Advertisement

கேளாய் பூ மனமே 11

“இதுவும் கடந்து போகும்..!!!”  பல இடங்களில், பலரிடத்தில், பல சந்தர்பங்களில் பலராலும் அதிகம்  சொல்லப்படும், கேட்கப்படும் ஒன்று. உண்மை தான்.. இங்கு எதுவும், யாரும் நிரந்தரமில்லை

மாற்றங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. அந்த மாற்றமும் பலருக்கு துயரத்தை கொடுத்தால் சிலருக்கு மகிழ்ச்சியை கொடுத்து செல்லும். அவரவர் இடங்களே மாற்றங்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது

ம்ம்.. இப்போது யுவராஜும் அப்படி ஒரு இடத்தில் தான் நிற்கிறான். அவன் வாழ்க்கையில் அவன் எதிரே பார்க்காத மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையை பற்றிய அவன் கணிப்பு, திட்டமிடல் வேறு. நடந்து கொண்டிருப்பது வேறு

‘திட்டங்கள்’..  தனி மனிதனை சார்ந்து என்றால் வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். அதுவே குடும்பத்தை சார்ந்து எனும் போது, அவன் திட்டங்களை கலந்தோலசித்தே மேற்கொள்ள வேண்டும். இராணுவம் இல்லை குடும்பம். கட்டுப்பட்டு கட்டாயத்தில் விதிகளுக்கு உட்பட்டு வாழ!! 

குடும்பங்களில்  உயிர்ப்பு வேண்டும். அவரவர் இடங்களை அவருக்கு கொடுத்தால் மட்டுமே அங்கு உயிர்ப்பு இருக்கும். எல்லோருக்கும் சேர்த்து நாம் வாழ நினைக்கும் போது, அங்கு உயிர்ப்பு தொலைந்து, வெறுமை நிரம்பி வழிகிறது

அதிலும் இன்றும் பல குடும்பங்களில் பண விஷயங்களை பற்றி மனைவிக்கு என்ன தெரியும் என்று நினைக்கும் ஆண்கள் அதிகமே அதிகம், தெரியவில்லை என்றால் என்ன, நான் சொல்லி தருகிறேன் என்று இணைந்து குடும்பத்தை நடத்தும் ஆண்கள் சொற்பமே சொற்பம்

இதில் ஆண்களின் கனவுகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பெண்களின் கனவுகளுக்கு கிடைப்பதில்லை. அதிலும் இருவரில் ஒருவருக்கு தான் என்றால், பேச்சே இன்றி அது ஆண்களின்  கனவுக்கான இடமாக தான் இருக்கும்

அப்படி  இங்கு காயப்பட்டது, பாதிக்கப்பட்டது  ஜமுனா. அவளின் ஆத்மார்த்தமான கோவம் கணவனை சுடுகிறது. அவனை தள்ளி நிறுத்தும் உரிமையை பெண் தன் கையில் எடுத்து கொண்டாள் ‘எனக்கான கனவை, உழைப்பை பறிக்கும் உரிமையை அவரும்  தானே தன் கையில் எடுத்து கொண்டார்..’ ஜமுனா அவளுக்கான நியாயங்களில் உறுதியாக நின்றாள்

அவளின் அந்த உறுதியை தளர்த்தும் வழி தெரியாமல் யுவராஜ் இரண்டு வருடங்களாக அவளிடம் போராடி கொண்டிருக்கிறான். இப்போதும் மனைவி, மகள் அவனை விட்டு  கிளம்பிவிட, JCB யில் அமர்ந்து கொண்டான். வீட்டுக்குள் செல்ல பிடிக்கவில்லை. சட்டென ஒரு வெறுமை. அவனுக்கான குடும்பம் அவர்கள் இல்லாமல் நிறைவு பெறாது. முன்பு எப்போதும் விட இப்போதெல்லாம் இது அதிகம் புரிகிறது. ஆனால்..? 

