Advertisement

கேளாய் பூ மனமே 15

கண்டுகொண்டாள் கணவனை ஜமுனா. அவனிடம் தெரியும் வித்தியாசம், ஒதுக்கத்தை சில நொடிகளிலே கண்டுகொண்டாள் பெண். அவளை தேடி அலையும் அவன் பார்வை இல்லை. வார்த்தைகளுக்கு பஞ்சமாகி போனது. ஓரிரு வார்த்தைகள் அதுவும் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே. மற்றபடி மகளுடன் தான் அவன் நேரம் முழுதும்

பாப்பா.. பாப்பா..” மட்டுமே அவன் குரல் அந்த கடையில். ஆம்.. மொத்த குடும்பமாக காஞ்சிபுரத்தில் ஆகாஷ் திருமணத்திற்கு முகூர்த்த பட்டு எடுக்க வந்திருந்தனர். மணப்பெண்ணுக்கு பட்டு எடுத்து முடிக்க, அடுத்து  குடும்பத்தினருக்கு உடைகள் எடுக்க  ஆரம்பித்தனர்

ஆர்த்தியும், ஆகாஷும் ஓரிடத்தில் அமர்ந்திருக்க, ஜீவிதா அங்கும் இங்கும் ஓடியபடி. அவள் பின் தந்தை. யுவராஜ் வந்ததும் இப்போது தான். நேரே சென்னையில் இருந்து கடைக்கு வந்துவிட்டான். ஜீவிதா எப்போதும் போல அப்பாவை பார்த்ததும் அவனிடம் தவ்விவிட, ஜமுனா தன்னை பார்க்காமல் கூட செல்லும் கணவனை பார்த்திருந்தாள். புருவங்கள் லேசாக சுருங்கியது

யுவராஜ் முறையாக ஆர்த்தி வீட்டு பெரியவர்களிடம் சென்று பேசியவன், தாத்தாவிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டு கொண்டான். பணத்திற்கு இப்போது பிரச்சனையில்லை என்பதால், அவன் திருமணத்தில் கணக்கு பார்த்து செய்தது போல் தம்பிக்கு செய்ய வேண்டியது இல்லை

கல்யாண வேலை ஆரம்பிக்கும் போதே தாத்தாவிடம், “தம்பியோட கல்யாணம் தான்  நம்ம வீட்ல கடைசி கல்யாணம் தாத்தா.. என் கல்யாணத்துல நெருங்கிய சொந்தத்துக்கு மட்டும் தான் துணி எடுத்து கொடுத்தோம், இந்த முறை நம்ம சொந்தம் எல்லோருக்கும் எடுத்திடுங்க, முக்கியமா மூத்தவங்களுக்கு, அப்புறம் நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வரவங்களுக்கும் எடுத்திடுங்க, என் கல்யாணத்துல கையில பணம் மட்டும் கொடுத்து முடிச்சுட்டோம்..” என்றிருந்தான்

ஆகாஷ் அண்ணனிடம்ரிசப்ஷன் வைக்க முடியமா..?” என்று கேட்டிருந்தான். “எங்களோட வேலை செய்றவங்களுக்கு ரிசப்ஷன் வந்து போக சவுகரியமா இருக்கும்..” என

தாராளமா வச்சுக்கலாம்டா..” என்றான் அண்ணன்

இல்லண்ணா.. உனக்கு வைக்காம, தாத்தா யோசிக்கிறார்..” என்றான் தம்பி

டேய்.. என் கல்யாணம் வேற, எனக்கு ரிசப்ஷன் வைக்க இஷ்டமில்லை, மத்தபடி அன்னைக்கு நைட் விருந்து தான் போட்டோம், என்ன நானும் உன் அண்ணியும் அலங்காரம் பண்ணிட்டு மேடையில நிக்கலை அவ்வளவு தான், நீ என்னோடது எல்லாம் யோசிக்க கூடாது, இது உன் கல்யாணம், உனக்கு எப்படி விருப்பமோ அப்படி செஞ்சுக்கோ, பணம் தாத்தாகிட்ட கொடுத்தாச்சு, நான் அவர்கிட்ட சொல்லிடுறேன், நீ என்கிட்ட வந்து கேட்கணும்னு இல்லை..” என்றுவிட்டான்

