Advertisement

கேளாய் பூ மனமே 17

இருவரும் நேருக்கு நேர் நிற்க, கணவனின் அனல் மூச்சு காற்று மனைவி நெற்றி மேல் மோதி, அவன் கோவத்தின் அளவை சொன்னது. “நான் இன்னும் அதே கையாலாகாத யுவராஜ் தான். இப்போ எந்த நம்பிக்கையில நீ என்கிட்ட வந்திருக்க..” கணவன் கேள்வி மனைவியை குத்தி காயப்படுத்தியது

பதில் சொல்லுடி..” யுவராஜ் இன்னுமே பொங்கி வரும் கோவத்தை அடக்குவது விறைத்த தோள்களில் புரிந்தது.

“உங்களுக்கு என்னை புரிய வைக்கணுங்கிற இடத்துல என்னை கொண்டு வந்து நிறுத்தாதீங்க மாமா, ப்ளீஸ்.. மத்ததை விட இது தான் எனக்கு ரொம்ப வலிக்குது..” ஜமுனா துக்கத்துடன்  சொன்னாள்

யுவராஜ் சட்டென்று சிரித்து தள்ளி நின்றான். ஜமுனா அவனை பார்க்க, “மாமா.. மாமா.. ம்ம்.. முன்ன ஒரு முறை கூட ஷெட்டுல வச்சு சொன்ன இல்லை, அப்போ அதை உணரல, அப்பறம் எனக்கு அது புரிஞ்சது..” என்றவன், “அதென்ன இப்போ மட்டும் மாமா..?” என்றான்

ஜமுனா முகம் திருப்ப, கன்னம் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தவன், “நான் உன்கிட்ட சண்டை போடும் போது மட்டும் ஏண்டி மாமா சொல்ற..?” என்றான் விடாமல்

நீங்க தான் சண்டை போடுறீங்க..?  நான் உங்ககிட்ட சண்டை போடலையே..?” என்றாள் பெண் அவன் கையை விலக்கி

ஓஹ்.. ஆமா இல்லை, நீ என்கிட்ட சண்டை போடறதில்லை இல்லை, அவ்வளவு கூட டாக்டர் மேடமுக்கு நான் ஒர்த் இல்லை போல..”

என்னால உங்ககிட்ட சண்டை போட முடியாது மாமா, என்னை ஹர்ட் பண்ணனும்ன்னு உங்களை நீங்க பேசாதீங்க, எனக்கு பிடிக்காது..” என்றாள் மனைவி தீர்க்கமாக

ஆனா என்னை, நீ வேஸ்ட்டுடான்னு  பீல் பண்ண வைக்க மட்டும் உன்னால முடியும் இல்லை..” என்றான் கணவன்

நீங்க இவ்வளவு பேச வேண்டியதே இல்லை, என்னை புரிஞ்சுகிறது உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா மாமாநான் ஆசைப்பட்ட படிப்பை படிக்க போறேன்ற ஆர்வம் கூட குறைஞ்சு போச்சு..”

ம்ஹ்ம்.. இதை என்னால உணர முடியும், மூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி என்னை இதே இடத்துல நிக்க வைச்சு அடிச்சா..” என, ஜமுனா புரியாமல் பார்த்தாள்

நான்  நைட் பகலும் ஓடி ஓடி உழைச்சு, இருக்குற பணத்தை எல்லாம் கொட்டி, அவ்வளவு பயத்தோட செஞ்ச ப்ராஜெக்ட் செலக்ட் ஆனப்போ, என்னால ஒரு பர்சன்ட் கூட சந்தோஷ பட முடியல, அவ்வளவு அழுத்தம், பிரஷர், வெறுமை, வெற்றி எல்லோருக்கும் எல்லா நேரமும் கிடைச்சுடறதில்லை, போராட்டம் தான். ஆனா அப்படி போராடி கிடைச்ச வெற்றியை அனுபவிக்கவும் ஒரு கொடுப்பினை வேணுங்கிறது அன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சது.. உனக்கு அது வேண்டாம் விடு..” கசங்கி போன முகத்துடன் குரல் கமற சொன்னவன், சட்டென விலகி மகள் பக்கத்தில் கவிழ்ந்து படுத்துவிட்டான்

