Advertisement

கேளாய் பூ மனமே 14

அவனை சுற்றி நடக்கும் எதுவும் அவனை கலைக்கவில்லை. பேங்க் வெளியே உள்ள அவன் பைக்கில் சாய்ந்து நின்றுவிட்டான். கண்கள் நேரே சாலையை வெறிக்க, சிந்தனை எங்கெங்கோ சென்று வந்தது

என்னடா கிளம்பிட்டியா..?” யுவராஜ் சேரை விட்டு எழவும் பேங்க் மேனேஜர் நண்பன் கேட்ட போது

அப்புறமா வரேன்..” என்று கிளம்பினான்

தங்கச்சி உன்கிட்ட எதுவும் சொல்லலையா..? சாரிடா..” என்றான் நண்பன். யுவராஜ் வெளியே வந்துவிட்டான். உடனே பைக் எடுத்து கிளம்பும் வேலை எதுவும் இருப்பதாக அவன் மூளை சொல்லவில்லை. அது தான் எதையோ எதையோ நினைத்து, யோசித்து காய்ந்து கொண்டிருக்கிறதே..! 

மதிய நேர வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உச்சியில் ஏற, அதன் சூடும் உள்ளே கொதித்து கொண்டிருக்கும் அவன் வெப்பத்திடம் ஒன்றும் செய்யவில்லை. பரபரப்பாக இயங்கும் சாலை அவனுக்கு வெற்றிடமாக தான் இருந்தது

விட்டு விட்டு ஒலிக்கும் மொபைலின் அழைப்பில்  “அண்ணே.. உங்க போன் தான்..”  ஒரு பெண் சொல்லி செல்ல, தானாக கை மொபைலை வெளியே எடுத்தது. அவனுடைய ஆபிசில் இருந்து தான் போன். நின்று திரும்ப ஒலிக்க, ஏதோ அவசரம் இல்லாமல் உடனே அழைக்க மாட்டார்கள். புரிகிறது

மூச்சை இழுத்துவிட்டு எடுத்தவன், எதிர் பக்கத்தில் விஷயத்தை சொல்ல, பழக்கம் போல அதற்கான வழியை சொல்லி வைக்க, ஜமுனா போன் செய்தாள். வெறித்து தான் பார்த்தான் அவள் எண்ணை. விஷயம் என்றால் மட்டுமே அழைப்பாள் அவன் மனைவி. பிரிந்ததில் இருந்தே அப்படி தான்

அவனிடம் முகம் திருப்பாமல், சண்டையிடாமல், அமைதியாக, அழுத்தமாக அவள் வேலைகளை அவள் செய்து கொண்டிருக்கிறாள். ‘அவ நீ இல்லைடா..’ மனது சொல்ல, போனை எடுத்தான்.

ஏங்க எங்க இருக்கீங்க..?” என்றாள் மனைவி பரபரப்புடன்

டவுன்ல..” யுவராஜ் சொல்ல

நல்லதுங்க.. பாப்பாவை கொஞ்சம் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க, இன்னைக்கு அவளுக்கு எந்த கிளாசும் இல்லை, நான் கிளம்புன நேரம், சுந்தர் சார் அவருக்கு அசிஸ்ட் பண்ண கூப்பிட்டுட்டார்..” என்றாள். டியூட்டி நேரம் இல்லாமல், இவள் பணத்திற்காக  ஓடி ஓடி வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். இப்போது புரிகிறது

சரி..” போனை வைத்துவிட்டவன், பைக் எடுத்து மகள் ஸ்கூல் சென்றாள். LKG படிக்கும் மகளுக்கு பள்ளி மதியத்துடன் முடிந்துவிடும். வாரத்தில் மூன்று நாட்கள், கராத்தே, டேன்ஸ், இண்டோர் கேம்ஸ்க்கான வகுப்பில் மகளை சேர்த்து விட்டிருந்தாள் ஜமுனா. இன்று அப்படியான எந்த வகுப்பும் இல்லாமல் போக, மகளை அழைக்க சென்றான்

நீண்ட நாட்கள் கழித்து அப்பாவாக சென்று நின்றவனை, “என்ன சார் அதிசயமா  வந்திருக்கீங்க..?” என்றார் மகளின் வகுப்பு ஆசிரியை. அவர் சிரித்து சொன்னாலும், தந்தைக்கு எங்கோ குத்தி வலித்தது. “ஜீவிதா..” ஆசிரியை கூப்பிட, பேக்குடன் வந்த மகள், அப்பாவை பார்த்தும், அவனிடம் தவ்விவிட்டாள்

மகள் அப்படி தான் செய்வாள் என்பதால் அவள் ஓடி வரவும் தூக்கி கொண்டான். “அப்பாவை பார்த்ததும் சந்தோஷத்தை பாரு.. இதுக்காகவாது அடிக்கடி ஸ்கூல் பக்கம் வாங்க சார்..” என்று அனுப்பினார் ஆசிரியை. தலையாட்டி மகளுடன் பைக்குக்கு வர, “ஐய்.. பைக்..” ஜீவிதா அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு முத்தம் வைத்தாள்

