Advertisement

யுவராஜ், அவளை தன் மடி மீது  குறுக்காக அமர வைத்தவன், அந்த பூவை தள்ளிவிட்டான். “வேணும்..” ஜீவிதா தலையை வேகமாக ஆட்டி திரும்ப அந்த பூ நெற்றிக்கு வரும் படி பார்த்து கொண்டாள்

கழுத்து வலிக்கும் பாப்பா..” யுவராஜ் பூவை நெற்றியோரம் லேசாக ஒதுக்கி வைத்து, நெற்றியில் முத்தம் வைக்க, மகளும் அப்பா கழுத்தை கட்டி கொண்டு முத்தம் கொடுக்க இழுத்துவிட்டாள். “ஸ்ஸ்..” யுவராஜ் வலியில் மெலிதாக அலற

ஜீவிதா.. என்ன பண்ற, அப்பாக்கு வலிச்சிடுச்சு பாரு..” ஜமுனா ஓடி வந்து மகளை தூக்கினாள். அவ்வளவு தான் மகள், கண்களை கசக்கி, குரல் கொடுக்க ஆரம்பித்தாள். “ஜீவிதா..” ஜமுனா மகளை அதட்ட

அவளை என்கிட்ட கொடு..” யுவராஜ் மனைவியிடம் இருந்து மகளை வாங்க, தானே அவன் மடி மேல் அமர வைத்தவள், பெல்ட் கழுத்தை விட்டு விலகியிருந்தது பார்த்தாள். கழட்டி தான் சரி செய்ய வேண்டும்..

“தம்பி ஊர் பிரச்சனை பெருசாகும் போலயே..?” கேசவன் கேட்க, ஜமுனா கிளம்பணும் என்பது போல கணவனை பார்த்தாள்

அவன் மகளை அணைத்து வராத கண்ணீரை துடைத்தவன், “அதுக்காக நம்மளோட பங்கு தண்ணீயை தாரை வார்த்துட்டா வர முடியும்ப்பா..?” என்று அப்பாவிடம் பேசினான். ஜமுனா திரும்ப பாட்டியுடன் அமர்ந்து கொண்டாள்

இல்லப்பா.. அவங்க சொல்ற மாதிரி ஒரு பங்கு தண்ணீர் மட்டும் எடுத்துக்கலாம், இப்போ தான் மழையில எல்லார் கிணறும் நிறைஞ்சிருக்கே..?” என்றார் கேசவன்

ப்பா.. அப்படி பார்த்தா நம்மளை விட அவங்க ஊர் கிணறுங்க  தான் இன்னும் வெள்ளம் போயிட்டிருக்கு, அப்பறம் ஏன் மூணு பங்கு தண்ணீர் வேணும்ன்னு நிக்கிறாங்க தெரியுமா..?” கேட்டான் மகன். கேசவன் கேள்வியாக பார்க்க, 

இங்க பிரச்சனை தண்ணீர் மட்டும்  இல்லப்பா, அதை வச்சு நடக்கிற அரசியல், அதிகாரம். சுத்து வட்டாரத்துல எங்களுது பெரிய ஊர், நீங்க எல்லாம் நாங்க சொல்றதை தான் கேட்கணும்னுங்கிற மறைமுக மிரட்டல். நம்ம எல்லோரையும் அவங்க கட்டுப்படுத்த நினைக்கிறாங்க, அதுக்கு எப்படிப்பா விட முடியும்..?” என்றான்

இத்தனை தலைமுறை இல்லாமல், இப்போ தான் இப்படி பண்றாங்க..” அருணாச்சலம் பெரு மூச்சுடன் சொன்னார்

இதெல்லாம் இளவட்ட பசங்க பண்ற வேலை தான்ப்பா.. அவங்க அராஜகத்துக்கு நாலு கிராமமும் இல்லை பாதிக்கபடுது, பஸ் நாளைக்கு வாரதுன்னா வேலைக்கு போறவங்க, படிக்கிற பிள்ளைங்களுக்கு தான் கஷ்டம்..” என்றார் கேசவன்

கஷ்டப்படட்டும்ப்பா.. ஒவ்வொருத்தரையும் கூட்டிட்டு போய் விடட்டும், பெரிய ஊர்னு சட்டை காலரை தூக்கி விட்டா மட்டும் போதாது, அதுக்கான பொறுப்போட அளவும் தெரியணும், அக்கம் பக்கம் ஊரை பகைச்சுக்கிட்டா என்ன நடக்கும்ன்னு புரியணும், பெரிய கூட்டம்ங்கிறது ஆள் பலம் தானே தவிர, ஜெயிக்க அது மட்டுமே போதாது..”

