Advertisement

கேளாய் பூ மனமே 16

திருமண கலாட்டாக்கள், சடங்குகள் அந்த வாரம் முழுதும் நீட்டித்து, முடிவுக்கு வந்தது. மறுவீடு, குலதெய்வ கோவில் பூஜை, இரு வீட்டு விருந்து, உறவுகளின் விருந்து என்று ஆகாஷ், ஆர்த்தி ஜோடிக்கு பெண்ட் நிமிர்ந்தது. எந்நேரமும் பயணத்தில் இருப்பது போலே உணர்ந்தனர் புதுமணமக்கள்

அதிலும், நெருங்கிய சொந்தங்கள், “யுவராஜ் தான் ஒருத்தர் வீட்டுக்கும் வரலை, விருந்தும்  கொடுக்கலை, ஆகாஷுக்கு அப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்றுவிட்டனர் முதலிலே. இன்னைக்கு இவங்க, நாளைக்கு நாங்க, இன்ன தேதி சம்மந்தி விருந்து, ஊர் விருந்து என்று திருமணம் முடிந்த கையோடு வீட்டில் கூடி தேதி குறித்துவிட்டே சென்றனர்

அவர்கள் வீட்டில் ஆகாஷ் தான் கடைசி என்பதால், உறவுகள் பதில் செய்முறை  செய்தே ஆக வேண்டிய கட்டாயம். இதுவரை அருணாச்சலம் குடும்பத்தில் செய்தது, இனி செய்ய போவதற்கு எல்லாம் சேர்த்து திட்டம் போட்டுவிட, சிக்கியது ஆகாஷ், ஆர்த்தி தான். “ண்ணா.. நீங்க உஷாரா ஒதுங்கி, எங்களை சிக்க வைச்சுட்டீங்க..” ஆகாஷ் அண்ணனிடம் புலம்பினான்

உன்னை யாருடா இங்க இருக்க சொன்னா, கல்யாணம் முடிஞ்ச கையோடு எங்கேயாவது கிளம்பியிருக்க வேண்டியது தானே..?” என்றான் அண்ணன்

இப்படி எல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா ஓடியிருப்பேனே.. ஏன் அண்ணி நீங்களாவது இப்படின்னு ஹின்ட் கொடுத்திருக்கலாம் இல்லை..” என்றான் அண்ணியிடமும். ஜமுனா என்ன சொல்வாள்..? 

அவளுக்கே இப்படி எல்லாம் என்பது தெரியாதே, கணவன் அழைத்தான் என்று ஏலகிரி கிளம்பிவிட்டாள். அப்படியும் முறை என்று விருந்திற்காக  கணவனிடம் கேட்க தானே செய்தாள். ஆனால் இவர்கள் அலையும் அலைச்சலில், நல்ல வேளை பண்ணார்.. என்று தான் தோன்றியது. அதை வெளியே சொல்ல முடியுமா..? அதனால, “இப்போ தான் இந்த கவனிப்பு எல்லாம், ராஜாவா அனுபவிங்க..” என்றுவிட்டாள் கொழுந்தனிடம்

அப்போ இவளுக்கு அந்த கவனிப்பு எல்லாம் கிடைக்க விடாம பண்ணிட்டேன்னு சொல்றாளா..?’ யுவராஜ் மனைவியை பார்த்து சென்றான்

ஜமுனா அவன் பார்வையை கவனிக்காமல், மகள், தாரணியை கவனிக்க அம்மா வீடு வந்துவிட்டாள். இருவருக்கும் ஜுரம், சளி. பின்ன அவ்வளவு ஆட்டம், ஐஸ் கிரீம், கேக், இளநீர் எல்லாம் அதன் வேலையை காட்டியது. ஜமுனா மிரட்டியபடி, தங்கைக்கு ஊசி குத்திதான் விட்டாள்

ஜீவிதா சித்திக்கு குத்திய ஊசியிலே சமத்தாக மருந்து குடித்து ரெஸ்ட் எடுத்தாள். இல்லையென்றால் மருந்து குடிக்கவே வீட்டை இரண்டாக்கி விடுவாளே..? “மிரட்டுனப்படி எனக்கு ஊசி குத்தியாச்சு, உன் பொண்ணையும் பயமுறுத்தியாச்சு, சரியான ஆளுக்கா நீ..?” தாரணி தான் மூக்கு உறிஞ்சு கொண்டே சுத்தினாள்

ஆகாஷ் திருமணத்தை வைத்து, யுவராஜ், ஜமுனா விஷயத்தில் பெரியவர்களின் எதிர்பார்ப்பு ஒன்றுமே இல்லாமல் போனது.  முகூர்த்த நாள் அன்றிரவு, கணவன், மனைவி, மகள் என்று குடும்பமாக வீட்டில் தங்குவார்களா என்று பார்க்க, மாலையே ஜீவிதாக்கு லேசான ஜுரம் வந்துவிட, ஜமுனா மகளுடன் அம்மா வீடு வந்துவிட்டாள். அங்கு கணவன் வீட்டில் கூட்டம், மகளை கவனிக்க முடியாது என்று

