Advertisement

கேளாய் பூ மனமே 13

இன்று ஆகாஷின் நிச்சய நாள். யுவராஜ் வீடு மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அவர்கள் வீட்டிலே வைத்து நிச்சயம் என்பதால்  வேலை அதிகம். உறுதி போல அறிவிக்க நிச்சய நாளை வைத்து, சிறிதாக  செய்தாலும், அதுவே ஆட்களின் எண்ணிக்கை ஊர் மக்களை சேர்த்து எனும் போது சில நூறை தொடும். 

இதில் பெண்ணின் வீட்டு பக்கமும் ஆட்கள் எண்ணிக்கை கூடும் எனும் போது, உணவிற்கு ஆட்களை வரவைத்து தான் செய்தனர். ஆகாஷிற்கு பெண் கொடுப்பவர் வீடும் சுத்தி முத்தி சொந்தத்தில் தான் வரும். இடையில் கோவிலில் வைத்து மொத்த குடும்பமும் பெண் பார்த்து பேசி, முடிவானது.

மண பெண்ணான ஆர்த்தியும், ஆகாஷை போல எஞ்சினியரிங் முடித்து வேலை பார்ப்பவள். ஆர்த்தி சென்னை என்றால், ஆகாஷ் பெங்களூர். எனவே திருமணத்திற்காக ஆகாஷ் சென்னைக்கு மாற்றல் கேட்டிருந்தான்

ஆகாஷ்  காலை பொழுது விடிந்து தான் ஊர் வந்து சேர்ந்ததால், மதியம் போல  வைஜெயந்தி சென்று தான் மகனை எழுப்ப வேண்டியிருந்தது. “இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ்ம்மா..” ஆகாஷ் திரும்ப பெட்ஷீட்டிற்குள் சுருண்டான்

நீயும் என்னை டென்ஷன் பண்ணாத ஆகாஷ்.. வேலை தலைக்கு மேல இருக்கு..” வைஜெயந்தி குரல் கோவமாகவே வந்தது

என்னம்மா ஆச்சு..?” ஆகாஷ் போர்வையை விலக்கி கேட்டான். வைஜெயந்தி கோவப்படும் நேரங்கள் அரிது தான் என்பதாலே மகன் உடனே எழுந்துவிட்டான்

என்னவோ ஆச்சு..? உனக்கு சொன்னா மட்டும், முதல்ல நீ போய் குளிச்சிட்டு கிளம்பி வா..” அவனை சத்தமிட்டு சென்றார். ஆகாஷ் அதற்கு மேல் பெட்டில் இருக்காமல், யோசனையுடன் சென்று குளித்து வந்தான்

காமாட்சி சமையல் இடத்தில் வேலை வாங்கி கொண்டிருக்க, வைஜயந்தி பங்கஷனிற்கு தேவையான ஏற்பாட்டில் சுழன்று கொண்டிருந்தார். “என்ன பண்ணனும் சொல்லுங்கம்மா..” ஆகாஷ் அம்மாவுக்கு உதவியாக நின்றான்

உறவுக்கார, ஊர்கார பெண்கள் அவருடன் இருக்கஇங்க நான் பார்த்துகிறேன்.. நீ வெளியே போய் அண்ணனுக்கு என்ன வேணும் பாரு..” என்று அனுப்பி வைத்தார்

ஆகாஷ் வெளியே வர, பந்தல் போடும் இடத்தில், அருணாச்சலம், யுவராஜ் நின்றிருந்தனர். “இப்போ தான் எழுந்தியா..?” அருணாச்சலம் பேரனிடம் கேட்டார்

ஆமா தாத்தா.. ஏதாவது வேலை இருக்காண்ணா..?” என்றான் அண்ணனிடம்

ம்ம்.. தோப்புக்கு போய் தேங்காய் என்ன ஆச்சுன்னு பார்க்கணும்.. அப்பா உறுதி செலவு வாங்க டவுனுக்கு போயிருக்கார்..” என்றான்

இதோண்ணா..” என்ற ஆகாஷ் வண்டி எடுக்க. வருபவர்களுக்கு கொடுத்துவிட தேங்காய் என்பதால், “இரண்டு மூட்டை காய் உரிச்சு வேணும்..” என்று சொல்லி அனுப்பினான் யுவராஜ்

யுவராஜும்  விடியற்காலையில் தான் சென்னையில் இருந்து கிளம்பி வந்திருந்தான். கையும்  இப்போது சரியாகி இருந்தது. இடையில் மூன்று மாதங்களுக்கு அதிகமாக கடந்துவிட்டதே