அதிகாரம் வேணும்ன்னு அந்த குதி குதிக்க மட்டும் தெரியுது, கொஞ்சம் கூட பெரியவங்க சின்னவங்க, அதிகாரி, தலைவர்ன்னு ஒருத்தரையும் மதிக்க மாட்டேங்குறாங்க, சாயந்திரம் அங்க அத்தை வீட்ல வச்சு சொந்த ஊர் பெரியவங்களையே மட்டுமரியாதை இல்லாம பேசுறானுங்க, அவங்களுக்கு இவ அப்பா சப்போர்ட் வேற..” ஜமுனாவை கை காட்டி கோவத்துடன் சொன்னான் யுவராஜ்

ஜமுனா என்ன சொல்வாள்..? அவளும் தானே அவர்கள் பேசும் போது கேட்டு கொண்டிருந்தாள்

இந்த பிரச்சனையில மாப்பிள்ளைக்கும் நமக்கும் மனசு கஷ்டம் வராம இருக்கனும் யுவராஜ், எனக்கு அந்த கவலை தான், தண்ணீர் போனா போகுது, நீ ஓரளவுக்கு மேல இறுக்கி பிடிக்காத..” என்றார் கேசவன்

இப்போ மட்டும் என்ன சொந்தம் வாழுதாம்..?’ யுவராஜ் உள்ளுக்குள் முணுமுணுத்து கொண்டான். அவன் மனைவி அவள் வீட்டில் விருந்தினர் போல வந்து செல்கிறாள், மகளுக்கு பூ கூட உரிமையாக எடுத்து கொள்ள மாட்டேங்கிறாள்..? எப்போதும் போல அவளின் அந்த விலகல் கோவத்தையும், சுருக்கென்ற வலியையும் கொடுத்தது

யுவராஜ் மனைவியை தீர்க்கமாக பார்க்க, புரிந்து கொண்ட மனைவி எழுந்து நின்றுவிட்டாள். “ஜீவி கிளம்பலாமா..?” என்றாள் மகளிடம். இருந்தால் நிச்சயம் இன்னொரு வாக்குவாதம் ஆரம்பிக்கும்

எல்லோருக்கும் கிளம்ப போவதை சொல்கிறளாம்..? யுவராஜ் மனைவியை வெறிக்க, “ஜமுனா இரு இட்லி ஊத்திடுறேன், சாப்பிட்டு போ..” வைஜெயந்தி வேகமாக கிட்சன் செல்ல போனார்

இல்லைத்தை.. இருக்கட்டும்..” ஜமுனா மறுக்க

சாப்பிடாத.. இந்த வீட்ல சாப்பிடவே சாப்பிடாத.. போடி..’ யுவராஜ் உள்ளம்  சுருண்டது.

ஜீவிதாவோ, வர மாட்டேன் என்று இன்னும் அப்பாவை ஒட்டி கொண்டாள். அம்மா அதட்டிவிட்ட கோவம். “கொஞ்ச நேரம் ஜமுனா.. சாப்பிட்டே போலாம்..” காமாட்சி திரும்ப சொல்ல

லேட் ஆகிடும் பாட்டி..” என்றாள் ஜமுனா

ஊர் பிரச்சனை நடப்பதால் மனைவி சீக்கிரம் கிளம்பிவிடட்டும்.. என்றும் யுவராஜும் நினைத்தவன், “நான் கூட்டிட்டு வரேன்..” என்றான் மனைவியிடம்

ஜமுனா வீட்டில் பெரியவர்களுக்கு சொல்லி கொள்ள, எல்லோரும் வருத்ததுடன் தலையசைத்தனர். ஜமுனா காருக்கு வர, யுவராஜ் அங்கு மகளை JCB மேல் அமர வைத்து ஏதோ பேசி கொண்டிருந்தான். ஜீவிதாவிற்கு அந்த வண்டியில் அமர்வது என்றால் அவ்வளவு பிடிக்கும்

யுவராஜ் மகளை அம்மாவுடன் செல்லும்படி சமாதானம் சொன்னவன், நாளை காலையிலே கூப்பிட்டு கொள்வதாக சொன்னான். ஜீவிதா சிறிது நேரம், “மாத்தேன்.. மாத்தேன்..” என்று பூவை நெற்றிக்கு கொண்டு வந்து ஆட்ட

