Advertisement

எதுக்கு ஜமுனா..?” தயாநிதி குரல் உயர்ந்து தான் வந்தது

நீங்க எப்படிப்பா அவரை அப்படி சொல்லலாம்..? அப்புறம் நான் எப்படி உங்க பணத்துல சாப்பிடுவேன், அவர் மகளுக்கும் செய்வேன்..?” என்றாள் மகள்

எப்ப.. எப்படி..? எதை சொல்ற நீ..?” தயாநிதி அதிர்ந்து கேட்டார். ஜமுனா கோபத்துடன் அப்பாவை பார்க்காமல் எங்கோ பார்த்தாள். வருடங்கள் கடந்தும் அவளுக்கு இன்னும் அந்த கோவம் தீரவில்லை. இனியும் தீராது.  

கையாலாகாதவன் சொன்னதா..?” ஜெயா கேட்க

ஆமா.. அவரை எப்படி உங்க புருஷன் அப்படி சொல்லலாம், கடன் பட்டுட்டா இப்படி எல்லாம் சொல்வாரா..? ஏன் நாம எல்லாம் கடன் பட்டதே இல்லையா..? மச்சான் மகன்னு கூட பார்க்க வேண்டாம், என் புருஷனா நினைச்சிருந்தா இப்படி ஒரு வார்த்தை சொல்லியிருப்பாரா..? அப்போ இவர்கிட்ட எங்களுக்கு இவ்வளவு தான் மரியாதையா..? பணம் தான் எல்லாமா..? அதான் இவர் பணத்துல நாங்க சாப்பிட கூடாதுன்னு நானே எல்லாம் செஞ்சேன், இவர் என்னை படிக்க வைக்க கேட்டப்போவும் முடியாது சொன்னேன்..” என்றாள் கோவத்தில் படபடவென

அது மாப்பிள்ளையை இல்லை.. கேசவனை கேட்டது..” தயாநிதி தானே சொல்லிவிட

என்ன..?” ஜமுனா இப்போது இன்னும் கொதித்து போனாள்.  “என்ன..? மாமாவையா..? அவரை இந்த வார்த்தை.. அவரை எப்படி நீங்க சொல்லலாம்..?” என்று சண்டைக்கு நின்றுவிட்டாள்

ஜமுனா அது அண்ணா கொஞ்சம் வெகுளியா, கணக்கு வழக்கு தெரியாம, அந்த நிலத்தை அடமானம் வச்சு, கடன் ஆகிடுச்சு இல்லை, அதுல..”

அதுக்கு அந்த வார்த்தையா..? ஏன் எல்லாம் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில பைனான்ஸ் பத்தி படிச்சுட்டு வந்து தான் தொழிலை பார்க்கிறோமா..? பணத்தை வச்சு மட்டும் ஒருத்தரை இந்த வார்த்தை கேட்கலாமா..?”

அவன் இப்போன்னு இல்லை, எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இப்படி தான் இருக்கான், வீட்ல வயசு பொண்ண வச்சுட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிகிட்டவன்  தானே..?”

ப்பா.. போதும், இதுக்கு மேல அவரை பத்தி பேசாதீங்க, உங்க மச்சானை நீங்க பேசலாம்ன்னு இஷ்டத்துக்கு பேச கூடாது, அவர் என் மாமனார், என் அப்பா அவருக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப முக்கியம்..” என்றாள் மகள் கோவத்தில். ஜமுனாவிடம் இப்படியான கோவம் அந்த வீட்டில் மிக புதிது

அவர் மத்தவங்களை மாதிரி பணத்தை பெருக்க தெரியாதவரா இருக்கலாம், ஆனா பாசத்தில அவர் பக்கத்துல யாரும் நிக்க முடியாது, இப்போ வரை அவர் யாரையும் அதட்டி கூட யாரும் பார்த்ததில்லை, ஏன் எல்லோரும் எல்லாம் தெரிஞ்சு தான் பொழப்பு பண்றாங்களா, குறையே இல்லாத மனுஷன் யாரானா இருக்காங்களா என்ன..?”

அவர் ஒன்னும் வெட்டி செலவு பண்ணி கடன் பண்ணிடல, பிள்ளைகளுக்கு தொழிலா இருக்கட்டும்ன்னு பாசத்தில செஞ்சது தான், அந்த பாசம்  உங்களுக்கு புரியலையாப்பா, உங்ககிட்ட மாமா, மாமான்னு எவ்வளவு மரியாதையா இருக்கார், நீங்க அவரோட ஒரு குறையை வச்சு இவ்வளவு பேசுவீங்களா, அதுவும் அந்த வார்த்தை, ரொம்பவே தப்புப்பா..” 