யுவராஜ்.. உன் அத்தையை இன்னும் காணோம், எப்போவும் முதல் ஆளா வந்திடுவா..” என்றார் அருணாச்சலம் வாசலை பார்த்தபடி

யுவராஜ்க்கும் அது தான் யோசனை. “நான் போன் பண்றேன் தாத்தா..” என்று ஜெயலக்ஷ்மிக்கு அழைக்க, அவர் முதலில் எடுக்கவே இல்லை. யுவராஜ் திரும்ப அழைக்க, எடுத்தார். “ஏன் இன்னும்  வரல..?” யுவராஜ் கேட்க

வரோம்.. இங்க கொஞ்சம் வேலை..” என்றார் ஜெயலக்ஷ்மி

இன்னைக்கு என்ன வேலை..? கூட்டிட்டு வர ஆகாஷை அனுப்பவா..?” என்றான். அவர் குரலில் சுரத்தே இல்லாததில் மருமகன் புருவம் சுருங்கியது

இல்லை.. இல்லை நாங்களே வரோம்.. நீ அங்க வேலையை பாரு, அண்ணிக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க, தனியா எல்லாம் செய்யணும்..” என்று வைத்தார்பெரிய மருமகள், வீட்டின் மகள் இருவரும் அவருக்கு உதவ முடியாத வருத்தம் அவரிடம்

என்ன சொல்றா..?” அருணாச்சலம் பேரனிடம் கேட்க

வரோம் சொல்றாங்க..” என்றவன், உள்ளே அம்மாவை பார்க்க சென்றான். வைஜெயந்தி முகம் சரியில்லாத காரணம் இப்போது புரிந்தது மகனுக்கு. இதை எல்லாம் நாம இன்னும் சரியா கவனிக்கணும்.. என்று மனதில் குறித்து கொண்டவன், “ம்மா..” என்றான் கிச்சனில் இருந்தவரிடம்

சொல்லுப்பா..” வைஜெயந்தி சீர் வரிசைக்கு தட்டு எல்லாம் மேலிருந்து எடுத்தபடி கேட்க

தள்ளுங்க.. நான் எடுத்து தரேன்..” யுவராஜ் அவரை ஒதுங்க சொல்லி, தான் எடுத்து கொடுத்தான். இத்தனை தட்டு வேணும் என்று எண்ணி எடுத்து கொண்டவர், அதை பெண்களிடம் கொடுத்தனுப்பினார்

ம்மா.. கஷ்டமா இருக்கா..?” யுவராஜ் தனியே அவரின் கை பிடித்து கேட்க, வைஜெயந்திக்கு மகன் அனுசரணையாக கேட்கவும் சட்டென கண்கள் கலங்கிவிட்டது

மருமக, வீட்டு பொண்ணுன்னு நெருங்கின சொந்தம்  இருந்தும் நாமளா எல்லாம் செஞ்சுகிற மாதிரி இருக்கு, வேலைங்கிறதை விட, அவங்க நம்ம  கூட  இல்லையில்லை. உங்க அத்தையும் வரல, மருமகளும் இந்த பக்கம் திரும்பல, அப்படியென்ன நாம வாழுறோம்னு இருக்கு..” என்றார் முந்தானையில் கண்களை ஒத்தி

ஆட்கள் வந்து போக இருக்க, அழுதுவிட முடியாது. ஏற்கனவே வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஒன்று போல, ‘உண்மையாவே உன் மருமக போனது போனது தானா..? அதான் ஜெயா கூட வரலையா..? சொந்த அண்ணன் வீட்ல பொண்ணு கொடுத்து ஜெயா இப்படி பண்ண வேண்டாம்..’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர்.