அப்பாவுடன் பைக்கில் செல்வது ஸ்பெஷல் தானே. யுவராஜ் மகளை முன்னால் அமர வைத்து பைக்கை கிளப்ப, “ப்பா.. ஐஸ் கிரீம்..” என்றாள் மகள் ஆசையாக. ஜமுனா வழக்கமாக செல்லும்  கடைக்கே அழைத்து சென்று சாப்பிட வைக்க, மகள் அப்பாவிற்கும் ஊட்டினாள். யுவராஜ் மறுக்காமல் மகள் ஆசையாக கொடுப்பதை வாங்கி கொள்ள, பணம் கொடுத்து கிளம்பினர்

வழி முழுதும் மகள்,  “ப்பா.. அது, ப்பா.. இது..” என்று ஓயாமல் பேசி கொண்டே வர, பைக்கை அத்தையின் வீட்டில் நிறுத்தினான்

அத்தையிடம் பேச வேண்டி அங்கு வந்திருந்தான். ஜெயலக்ஷ்மியும் அவனை எதிர்பார்த்திருந்தார் .வா..” என்று தண்ணீர் கொடுத்து அமர வைத்து, பேத்தியை சுத்தம் செய்து, உடை மாற்றி கூட்டி வந்தவர்இருவருக்கும் உணவு எடுத்து வைத்தார்

நேத்து என்ன ஆச்சு..?” யுவராஜ் கேட்க

முதல்ல சாப்பிடு..” ஜெயலக்ஷ்மி சொல்ல, யுவராஜ் அசைய வேண்டுமே..?  மகள் அப்பாவிடம் சாப்பிட்டுகிறேன் என்றுவிட, மகளுக்கு மட்டும் கொடுத்து கை கழுவி விட்டான். ஜீவிதா டிவி பார்க்க ஆரம்பித்துவிட, யுவராஜ் அத்தையை பார்த்தான்.

அவர் முகம் துடைத்து அமர்ந்தவர், “நேத்து உன் பொண்டாட்டி பேங்குக்கு போயிருக்கா, கடை பையன் பேங்குக்கு போனவன் பார்த்துட்டு வந்து, இவர்கிட்ட சொல்ல, இவர் அதை மகள்கிட்ட கேட்டு கொஞ்சம் பேச்சு வார்த்தை ஆகிடுச்சு..” என்றார்

**********

நேற்று ஜமுனா பேங்க் சென்று வீடு வர, தயாநிதியும் பங்க்ஷன் செல்வதற்காக மகள் பின்னே வீட்டுக்கு வந்துவிட்டவர், “எதுக்கு ஜமுனா பேங்க் போயிருந்த..?” என்றார் மகளிடம்

அது.. என்னோட அக்கவுண்ட் அங்க தானே இருக்குப்பா..” ஜமுனா சொல்ல

அவ்வளவு தானா..?” என்றார் தந்தை மகளிடம். ‘லோன் பத்தி அக்கா ஏதோ கேட்டுட்டு இருந்தாங்கய்யா..’ என்று அந்த பையன் அவரிடம் சொல்லியிருந்தானே

அப்பாவின் பார்வையில் மகள், நொடி தயங்கி, “லோன் பத்தி விசாரிக்க போயிருந்தேன்ப்பா..” என்றுவிட்டாள்

லோனா..? உனக்கு எதுக்கு ஜமுனா லோன்..?” ஜெயலக்ஷ்மி கணவன், மகள் வரவும் ஆகாஷ் உறுதிக்கு செல்ல காத்திருந்தவர் கேட்க

அது MD படிக்கம்மா..” என்றாள் மகள்

அதுக்கு லோன் எதுக்கு ஜமுனா..? நீ எக்ஸாம் எழுதி நல்ல கட் ஆப் எடுத்தா கவர்மெண்ட் காலேஜ்லே சீட் கிடைக்குமே..? மீதி ஆகுற செலவுக்கு நாங்க இருக்கோமே, இல்லை, பிரைவேட் போல படிக்க நினைக்கிறியா..? அதுக்கு தான் லோன் கேட்டியா..? அப்படி படிக்கிறதுன்னா முதல்லே யுவராஜ் கேட்டப்போவே எக்ஸாம் எழுதியிருக்கலாம் இல்லை.. இப்போ நிறைய பணம் தேவைப்படுமே, சரி விடு, நீ படிக்க நினைச்சதே போதும், பணம் பார்த்துக்கலாம்.. யுவராஜ்கிட்ட சொல்லி..”