அப்போதும் அருணாச்சத்திற்கு இஷ்டமில்லை. “பண்ணா எல்லோருக்கும் ஒரே மாதிரி பண்ணனும் யுவா, உனக்கு இவ்வளவு ஆடம்பரமா செய்யாம, ஆகாஷ்க்கு மட்டும்ன்னும் போது ஜெயா மாப்பிள்ளை நம்ம மேல கஷ்டப்பட்டுக்க மாட்டாரா..?” என்றார் தாத்தா

கஷ்டப்பட்டா பட்டுட்டு போகட்டும் தாத்தா.. அவன் கல்யாணம் அவன் விருப்பப்படி தான், நாம வேணா சொல்லியும் கேட்காம கல்யாணத்துக்குன்னு  ஒரு அமவுண்ட் உங்கிட்ட கொடுத்தான் இல்லை. அது மரியாதை. அவனுக்கு செய்ய நாம யோசிக்கலாமா..?  என்ன ஆசைப்படுறோனா எல்லாம் செஞ்சுக்க அவனுக்கு முழு உரிமை இருக்கு, தயவு செஞ்சு மறுக்காதீங்க, என்கிட்ட அவன் கேட்கிற மாதிரி வைக்காதீங்க, அவனும் இந்த வீட்டு பிள்ளை தான் தாத்தா..” என்று முடித்துவிட, அருணாச்சலமும் ஆகாஷ் விருப்பப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்

இப்போது எடுத்த முகூர்த்த பட்டும் விலை அதிகம் தான். ஜமுனாவிற்கு எடுத்தது விட. ஆர்த்தி விருப்பப்பட்டு செலக்ட் செய்ய, ஆகாஷுக்கும் பிடித்தது. “ஜமுனா கல்யாண பட்டு விட இது விலை கூட..” காமாட்சி, வைஜெயந்தி முணுமுணுத்து மறுக்க வர, பக்கத்திலே இருந்த ஜமுனா தடுத்துவிட்டாள்

என்ன செய்றீங்க பாட்டி..? இது தப்புஎனக்கு எடுத்தது மாமா ஆசைப்பட்டு எடுத்தது, விலை பார்த்து இல்லை, ஆகாஷ்க்கும் அப்படி தான், எங்களை வச்சு நீங்க எதுவும் பார்க்க கூடாது, சொல்ல கூடாது..” என்று உறுதியாக சொல்லிவிட்டாள். ‘இது எல்லாமா பார்ப்பாங்க..?’ இதுதான் ஜமுனாவின் எண்ணமாக இருந்தது

அப்போதும் வைஜெயந்தி தயங்கி ஜெயாவை பார்க்க, “அண்ணி.. என்னை இவ்வளவு தான் உங்களுக்கு தெரியுமா..? அப்படியா நான்..?” என்றார் வருத்தத்துடன்

அப்படி எல்லாம் இல்லை ஜெயா, ஒரு பயம் தான்..” வைஜெயந்தி அவர் கை பிடித்து சமாதானம் செய்ய, முகூர்த்த பட்டு சுபமாக முடிந்தது. அடுத்து மற்றவர்களுக்கு எடுக்க, ஜமுனா கணவன், மகளுக்கு ஆசையாக பார்த்து பார்த்து எடுத்தாள்

நீண்ட மூன்று வருடங்களுக்கு பிறகு கணவனுக்கு எடுக்கிறாள். இடையில் திருமண நாள், பிறந்த நாளுக்கு எல்லாம் கணவன் தான் உடை எடுப்பது. இந்த முறை இவள் எடுக்கிறாள். மனதில் ஒரு உற்சாகம் பெண்ணுக்கு. மூன்று நாட்களுக்கும் மூவருக்கும் ஒரே நிறத்தில் எடுத்தாள்

