யுவராஜ் அவளை சமாதானம் எல்லாம் செய்யாமல், “சாப்பிடு பாப்பா, நேரம் ஆச்சு..” என்றான்

ஜீவிதா இட்லி சாப்பிட, யுவராஜும் இட்லியே சாப்பிட்டான். ‘முதல்ல ஸ்வீட் சாப்பிட்டிருக்கலாம் இல்லை..’ ஜமுனா கணவனை ஆதங்கத்துடன் பார்த்தவள், இறுதியில் அவன் கையில் பாயசத்தை வைத்து சென்றாள். எல்லோரும் இருக்கமகளுக்கு கொடுத்து, தானும் சாப்பிட்டான்

ஆபிஸ், பள்ளிக்கு  நேரம் நெருங்க, அப்பாவும் மகளும் கிளம்பினர்.  ஜமுனா அவன் கையில் பேக் செய்த உணவை கொடுக்க, மறுக்க வந்தவன், வாங்கி கொண்டு,  “பாப்பாவை நான் டிராப் பண்ணிட்டு போயிடுறேன், விடும் போது நீ கூப்பிட்டுக்கோ..” மனைவியிடம் சொன்னவன், எல்லோருக்கும் சொல்லி கொண்டு மகளுடன் கிளம்பினான்

பக்கத்திலே ஸ்கூல் என்பதால் மகளை விட்டவன், அப்படியே ஆபிஸ் கிளம்பிவிட்டான். நேற்றே போய் எல்லாம் பார்மாலிட்டியும் முடித்திருந்தனர். ஆகாஷ், ஆர்த்தியும் ஆபீஸ் கிளம்பிவிட, காமாட்சி டிவியில் இருக்க, ஜமுனா பால்கனியில் அமர்ந்து கொண்டாள்

இப்படி ஒரு குடும்பமாக இருப்பது அவளுக்கு பிடித்தது. அவளின் படிப்பை வைத்து ஆரம்பித்தது, அதனாலே முடிவுக்கு வரும் நிலை. இங்கு வர வேண்டும் என்ற நினைத்ததும் மகளை, கணவனை கொண்டே. இன்னும் கணவனுடன்  தீர்க்கப்படாத விஷயங்கள் இருந்தும், ஒன்றாக இருக்க போகிறோம் என்ற மகிழ்ச்சி  நிஜம். கணவனுடன் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற ஆசையும் தான்.

ஆனால் கணவன்..? நேற்றிரவின் கோவம்..? இப்படி தான் இருப்பாரா..? தெரியவில்லை. கேட்டு தெரிந்து கொள்ளும் நிலையிலும் கணவன், மனைவி இல்லை. என்னோட நியாயம் அவருக்கு இப்படி தெரியுதா..? எல்லாம் உடனே மாறும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை

இவர்களின் வாழ்க்கையை யோசித்து பார்க்க, திருமணமான புதிதில் வாழ்ந்தது எல்லாம் எதோ கனவு போல இருந்தது. ஏன் ஜீவிதா பிறந்து சில மாதங்களும் நிறைவாக சென்ற வாழ்க்கை தானே..? 

அதுவும் கருவுற்ற முதல் சில மாதங்களும், குழந்தை பிறந்த பிறகும் மனைவியை நெருங்க முடியாமல் அப்படி ஏங்கியவன் தானே கணவன், இப்போது அவனை பார்த்தால் அப்படி எல்லாம் ஒன்றுமே தெரியவில்லை

இந்த மூன்று வருடங்களும் கூட அப்படி தானே, மடியில் படுத்து கொள்வது தவிர வேறென்ன..? ஏன் சில நேரங்களில் இவளே கொஞ்சம் பயந்திருக்கிறாள், எங்கே நான் இருக்கும் மனநிலைக்கு நெருங்கி விடுவாரோ என்று. ஆனால் கணவன் அப்படி ஒன்றும் செய்ததில்லை

ஏன்..?’அடிக்கடி மனதில் தோன்றும் கேள்வி இப்போதும். மனைவிக்கு தெரியாதா கணவனின் ஏக்கம், துடிப்பு எல்லாம்..? அவன் விலகல் ஜமுனாவை  மனைவியாக யோசிக்க வைக்காதா..? எல்லாம் சேர்ந்து தானே திருமணமும்..? கேள்வி தோன்றாமல் இருக்கவே முடியாதே..? 

சில மாதங்களுக்கே  தவித்தவன், வருடங்கள் விலகி இருக்க முடியுமா..? ஆச்சரியத்துடன், அவ்வளவு கோவமா என்ற கேள்வியும்..? நேற்றிரவு கணவன் பேசியது வைத்து பார்த்தால் கோவம் மட்டுமில்லை, என்மேல அவருக்கு வருத்தமும், வலியும் இருக்கு. என்னை போலவே..? 