ஜெயா.. அமைதியா இரு, உன் பொண்ணு பேசட்டும்..” இடையிட்டு சொன்னார் தயாநிதி

ஜெயலக்ஷ்மி மகள் அமைதியில், கணவன் கோவத்தில் இருவரையும் கேள்வியாக பார்க்க, “நான்.. நான் எக்ஸாம் எழுதி, ரிசல்ட்டும் வந்திடுச்சும்மா.. கவுன்சிலிங் மட்டும் இனி இருக்கும்..” என்றாள் மகள்

அப்பா, அம்மா இருவரும் எப்போ, எப்படி..? என்ற கேள்வியுடன்  அவளை அதிர்ந்து பார்த்தனர். “கடைசி நாள்ல தான் அப்ளை பண்ணி எழுதினேன்ம்மா, ஹாஸ்பிடல் போறேன்னு எக்ஸாம்க்கு போனேன், நல்ல கட் ஆப் கிடைச்சிருக்கு..என்றாள் மகள்

அவள் மார்க்கில்  இருவருக்கும் ஆச்சரியம் இல்லை. ஜமுனா நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து கொண்டிருப்பவள் தான் என்பதால், அவள் எக்ஸாம்க்கு படித்தும் பெற்றவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. “ஏண்டி எங்ககிட்ட சொல்லலை..? யுவராஜ்க்கு தெரியுமா..?” ஜெயா மகளிடம் கோவமாக கேட்டார்

ம்ஹூம்.. தாரணிக்கு மட்டும் தான் தெரியும்..” என்றாள் மகள்

அவனுக்கு கூட சொல்லலையா..? அப்படியென்னடி வீம்பு உனக்கு..? மூணு வருஷமா இவ்வளவு வைராக்கத்தியத்தோட இருக்க..? எக்ஸாம் எழுதி ரிசல்ட் வந்து கூட சொல்லாமல், லோன் பத்தி விசாரிக்க பேங்க் போயிருக்க. ஏன் உனக்கு நாங்க எல்லாம் வேண்டாமா, உனக்கு நீயே போதுமா..? புருஷன், பொண்ணு கூட உனக்கு தேவையில்லையா..? நானா உன்னை வளர்த்தேன், எப்போ இருந்துடி நீ இப்படி கல் மனசா ஆன..?” அம்மா பொரிய, ஜமுனாவிடம் எப்போதுமான அமைதி தான்

ஜமுனா.. உன் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு..?” தயாநிதி சரியாக கேட்டார்

அது பிக்ஸ்ட் டெபாசிட் பண்ணிடுவேன்ப்பா..” என்றாள் மகள்

நான் உன் சம்பள பணத்துக்கான அக்கவுண்ட் கேட்கலை, பெர்சனல் அக்கவுண்ட் கேட்கிறேன்..” என்றார் தயாநிதி அழுத்தமாக

யுவராஜ் மாதாமாதம் என்றில்லாமல், அவன் கைக்கு மொத்தமான தொகை வரும் போதெல்லாம், அதிலிருந்து  ஒரு குறிப்பிட்ட தொகையை  மனைவிக்கு அனுப்பிவிடுவான். பணம் வந்ததிற்கான மொபைல் மெசேஜ் பார்த்து, ஒரு நாள் தாரணி அக்காவிடம்  இது பற்றி கேட்டு கொண்டிருந்ததில்  இவருக்கு தெரியும்

அது ** லட்சம்ப்பா..” என்றாள் மகள்

அவ்வளுவா..?” ஜெயலக்ஷ்மி ஆச்சரியப்பட்டவர், “அப்புறம் எதுக்குடி உனக்கு லோன்..?” என்றார்

தயாநிதிக்கோ வேறு சில சந்தேகம் வர, “அப்போ யுவராஜ் உனக்கு அனுப்பின பணத்தை இதுவரை நீ தொடவே இல்லை, அப்படி தானே..?” என்றார். “உன் செலவு, பாப்பா செலவு, பீஸ் எல்லாம் நீதானா..?”  கேட்கும் போது அதிர்ந்து தான் கேட்டார்

என் பணம், அவர் பணம்ன்னு பிரிச்சு எல்லாம் எதுவும் இல்லைப்பா..” என்றாள் மகள். ஆனால் பெற்றவர்களுக்கு புரிந்து போனது. இவள் ஒரு ரூபாய் கூட அதில் இருந்து எடுக்கவில்லை என, தங்கள் மகள் இவ்வளவு அழுத்தமா மலைத்து தான் போனார்கள்

“நான்.. நான் உனக்கு கொடுக்கிற பணம்..” தயாநிதி நம்பிக்கையே இல்லாமல் தான் கேட்டார்

தாரணி பேர்ல நகை எடுத்திட்டு இருக்கேன்ப்பா..” என்றாள் மகள்

அப்போ நீ வீட்டுக்கு செய்றதெல்லாம்..” ஜெயலக்ஷ்மி பொங்கிவிட்ட கோபத்துடன் கேட்டார். ஜமுனா அமைதியாக நின்றாள். “நீங்க கொடுக்கிற பணத்துல தான் இவ மளிகை சாமான்ல இருந்து, கரெண்ட் பில் வரை கட்டுறான்னு இருந்தேங்க, ஆனா இவ அவளோட சம்பள பணத்துல செஞ்சிட்டு இருந்திருக்கா..”  கணவரிடம் சொன்னார் ஜெயலக்ஷ்மி

Advertisement