பெரியவர்களுக்கு இது புரிய, என்ன சொல்வார்கள்..? அப்படியும் காமாட்சி, “மேல உங்க ரூமுக்கு போயிடுங்க, யாரும் உங்களை  தொந்தரவு பண்ணாம நாங்க  பார்த்துகிறோம்..” என்று பேத்தியிடம் சொன்னார். கிட்டத்தட்ட எல்லோருக்கும் அங்க இருக்க, ஜமுனா இதை எதிர்பார்க்காமல் தடுமாறினாள்.  

இல்லை பாட்டி.. பாப்பா அங்க இருக்கிறது தான் நல்லது, அவங்க கிளம்பட்டும்..” என்றான் யுவராஜ் மறுக்க முடியா அழுத்தமான குரலில். அப்படியும் காமாட்சி கிடைத்த சந்தர்ப்பத்தை விட மனமில்லாமல், “இல்லை யுவராஜ்..” என்று பேசவர

ஜமுனா பேத்தியை என்கிட்ட கொடு, கிளம்பு..” தயாநிதி ஜீவிதாவை மகளிடம் இருந்து வாங்கிகொண்டார். அவருக்கு மருமகன் மேல் கோவம். கிளம்ப சொல்லிவிட்டானே என்று

இவரை..’ ஜெயலக்ஷ்மி கணவரை பார்த்து பல்லை கடிக்க, தயாநிதி  வாசலுக்கே நடந்துவிட்டார். அவர்களுடன் தாராணியும் இணைந்து கொள்ள, “நான் காலையிலே வந்துடுறேன் பாட்டி..” அவர் கை பிடித்து சொன்ன ஜமுனா, மற்றவர்களுக்கும் சொல்லி கொள்ள, யுவராஜ் மேலேறிவிட்டான்

ஜமுனா ஒரு பெருமூச்சுடன் கிளம்பினாள். அன்று மட்டுமில்லை அதை தொடர்ந்த நாட்களிலும், ஜமுனா மகளுடன் அம்மா வீட்டில் தான். கையில் ஸ்கூட்டி இருக்க, இங்கும் அங்கும் மேனேஜ் செய்து கொண்டாள். சடங்குகளும், விருந்தும் முடிவுக்கு வர, யுவராஜ் சென்னை கிளம்பிவிட்டான். ஆகாஷ், ஆர்த்தி இருவரும் தேனிலவுக்கு கிளம்பிவிட, தாரணி கல்லூரி சென்றுவிட்டாள்

ஜமுனா, மகள் வாழ்க்கை எப்போதும் போல சென்றது. கவுன்சிலிங்கிற்கான நாள் நெருங்கி வர, ஜமுனா இன்னும் சில வாரங்களே மருத்துவமனையில் வேலை பார்க்க முடியும் என்பதால், அபிஷியலாக லெட்டர் கொடுத்துவிட்டாள். தயாநிதி, மகளிடம், லோன் போக கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்

ஜமுனா, எதுவும் சொல்லவில்லை. அவளுக்கே எப்படி என்ன என்று தெரியாது, பின்னால் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று விசாரிக்க மட்டுமே செய்திருந்தாள். தந்தையிடம் அதை சொல்லாமல், “சரிப்பா..” என்று முடித்துவிடுவாள். ஆனால் அப்படியும் தயாநிதிக்கு மகள் மேல் நம்பிக்கையில்லை

மூன்று வருடங்களாக, அவ்வளவு அழுத்தமாக, வீட்டு செலவை பார்த்துள்ளாள், கணவன் பணத்தில் ஒரு ரூபாய் கூட தொடாமல் இவ்வளவு வைராக்கியமாக இருந்துகிறாள், நான் சொல்றது மட்டும் கேட்டுவிடுவாளா..? பேங்கில் ஒரு வார்த்தை மகள் வந்தால், தன்னிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லியே வைத்திருக்கிறார்

இது அவன் நண்பன் மூலம் யுவராஜ்க்கும் சென்று சேர்ந்தது.  “அவர் பொண்ணுக்கு அவர் செய்ய ஆசைப்படுறார்.. நீ அவர் சொன்ன மாதிரி அவர்கிட்ட சொல்லிடு..” என்று முடித்துவிட்டான். அவனை பொறுத்தவரை சில விஷயங்கள் கை மீறி செல்லும் போது, இழுத்து பிடித்து பயனில்லை என்பது தான். விட்டுவிட்டான். நடப்பது நடக்கட்டும் என்று