விருப்பம், பிடித்தம், காதல் என்றால், எல்லாம் தான் இருக்கும் போல. எந்நேரமும் காதலித்து கொண்டே, கொஞ்சி கொண்டே இருக்க இதென்ன எழுதி வைத்து வாழும் வாழ்க்கையா..? எல்லா உணர்வுகளும் கொண்டவன் தானே மனிதன். அதை வெளிப்படுத்தவும் அவனுக்கான உறவு இருக்கிறதே..? 

நாம் நாமாய் மட்டும் இருக்கும் உறவு. அங்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை அதிகம், ஏமாற்றமும் அதிகம். ‘அந்த ஏமாற்றம் தரும் வலியும் எத்தனை பேர் சுலபமாக கடந்து விடுகிறார்கள், எங்களால் மட்டும் ஏன் அப்படி முடியவில்லை. அதிகமாக கடினமாக்கி கொள்கிறோமா..?’ அவளுக்கே பல கேள்விகள். வயது கூடும் முதிர்ச்சியும் அனுபவங்களும் தானே மனிதனை யோசிக்க வைக்கும்.

இவளும் யோசிக்கிறாள்..? யோசிக்காமல் சென்னை வரவில்லை. ஆனால் இன்னும் என்னமோ உறுத்தல், அவளாலும் கணவனை நெருங்க முடியவில்லை. சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உண்டு. ஆனால் நினைப்பது எல்லாம் வாழ்க்கையில் தெளிக்க முடியுமா..? 

யுவராஜ் போல இவளும் ஒதுங்கியே இருந்து கொண்டாள். மகள், உணவு, தூக்கம், பாட்டியுடன் பேச்சு.. யுவராஜின் காலை, இரவு வேளை இப்படி தான். அதிகமான பேச்சுவார்த்தை மனைவியிடம் இல்லை. அந்த வாரம் முழுதும் அப்படியே தான் இருந்தான்.

இவளும் இந்த திங்கள் முதல் கேம்பஸ் செல்ல வேண்டும். வார இறுதியில் ஆர்த்தியுடன் சென்று, ஷாப்பிங் செய்தாள். மகள் அப்பாவுடன் ஆபிஸ் சென்று  வந்தாளாம்..? ‘என்னை கூப்பிட்டு போகல..’ ஜமுனா கணவனை உர்ரென்று பார்த்து சென்றாள்

இவள் கேம்பஸ் சென்ற பிறகு ஜீவிதா எப்படி என்று பேசினர். தந்தை மகளை காலையில் விட்டால், வரும் போது அங்கேயே வேன் பேசிவிட்டனர். ஜமுனா அவள் ஸ்கூட்டியில் கேம்பஸ் செல்வதாக சொன்னாள்

கேம்பஸ் செல்லும் முதல் நாள் இன்னும் சீக்கிரமே எழுந்து, வேலையை முடித்து வைத்தாள். காமாட்சிக்கு வேலை இருக்க கூடாது என்பதால் முடிந்தவரை சமையல் எல்லாம் முடித்து வைத்தாள். ஜீவிதாவை எப்போதும் போல யுவராஜ் பார்த்து கொள்ள, ஜமுனா கிளம்பி வந்தாள்

சுடி, டாப். தலைக்கு குளித்தது, உச்சியில் கிளப் குத்தி, ப்ரீ ஏர் விட்டு, சாமி கும்பிட்டு குங்குமம் வைத்து கொண்டாள். எடுத்து செல்லும் உடமைகளாய் சேகரித்தாள். உணவு எடுத்து கொண்டாள். பரபரப்பாய் அங்கும் இங்கும் நடக்க, கணவன் கண்கள் அவள் மேலே

காமாட்சி,  காலில் விழுந்த பேத்திக்கு கையில் பணம் கொடுத்தார். ஆகாஷ், ஆர்த்தி இருவரும் சிறிய கிப்ட் கொடுத்தனர். ஜீவிதா அம்மாக்கு முத்தம் கொடுத்தாள். இறுதியாக இவனிடம் வந்தவள், “கிளம்புறேன்ங்க..” என்றாள். யுவராஜ்க்கு மூன்றாம் மனிதர் போல விடை கொடுக்கும் இந்த தூரம் அறவே பிடிக்கவில்லை. ஆனாலும் தலையசைத்தான்