கோவத்திலும் இது ஆடணுமா பாப்பா உனக்கு..?” அப்பன்காரன் மகளை கொஞ்சி கொண்டவன், இருள் அதிகமாகவும் சமாதானம் செய்து காருக்கு கூட்டி வந்தான். ஜமுனா பக்கத்து இருக்கையில் அமர வைத்தவன், சீட் பெல்ட்டை போட்டுவிட்டான்

நெஞ்சுக்கு வரும் பெல்ட்டை முதுகுக்கு மாற்றியவன், வயிற்றில் மட்டும் பிடிக்குமாறு மாட்டியவன், ஜமுனா காரில் எப்போதும் வைத்திருக்கும், ஏஞ்சல் பொம்மையை எடுத்து கையில் கொடுத்தான். ஜீவிதா மகிழ்ச்சியுடன் அதை வாங்கி கொள்ள, மகள் நெற்றியில் முத்தம் வைத்தவன், கதவை மெதுவாக அடைத்தான்

ஜமுனா கணவனிடம் “பெல்ட் சரி பண்ணனும்..” என்றாள்

நான் பார்த்துகிறேன்.. நீ கிளம்பு..” என்றான் கணவன் உர்ரென்று. ஜமுனா மகளை பார்க்க, அவள் தன் தலையில் இருந்த பூவை கிளிப்புடன் எடுத்து, பொம்மைக்கு வைத்து கொண்டிருந்தாள்

ஜமுனா கணவனை நெருங்கி அவன் பெல்ட்டில் கை வைக்க, “கல்லை மண்ணை தொடுறது போல என்னை தொடாதடி..” என்றான் கணவன் பல்லை கடித்து.  

என்னை டாக்டரா மட்டும் பாருங்க..” என்றவள், எக்கி அவன் கழுத்தில் இருந்து பெல்ட்டை கழற்ற, அவள் மூச்சு காற்று அவன் கழுத்தில் பட்டு அவனை தகிக்க வைத்தது. அவன் மனைவிக்கோ அப்படி எதுவும் இல்லை போல. சாதாரணமாக அவன் அருகில் அந்த பெல்ட்டை சரி செய்து கொண்டிருந்தாள்.

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் உன்னை என் பொண்டாட்டியா தாண்டி  பார்த்தேன், இப்போ வந்த இந்த டாக்டர் பட்டம் இத்தனை வருஷத்து என் நினைப்பை மாத்தாது..” என்றான்

சரி இருக்கட்டும் என்ற பாவனையுடன், ஜமுனா அவன் கையில் பெல்ட்டை முதலில் மாட்டியவள், கழுத்துக்கு கொண்டு போக, “கிட்ட வராதடி.. எதாவது செஞ்சிடுவேன்..” என்றான் எச்சரிக்கையாக

எனக்கு ஒன்னுமில்லை என்பது போல அவள் கழுத்துக்கு வர, தலையை பின்னால் இழுத்தவன், “நீ மரமாவே  மாறிட்டடி, உனக்கு ஒன்னுமில்லை, எனக்கு  தான் இன்னும் கொஞ்சம் உணர்ச்சி ஒட்டிகிட்டு இருக்கு, அது மொத்தமா செத்ததுக்கு அப்புறம் கிட்ட வாடி..” என்றான்

அது வரைக்கும் உங்க கை தாங்காது..”  ஜமுனா சாதாரணமாக சொல்லி அவன் கழுத்தில் பெல்ட்டை மாட்ட

இதுக்கு இப்படியே அந்த பெல்ட்டை வைச்சு என் கழுத்தை இறுக்கிடுடி..” என்றான் குமுறலாக. ஜமுனா அவன் கண்களை அருகில் தீர்க்கமாக பார்த்தவள், கைக்கு வலிக்கும்படி பெல்ட்டை இழுத்து மாட்டினாள்

ஸ்ஸ்ஸ்..” யுவராஜ் வலியில் முனகியவன், “ராட்சசி.. என் உயிரை கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறடி..”  என்றான்.  

ஜமுனா வேலை முடிந்தது என்பது போல காரில் ஏறினாள். யுவராஜ் பார்த்தே நிற்க, மனைவியும் மகளும் ஒரு பையுடன் அவனை விட்டு கிளம்பி சென்றனர்

களத்தில் காவலுக்கு இருந்த முனியனுக்கு குரல் கொடுத்தவன், மனைவி பின்போக சொன்னான்

அவன் அந்த நிலா வெளிச்சத்திலே நின்றவன், திரும்ப வீட்டிற்குள் போகவில்லை. மகள் அமர்ந்திருந்த JCB வண்டியில் அமர்ந்து கொண்டான்.

Advertisement