ஜமுனா கணவன் முதுகை பார்த்து அமர்ந்துவிட்டாள். இருவருக்கும் தொண்டை இறுகி வலித்தது. என்னமோ அழ கூடாதென்ற வைராக்கியம். தங்கள் வலிகளை தங்களுக்குள்ளே புதைக்க முயன்றனர். அன்றய சூழ்நிலையில் ஜமுனாவிற்கு அவள் வருத்தம், ஏமாற்றம். கணவனுக்கு வேறு வகையில் ஏமாற்றம், அழுத்தம்

இருவருமே அவரவர் இடத்தில் காயப்பட்டுள்ளோம்..’ ஜமுனாவிற்கு புரிந்தது. ஆனால் இதற்கு என்ன தீர்வு..? பேசினால் சண்டை, கோவம் என்பதை கடந்து, இருவருக்கும் வலி, துக்கம் தான் மிச்சம். இப்போது போல. இனி இப்படி தான் எங்கள் வாழ்க்கை இருக்குமா..? அது வேறு பயத்தை கொடுத்தது

இருவரும் விடை தெரியாத கேள்வியுடன் அந்த இரவை கழிக்க, அடுத்த நாளில் இருந்து அவர்கள்  குடும்பத்திற்கான ஓட்டம் ஆரம்பித்தது. ஜமுனா காலையிலே எழுந்து  டிபனுடன்மதிய உணவையும் செய்ய ஆரம்பித்தாள். கணவனுக்காக. அவன்  ஆபிஸ் இங்கிருந்து தூரமே. மதிய உணவுக்கு வர முடியாது

இத்தனை வருடம் தான் ஹோட்டல் உணவு. இனி வேண்டாம், யோசித்து ஜெகனிடம் சொல்லி, நேற்றே லன்ச் பாக்ஸும் வாங்கி வைத்திருந்தாள். பார்த்திருந்த வைஜெயந்தி, ஜெயலக்ஷ்மி மகிழ்ந்தது வேறு விஷயம்

காமாட்சியும் அவரின் பழக்கப்படி சீக்கிரமே எழுந்து வந்தவர், பேத்திக்கு உதவிகளை செய்தார். ஜமுனா நன்றாக சமைப்பாள் என்பதால் பிரச்சனையில்லை. இங்கு இவர்கள் வேலை நடந்து கொண்டிருக்க, பெட் ரூமில் ஜீவிதா சத்தம். காமாட்சியிடம் அடுப்பை பார்த்துக்க சொல்லி ரூம் சென்றாள்

அங்கு மகள், அப்பாவின் நெஞ்சு மீது ஏறி அமர்ந்து குதித்து கொண்டிருந்தாள். யுவராஜ் தூக்கத்திலே, மகளை கெட்டியாக பிடித்து, “பார்த்து பாப்பா..” என்றான்

ஜீவி.. இதென்ன..? அப்பா மேல இருந்து இறங்கு..” ஜமுனா அதட்டி, மகளை தூக்க போக, அவள் வேகமாக அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு படுத்துவிட்டாள்

பாப்பா.. பாத்ரூம் போய்ட்டு, பிரஷ் பண்ணிட்டு வரலாம் வா..” ஜமுனா மகளை தூக்க போக, “மாட்டேன்.. அப்பா கூட..” என்றாள் பெண்

யுவராஜ்கண் மூடியே இருக்க, “பாப்பா.. அப்பா தூங்கட்டும்என்று ஜமுனா அவளை தூக்க, “மாட்டேன்.. ப்பா.. ப்பா..” என்று அலறினாள் மகள்

யுவராஜ் எரிந்த கண்களை திறந்துமகளை அணைத்து கொண்டவன், “நான் பார்த்துகிறேன்.. நீ போ..” என்றான்

குட்டி கழுதை அப்பாவை விட்டு வர மாட்டியா..?” ஜமுனா அவள் தலையில் லேசாக கொட்டி சென்றாள். “ப்பா..” மகள் பெரிதாக கத்தி மூக்கு உறிஞ்சினாள். யுவராஜ் மனைவியை முறைத்து, மகள் தலையில் தேய்த்து சமாதானம் செய்தான்

நான் சின்னதா தான் கொட்டினேன், உங்க பொண்ணு தான் பெருசா சத்தம் கொடுக்கிறா..” ஜமுனா கடுப்புடன் சொல்லி சென்றாள். “அப்பா இருந்துட்டா இவளுக்கு ஓவர் செல்லம்..” பாட்டியிடம் முணுமுணுப்பு வேறு

