Advertisement

கேளாய் பூ மனமே 10

இன்று..

இருவரும் ஜமுனா காரில் இருக்க, யுவராஜ் கையில் ஊர் பிரச்சனையில் அடிபட்டதால் பெல்ட் கழுத்தோடு இணைக்கபட்டு இருந்தது. ஜமுனா அவனுக்கு வைத்தியம் கொடுத்து அவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, யுவராஜ் இறங்காமல் அவளிடம் MD படிக்க கேட்டு கொண்டிருந்தான்

ஜமுனா எப்போது போல மறுக்க, யுவராஜ் மகளுடன் UK செல்ல போவதாக சொன்னான். ஜமுனா கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல், “என்னை உங்களை வெறுக்க வைச்சுடாதீங்க..” என்றாள்

யுவராஜ், “இன்னுமா வெறுக்கலை..” என்று அவள் பின் தலைக்கு கை கொடுத்து அவள் முகத்தை தன் முகத்துக்கு அருகில்  கொண்டு வந்தான்

உங்களுக்கு வேணாம்ன்னா நான் படிக்க கூடாது, வேணும்ன்னா நான் படிக்கணும், இதுக்கு பேர் என்னன்னு உங்களுக்கு தெரியுதா..?” ஜமுனா  அவனின் வெற்று தோள்கள் அவளின் முகத்தை உரசும்  தீயில் தளராமல் கேட்க

என்னை முழுசா அடக்கி வச்சிருக்கிற நீ அடக்கு முறையை பத்தி பேச கூடாது..” என்ற யுவராஜ்  விரல்கள் மனைவியின்  பின் தலையை அழுத்தமாக வருடியது

ஜமுனா அவனின் ஸ்பரிசத்தை வெகுவாக ஒதுக்கி தள்ளியவள், “UK போறேன்னு நீங்க என்னை கார்னர் பண்றதா உங்களுக்கு தோணவே இல்லையா..?” கேட்டபடி  அவனின் பிடியில் இருந்து திமிறி வெளியே வந்தாள்

கார்னர்ன்னு ஏன் சொல்ற..? பிளாக் மெயில்ன்னே  சொல்லு..” யுவராஜ் அவளின் கலைந்த தலை முடியை ஒதுக்கிவிட்டவன், “நான் பண்றது தப்புன்னு தெரிஞ்சே தான் பண்றேன், எனக்கு வேற வழியும் இல்லை..” என்றான் அவள் முகம் பார்த்தே

உங்களுக்கு இவ்வளவு தைரியத்தை கொடுத்தது நான் தானே..? நான் உங்க மேல வச்ச காதலை இவ்வளவு தான் உங்களால பயன்படுத்த முடியுமா..? இல்லை இன்னும் இருக்கா..?” ஜமுனா கேட்க

யுவராஜ் அவளை நேருக்கு நேர் பார்த்தான். ஜமுனா முகம் திருப்பினாள். யுவராஜ்  பார்வை மாறவில்லைஜமுனாவும் அவன் பக்கம் திரும்பவில்லை. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி காருக்குள் இருக்க முடியும்..? மகளை அழைத்து கொண்டு அவள் வீடு செல்ல வேண்டும்

யுவராஜ்க்கோ, காரை விட்டு இறங்கினால் அவள் மகளுடன் கிளம்பிவிடுவாள் என்று தெரியும். அதை கொண்டே இந்த தாமதம். நிமிடங்கள் செல்ல, ஜமுனா கை கட்டி களத்தில் நின்றிருந்த வண்டிகளை பார்த்திருந்தாள். ஒரு உழவு  டிராக்டர் இரண்டு உழவு  டிராக்டராகி இருந்தது. மற்ற படி லாரி, JCB அதே தான். இதனுடன் புதிதாக ஒரு பெரிய கார் ஒன்றும் இருந்தது. யுவராஜ்க்கு என்று தனி கார்

களத்தின் நடுவில் அறுவடை செய்யப்பட்ட நெல் கட்டுகள் குவிந்திருந்தது. ஓரமாக தேங்காய் குவியல். ஆக மொத்தம் கணவன் ஆசைப்படி களம் நிறைந்திருந்தது. பார்த்த ஜமுனாவிற்கு என்னவோ தோற்ற உணர்வு. “இது எல்லாம் வேணும்ன்னு தானே என்னை விட்டீங்க..” என்றாள் அமைதியாக

யுவராஜ் பதிலே சொல்லவில்லை. அவ்வளவு நேரம் காரில் இருந்தவன், சட்டென காரைவிட்டு இறங்கிவிட்டான். ஜமுனா தானும் பின்னால் இறங்கி வர, “நான் ஜீவியை அனுப்புறேன்..” என்றான் திரும்பி

அதற்குள் நான்கு வயதை நெருங்கும்  ஜீவிதாப்பா..” என்று ஓடி வந்தாள். பின்னால் காமாட்சி. “வா ஜமுனா..” பேத்தியை அழைக்க, யுவராஜ் ஒருவித இயலாமையுடன் நின்றான்

யாராவது உன் மனைவி வீட்டுக்கு வருவது உனக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால், அடித்தே இருப்பான். ஆனால் இந்த நொடி அவன் அப்படி தான் இருந்தான். அவன் மனைவி அவன் வீட்டில் விருந்தினராய்..! 