ஜமுனா.. அவன் மனைவி, நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்க்கும் பெண். அவளிடம் இவ்வளவு பிடிவாதம், உறுதி இருக்கும் என்பதே இந்த மூன்று வருடங்களாக தான் பார்க்கிறான். படுகிறான். சமயம் வாய்த்தால் ஒழிய மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் குணங்களை கண்டறிய முடியாது, அது நேர்மறை குணங்களாகவும் இருக்கலாம், எதிர்மறை குணங்களாவும் இருக்கலாம்

பொக்கிஷம் போன்ற மனிதனுக்குள் தேட, தேட வெளிப்படுவதெல்லாம், அவனுக்கே அதிசயம் தான். எனக்குள் இவ்வளவு உறுதி  இருக்குமா என்பதும், நான் இவ்வளவு கோழையா என்பதும் அந்தந்த நேரத்தில் தானே தெரியும். ஜமுனா, யுவராஜ் போல

நான் அவளை இவ்வளவு தேடுவனா..? அவ பின்னாடி இப்படி சுத்துவேனா..?’ யுவராஜின் எண்ணம் இது என்றால், ‘என்னால இவ்வளவு உறுதியா இருக்க முடியுமா..? அதுவும் அவ்வளவு காதல் கொண்டிருக்கும் கணவனிடம்..?’  ஜமுனாவின் பேரதிசயம் இது.

இதில் இருவரும் அதிமாக தளரும் இடம் ஒன்று உண்டு. அது அவர்களின் மகள்ஜீவிதா’ தான். இப்போதைக்கு நான்கு வயதை நிறைவு செய்ய போகும் குழந்தை. அவளால் குடும்பம் பற்றி ஆராய முடியாது. ஆனால் இனி அப்படி இருக்க முடியுமா..? 

வளருகிறாள் பாப்பா.. அவளுக்கான குடும்பத்தை கொடுப்பது தான் முறை, கடமை. அப்பா, அம்மா இருவரும் அவளின் உரிமை. மறுக்கவோ, தடுக்கவோ பெற்றவர்களுக்கு உரிமை இல்லை. இது எல்லோரையும்விட குடும்ப அமைப்பில் வளர்ந்து, இன்னமும் அவரவர் பெற்றவர்களுடன் வாழும் யுவராஜ், ஜமுனாவிற்கு நன்றாக தெரியும். இருவருக்கும் உள்ளே மோசமாக குத்த தான் செய்கிறது

மகள் அப்பாவை அதிகம் ஒட்டுகிறாள். பிரித்து கூட்டி வருவது அம்மாவை வருத்துகிறது. ‘உன் பொண்ணுக்கு அநியாயம் செய்ற ஜமுனா..’ மனசாட்சி கேட்காமல் இருக்கவில்லை. ஆனால் அவளின் காரணங்கள் தீர்க்கப்படாமலே உள்ளதே. அவளின் நியாயங்கள் பெண்ணின் முன் தோற்பதாக அம்மாவிற்கு தோன்றாமல் இல்லை. போராட்டம் தன்னுள். என்னை பார்க்கவா..? என் பொண்ணை பார்க்கவா..? அம்மாவாக தடுமாறுகிறாள்

ஜமுனா கார் வீட்டில் நிற்க, ஜெயலக்ஷ்மி பேத்தியை தூக்கி கொண்டார். “ஏன் இவ்வளவு நேரம்..? ஊர் நிலைமை சரியில்லை..” ஜெயலக்ஷ்மி மகளை கேட்டு விட்டு பேத்தியுடன் வீட்டினுள் சென்றார்

ஜமுனா காரை லாக் செய்ய, யுவராஜ் பாதுகாப்புக்கு அவர்கள் பின் அனுப்பிய முனியன்  வண்டி அவர்கள் கேட்டில் திரும்புவது தெரிந்தது. பெருமூச்சுடன் மகளை கவனிக்க சென்றாள்

****

அடுத்த நாள் ஊர் பிரச்சனைக்கு கூட்டம் கூடுவதற்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. யுவராஜ் சொன்னது போல காலையில் இருந்து பஸ் தயாநிதி ஊருக்கு வரவில்லை. தண்ணீர் பிரச்னையை பேசி தீர்க்கமால் பஸ் வர வாய்ப்பில்லை. பெரியவர்கள் கவலைப்பட, இளவட்டங்களோகூட்டம் எல்லாம் கிடையாது, அவங்க என்ன பண்றாங்களோ பண்ணட்டும்..’ என்று எகிறி கொண்டிருந்தனர்

ப்ரெசிடெண்ட் யுவராஜிடம் பேசி பார்க்க, “அவங்க இறங்கி வராம நாம என்ன பேச..” என்றுவிட்டான். அதுவும் உண்மை தானே என்று ப்ரெசிடெண்ட் அமைதியாகிவிட்டார்.