யுவராஜ்க்கு கொஞ்சம் கூட சேர்த்து  ஷர்ட், டிஷர்ட், வேஷ்டி எடுத்தாள். பணத்தை கணக்கு பார்க்கும் எண்ணம் அறவே இல்லை. ஆசைப்பட்ட படிப்பு படிக்கும் சந்தோஷம், வீட்டிலும் அப்பாவிடம் பேசிவிட்டது என, கொஞ்சம் மனம் அழுத்தம் குறைந்திருக்க, ஆவலாக கல்யாண வேலைகளில் ஈடுபட்டாள்

இந்த முறை வைஜெயந்தி காமாட்சி குறைப்படும் அளவு வைக்கவில்லைகூப்பிடும் நேரமெல்லாம் செல்கிறாள். முன் நின்று எல்லாம் செய்கிறாள். வீட்டில் தங்குவது தவிர, வேறெதற்கும் மறுப்பதில்லை. இதோ இன்னும் இரு வாரத்தில் திருமணம்

பத்திரிக்கை குலதெய்வ கோவிலில் பூஜை கொடுப்பதற்கு யுவராஜ் வரவில்லை எனவும் மகளுடன் தானே சென்றுவிட்டாள். அவள் உடன் வேலை செய்பவர்களுக்கும் பத்திரிக்கை எடுத்து கொண்டாள். இப்படி, அந்த வீட்டின் பெரிய மருமகளாக உரிமையுடன் மகிழ்ச்சியுடன் வலம் வர, யுவராஜ் தவிர மொத்த குடும்பத்துக்கும் அப்படி ஒரு நிறைவு. எல்லார் முகமும் பூரிப்புடன் தான் இருந்தது

இப்போது கடையிலும் ஆகாஷ், ஆர்த்தி இருவரும் ஜீவிதாவிற்கு உடை வாங்கி கொடுக்க, “நல்லா இருக்கு..” என்றாள்

இவள் எடுத்த உடை பார்த்து ஆர்த்தி, “மேட்சிங் மேட்சிங்காக்கா..?” என்று கேட்க, ஜமுனாவிடம் ஒரு சிவந்த சிரிப்பு

தாரணிக்கு அண்ணி..” ஆகாஷ் கேட்க, அவளுக்கான உடைகளை காட்டினாள். “இன்னும் ஒரு செட் கூட எடுத்துக்கோங்க அண்ணி.. நான் எதுக்கும் வர கூடாதுன்னு பிளான் பண்ணியே எல்லாம் செய்றீங்களான்னு சண்டை..” என்றான் ஆகாஷ். இருவருக்கும் நல்ல பழக்கம் தானே..? 

மூணு நாளுக்கு எடுத்திருக்கேன், மாப்பிள்ளை சொன்னதுக்காக கூட ஒரு செட், அந்த ஐம்பதாயிரம் லெஹங்கா, பில் நீ கொடுத்திடுவ தானே..?” என்றாள் ஜமுனா விளையாட்டாக

நாங்க இங்க வரவே இல்லை, எதுவும் சொல்லவும் இல்லை அண்ணி, அந்த பக்கி பழைய துணியிலே வரட்டும்..” ஆகாஷ் ஆரத்தி கை பிடித்து ஓடிவிட, ஜமுனா வாய்விட்டு சிரித்துவிட்டாள். குடும்பத்தின் பல தலைகள் அவள் சிரிப்பை தானும் சிரித்து பார்க்க, கணவன் மட்டும் வெறுமையுடன் பார்த்தான்

ஜமுனா எல்லோரும் பார்ப்பதில் உடை பார்ப்பது போல, நகர்ந்துவிட்டாலும், ஓரக்கண்ணில் பட்ட கணவனின் பார்வை அவளை புருவம் சுருக்க வைத்தது. “மேடம் நீங்க கேட்ட கலர்..” விற்பனை வர, ஜமுனா உடையில் கவனம் வைத்தாள்