ஜமுனா கணவனை பார்க்க, அவன் மகள் அப்பா கையை தொட்டு, “ப்பா.. புண்ணு, அடி..” என்று ஊதி கொண்டிருந்தாள்

ஒன்னுமில்லை பாப்பா.. சின்ன அடி தான்..” யுவராஜ் மகள் தலையை தடவி ஒரு கையால் தூக்க முனைய

ஒரு கைக்கு வெய்ட் கொடுக்காதீங்க..” என்று ஜமுனா தானே மகளை தூக்கி கொள்ள, மூவரும் இணைந்தே வீட்டுக்குள் நுழைந்தனர்

வைஜெயந்தி மகன் கையை விசாரித்து அமர வைத்தவர், “உட்காரு ஜமுனா..” என்றார் மருமகளிடம்

நல்லா இருக்கீங்களா அத்தை..” ஜமுனா நலம் விசாரித்து பாட்டியுடன் கீழே அமர்ந்து கொண்டாள். ஜீவிதா அம்மாவிடம் இருந்து இறங்கி அப்பா பக்கத்தில் சென்று அமர்ந்தவள், அவன் பெல்ட் மாட்டிய கைய உத்து உத்து பார்த்து ஆராய்ச்சி செய்தாள்

இரு பக்கமும் முயல் வைத்த பேபி கிளிப் குத்தியிருக்க, தோள் வரையிலான முடி அவள் தலையை ஆட்டும் போதெல்லாம் சிலுப்பி கொண்டிருந்தது. கண்கள் இவனை போல சிறிதாக, முக ஜாடை அப்பா, அம்மா, அம்மாச்சி என்று மாறி கொண்டிருக்க, கலரில் மட்டும் யுவராஜ் போல் திராவிட நிறம்

அப்பாவிற்கு வலி என்று தடவ செய்தவள், அவன் கழுத்தோடு இணைந்திருந்த பெல்ட்டை வைத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். யுவராஜ் மகளுக்கு பொறுமையாக சொல்லி கொண்டிருக்க, கேசவனும், அருணாச்சலமும் வந்துவிட்டனர்

வாம்மா..” இருவரும் எழுந்து நின்ற ஜமுனாவை வரவேற்று, யுவராஜிடம் வலி எப்படி இருக்கு..? என்று நலம் விசாரித்தனர்

வைஜெயந்தி எல்லோருக்கும் காபி கலந்து எடுத்து  வந்தார். கூடவே மாலை பலகாரமும். ஜமுனா காபி மட்டும் எடுத்து கொண்டவள், காமாட்சி அவளிடம் கேட்ட கேள்விகளுக்கு  பதில் சொல்லி கொண்டிருந்தாள்

ஜமுனா.. பாப்பா மக்காசோளம் சாப்பிட்டாஇப்போ பால் வேண்டாம்..” வைஜெயந்தி தானும் காபியுடன் அவர்களுடன் அமர்ந்து கொண்டார்

“சரிங்கத்தை..” ஜமுனா கேட்டுக்கொண்டாள்

“ஜமுனா.. நானே நைட் உனக்கும், ஜெயாக்கும் போன் பண்ணனும் இருந்தேன், நாம அன்னைக்கு பேசினோம் இல்லை ஆகாஷுக்கு வரன் வந்திருக்குன்னு, அந்த சம்மந்தம் கூடி வரும் போல இருக்கு..” வைஜெயந்தி அவளிடம் சொல்ல,  

நம்ம சுந்தரண்ணா மூலமா வந்த வரன்  தான், பொண்ணும் இன்ஜினியரிங் படிச்சுட்டு சென்னையில வேலை பார்க்கிறா, வயசு வித்தியாசம் இரண்டு வருஷம் வரும் போல, ஆகாஷும், அந்த பொண்ணும் நேர்ல பார்த்து பேசி முடிவு சொல்லட்டும்..” காமாட்சியும் சொன்னார்

“நம்ம எல்லோருக்கும் தோதான நாள் பார்த்து பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணனும். இந்த ஆகாஷ்கிட்ட சொன்னா அவ்வளவு ஷாக் அவனுக்கு, இவ்வளவு சீக்கிரமான்னு குதிக்கிறான், அவன் சரி சொல்லாம பொண்ணு வீட்ல எதுவும் சொல்ல முடியல, பொண்ணு பார்க்க இவன் வராம, நாம மட்டுமா போக முடியும்..?” 

