Advertisement

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக கவுன்சிலிங் நடந்து முடிந்து, ஜமுனாவிற்கு அவள் ஆசைப்பட்ட கைனகாலஜி படிக்க சீட் கிடைத்தது. எப்போதும் போல வேலூரில் அவள் படித்த கல்லூரியிலே கிடைக்கும் என்று மொத்த குடும்பமும் நினைத்திருக்க, சீட் கிடைத்ததோசென்னையில்..’ 

யுவராஜிடம் இப்படி என்று மனைவி சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவு தான். அவனுக்கு புரிந்தது இவள் தான் சென்னையை கேட்டு வாங்கியிருக்கிறாள் என்று. நல்ல ரேங்க் எடுத்திருந்தாளே. எப்போதும் முன்னிலையில் இருப்பதால் பலன் தான்

வீட்டினருக்கும் இது புரிய, அவ்வளவு மகிழ்ச்சி. ஜமுனா MD படிக்க கூட அவர்கள் இவ்வளவு கொண்டாடவில்லை. அப்போது தான் மொத்த குடும்பத்திற்கும் வேறொன்றும் புரிந்தது அது ஜீவிதாவை இந்த முறை ஜமுனா ரெஜிஸ்டர்ட் பிளே ஸ்கூலில் UKG சேர்த்து விட்டதற்கான காரணமும். அந்த பிளே ஸ்கூல் எங்கும் இருக்க, அப்படியே மாற்றி கொள்ளலாம்

ம்ம்ம்.. எல்லாம் யோசித்து தான் செய்திருக்கிறாள்..’ வீட்டினர் ஆச்சரியப்பட்டு மகிழ, கட்டிய கணவனுக்கோ வேறு எண்ணங்கள். கோவங்கள். சிறிதும் வெளிப்படுத்தவில்லை. மனைவி செய்வதை எல்லாம் பார்வை மட்டுமே. எங்கும் கருத்து இல்லை, இப்படிசெய், அப்படி செய் என்ற தலையீடு இல்லை

ஜமுனா சில முறை கணவன் பார்க்கவே செய்தாள் ஏதாவது சொல்வானா என்று. ம்ஹூம்.. முழு மௌனம். யாரோ மூணாவது பொண்ணுக்கு நடக்கிறது போல இருக்கார்.. மனைவியாக பொருமவே செய்தாள். என்னை இப்படி ஒதுக்கி வைத்ததும் நீ தானே..? யுவராஜ்  ஒதுங்கியே இருந்தான்.

வீட்டினரோ  படு ஜோராக வேலையை ஆரம்பித்தனர். ஜமுனாவின் கல்லூரி ஆரம்பிக்கும் முன் அவளை கணவனுடன் அங்கு செட்டில் செய்திட வேண்டும். பொன்னான வாய்ப்பல்லவா..? யுவராஜ் இப்போது இருக்கும் வீடு, அவள் கல்லூரிக்கு தொலைவு என்பதால், “அருகிலே பார்க்கலாமா..?” என்று தாத்தா தான் பேரனிடம் கேட்டார்

அவன் அமைதி மொத்த குடும்பத்திற்கும் கொஞ்சம் கெதக்கென்று தான் இருந்தது. அதனால் அருணாச்சலம் வழியே சென்றனர்யுவராஜ்  சரி என்றுவிட, ஆகாஷ் மனைவியுடன் அந்த ஏரியாவில் தான் இருக்க, அவன் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டிலே வீடு பார்த்து சொன்னான். யுவராஜ்  நேரில் சென்று பார்த்து முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தான்

ஜெயலக்ஷ்மி மகளின் தனி வீட்டுக்கான பொருட்களை வாங்கி குவித்து கொண்டிருந்தார். “ஏன் உங்களுக்கும் நான் இது எல்லாம் செய்ய முடியாதவனா தெரியுறேனா..?” என்றான் அத்தையிடம் மட்டும்

அப்படி நான் நினைச்சிருந்தா என் பொண்ணையே உனக்கு கொடுத்திருக்க மாட்டேன், இது எல்லாம் சும்மா பொருளுங்க தான்..” அத்தை அவனுக்கு மேல் பேசி முடித்துவிட்டார்