பொம்பிளை பிள்ளைங்க அப்படி தான் ஜமுனா, அப்பா செல்லம், என் கொள்ளு பேத்தியும் இப்போ தானே அப்பாகிட்ட இருக்கா, அதான் விடாம ஒட்டிக்கிறா..” காமாட்சி சொல்ல, ஜமுனாவிற்கு அது புரியாமல் இல்லை

அந்த உறுத்தல் கணவன், மனைவிக்குமே உண்டு தானே..? இருவருக்கும் இன்னும் தீர்க்கப்படாத விஷயங்கள் இருந்த போதும்மகளை அதிகம் மனதில் வைத்து தானே இந்த ஏற்பாடும்

ஜமுனா இருவருக்கும் காபி, சத்து மாவு கலக்கினாள். மேலும் சில நிமிடங்கள் சென்றே, அப்பாவும் மகளும் முகத்தை துடைத்த வண்ணம் ஹாலுக்கு வந்தனர். ஆகாஷ் மூலம் பால், நியூஸ் பேப்பர், வீட்டு வேலை உதவிக்கு ஆள் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தனர். ஜமுனா இருவருக்கும் அவரவர் கப்பை கொடுத்தாள்

யுவராஜ் நியூஸ் பேப்பரை எடுக்க, ஜீவிதா ஆறியிருந்த சத்து மாவு கஞ்சியை  வேகமாக குடித்து முடித்தவள், அப்பாவின் மடி மேல் அமர்ந்து தானும் பேப்பர் பார்க்க ஆரம்பித்தாள். மடியில் மகள், கையில் பேப்பர், டீபாய் மேல் இருக்கும் காபி என்று யுவராஜ் திணறினான்

பாப்பா.. இங்க பாரு, முயல்..” ஜமுனா கவனித்து குரல் கொடுக்க, முயலாம்மா..? ஜீவிதா வேகமாக இறங்கி அம்மாவிடம் ஓடினாள். ஜமுனா மகளை தூக்கி மேடை மேல்  அமர வைத்தவள், முள்ளங்கியை முயல் போல சிறிதாக கட் செய்து காட்ட, காமாட்சி சிரித்து பேரனிடம்  வந்தார்

நீங்க கஞ்சி குடிச்சிட்டீங்களா பாட்டி..?” யுவராஜ் அவர் அமர சோபாவை சரி செய்து கேட்டான்

முடிஞ்சதுப்பா..” என்றவர், “உங்க தாத்தாகிட்ட பேசணும், தோப்புக்கு போய் வந்திருப்பார்..” என்று அவர் பட்டன் போனை எடுத்தார்

யுவராஜ் காபியை காலி செய்துகிட்சனுக்கு வந்து கழுவி வைக்க, “ப்பா..” என்று மகள் காயை கிடாசிவிட்டு கையை தூக்கிவிட்டாள். ‘க்கும்.. இவ சும்மா இருந்தாலும், இவர் விட மாட்டார்..’ ஜமுனா உதடு சுழித்து கொண்டாள்

யுவராஜ் முகத்தில் மெல்லிதாக ஒரு இளக்கம். மனைவியை கடந்து மகளை கையில் அள்ளி கொள்ள, “அவ குளிக்கணும்..” என்றாள் கணவனிடம்

நான் பார்த்துகிறேன்..” யுவராஜ் மகளுடன் சென்றுவிட்டான். அவனுக்கும் இன்று சீக்கிரம் ஆபிஸ் போக வேண்டும். இரண்டு நாளாக சரியாக வேலையை பார்க்க முடியவில்லை. இரண்டு மீட்டிங் வேறு இருந்தது

மகளை குளிக்க வைத்து தூக்கி வந்தவன், “ஜமுனா..” என்று குரல் கொடுத்தான். என்னமோ அவன் இயல்பாக அழைப்பதே பெண்ணுக்கு பிடித்தது. மனதின் கனம் லேசாக இறங்குவது போல். டவலுடன் மகளை நெருங்க, யுவராஜ் குளிக்க சென்றான்

அதற்குள் மகளுக்கு உடை மாற்றி, கிளப்பி இருந்தவள், “இன்னைக்கு ஸ்கூல் போறியா..?” என்று கேட்டு கொண்டிருந்தாள். மகள், “மாட்டேன் மாட்டேன்..” என்று குரல் உயர்த்தினாள்

Advertisement