இதுவரை மனைவி அவனிடம் பணம் பற்றி பேசவே இல்லைஅவன் கொடுத்த பணத்தில் எடுப்பதாகவும்  தெரியவில்லை. ஆரம்பித்த புள்ளி இன்னும் அப்படியே இருந்தது. ஜமுனா கணவனை பார்த்தவள், “நான்.. எனக்கு பென் இல்லை.. கொடுங்க..” என்று கணவனிடம் கை நீட்டினாள்

அவன் பேக்கெட்டில் இருக்கும் பென் பார்த்து தான் கேட்டாள். ஏதாவது கணவனிடம் இருந்து வாங்க வேண்டும். இது யுவராஜ்க்கும்  புரிந்திருக்க வேண்டும். எடுத்து கொடுத்தான். ஜமுனா கிளம்பிவிட்டாள். யுவராஜ் மகளுடன் பின்னாலே சென்று பார்த்து கொண்டான்.

நாட்கள் இப்டியே சென்றது. கொஞ்சம் வேகமாகவும் சென்றது. அவரவர் வேலை அதிகம். மாதம் நெருங்க, ஊரில் இருந்து வந்து சென்றனர். ஆகாஷ், ஆர்த்தி ஊருக்கு சென்று வர, இவர்கள் குடும்பம் நகர முடியவில்லை. ஜமுனா, “ நீங்க பாப்பா, பாட்டியோட போய்ட்டு வாங்க..” என்று சொல்லி பார்த்தாள்

யுவராஜ் பாட்டியை மட்டும் ஒரு முறை தம்பியுடன் காரை கொடுத்து அனுப்பி வைத்து, மகளை தான் பார்த்து கொண்டான். மனைவியை தனியே விட்டு செல்லவில்லை. இதில் மனைவி உள்ளம் மகிழ்ந்தாலும், பணம் அவர்களுக்குள் புகைந்து கொண்டே இருந்தது. முக்கியமாக யுவராஜ் மனதில்

அது அடுத்த மாதம், ஜமுனா வாடகை தவிர்த்து, எல்லாம் அவளே பார்த்து கொண்டதில் வெடித்தது. பால், பேப்பர், வேலை ஆளுக்கு, மளிகை, காய் வரை எல்லாம். கணவன், மனைவிக்கு இடையில் ஈகோ மட்டுமில்லை, பணமும் வர கூடாது.

 இரவு அறையில் மகள் தூங்கவும், “இன்னும் என்னை என்ன தான் பண்ணலாம் இருக்க..?” என்றான். ஜமுனா புரியாமல் பார்க்க, “என்னோட இருக்க, வீட்டு செலவு நீ பார்க்கிறஉனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது ஜீரோ மாதிரியா..? இல்லை நீ கையாலாகாதவன் தான்னு எனக்கு அடிச்சு சொல்றியா..?” என்றான் ஆவேசமாக

உங்ககிட்ட பணத்தை பத்தி பேச எனக்கு பிடிக்கல..” என்றாள்  ஜமுனா

என்ன சொல்ற நீ..? நமக்குள்ள பணத்தை பத்தி பேசாம எப்படி முடியும்..?”

அதை வச்சு தான் நமக்குள்ள இவ்வளவு பிரச்சனையும், திரும்ப நான் உங்ககிட்ட பணம் கொடுங்கன்னு வந்து கேட்பேனா..?”

சரி கேட்காத.. உன் அக்கவுண்ட்ல இருக்க பணத்தை எடுத்து பண்ணா என்ன..? நானும் தானே இந்த வீட்ல சாப்பிடுறேன்..”

ஏன் நான் உங்களுக்கு செய்ய கூடாதா..?”

செய்டிநான் பொணமா படுத்ததுக்கு அப்பறம் செய்டி, இப்போ என் பணத்தை எடு..” என்றான் அப்படி ஒரு ஆக்ரோஷமாக

மாமா..” கூவிவிட்ட ஜமுனா கண்களில் கட்டுப்படுத்தவே முடியாத கண்ணீர். பாய்ந்து அவனை கட்டி கொண்டு அப்படி ஒரு அழுகை

யுவராஜ் இளகவே இல்லை. அவனால் உண்மையிலே முடியவில்லை. கோவப்பட கூடாது, பேச கூடாது, சண்டை கூடாது, மனைவி வேண்டும், மகள் வேண்டும், குடும்பம் வேண்டும் உயிர் வரை ஆசை

ஆனால் நடப்பது எல்லாம் இன்னும் இன்னும் அந்த தூரத்தை அதிகப்படுத்துகிறதே..? அவனே தளர்ந்து போனான். ஜமுனாவை விலக்கி அமர்ந்துவிட்டான்

Advertisement