ஜீவிதா பள்ளியும் மாற்றல் வாங்கி கொண்டனர். ஜமுனா கல்லூரி சென்று விடுவதால் உடன் இருக்க, காமாட்சி முடிவானார். சில நாட்கள் வைஜெயந்தி, ஜெயலக்ஷ்மி இருக்கட்டும் என்றும்  பேசிவைத்தனர். தயாநிதிக்கு  மகள் கணவனிடம் சென்று சேருகிறாள் என்ற நிறைவு இருந்த போதும், இனி நல்ல படியாக குடும்பமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலும் இருந்தது

ஒரு நல்ல நாளில் மொத்த குடும்பமும் சென்னைக்கு கிளம்பி வந்து, பால் காய்ச்சி, குடித்தனம் வைத்தனர். ‘தன் வீடு, தன் குடும்பம்..!!’ திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்து இப்படி. ஜமுனா கணவனை பார்க்க, அவன் மகளுடன் தரையில் சரிந்திருந்தான். அம்மா, அத்தை இருவரும் இறங்கிய பொருட்களை அதனதன் இடத்தில் செட்டில் செய்தனர்

இரு பெட் ரூம் வீடு என்பதால், ஒன்றில் பாட்டி, ஒன்றில் தம்பதிகள் மகளுடன். ஹால், கிட்சன், பால்கனி. அது ஒரு கேட்டட் கமியூனிட்டி அபார்ட்மெண்ட் என்பதால் பாதுகாப்பு பற்றி கவலையில்லை. வசதிகளுக்கும் குறைவில்லை. பக்கத்திலே ஆகாஷ், ஆர்த்தி. கீழ் மாடியில் அவர்கள் வீடு

எதுக்கு தனி வீடு, ஒன்னா  இருக்கலாம்ண்ணா..” ஆகாஷ் எடுத்ததும் கேட்டான். யுவராஜ் மறுத்துவிட்டான். புதுமண தம்பதிகள். அதோடு இவன் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பது இவனுக்கே தெரியாது எனும் போது, விலகி இருப்பது என்ற முடிவில் தனி வீடு.

இதோ அவர்களுக்கான வீடு ரெடி. ஒரே நாளில் எல்லாம் செட் செய்து கிளம்பிவிட்டனர். காமாட்சி இனி அங்கேயே இருக்க போவதால் கண்கள் கலங்க,  அருணாச்சலத்துக்கு ஆயிரம் பத்திரம் சொல்ல, அவரோ, “என் பேத்தி புண்ணியத்துல இன்னொரு முறை கிழவி உன் தொல்லை இல்லாம இருக்க போறேன்..” என்றார். 

எல்லாம் சிரித்துவிட, காமாட்சி முகம் தூக்கி கொண்டார். அவர் கண்ணீர் பார்க்க முடியாமல் தான் இந்த வம்பு என்பது, காமாட்சி உட்பட எல்லோருக்கும் தெரியும் என்பதால், அதே சிரிப்புடன் விடைபெற்றனர். ஜெயலக்ஷ்மி மகள் பேத்தியை அணைத்து, யுவராஜை ஒரு பார்வை பார்த்தார். அதில் ‘என் பொண்ணை நல்லா பார்த்துக்கோ..’ என்ற அறிவுருத்தல் இருந்தது. 

தயாநிதி காரில் ஏறப்போனவர், மகளிடம் சொல்லி கொண்டு, மருமகனை பார்த்து தலையசைத்தார். அவனும் அப்படியே. கேசவன், வைஜெயந்தி, அருணாச்சலம் மூவரும், யுவராஜின் அமைதியான முகத்தை பார்த்து என்ன சொல்ல என்று தயங்கி, “நல்லா இருங்க..” என்று சொல்லி விடைபெற்றனர். கோவம் வேண்டாம், சண்டை வேண்டாம், விட்டு கொடுத்து போங்க.. இப்படியான எதுவும் சொல்ல, யுவராஜ் தான் எப்போதும் யாருக்கும் அதற்கான  இடம் கொடுப்பது இல்லையே. 

கார் கிளம்ப, வீடு திரும்பினர். ஆர்த்தி எல்லாம் பார்த்திருந்தவள், யுவராஜ் வீட்டிலே இரவு  உணவு முடித்து, அவர்கள் வீடு செல்லவும், “உங்க வீட்ல  புதுசா கல்யாணம் ஆன நமக்கு செட்டில் செய்யும் போது கூட இப்படி இல்லையே..? உங்க அண்ணா வீட்டுக்கு பெரியவங்கங்கிறதாலவா..?” கேட்டாள்.  ஆச்சரியம், குறை இரண்டும் அதில் இருந்தது. 