“ம்மா.. அத்தைகிட்ட பேசினேன், அவங்க குரல்லே சுரத்தே இல்லை, அங்க என்ன பிரச்சனையோ..? இதுவரை அத்தை இந்த மாதிரி என்னைக்காவது பண்ணியிருக்காங்களா..? விடுங்க, வருவாங்க, நீங்க இதை  எல்லாம் விட்டு, ஆகாஷுக்கு நடக்கிற நல்லதை பாருங்க..” என்றான்

ஜெயா குரல் சுரத்து இல்லையா..? என்ன ஆச்சுன்னு தெரியலையே..?” வைஜெயந்தி உடனே தன் கண்ணீரை மறந்து வீட்டு பெண்ணுகாக கவலைப்பட்டார்

ம்மா.. ஏதா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம், இப்போ முதல்ல இதை பாருங்க, பொண்ணு வீட்ல இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க..” என்றான்

சரி என்று வைஜெயந்தி உடனே வேலை பார்க்க சென்றாலும், மனதில் ஜெயலக்ஷ்மி பற்றிய கவலை நீங்கவில்லை. எப்படி சட்டென நீங்கும்..? வைஜெயந்தி பதினேழு வயதில் கணவன் கை பிடித்து அவர்கள் வீட்டு வாசலில் அழுகையுடன் மிரண்டு நின்ற போது, முதலில் அவரை அரவணைத்தது ஜெயலக்ஷ்மி தான். அவருக்கும், கணவரின் தங்கைக்கும் ஓரிரு மாதங்கள் தான் வித்தியாசம்

கேசவன், வைஜெயந்தி காதல் பள்ளிக்கூட, கல்லூரி காதல். வைஜெயந்தி வீட்டில் மகள் பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் திருமணத்திற்கு பார்க்க, அவர் பயந்து கொண்டு, கேசவனை தேடி கொண்டு வந்துவிட்டார். கேசவனும் அப்போது தான், பத்தொன்பது வயதில் கல்லூரியில் படித்து கொண்டிருக்க, தன்னை தேடி வீட்டை விட்டு வந்தவளை கையோடு திருமணம் செய்து கொண்டுவிட்டார்

இருவருக்கும் வீட்டில் பேச வேண்டும், தங்கள் காதலை புரிய வைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. தைரியமில்லை. இருவரும் போராட துணிந்தவர்கள் இல்லை. வரும் பிரச்சனையை தவிர்ப்பதையே விரும்புவர்கள் என்பதால், கோவிலில் வைத்து திருமணம் முடிப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது.

அதிலும் கேசவனுக்கு வயது வந்த  தங்கை இருந்து அவர் செய்த செயலில் அருணாச்சலம் மனம் விட்டு போனது. இவர்கள் குடும்பம் பேர் போன குடும்பம் என்பதால் முதலில் சண்டையிட்ட வைஜெயந்தி அம்மா வீட்டில், பிறகு மகளை ஏற்று கொண்டனர்

காமாட்சி யுவராஜ் பிறக்கும் வரையிலும் கோவத்தில் இருந்த நேரத்தில், ஜெயலக்ஷ்மி அண்ணியை நன்றாகவே பார்த்து கொண்டார். அண்ணனை போல, இவரும் வெகுளி, பயம் மிகுந்தவர்கள் என்று முதலில் கண்டு கொண்டது ஜெயலக்ஷ்மி தான்

அப்போதிலிருந்து இப்போது வரை, ஜெயலக்ஷ்மி, அவருக்குமான உறவில் பெரிதான மனக்கசப்புகள் வந்ததில்லை. சில நேரம் வரும் மனஸ்தாபம் கூட, அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விடும். இதோ இப்போது போல. இதுவரை ஜெயலக்ஷ்மி வரவில்லை என்று கோவத்தில் இருந்த வைஜெயந்தி, அவருக்கு என்ன பிரச்சனையோ என்று கவலை பட ஆரம்பித்துவிட்டார். ‘ம்ம்ம்.. உறவுகளின் விசித்திரம்..!!’

ஆகாஷின் உறுதிக்கு நல்ல நேரம் மாலை குறித்திருந்தனர்பெண் வீட்டினரும்  மாலை குறித்த  நேரத்தில் இவர்கள் வீட்டுற்கு வர, அதுவரையிலும் ஜெயலஷ்மியின்  குடும்பம் வரவில்லை. ஆர்த்திக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்த வைஜெயந்தி ஆகாஷ் ரெடியா என்று பார்த்து கொண்டார்

நடுச்சபையில் ஜமுக்காளம் முழுதும் விரித்து பெரிய தலைகள், பெண் வீட்டினர் அமர்ந்தனர். ஆகாஷ் தள்ளி அண்ணனுடன் நிற்க, “பொண்ணு எல்லாம் முன்னாடியே பார்த்து முடிச்சாச்சு, நேரா உறுதி பத்திரிக்கை வாசிச்சிடலாமா..?” அருணாச்சலத்தின் பங்காளி பெரியவர் கேட்டார்

Advertisement