அதான் உன் புருஷன் அன்னைக்கே அந்த கோவம் பட்டுட்டானே..?” என்றார் தயாநிதி

அவருக்கு உங்களை புரியற அளவு நீங்க இருந்திருக்கீங்க, என்னமோ அவர் கோவப்பட்டது தப்புங்கிற மாதிரி பேசுறீங்க, அப்பா பணக்காரரா, அறிவாளியான்னு பார்த்து எல்லாம் பிள்ளைக்கு கோவம் வர கூடாதுப்பா, அப்பா எப்படி இருந்தாலும் அப்பா தான். அவருக்கு ஏதாவது சொல்ன்னா துடிக்கிறவன் தான் பிள்ளை..” என்றுவிட்டாள் மகள்

இப்போ எதுக்கு அது எல்லாம், நான் சொன்னது உன் புருஷனை இல்லைன்னு தெரிஞ்சு போச்சு இல்லை, உன் மாமனாரை பேசுனது கூட தப்பு தான் போதுமா..? படிப்பு நான் பாத்துக்கிறேன், நீ லோன் எல்லாம் ஓரங்கட்டு..” என்றார் தந்தை

உங்களுக்கு இன்னும் உங்க பொண்ணை புரியலப்பா..” என்றாள் மகள். “யாரை சொல்லியிருந்தாலும் அந்த வார்த்தை என் குடும்பத்துக்கான வார்த்தை தான், கல்யாணம் முன்னாடி வரை உங்க மகளா நான் எல்லாம் அனுபவிச்சிருந்தாலும், இனி எனக்கு உங்களோட எதுவும் வேண்டாம்..” என்றாள் மகள் உறுதியாக. தயாநிதிக்கு தன்னிடம் இப்படி பேசும் மகள்.. நம்பத்தான் முடியவில்லை தந்தையால்

அந்த ஒரு வார்த்தைக்கு என்கிட்ட எதுவும் வேண்டாம்ன்னா, அப்போ நான் ஓடி ஓடி சம்பாதிக்கிறதெல்லாம் யாருக்கு..?” அப்பாவுக்கும் பற்றி கொண்டது. “லோன் போவ, நீயே சம்பாதிச்சு எல்லாம் செஞ்சுக்குவன்னு நான் எதுக்கு உனக்கு அப்பாவா..? என்னோடது எதுவும் வேண்டாம்ன்னா, நீ நைட் பகலும் இப்படி தான் பணத்துக்கு அல்லாடுவியா..? ஏன் உன் அப்பன் என்ன பிச்சைக்காரனா..? பெத்த பொண்ணுக்கு செய்ய வக்கில்லாதவனா, என்ன நினைச்ச என்னை..?” என்றார் எழுந்து நின்று ஆவேசமாக

“இப்போவும் நீங்க படிக்க வச்ச படிப்பை வச்சு தான் நான், அதோட என்னை இப்படி பணத்துக்காக அல்லாட வைக்கிறது யாருப்பா, கைக்கு எட்டுற இடத்தில பணம் இருந்தும் என்னை அதை தொட விடாம செஞ்சது..?” மகளும் கேட்டாள்

என் இடத்துல இருந்து பாருங்கப்பா, எடுத்து செய்ய அப்பா இருந்தும், லட்சமா லட்சமா சம்பாதிக்கிற புருஷன் இருந்தும் நான் இப்படி கஷ்டப்பட காரணமே நீங்க இரண்டு பேரும் தானே..? உங்களுக்குள்ள நீங்க என்ன வேணா பேசுவீங்கசெய்வீங்க, ஆனா அதுக்கான பாதிப்பு மட்டும் எனக்கு தான்..”

ஏன் எங்க கல்யாணத்தப்போவே நான் கேட்டது போல ஆறு மாசம் தள்ளியோ, ஒரேடியா நான் MD முடிச்சோ கல்யாணம் பண்ணியிருந்தா இன்னைக்கு நான் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருப்பேனா..? யாரோ ஜோசியர் சொன்னாங்கன்னு, மாப்பிள்ளை கேட்டாருன்னு கல்யாணம் பண்ணி அனுப்பிச்சிட்டீங்க தானே..?”

ஜமுனா.. யுவராஜ் கேட்டதுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் வயசாகுது, ஜோசியர் சொன்னபடி பண்ணா, அப்புறம் தாரணிக்கு எப்போ பண்ண..? இதெல்லாம் யோசிச்சு தான்..”

சரிம்மா.. இதை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் தானே..? ஏன் நான் புரிஞ்சிருந்திருக்க மாட்டேனா..? அப்படி  அடங்காத பொண்ணாவா நான் இருக்கேன்..”

அது.. அது அப்போ நீ ஒதுக்கலைன்னா என்ன பண்ணன்னு..”