ஜமுனா கணவனுக்கு போன் செய்துகை எப்படி இருக்கு..?” என்று கேட்டாள்

ஓகே தான்.. நீ அப்ளிகேஷன் என்னன்னு  கொஞ்சம் பாரு..” என்றான்

ஜமுனா, “சரி வலி இருந்தா சொல்லுங்க..” என்று வைத்துவிட்டாள். கணவன் கேட்டதற்கு பதிலே இல்லை.

யுவராஜ் திரும்ப மனைவிக்கு அழைத்தவன், “ஏற்கனவே இரண்டு வருஷம் போச்சு, இன்னமும் என்னடி..? ஒழுங்கா சீக்கிரம்  அப்ளை பண்ணு, இந்த வாரத்தோட கடைசி நாள் முடியுது..”  என்றான். ஜமுனாவிற்கும் இது தெரியும்

பாப்பாவை ஈவினிங் கூப்பிட்டுக்கோங்க, நான் சீக்கிரமே ஹாஸ்பிடல் போகணும்..” என்று வைத்துவிட்டாள். யுவராஜ் ஆயாசத்துடன் தலை கோதி கொண்டான். சென்ற வருடம் அவனே அப்ளை செய்தும் அவள் எழுதவே போகவில்லை

‘என்ன பண்றடி நீ என்னை..? நான் என் வேலையை விட்டுட்டு வந்து எவ்வளவு நாள் இங்க இருக்க முடியும்..?’ அங்கு சென்னையில் அவன் ஆபிஸையும் பார்க்க வேண்டுமே..? ஊருக்கு வந்து  ஒரு வாரம் ஆகிவிட்டது. அவசர வேலைகளை இங்கிருந்து செய்தாலும், நேரில் சென்று வர வேண்டும்

மறுநாள் சென்னை கிளம்ப  ட்ரைவரை வர சொல்லிவிட்டான். “ஊர் பிரச்சனை தம்பி..?” கேசவன் கேட்க

இப்போதைக்கு அவங்க இறங்கி வர மாதிரி தெரியலப்பா.. அப்படி கூட்டம் கூடினா எனக்கு சொல்லுங்க, நான் வரேன்..” கிளம்பிவிட்டான். ஆபிசில் ஆட்கள் வேலையை சரிவர செய்து கொண்டிருந்தாலும், இவன் வேலைகள் என்று சிலது இருக்க தான் செய்தது. கிளைண்ட்ஸ் சிலர்  அவனை நேரில் பார்க்க கேட்டிருந்தனர்

யுவராஜ் கையை அதிகமாக ஸ்ட்ரைன் செய்ய முடியாது என்பதால், ட்ரைவர் அவனுடனே இருக்கும் படி ஆயிற்று. அவன் சொல்ல சொல்ல செய்ய, ஒருவனையும் கூட வைத்து கொண்டு மீட்டிங்கை முடித்தான். இடையில் ஜமுனாவிடம் எக்ஸாம் பற்றி பேச செய்த முயற்சிகள் எல்லாம் அவன் மனைவியின் பிடிவாதத்தில் தோல்வியை தழுவின.

இனியும் தாமதிக்க முடியாது என, ஜெயலக்ஷ்மிக்கு போன் செய்தவன, “நாளையோட கடைசி நாள், உங்க பொண்ணுக்கு கொஞ்சம் சொல்லுங்க..” என்றான்

நான் ஏன் சொல்லணும் யுவராஜ்..? ஏற்கனவே உனக்கு பார்த்ததுக்கு தான் என் பொண்ணு என் பணத்தை கூட வாங்கிக்க மாட்டேங்குறா..? இந்த விஷயத்துல நான் அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன், படிக்க வைக்க முடியாது சொல்லி, நீ அவளை மட்டுமில்லை என்னையும் தான் கஷ்டப்படுத்தியிருக்க..” என்றார் அத்தை

ம்ப்ச்.. நீங்களும் உங்க பொண்ணும்  முடிஞ்சதையே தான் பிடிச்சு தொங்குவீங்களா..? ஆகறதை பாருங்க சொன்னா..” என்றான் கோவமாக

நீ ஆரம்பிச்சு வைச்சதை நீயே பார்த்துக்கோ, என்கிட்ட கேட்காத..” என்று வைத்துவிட்டார் அத்தை. மற்றது எதுவும் என்றால் வற்புறுத்தி செய்ய வைத்துவிட முடியும், படிப்பது.. முழுக்க முழுக்க ஜமுனா கையில் மட்டுமே. இந்த  வருஷமும் வேஸ்ட் பண்ண போறாளா..?

*****

Advertisement