ஆகாஷ் புரிந்து கொண்டவன், “எங்க தாத்தா எனக்கு எப்போவும் ஒன்னு சொல்வார், வீட்டுக்கு பெரிய பிள்ளைக்கு கிடைக்கிற மரியாதை அவன் முதல்ல பிறந்ததால கிடைச்சிடுறதில்லை. அதுக்கு  பின்னாடி அவனுக்கான பொறுப்பு, கடமை அதிகம் இருக்குன்னு..”

“உண்மை.. எல்லா இடத்திலும் அவங்க முன்னாடி நிக்கிறாங்கன்னா அதுக்கான உழைப்பு அந்த இடத்துல இருக்கும், இங்க எதுவும் யாருக்கும் சும்மா கிடைச்சிடாது, அதுக்கான தகுதி நம்மகிட்ட இருக்கணும். என் அண்ணனை போல, அவன் அவனோட முக்கியத்துவத்தை, மரியாதையை அதிகாரமா எங்கேயும் காட்ட மாட்டான், நடந்துக்க மாட்டான்..”

“அவன் கல்யாணத்தபோ கூட அவனுக்கு  ஏகப்பட்ட டென்ஷன். எங்க பேமிலி பிரச்சனை அவன் பிரச்சனையா மாறிடுச்சு, நிலத்தை மீட்கணும்ன்னு அண்ணி படிப்பு நிறுத்தி, அண்ணி கூட மனசு கஷ்டம், பிரிவு, ஜீவி அப்பா இல்லாம மூணு வருஷம். நிறைய நடந்துடுச்சு, என் அண்ணாவும், அண்ணியும் அதை வெளியே ஒன்னுமே இல்லாம காட்டினாலும், பேமிலிக்கு தெரியாம இருக்குமா..?” 

“நமக்கு நடந்த கல்யாணம், அந்த கொண்டாட்டம், ஆடம்பரம் எல்லாம் எனக்கு  சுலபமா கிடைச்சாலும், அதுக்கு பின்னாடி இருக்கிறது என் அண்ணா, அவங்க போட்டு வைச்சுட்டுகிற அடித்தளம். அவங்களுக்கு என்னென்ன கஷ்டமா இருந்ததோ அதை எல்லாம் நமக்கு ஈசியா மாத்தி கொடுத்தான்..”

“கல்யாணத்துக்கும் சரி, நிலம் அடமானம் போனாப்போவும் சரி நான்  கொடுத்த பணம் எல்லாம் ஒன்னுமே இல்லை. அவன் ஸ்பென்ட் பண்ண பணத்துல பத்து பர்சன்ட் கூட  வராது, எல்லாம் அவன் உழைப்பு. இப்போவும் என்னோட சேலரி, அது நமக்கு மட்டும் தான், ஆனா என் அண்ணா அப்படி இல்லை. அவன் பணம் தான் அங்க விவசாயத்துக்கு, வீட்டு செலவுக்கு..”

“அவன் குடும்பத்துக்காக  பார்த்து நிறைய மிஸ் பண்ணிட்டான். இனியாவது அவன் அண்ணியோட, பாப்பாவோட  சந்தோஷமா வாழணும்ங்கிறது தான் எங்களோட ஆசை, எதிர்பார்ப்பு, ஆர்வம் எல்லாம்..” என்றான் மனைவியிடம் விளக்கமாக. புரிய வைக்கும் பாவனையில்

அண்ணனின் முக்கியத்துவம்அவன் செயல்கள் மனைவிக்கு தெரிய வேண்டும் என்றே எல்லாம் சொன்னான். ஆர்த்திக்கு புரிந்திருக்க வேண்டும். ஆகாஷ் அண்ணன் மேல் வைத்திருக்கும் பாசமும் மரியாதையும் கூட. அமைதியாக அதை அப்படியே முடித்துவிட்டாள்