அப்போ விடுங்க, இப்போ மட்டும் எதுக்கு எனக்கு இந்த விளக்கம் எல்லாம், யாரும் என்னை மதிச்சு, எனக்கு சொல்லிட்டோ, கேட்டோ செய்ய ரெடியா இல்லைன்னும் போது, என்கிட்டேயும் அதை எதிர்பார்க்காதீங்க, இப்படியும் இருக்கலாம்ன்னு எனக்கு சொல்லி கொடுத்ததும் நீங்க எல்லாம் தானே..?” ரூமிற்கு சென்றுவிட்டாள். அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர்  வழிய வழிய செல்லும் மகளை பார்த்த பெற்றவர்களும் தளர்ந்து அமர்ந்துவிட்டனர்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம் இல்லை, அது சென்று சேருமிடம் ஒன்று உண்டு. அனுபவிக்கும் உரிமை ஒன்று உண்டு, செய்வதற்கான கடமை ஒன்று உண்டு. அதற்கான மகிழ்ச்சி ஒன்று உண்டு. இதில் எதுவும் அந்த பணத்தில் இல்லையென்றால் அது வெறும் காகிதம் மட்டும் தான்

பணத்தேவை இல்லாத மனிதன் இல்லை, அதன் பின் ஓடாத ஆள் இல்லை. கடவுளாக கொண்டாடும் பக்தன் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கான மதிப்பும், மரியாதையும், அவசியமும்  எப்போது  கிடைக்கும் என்ற புரிதல் எல்லோருக்கும் மிக அவசியம்.

ஜெயலக்ஷ்மி  நடந்ததை மருமகனுக்கு சொன்னவர், “அவ மனசுல இவ்வளவு வைராக்கியம், கோவம் இருக்குன்றதே நேத்து தான் எங்களுக்கு தெரிஞ்சது, ஒரு நாள், ஒரு பொழுது கூட இப்படினு வெளியே காட்டவே இல்லை, மூணு வருஷம் எல்லத்தையும் மனசுலே வச்சிருந்துட்டிருந்திருக்கா..” கண்ணீரை துடைத்து கொண்டார்

அவ என்கிட்ட மட்டுமில்லை, பெத்தவங்ககிட்டேயும் அமைதியா, வைராக்கியாமா இருந்து சாதிச்சிருக்கா..?” யுவராஜ் உதடுகள் கசப்பாக விரிந்தது.

இந்த நொடி அவன் மனதிலும் தயாநிதி கேள்வி தான். ‘அப்போ நான் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடிட்டு இருக்கேன், கட்டுன பொண்டாட்டி என் பணத்தை தொடல, பெத்த பொண்ணுக்கும் என் உழைப்பு போய் சேரல, அப்போ இவங்களுக்கு நான் யார்..? பேருக்கான புருஷன், இனிசியலுக்கான அப்பனா..?’ அடித்தொண்டை வரை கசந்து வழிந்தது

‘அமைதியா இருந்து என்னை முடிச்சுட்டா..? இதைவிட ஒரு மனைவி கணவனை அடிக்க முடியுமா..? முடியும் போல. ஆயிரம் வழி இருக்கும் போல, அவ பட்ட கஷ்டத்தை எங்களுக்கு கொடுத்துட்டா..’ அப்படி ஒரு வெறுமையை உணர்ந்தான். என்னமோ எல்லாம் முடிந்த ஒரு உணர்வு

அவன் செய்ததுக்கு பதில் தான் மனைவி செய்தது புரிகிறது. ஆனால் முடியவில்லை. ஏற்று கொள்ள முடியவில்லை. தாங்கவில்லை. இதற்கு சண்டை போட்டிருந்திருக்கலாம், அடித்திருக்கலாம், இப்போது போல ஒரேடியா தள்ளி வைத்திருக்கலாம்

ஆனால் இப்படி செயலால்நீ எனக்கு ஒன்றுமே இல்லை’ என்று காட்டியிருந்திருக்க வேண்டாம். எந்த கணவன் மனைவியிடம் தான் ஒன்றுமில்லை என்ற நிலைய ஏற்று கொள்வான்

‘இருந்தும் ஒன்னும் இல்லாமல் இருக்கிறது, இல்லாமலே இருந்திடுறது மேல் இல்லையா..? இனி இந்த உறவுக்கான அர்த்தம் எங்க இருக்கு..?’

உரிமையாய்  இப்போ வரை என் கிட்ட சண்டை கூட போடாதவகிட்ட தான் நான் எனக்கான உரிமையை, உறவை கேட்டு போராடிட்டு இருந்திருக்கேன். அவளுக்கு தேவையான பிரிவை எடுத்துக்கட்டும், இனி நான் தடுக்கிறதா இல்லை..’

ஜமுனாவை விட இவன் அதிகம்  ஒதுங்கி போனான்.  

Advertisement