“நாமும்  இவ்வளவு சீக்கிரம் வரன் கூடி வரும்ன்னு எதிர்பார்க்கலை இல்லை, ஆகாஷுக்கு இருபத்தேழுக்கு பண்ணலாம் தானே நினைச்சுட்டு இருந்தோம், பட்டுனு கூடி வந்திடுச்சு..” 

“அதை சொல்லு நம்ம கோபால் கூட ஏன் இவ்வளவு சீக்கிரம்ன்னு விசாரிக்கிறான், நாம மட்டும் நினைச்சோமா என்ன..? இப்படி பொண்ணு இருக்குன்னு சுந்தரம் கேட்டான், சும்மா விசாரிக்கலாம்ன்னா பிடிச்சு போச்சு..”

“ஆமாத்தை நானும் ஜமுனாவும் கூட பேசிப்போம். ஆகாஷ் கல்யாணத்துக்கு எல்லாம் ஆறேழு வருஷமே ஆகும்னு..” வைஜெயந்தியும், காமாட்சி மாற்றி மாற்றி சொல்ல,

ஜமுனா, “ஆமாத்தை, அப்படியா பாட்டி..” என்று மரியாதையுடன் கேட்டு கொண்டாள். இடையிட்டு எதுவும் பேசவில்லைவீட்டு பெரிய மருமகளா என்ன ஏதென்று மேற்கொண்டு விசாரிக்கவில்லை

அதுக்காக அவள் அலட்சியம் காட்டினால் என்றால் அதுவுமில்லை. மருமகள் ஒரு கோட்டுக்கு மேல் விலகி நின்றாள். கேள்வி கேட்க முடியா விலகல். எல்லோருக்கும் புரியும் படியான ஒதுக்கம். சொந்த வீட்டில் விருந்தினர் போல நடந்து கொள்வது

இது.. இது தான் யுவராஜை தாக்கும். ஒரேடியா விலகிவிட்டால் கூட இவ்வளவு வலிக்காது, நெஞ்சம் காந்தாது. இவள் உறவாடுகிறாள் ஆனால் தள்ளி வைக்கிறாள், ‘நீங்களே என்னை விட்டு போயிடுங்க, நெருங்காதீங்க..’ என்கிறாள். ‘முடியாது.. போக மாட்டேன், உன்னையும் போக விட மாட்டேன்..’ யுவராஜ் எப்போதும் போல இப்போதும் உறுதியாக மனைவியை பார்த்தான்.

அவள் மாமியார், பாட்டி சொல்வதை கவனமாக கேட்டு கொண்டிருந்தாள். “ஆகாஷ் கூட என்கிட்ட, அவன் அண்ணிகிட்ட எல்லாம், முப்பது வயசுக்கு மேல தான் நான் எல்லாம் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டிருப்பான், நாங்களும் அது ரொம்ப லேட்ன்னு பேசிப்போம், கடைசில இருபத்தைஞ்சு முடிஞ்சும் முடியாம கல்யாணம், நேத்து கூட போன் பண்ணி ஏன் இவ்வளவு அவசரம்ன்னு புலம்பிட்டு இருந்தான்..” வைஜெயந்தி சொல்லி கொண்டிருக்க, 

“அவருக்கு இஷ்டம் இல்லன்னா எப்படித்தை..?”  ஜமுனா இவ்வளவு நேரம் சொன்னதில் இதற்கு மட்டும் கேட்க

வைஜெயந்தி பெரிய மருமகள் விசாரித்துவிட்டதில் மகிழ்ந்து போனவர், “அவனுக்கு அந்த பொண்ணை பிடிக்க போய் தான் புலம்புறான் ஜமுனா, பிடிக்கலைன்னா ஆரம்பிச்ச உடனே இந்த பேச்சை முடிச்சிருப்பான், உனக்கு தெரியாதா உன் கொழுந்தனை..?” என்றார்  உற்சாகமாக.

அதென்னமோ சரி தான்த்தை..”  என்றவள், காலியான  காபி கப்பை எடுத்து சென்று  கழுவி கவிழ்த்து வைத்து வந்தாள்

ஜமுனா பூ..” வைஜெயந்தி எடுத்து கொடுக்க, ஜமுனா மறுக்காமல் வைத்து கொண்டாள்

ம்மா.. எனக்கு..” ஜீவிதா இதை பார்த்து ஓடி வந்தாள். “இதுக்கு எல்லாம் ஓடி  வந்துடுவியே..”  ஜமுனா தானே சென்று எடுக்காமல், பூவிற்காக அத்தையை பார்த்தாள்

வைஜெயந்தி முகம் அதில் மீண்டும் சுருங்க, தானே எடுத்து வந்து மருமகள் கையில் கொடுத்தார். ஜமுனா மகளுக்கு அவன் முயல் க்ளிப்பிலே சிறிது  பூ வைக்க, ஜீவிதா  அந்த பூ நெற்றியில் மோத ஆட்டி கொண்டே அப்பாவிடம் சென்றாள்

Advertisement