இங்கு யுவராஜ் வீட்டில் ஜீவிதா குரல் மட்டுமே. காமாட்சி எப்போதும் அவர் வழக்கமான ஒன்பது மணிக்கு தூங்க சென்றுவிட்டார். ஜீவிதா எட்டு மணிக்கே தூங்குபவள், அப்பா உடன் இருப்பதால் பேச்சு, சேட்டை எல்லாம். தூக்கத்திற்கு கண் எரிந்த போதும் அவள் பேசி கொண்டே இருக்க, “பாப்பா.. போதும் தூங்கு, காலையில பேசலாம்..” என்றாள் ஜமுனா

அப்பா நான் எழும்போது காணாம போயிடுவார்..” என்றாள் மகள் அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு. கணவன், மனைவி இருவருக்கும் உருகி போனதுடன், குத்தவும் செய்தது

அப்பா இனி உன்னோட தான் பாப்பா, இந்த வீட்ல தான்..”யுவராஜ் மகளுக்கு சொல்லி புரிய வைத்து, நம்பிக்கை கொடுத்து அவளை தூங்க வைக்க, ஜமுனா அதுவரை பெட்டின் ஓரம் அமர்ந்திருந்தாள். புதிதான கிங் சைஸ் பெட். யுவராஜ் மகள் தூங்கியதும், ரிப்ரெஷ் செய்ய செல்ல, ஜமுனாவிற்கு லேசாக உள்ளங்கைகள் வேர்த்தது.  

புதிதான மணப்பெண் போல் வெட்கம் எல்லாம் இல்லை. அச்சம். கணவனின் அமைதி கண்டு பயம். யுவராஜ் சண்டையிட்டால் கூட அவளுக்கு பிரச்சனையில்லை. இந்த அமைதி தான். ‘என்னமோ நடக்க போகிறது..’ உள்ளுணர்வு வலுவாக சொல்லி கொண்டே இருந்தது. ஆனாலும் எதோ ஒரு திடம். அமைதியாக கணவனுக்கு காத்திருந்தாள்

யுவராஜும் வேஷ்டி, கையில்லா பனியனில் வந்தான். தலை வாரினான். மொபைல் சார்ஜ் போட்டான். வீடு எல்லாம் சரி பார்த்து வந்தான். கதவு மூடி நைட் விளக்கை போட்டுவிட்டவன், மகள் பக்கம் படுக்க போக,, “நாளையில இருந்து பாப்பா பிளே ஸ்கூல் போகட்டுமா..?” கேட்டாள்

எப்போவும் நீ தானே முடிவெடுப்ப..?” என்றான் கணவன்

அது.. அது.. இப்போ நீங்க சொல்லுங்க..” என்றாள் மனைவி

இந்த கையாலாகாதவனுக்கு இதெல்லாம் என்ன தெரியும்ன்னு என்கிட்ட கேட்கிற நீ..?” என்றான்  சீறலான சிரிப்புடன்.

ஜமுனா படக்கென்று எழுந்து நின்றவள், “என்.. என்ன பேசுறீங்க..?” என்றாள் அதிர்ந்து

ஆமா தானே..? உன் அப்பா இதை  வார்த்தையில சொன்னார், நீ உன்னோட செயல்ல அதை உண்மைன்னு ப்ரூப் பண்ணிட்ட..”

அப்.. அப்பா உங்களை..”

என் அப்பாக்கு சொன்னாலும் எனக்கு தான், அவர் அவருக்கு சொன்னா, நீ எனக்குன்னு அதை காமிச்சுட்ட.. அவ்வளவு தான்..” என்றபடி அவள் முன் வந்து நின்றவன்

எனக்கு ஒன்னு மட்டும்  புரியல, இந்த கையாலாகாதவனை நம்பி எந்த தைரியத்துல நீ என்கிட்ட வந்திருக்க..? என்னால உனக்கும், என் பொண்ணுக்கும் எதுவும் செய்ய முடியாதுன்னு தான் இத்தனை வருஷம் நீயே எல்லாம் பார்த்துகிட்ட, இப்போ மட்டும் எப்படி..?”

மறந்துட்டியா..? நான் இன்னும் அதே யுவராஜ் தான். என் பொண்டாட்டி, பிள்ளையை காப்பாத்த முடியாத அதே கையாலாகாத யுவராஜ் தான், என்னன்னு இப்போ நீ என்கிட்ட வந்திருக்க..?” அனல் மூச்சு  மனைவி நெற்றி மேல் மோத நின்று கேட்டான்.  

Advertisement