அது தொடர்ந்த நாட்களிலும் அவனிடம் எதிரொலித்தது. ஊருக்கு செல்வது கூட குறைத்துவிட்டான். சென்றாலும் ஒரு நாள் தான். அங்கேயே இருந்தால் தானே, கோவம், ஏக்கம், ஏமாற்றம் எல்லாம். ஜமுனாவிற்கும் கணவன் மாற்றம் புரியாமல் இல்லை. ஆகாஷ் திருமணத்திற்கு முகூர்த்த பட்டு எடுக்க செல்லும் போதே, கண்டுகொண்டவள் தானே

இதனுடன், தயாநிதி வேறு பேங்க் சென்று வந்தவர், “உன் மருமகனோட ப்ரண்ட் தான் பேங்க் மேனேஜர்.. என்னை கண்டுக்கிட்டு நல்ல மரியாதை கொடுத்தார்..” என்று மனைவியிடம் சொல்லி கொண்டிருக்க, புரிந்து போனது. கணவனுக்கு MD பற்றி எங்கு எப்படி தெரிந்திருக்கும் என்று

அம்மா சொல்லியிருந்தா கூட ஓகே, பேங்க்ல வச்சு..? ச்சு..’ அவளுக்கே கொஞ்சம் ஒரு மாதிரியாகிவிட்டது. மற்றபடி விஷயம் தெரிந்ததும் கணவன் அவளிடம் சண்டை போடாததோ, ஏன் இப்படி என்று கேட்க கூட செய்யாததோ அவள் யோசிக்க கூடவில்லை. ஏனெனில் அவளுக்கு கணவனை பற்றி தெரியுமே..? நிச்சயம் விலகி தான் செல்வான் என்று. அப்படி தான் இருக்கவும் செய்கிறான்.

ஜமுனா சில நேரம் கணவனுக்கு போன் செய்ய எடுத்து வைத்துவிட்டாள். மகளுடன் கணவன் வீடியோ கால் பேசுவது தெரியும். பள்ளி விட்டு வந்ததும் ஜெயா மொபைலில் பேசி விடுவாள் ஜீவிதாஇவள் போனில் இருந்து அழைப்பது அரிது தான்

இப்படியே கணவனும், மனைவியும் ஆளுக்கொரு திசையில் இருக்க, கவுன்சிலிங் நாளும் நாளை எனும் நிலைக்கு வந்துவிட்டது. அன்றிரவு ஜமுனா கணவனுக்கு அழைத்து,  “எப்படி இருக்கீங்க..?” என்றாள்

அவனோ  “சொல்லு..” என்றான் ஒரு வார்த்தையில்

அதென்ன என்னை விட்டு இவ்வளவு தூரம் போறார்..? தள்ளி வைத்தவளுக்கே பிடிக்கவில்லை. “எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்..?” என்றாள் விடாமல். மனைவி தோரணை ஜம்பமாக அமர்ந்தது

இந்த மூணு வருஷமா இல்லாத அக்கறை இப்போ மட்டும் என்ன..? கணவன் ரோஷம் அங்கு. கேட்டதுக்கு பதிலே இல்லை. “விஷயம் இல்லன்னா வைக்கிறேன்..” என்றான்

ஜமுனா, “நாளையில் இருந்து கவுன்சிலிங் ஸ்டார்ட் ஆகுது..” என்றாள்

நல்லது.. வாழ்த்துக்கள்..” அவ்வளவு தான்

ஜமுனாவும் மேலும் சில நொடி பார்த்தவள், “நன்றி..” என்று வைத்துவிட்டாள். பிடித்த படிப்பை படிக்க போகிறோம் என்ற உற்சாகம், மகிழ்ச்சியின் ஒளி மங்கி போனது பெண்ணிற்கு.

அடுத்த நாளில் இருந்து கவுன்சிலிங்கிற்கான நடைமுறைகள் ஆரம்பித்தது. சென்னை வந்த போது ஆகாஷ், ஆர்த்தி வீட்டில் தங்கி கொண்டனர். ஆகாஷ் சென்னைக்கு மாற்றல் வாங்கிவிட்டிருந்தான். புதுமண தம்பதிகளை தொந்தரவு செய்ய யோசிக்க, ஆகாஷ், ஆர்த்தி விடவில்லை. யுவராஜ் சரி என்றுவிட்டான். அங்கிருந்து கவுன்சிலிங் சென்டர்  பக்கம் கூட

தயாநிதி தான் மகளுடன் வருவார். யுவராஜ் சென்டருக்கு கூட்டி கொண்டு செல்வான். ஓரிரு  முறை ஜீவிதா வந்தாள். அன்றய நாள் எல்லாம் அப்பா, மகளின் நாளாக மாறிவிடும்

Advertisement