எல்லாம் எடுத்துவிட்ட திருப்தியில், ஒருமுறை அவர்கிட்ட கேட்டுடலாம் என்று கணவனை  அழைத்தாள். மகளுடன் வந்தவன், சும்மா மேலோட்டமாக அப்படியே பார்த்து, “ஓகே..” என்று மனைவி முகம் கூட பார்க்காமல் நகர்ந்துவிட்டான். எதிர்பார்ப்புடன் கணவனை  பார்த்து நின்றிருந்த ஜமுனாவிற்கு மொத்த உற்சாகமும் அப்படியே வடிந்து போனது

என்னம்மா எடுத்துட்டியா..? இது எல்லாம் பில்லுக்கு கொடுத்திடுங்க..” அருணாச்சலம் வர

இல்லை தாத்தா.. இது நான்.. நான் எடுக்கிறேன்..” என்றாள் பேத்தி

இது மட்டுமில்லை எல்லாம் நாம எடுக்கிறது தான் ஜமுனா..” அவர் சொல்ல

ப்ளீஸ் தாத்தா.. நான் எடுக்கணும்ன்னு ஆசைப்படுறேன்..” என்றாள் பேத்தி. என்னமா நீ..? அருணாச்சலம் பேரனை தேட, ஜமுனா பணம் செலுத்த சென்றுவிட்டாள்

என்ன தாத்தா..?” யுவராஜ் வர, அவர் இப்படி என்று விஷயம் சொன்னார்.

அதுல என்ன இருக்கு தாத்தா, எல்லாம் ஒன்னு தான், விடுங்க..” என்று தாத்தாவிடம்  முடித்துவிட்டான். ஆனால் அவன் அப்படி நினைக்கவில்லை. ஜமுனா பணம் செலுத்தி வர, ஜீவிதாபசிக்குது” என்றாள்

அவ்வளவு தான் சாப்பிட போலாம்.. எல்லாம் எடுத்தாச்சு..” என்று பெரியவர்களும் வந்துவிட, சாப்பிட கிளம்பினர். மற்றவர்கள் எல்லாம் வந்த பஸ்ஸில் ஏற, யுவராஜ் மகளுடன் அவன் காருக்கு சென்றான். தன்னை கண்டு கொள்ளாமல்  செல்லும் கணவன், மகளை விடுத்து ஜமுனா தானும் பஸ்க்கு சென்றாள்

யுவராஜ் கூட போகலை..?” காமாட்சி வேகமாக கேட்டார். எல்லார் பார்வையும், திரும்ப ஏதும் பிரச்சனையா..? என்று பார்க்க, வெளியேஅம்மா..” என்ற ஜீவிதா குரலும் கேட்டது

ஜீவி.. ஜீவிதா பேக் எடுக்க வந்தேன்..” என்று எடுத்து இறங்கினாள்

தாத்தா.. நீங்க எங்களோட வாங்க..” யுவராஜ் பஸ்க்கு ஏற போன தாத்தாவை கூப்பிட்டு கொண்டான். அவருக்கு பஸ்ஸில் ஏறி இறங்க கஷ்டமாக இருந்தது. ஜமுனா மகளுடன் பின்னால் ஏறிக்கொள்ள, அருணாச்சலம் முன்னால் அமர்ந்து கொண்டார். வழியில் கல்யாண விஷயம் பேசி கொண்டு வந்தனர்

ஜமுனாவிற்கும் கணவனிடம் பேச வேண்டும்., அவள் படிப்பது பற்றி சொல்ல வேண்டும். முதலில் இவனிடம் சொல்லி தான் வீட்டில் சொல்ல நினைத்திருந்தாள். ஆனால் லோன் பற்றி விசாரிக்க சென்று வீட்டில் தெரிந்துவிட்டது

ஆகாஷ் நிச்சய நாளுக்கு மறுநாள், யுவராஜிடம் சொல்லிவிட நினைத்திருக்க, அவன் பள்ளி கூடத்தில் இருந்து கூட்டி வர சொன்ன மகளை வீட்டில் விட்டு, அன்று மாலையே சென்னை கிளம்பி விட்டிருந்தான். போனில் சொல்ல சரியாக இருக்காது. நேரில் இப்போது தான் வந்திருக்கிறான்

Advertisement